Published:Updated:

கேள்வி - பதில் : பட்டியலிடப்படாத பங்குகளை வாங்கலாமா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

என்னென்ன ரிஸ்க்குகள்..?

கேள்வி - பதில் : பட்டியலிடப்படாத பங்குகளை வாங்கலாமா?

என்னென்ன ரிஸ்க்குகள்..?

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத தனியார் நிறுவனப் பங்குகளை வாங்கி வர்த்தகம் செய்ய விரும்புகிறேன். அவற்றை வாங்குவது எப்படி?

சோமா, பெங்களூரு, இ-மெயில் வழியாக...

எம்எஸ்ஓ.அண்ணாமலை, பங்குச் சந்தை ஆலோசகர்

“பட்டியலிடப்படாத பங்குகளை வாங்குவதில் இரண்டு ரிஸ்க்குகள் இருக்கின்றன. அவற்றின் சந்தை விலையைக் கண்டறிவது கடினம். எனவே, விலை விஷயத்தில் ஏமாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அடுத்ததாக, அவை டீமேட்டாக இருந்தால், உங்கள் பெயருக்கு மாற்றி வாங்க முடியும். காகித வடிவில் இருந்தால் அவற்றை வாங்கி விற்பது கடினம். எனவே, நல்ல பாரம்பர்யத்தைக்கொண்ட பட்டியலிடப்படாத நிறுவனம் தன் பங்குகளைச் சந்தையில் விற்பதாகத் தெரிவிக்கும்போது அவற்றில் முதலீடு செய்யலாம்.”

வயது 28. திருமணமாகவில்லை. சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணியாற்றுகிறேன். என் எதிர்காலத் தேவைக்காக மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் குரோத் ஃபண்ட் மற்றும் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் டாக்ஸ் ஷீல்டு குரோத் ஃபண்ட் ஆகியவற்றில் தலா 1,000 ரூபாய் முதலீடு செய்கிறேன். இந்த முதலீட்டை அதிகரிப்பதற்கேற்ற பேலன்ஸ்டு மற்றும் மிதமான ரிஸ்க் உள்ள ஃபண்டுகளைப் பரிந்துரைக்கவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாலமுருகன், மதுரை

ஸ்ரீகாந்த் மீனாட்சி, நிறுவனர், PrimeInvestor.in

“நீங்கள் தற்போது முதலீடு செய்யும் இரண்டு ஃபண்டுகளும் நல்ல ஃபண்டுகள்தான். ஆயினும் வரிச்சேமிப்புத் திட்ட ஃபண்டில் ரூ.1,000 முதலீடு செய்வதன்மூலம் உங்களுக்குப் போதுமான வரிச் சலுகை கிடைக்கிறதா என்று பாருங்கள்.

உங்கள் முதலீட்டுத் தொகையை அதிகரிக்க நீங்கள் சொல்வதுபோல் மிதமான ரிஸ்க் உள்ள ஃபண்ட் அல்லது பேலன்ஸ்டு ஃபண்டைத் தேர்வு செய்யலாம். ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஈக்விட்டி அண்ட் டெப்ட் ஃபண்ட் சிறப்பான தேர்வாக இருக்கும்.”

எம்எஸ்ஓ.அண்ணாமலை, ஸ்ரீகாந்த் மீனாட்சி, வி.எஸ்.சரண்சுந்தர்
எம்எஸ்ஓ.அண்ணாமலை, ஸ்ரீகாந்த் மீனாட்சி, வி.எஸ்.சரண்சுந்தர்

அரசு அலுவலரான நான், சொந்த வீடு வாங்கவிருக்கிறேன். அதற்கான தொகையைச் செலுத்துவதற்கு என் வங்கிச் சேமிப்பு, பெற்றோரிடமிருந்து கிடைத்த தொகை, வங்கி வீட்டுக் கடன் என மூன்று வகையில் திரட்ட வாய்ப்பிருக்கிறது. இவற்றில் எந்த முறையில் பணம் செலுத்தினால் அதற்கான வரிச் சலுகை பெறலாம்?

மோகன்ராம், முகநூல் வழியாக...

வி.எஸ்.சரண்சுந்தர், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

“ஒரு வீட்டைச் சொந்தமாக வாங்கும்போது அதற்குண்டான முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தை வருமான வரிச்சட்டம் 80சி மூலம் க்ளெய்ம் செய்யலாம். வங்கிக்கடன் மூலமாக வீடு வாங்கினால் அதற்குச் செலுத்திய அசல் தொகை மற்றும் வட்டி என இரண்டையும் வருமான வரிச் சலுகைக்காகக் க்ளெய்ம் செய்யலாம். ஆனால், வங்கிக்கடன் வாங்கும்போது, மாதந்தோறும் வட்டியோடு அதைத் திருப்பிச் செலுத்தவேண்டியிருக்கும். அந்தத் தொகையைப் பெற்றோரிடமிருந்து பெற்றிருந்தால், அது அன்பளிப்பு வகையில் வரும். அதற்கு வரி செலுத்தத் தேவை இல்லை. பெற்றோரிடமிருந்து வாங்கிய தொகையில் வீடு வாங்கினால், அதை திருப்பிச் செலுத்தும் தொகையை 80சி மூலம் வருமான வரிக்கழிவுக்குக் காட்ட முடியாது. இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுங்கள்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கேள்வி - பதில்
கேள்வி - பதில்

சமீபத்தில் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியானபோது வாங்கலாமா, வேண்டாமா என்ற தயக்கத்தில் வாங்காமல் விட்டுவிட்டேன். ஐ.பி.ஓ.வில் ஒரு பங்கினை வாங்க என்னென்ன விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்?

ராம்குமார், முகநூல் வழியாக...

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை நிபுணர்

“ஐ.பி.ஓ என்பது ஒரு நிறுவனம் முதன்முறையாக பொது மக்களிடமிருந்து முதலீட்டைத் திரட்டும் முறை. இதில் பங்கு பெற விண்ணப்பிக்கும்முன், அந்த நிறுவனம் பற்றிய தகவல்களை ஆராய வேண்டும். நிறுவனத்தின் வியாபாரம், லாபம் ஈட்டும் திறன், எதிர்காலத்தில் லாபத்தைக் கூட்டுவதற்கான வாய்ப்பு எலலாற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, ஏற்புடையதாக இருந்தால் அந்த ஐ.பி.ஓ-வில் விண்ணப்பிக்கலாம். தவிர, ஐ.பி.ஓ வரும் பங்கின் விலையையும் அந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பையும் ஆராய்ந்து, விலை உங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால், விண்ணப்பிக்கலாம். ஒருவேளை இந்த விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால், அந்த ஐ.பி.ஓ-வைத் தவிர்க்கலாம்.”

என் அப்பா கடந்த 2008-ம் ஆண்டில் சிட்டி ஃபைனான்ஸ் நிறுவனத்தில் 40,000 ரூபாய் கடன் பெற்றிருந்தார். அதை முறையாகத் திருப்பிச் செலுத்திவந்த சூழலில், அந்த நிறுவனத்தை மூடிவிட்டார்கள். அப்போது, `கடன் தொடர்பாக யாரேனும் உங்களை அணுகினால் கொடுத்து ஏமாற வேண்டாம்’ என்றும் அறிவுறுத்தினார்கள். இந்த நிலையில், அந்த நிறுவனத்தை வேறு ஒரு வங்கி வாங்கிவிட்டதாக அறிவித்தார்கள். பிறகு, செலுத்தவேண்டிய மீதக்கடன் தொகையைக் கேட்டு சிலர் தொலைபேசியில் அவ்வப்போது அழைப்பார்கள். அவர்கள் குறித்த விவரத்தைக் கேட்டால் நம்பகமான பதில் கிடைக்காது. எனவே, அதுபோன்ற அழைப்புகளைப் புறக்கணித்துவந்தோம். தற்போது ஒருவர் மிரட்டும் தொனியில் தொடர்ந்து போன் செய்து மீதமிருக்கும் கடன் தொகையைச் செலுத்தச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார். அவரின் எண் செல்பேசியில் தெரிவதில்லை. எனவே, அவர் யாரென்றே தெரியவில்லை. இந்தச் சிக்கலிருந்து விடுபடுவது எப்படி?

ஆல்பர்ட், சென்னை

ஜி.டி.கோபாலகிருஷ்ணன், வங்கி மேலாளர், இந்தியன் வங்கி

“ஒரு நிதி நிறுவனத்தை இன்னொரு வங்கி கையகப்படுத்தும்போது ஏற்கெனவே உள்ள வாடிக்கை யாளர்களை மரியாதையுடனே நடத்துவார்கள். வங்கிக் கடனில் மீதம் செலுத்த வேண்டிய தொகையை வசூலிப்பதாக இருந்தாலும், ஏஜென்ஸியாக இருந்தாலும் தங்களைப் பற்றிய விவரங்களைக் கூறித்தான் வசூலிப்பார்கள். எனவே, இது போன்ற முறையற்ற அழைப்புகளை நம்பி, பணத்தைத் தரவேண்டாம். உங்கள் கடன் விவரங்களை எப்படியோ தெரிந்துகொண்டவர்கள் இப்படி வசூலிக்க முயற்சி செய்யக்கூடும். அவர்களின் தொந்தரவு அதிகமாக இருந்தால், காவல் துறையில் புகார் தெரிவிப்பது நல்லது.”

ஜி.டி.கோபாலகிருஷ்ணன், த.முத்துகிருஷ்ணன், ஸ்ரீனிவாசன்
ஜி.டி.கோபாலகிருஷ்ணன், த.முத்துகிருஷ்ணன், ஸ்ரீனிவாசன்

என் வயது 27. மாத வருமானம் ரூ.28,000. வீட்டு வாடகைக்கு 7,000, மாதாந்தரச் செலவுகள், சேமிப்புகளுக்கு ரூ.15,000 போக மீதமுள்ள 6,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆலோசனை கூறவும். ரிஸ்க் எடுக்கவும் தயாராக இருக்கிறேன்.

சக்திவேல், மதுரை

த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்

“உங்கள் மாதாந்தர முதலீடான 6,000 ரூபாயை இரண்டாகப் பிரித்து, தலா ரூ.3,000 என்ற விகிதத்தில் டி.எஸ்.பி ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் மோதிலால் ஆஸ்வால் மல்டிகேப் ஃபண்டுகளில் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.”

கடந்த இரண்டு ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் 10,000 ரூபாய்வரை முதலீடு செய்து வருகிறேன். கூடுமானவரை போர்ட் ஃபோலியோவில் மாற்றம் செய்யாமலேயே முதலீடு செய்வதுதான் நல்லதா... என்னென்ன காரணங்களுக்காக மாற்றம் செய்யலாம்?

ராகவ், முகநூல் வழியாக...

ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர், மணிகேர்

“நீங்கள் சீரான செயல்திறனுள்ள மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் போர்ட்ஃபோலியோவை மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

பெற்றோரிடமிருந்து நாம் பெறும் அன்பளிப்புத் தொகைக்கு வரி எதுவும் செலுத்தத் தேவை இல்லை.

ஆனால், சரியான போர்ட்ஃபோலியோவை அமைக்காமல், காலப்போக்கில் பெஞ்ச் மார்க்கைவிட போர்ட்ஃபோலியோ வருமானம் குறைந்துவந்தால், அதை மதிப்பாய்வு செய்ய வேண்டியது அவசியம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism