Published:Updated:

கேள்வி - பதில் : பூர்வீகச் சொத்து... உயிலில் எழுத முடியாதா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

தெளிவான விளக்கம்

கேள்வி - பதில் : பூர்வீகச் சொத்து... உயிலில் எழுத முடியாதா?

தெளிவான விளக்கம்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

பூர்வீகச் சொத்தை உயிலில் குறிப்பிட முடியாது என்பது உண்மையா... வேறெந்த சொத்துகளையெல்லாம் உயில் எழுதுவதில் குறிப்பிடலாம்?

தேவராஜ், முகநூல் வழியாக...

கே.அழகுராமன், வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், சென்னை

‘‘உயில் என்பது உங்களின் விருப்புறுதி ஆவணம். உங்களுக்கு பாத்தியப்பட்ட அசையும், அசையாச் சொத்துகள் அனைத்தையும் உங்கள் காலத்துக்குப் பிறகு இன்னாருக்குச் சென்றடைய வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை நிறைவேற்ற உருவாக்கப்படும் ஓர் ஆவணமே உயில். பூர்வீகச் சொத்து முழுவதையும் நிச்சயமாகக் குறிப்பிட்டு உங்களால் உயில் ஏற்படுத்த இயலாது. பூர்வீகச் சொத்திலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் பாகம் குறித்து தாராளமாக நீங்கள் உயில் ஏற்படுத்தலாம். உங்களால் கிரயம் பெறப்பட்ட அசையும், அசையாச் சொத்துகளை உயில் எழுதலாம்.

உங்களால் அன்பாக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை உங்கள் காலத்துக்குப் பிறகு யார் பாதுகாத்து, பராமரிக்க வேண்டும் என்றும் உயில் எழுதலாம். தவிர வாகனங்கள், நகைகள், அரிய பொக்கிஷங்களாக நீங்கள் கருதும் எதையும் உயில்வழி கொண்டு சேர்க்கலாம்.

நீங்கள் ஒருவருக்கு வழங்கிய கடனை வசூலிக்கும் உரிமையையும் உயிலில் எழுதிவைக்கலாம். காப்புரிமை, ராயல்டி போன்ற அனைத்துவிதமான அறிவுசார் சொத்துரிமைகளையும் உயில்வழியாக எழுதி வைக்கலாம். உயிலைப் பதிவுசெய்வது கட்டாயமில்லை. கோயில் அறக்கட்டளை, புனரமைப்பு உள்ளிட்டவற்றையும் உயிலில் எழுதலாம்.’’

கே.அழகுராமன், ஜி.டி.கோபாலகிருஷ்ணன்
கே.அழகுராமன், ஜி.டி.கோபாலகிருஷ்ணன்

தனியார் வங்கி ஒன்று எனக்கு வற்புறுத்தி கிரெடிட் கார்டு தந்தது. அந்த கார்டை ஒரு முறைகூட நான் பயன்படுத்தியதில்லை. அந்த வங்கியில் எனக்கு வங்கிக் கணக்கும் இல்லை. அந்த கார்டு தேவையில்லை என அந்த வங்கிக்கு பல முறை சொல்லியும் கிரெடிட் கார்டை வங்கி திரும்பப் பற்றுக்கொள்ளவில்லை. எனவே, அதை உடைத்துப் போட்டுவிட்டேன். தற்போது அந்த வங்கியிலிருந்து ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் செலுத்தக் கோரி எஸ்.எம்.எஸ் வருகிறது. இனி என்ன செய்வது?

அருண்குமார், கோயமுத்தூர்

ஜி.டி.கோபாலகிருஷ்ணன், வங்கி மேலாளர், இந்தியன் வங்கி

‘‘கிரெடிட் கார்டை உடைத்துப்போடுவது, வேறு யாரும் அந்த கார்டைத் தவறாகப் பயன்படுத்தாமலிருக்க மட்டுமே உதவும். அந்த கார்டை வழங்கிய வங்கியைப் பொறுத்தவரை நீங்கள் கிரெடிட் கார்டை இன்னமும் பயன்படுத்துவதாகத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளும். எனவேதான் விதிமுறைகளின்படி ஆண்டுப் பராமரிப்புக் கட்டணத்தை உங்களிடமிருந்து கேட்கிறார்கள். உங்களுக்கு அந்த கார்டு தேவையில்லை என்றால், கார்டை கேன்சல் செய்யக் கோரி முறையாகக் கடிதம் மூலம் வங்கிக்கு வேண்டுகோள் வைத்தால் கார்டு கேன்சல் செய்யப்பட்டுவிடும்.’’

நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணியை யார் பராமரிக்கலாம் என்று உயில் எழுதலாம்!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பயோகான் நிறுவனத்தின் 100 பங்குகளை, பங்கு ஒன்று ரூ.289 விலையில் வாங்கினேன். 300 ரூபாய் வரை ஏறி தற்போது இறங்குகிறது. வெளியேறிவிடலாமா அல்லது ஏறும்வரை காத்திருக்கலாமா?

ரக்‌ஷன், முகநூல் வழியாக...

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை நிபுணர்

‘‘டெக்னிக்கல்படி பார்த்தால், பயோகான் 270 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டிருக்கிறது. இந்த எல்லையை ஸ்டாப்லாஸாக வைத்துக் காத்திருக்கலாம். பயோகான் 308 - 310 என்ற எல்லை மிக வலிமையான தடைநிலையாக உள்ளது. இந்த எல்லையை உடைத்தால், 5% ஏற்றம் நிகழலாம். இல்லையென்றால், 270-ஐ நோக்கி நகரலாம்.’’

ஸ்ரீகாந்த் மீனாட்சி, வி.எஸ்.சரண்சுந்தர்
ஸ்ரீகாந்த் மீனாட்சி, வி.எஸ்.சரண்சுந்தர்

சிறுதொழில்முனைவரான எனக்குப் பணம் அவ்வப்போது கிடைப்பதும் செலவழிப்பதுமாக இருக்கிறது. மாதந்தோறும் இவ்வளவு வருமானம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எனக்கேற்ற மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு முறைகளைக் கூறுங்கள்.

நாகராஜன், முகநூல் வழியாக...

ஸ்ரீகாந்த் மீனாட்சி, நிறுவனர், PrimeInvestor.in

‘‘மியூச்சுவல் ஃபண்டுகளில் உங்களுக்கு ஏற்ற முதலீட்டு முறை சிஸ்டமாடிக் ட்ரான்ஸ்ஃபர் பிளான். இந்த முறையின்படி, நீங்கள் ஒரு ஃபண்டிலிருந்து இன்னொரு ஃபண்டுக்குக் குறித்த நாள்களில், குறிப்பிட்ட அளவு பணத்தை முதலீடு செய்ய முடியும். உதாரணமாக, லிக்விட் ஃபண்டிலிருந்து பங்குச் சந்தை ஃபண்டுக்கு இந்த முறை மூலம் சிறப்பாக முதலீடு செய்யலாம். நீங்கள் உங்களுக்கு வரும் வருமானத்தை அவ்வப்போது அந்த லிக்விட் ஃபண்டில் போட்டு வந்தால், முதலீடு முறையாக மாதந்தோறும் நடந்துகொண்டிருக்கும்.’’

நான் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து, வருமான வரியும் செலுத்திவருகிறேன். தற்போது வேலையை விட்டுவிட்டு கன்சல்டிங் செய்யலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். அப்போது எந்த மாதிரியான வரி செலுத்த வேண்டும்?

கார்த்திகேயன், குஜராத்

வி.எஸ்.சரண்சுந்தர், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

‘‘இனி உங்கள் வருமானம், மாதச் சம்பள வருமானமாக அல்லாமல் பிசினஸ் வருமானமாகக் காட்டப்பட வேண்டும். உங்கள் பிசினஸ் வருமானம் என்பது, பிசினஸ் செய்வதற்கான செலவுகளைக் கழித்த பிறகு வரக்கூடியது. அதற்கு மட்டும் வரி செலுத்த வேண்டும். உங்கள் ஆண்டு வருமானம் 50 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், வருமான வரிச்சட்டம் 44 ஏடிஏ (44 ADA) பிரிவின்கீழ் உங்கள் வருமானத்திலிருந்து 50 சதவிகிதத்தைக் கழித்த பிறகு வரி செலுத்த வேண்டும். வரி செலுத்துவதற்கு முன்னர் நீங்கள் விரும்பினால் டாக்ஸ் ஆடிட் செய்து, அதன் பிறகு வரி செலுத்தலாம். வருமானம் 50 லட்சம் ரூபாய்க்கு அதிகமானால், கண்டிப்பாக டாக்ஸ் ஆடிட்டிங் செய்த பின்னர்தான் வரித் தாக்கல் செய்ய வேண்டும்.’’

மியூச்சுவல் ஃபண்டில் நீண்டகால முதலீட்டு வரம்பை எப்படி நிர்ணயிப்பது?

மகேஷ்குமார், முகநூல் வழியாக...

பி.ஆர்.டி.கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர்

‘‘நீண்டகால முதலீடு என்பதை இன்றைய கணக்கில், 10 வருடங்கள் எனக்கொள்ளலாம். ஈக்விட்டி சார்ந்த ஃபண்ட் முதலீடு என்றால், முதலீட்டுக் காலம் என்பது ஸ்மால்கேப் பங்குகளின் விலை கணிசமாக உயரும் வரை என நாமாக நிர்ணயித்துக்கொள்ளலாம். கடன் சார்ந்த ஃபண்ட் முதலீடு என்றால், முதலீட்டுக் காலம் என்பதை வங்கி வட்டி விகிதம் மிகவும் குறைவாகும் நிலை வரை என்று கணக்கில்கொள்ளலாம். மேற்படிப்பு, திருமணம், ஓய்வுக்காலம் போன்ற இலக்குகளைக் கருத்தில்கொண்டும் நீண்டகால முதலீட்டு வரம்பை நிர்ணயித்துக்கொள்ளலாம்.’’

பி.ஆர்.டி.கோவர்தனன் பாபு, கே.எஸ்.கமாலுதீன்
பி.ஆர்.டி.கோவர்தனன் பாபு, கே.எஸ்.கமாலுதீன்

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைத் தயாரிப்பவர்களிடமிருந்து வாங்கி ஏற்றுமதி செய்யும் தொழிலில் நான் ஈடுபடவிருக்கிறேன். இதற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் சான்றிதழ் அவசியமா?

கதிர்வேலன், சென்னை

கே.எஸ்.கமாலுதீன், இயக்குநர், புளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

‘‘தற்போது உணவுப் பொருள் சார்ந்த ஏற்றுமதியாளர்கள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சான்றிதழ், பேசிக் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) சான்றிதழ், மாநில எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழ், மத்திய எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழ் என மூன்று வகைகளாக உள்ளன.

இவற்றில் பலரும் தவறுதலாக பேசிக் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழை வாங்கிவிடுகிறார்கள். ஏற்றுமதி செய்வதற்கு மத்திய எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழ்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எனவே, அதைத்தான் வாங்க வேண்டும். அதற்கு ஆண்டுக் கட்டணம் ரூ.7,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.’’

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com