Published:Updated:

பொதுச்சுவர் உள்ள வீட்டுக்குக் கடன் கிடைக்குமா?

கேள்வி - பதில்

பிரீமியம் ஸ்டோரி

இரு பக்கமும் பொதுச்சுவர் உள்ள எனது வீட்டைப் புதுப்பித்துக் கட்ட வீட்டுக் கடன் கிடைக்குமா?

செழியன், பொள்ளாச்சி

ஆர்.செல்வமணி, கனரா வங்கி உதவிப் பொது மேலாளர் (ஓய்வு)

“பொதுச்சுவராக இருந்தாலும் அது உங்களுடைய தனிப்பட்ட சொத்தாக இருக்கும்போது வீட்டுக் கடன் கிடைக்கும். நீங்கள் பொதுச்சுவருடன் சேர்த்து வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவதற்கான பிளான் அப்ரூவல் வாங்க வேண்டும். நீங்கள் வீடு கட்ட வேண்டியிருக்கும் முழுத் தொகைக்கும் கடன் கிடைக்காது. சுமார் 20% தொகையை நீங்கள் உங்கள் கையிலிருந்து போட வேண்டியிருக்கும். மீதமுள்ள தொகையைக் கடனாகப் பெறலாம்.”

பொதுச்சுவர் உள்ள வீட்டுக்குக் கடன் கிடைக்குமா?

என் அப்பா சமீபத்தில் காலமாகிவிட்டார். எங்கள் குடும்பத்தில் நான், தங்கை, அம்மா ஆகியோர் இருக்கிறோம். அப்பாவின் பெயரிலுள்ள பூர்வீகச் சொத்தான வீட்டு மனையை அம்மாவின் பெயருக்கு மாற்ற இயலுமா?

செந்தில்குமார், நாகர்கோவில்

என்.ரமேஷ், வழக்கறிஞர்

“நீங்களும், உங்கள் தங்கையும் சேர்ந்து வீட்டு மனையை செட்டில்மென்ட் பத்திரம்மூலம் உங்கள் தாயார் பெயருக்கு எழுதி, அதைப் பத்திரப் பதிவு செய்யலாம்.”

ஆர்.செல்வமணி, என்.ரமேஷ், எஸ்.ராமலிங்கம்
ஆர்.செல்வமணி, என்.ரமேஷ், எஸ்.ராமலிங்கம்

நானும் (வயது 42) மனைவியும் 16 வருடமாக சிறு மளிகைக் கடை நடத்தி வருகிறோம். என் மகன் (18) கல்லூரி மேற்படிப்பை முடித்தவுடன் (5 வருட காலத்தில்) கடையை அபிவிருத்தி செய்து, மினி சூப்பர் மார்க்கெட் ஆக மாற்றுவதற்கு ரூ.10 லட்சம் திரட்டவேண்டும். இதற்கு மாதந்தோறும் ரூ.14,000 எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய நான் தயார். எனக்கு ஆலோசனை கூறுங்கள்.

வைகறைச்செல்வன், பாவூர்சத்திரம்

எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்

‘‘நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் 14,000 ரூபாயில் 12,000 ரூபாயை நான்கு ஃபண்டுகளில் தலா ரூ.3,000 எனப் பிரித்துப் போடவும். லார்ஜ்கேப் ஃபண்டுகளான ஆக்ஸிஸ் புளூசிப் மற்றும் ரிலையன்ஸ் லார்ஜ்கேப் ஃபண்ட், அக்ரெஸிவ் ஹைபிரீட் ஃபண்டுகளான பி.என்.பி பரிபாஸ் சப்ஸ்டான்சியல் ஈக்விட்டி ஹைபிரீட், எஸ்.பி.ஐ ஹைபிரீட் ஃபண்டுகளில் தலா 3,000 ரூபாயும் மீதமுள்ள 2,000 ரூபாயை கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்டிலும் ஐந்து வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால், உங்கள் இலக்கை அடைய வாய்ப்புள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை உங்கள் முதலீட்டை மறுஆய்வு செய்வது நல்லது.’’

எஸ்.ஸ்ரீதரன், எம்எஸ்ஓ.அண்ணாமலை
எஸ்.ஸ்ரீதரன், எம்எஸ்ஓ.அண்ணாமலை

கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து பிரீமியம் கட்டிவந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை இந்த ஆண்டு புதுப்பிக்கத் தவறிவிட்டேன். இனி மருத்துவப் பரிசோதனை செய்து புதிய பாலிசிதான் எடுக்க வேண்டுமா?

கார்மேகம், ராஜபாளையம்

எஸ்.ஸ்ரீதரன், நிதி ஆலோசகர்

“ஹெல்த் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, ஒவ்வோர் ஆண்டும் கட்டாயமாகப் புதுப்பிக்கவேண்டும். அப்படிப் புதுப்பிக்கத் தவறினால் பாலிசி காலாவதி ஆவதுடன், பாலிசியின் கடந்த கால பலன்களும் உபயோகிக்க முடியாமல் போய்விடும். தற்போது புதிய பாலிசியை எடுப்பதைத் தவிர, வேறு வழி இல்லை.”

நான் லெமன் ட்ரீ நிறுவனத்தின் 500 பங்குகளை தலா ரூ.80 விலையிலும், லூமக்ஸ் ஆட்டோ டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் 300 பங்குகளை தலா ரூ.100 விலையிலும், பி.பி.சி.எல் நிறுவனத்தின் 50 பங்குகளை தலா ரூ.380 விலையிலும் வாங்கினேன். தற்போது மூன்றும் இறக்கத்தில் உள்ளன. காத்திருக்கலாமா அல்லது வெளியேறலாமா?

முத்துராம், சேலம்

எம்எஸ்ஓ.அண்ணாமலை, பங்குச் சந்தை ஆலோசகர்

“லெமன் ட்ரீ, லூமக்ஸ் ஆட்டோ டெக்னாலஜீஸ் நிறுவனங்களின் பங்குகளை விற்று வெளியேறுவது நல்லது. பி.பி.சி.எல் நிறுவனப் பங்கை இன்னும் ஆறு மாதம் அல்லது ஓராண்டுக்காலத்துக்கு வைத்திருந்தால், இழப்பில்லாமல் வெளிவர வாய்ப்புள்ளது.”

நான் 4 லட்சம் ரூபாயை மிதமான ரிஸ்க்குடன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எட்டு ஆண்டுக்காலத்துக்கு முதலீடு செய்ய விரும்புகிறேன். வங்கி வைப்புநிதியைவிட ஓரளவு அதிகமான வருமானம் எதிர்பார்க்கிறேன்.

செல்வராஜ், சென்னை

த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்

“எட்டாண்டுக்காலத்துக்கு ஈக்விட்டி ஹைபிரீட் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானம் பெறலாம். வரியும் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிடக் குறைவு. தலா 2 லட்சம் ரூபாய் வீதம், எஸ்.பி.ஐ ஈக்விட்டி ஹைபிரீட் ஃபண்ட் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஈக்விட்டி அண்டு டெப்ட் ஃபண்டில் முதலீடு செய்யவும்.”

த.முத்துகிருஷ்ணன், வி.எஸ்.சரண்சுந்தர்
த.முத்துகிருஷ்ணன், வி.எஸ்.சரண்சுந்தர்

நான் பணியிலிருந்தபடியே தொலைதூரக் கல்வித் திட்டத்தில் எம்.பி.ஏ படிப்பில் சேர்ந்துள்ளேன். எனது வருமானவரியில் இந்தப் படிப்புக்கான செலவைக் காட்டி வரிவிலக்குப் பெற முடியுமா?

நாகராஜ், விருதுநகர்

வி.எஸ். சரண்சுந்தர், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

“நீங்கள் தொலைதூரக் கல்வி மூலமாகப் படிப்பதாக இருந்தாலும் அல்லது நேரடியாகக் கல்லூரிக்கே சென்று படிப்பதாக இருந்தாலும் இப்போதைய உங்களின் கல்விச் செலவை உங்கள் வருமானவரிக்கணக்கில் காட்டமுடியாது. உங்களுடைய குழந்தைகளின் (அதிகபட்சம் இரண்டு குழந்தைகள்) கல்விக்கான செலவை மட்டுமே வருமானவரிவிலக்குக்குக் காட்டலாம். உங்கள் படிப்புக்காக, படிக்கும் காலத்தில் கல்விக் கடன் எடுத்திருந்தால் அதை வருமான வரிக்கழிவுக்குக் காட்டலாம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு