பிரீமியம் ஸ்டோரி

மது, சிகரெட் பழக்கம்போல வேறெந்தத் தவறான பழக்கமிருந்தால் மருத்துவக் காப்பீடு க்ளெய்ம் செய்வதில் சிக்கல் வரும், க்ளெய்மில் எவ்வளவு குறையும்?

மதியழகன், திருநெல்வேலி

பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்

‘‘தற்போது பல்வேறுவிதமான புகையிலை, போதைப் பொருள்கள் புழக்கத்தில் உள்ளன. எந்தவொரு போதை வஸ்துவோ அல்லது உடல்நலத்துக்குத் தீங்கான பழக்கமோ மிகுதியாக இருந்து அதன் காரணமாக உடல்நலக்கோளாறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தால், க்ளெய்ம் செய்யும்போது சிக்கல் ஏற்படும். இதுபோன்ற க்ளெய்ம்களில் சிகிச்சையளித்த மருத்துவக் குறிப்புகள் மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைப் பொறுத்தும், நபருக்கு நபரும்கூட க்ளைய்ம் விகிதங்கள் வேறுபடும்.’’

பி.மனோகரன், பி.ஆர்.டி.கோவர்தனன் பாபு
பி.மனோகரன், பி.ஆர்.டி.கோவர்தனன் பாபு

கடந்த மூன்றாண்டுகளாக எஸ்.ஐ.பி முறையில் ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ்ஷீல்ட், ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ், ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி மற்றும் எஸ்.பி.ஐ ஈக்விட்டி ஹைபிரீட் ஃபண்டுகளில் தலா ரூ.2,000 முதலீடு செய்துவருகிறேன். நீண்டகால நோக்கில் 12 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யவுள்ளேன். எனது முதலீடுகள் சரியானவையா?

பாலமுருகன், நெய்வேலி

பி.ஆர்.டி.கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர்

‘‘ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ்ஷீல்ட் மற்றும் ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஆகிய இரண்டு திட்டங்களும் வருமான வரிச் சலுகைக்குப் பயன்படும் திட்டங்கள். மற்றவர்களும் இதில் முதலீடு செய்யலாம். முதலீடு செய்யும் தேதியிலிருந்து, மூன்று வருடங்களுக்கு லாக்-இன் பீரியட் இருக்கும். அவசரமாகப் பணம் தேவை என்றால், திரும்பப் பெறமுடியாது. ஒரு சில முதலீட்டாளர்கள், இந்த மூன்று வருடத் தடை தங்களுக்கு நன்மை என்று கருதுவார்கள். நீங்களும், அவ்வாறு கருதினால் உங்கள் முதலீடுகள் சரியானவையே.’’

என் மகன் என்.ஆர்.ஐ. இங்குள்ள அவனது வீட்டின் வாடகை வருமானத்தை எனது வங்கிக் கணக்குமூலம் பெற்றுவருகிறேன். இதனை வருமான வரிக் கணக்குத் தாக்கலில் எனது வருமானமாகக் காட்டுவதா அல்லது என் மகனின் வருமானமாகக் காட்டுவதா? என்.ஆர்.ஐ வரி செலுத்துவதற்கான விதிமுறைகள் என்ன?

ராமநாதன், கோயமுத்தூர்

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

‘‘வீடானது மகனுக்குச் சொந்தமானதாக இருக்கிறது. எனவே, மகனின் சார்பாக வாடகை வருமானத்தை நீங்கள் உங்களுடைய வங்கிக் கணக்கில் வாங்கினாலும்கூட, அந்த வருமானம் உங்கள் மகனின் வருமானமாகவே கணக்கில்கொள்ளப்படும். என்.ஆர்.ஐ-யாக இருக்கும் உங்கள் மகன், இந்தியாவில் வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. இந்தியாவில் அவரின் மொத்த வருமானம் எவ்வளவு என்பதைக் காட்ட வேண்டும். அவரின் வரிக் குடியுரிமை எண்ணைக் குறிப்பிட வேண்டும். அவர் கடந்த ஆண்டில் இந்தியாவில் எவ்வளவு நாள்கள் தங்கியிருந்தார் என்பதைக் குறிப்பிட வேண்டும். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் இந்தியாவில் தங்கியிருந்த நாள்களின் எண்ணிக்கையும் குறிப்பிட வேண்டும். இறுதியாக, அவரது வருமானத்துக்கேற்ப ஐ.டி.ஆர் 2 அல்லது ஐ.டி.ஆர் 3 படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பி வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும்.’’

கே.ஆர்.சத்யநாராயணன், ஆர்.குமார்
கே.ஆர்.சத்யநாராயணன், ஆர்.குமார்

வில்லா டைப் லே-அவுட்டில் வீடு வாங்கவுள்ளேன். வீட்டை நம் விருப்பப்படி அவர்களே கட்டித் தருகிறார்கள். அதன் பேஸ்மென்ட் மூன்று அடி வைக்கிறார்கள். அது குறைவான உயரமாகத் தோன்றுகிறது. பேஸ்மென்ட் உயரத்தை எப்படி நிர்ணயிப்பது?

ராஜகோபால், சென்னை

ஆர்.குமார், இயக்குநர், நவீன்ஸ் ஹவுஸிங்

‘‘வீட்டுக்கு முன்புறம் உள்ள சாலையின் உயரத்தைவிட இரண்டு அடி உயரம் அதிகமாக இருப்பது நல்லது. ஆனால், அந்தச் சாலையே தாழ்வானதாக இருந்தால், அதையடுத்த மெயின் சாலையைக் கணக்கில் கொண்டு அதைவிட உயரமாக பேஸ்மென்ட்டை அமைக்க வேண்டும். மேலும், அந்தப் பகுதியில் கடந்த பத்தாண்டுகளில் மழைக்காலத்தின்போது சராசரியாகத் தண்ணீர் தேங்கும் அளவைத் தெரிந்துகொண்டு அதைவிட பேஸ்மென்ட் உயரமாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும்.’’

என் வயது 50. பணியிலிருந்து முன்கூட்டியே ஓய்வுபெற்றுள்ள நான் ரூ.30 லட்சத்தை முதலீடு செய்து மாதந்தோறும் 30,000 ரூபாயை வருமானம் பெற ஆலோசனை கூறவும்.

முன்கூட்டியே ஓய்வுபெற எப்படி திட்டமிட வேண்டும்?

ராஜு, மதுரை

ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர், மணிகேர்

‘‘ஓய்வுக்காலம் என்பது பணவீக்கம் மற்றும் ஆயுள்காலம் ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புள்ளது. பணவீக்கம் கணிக்க முடியாததாக உள்ளது. மருத்துவ வசதி மேம்பாடு காரணமாக மனிதர்களின் ஆயுள்காலம் அதிகரித்துவருகிறது. எனவே, ஓய்வுக்கால நிதியை நீண்டகால நோக்கிலும் அதிக தொகுப்பு நிதி நோக்கிலும் திட்டமிடுவது அவசியம். உங்களின் மாதாந்தர எதிர்பார்ப்புத் தொகையுடன் ஒப்பிடுகையில், முதலீட்டுத் தொகையான ரூ.30 லட்சம் மிகச் சிறியது. 10% வட்டி கிடைத்தாலும் 10 ஆண்டுகள்கூட நீடிக்காது. ஓய்வூதியப் பணத்தை அதிக ரிஸ்க் உள்ள திட்டங்களில் முதலீடு செய்யக்கூடாது. பாதுகாப்பான முதலீடு களில் 7-8% வருமானம் மட்டுமே எதிர்பார்க்கலாம். இதுவும் காலப்போக்கில் குறைய வாய்ப்புள்ளது. எனவே, நீங்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இதே பணியிலோ அல்லது வேறு ஏதேனும் வருமானம் ஈட்டும் பணியிலோ ஈடுபடலாம். நீங்கள் எதிர்பார்க்கும் வருமானத்தைப்பெற உங்களுடைய முதலீடு ரூ.50 லட்சமாக இருக்க வேண்டும். அல்லது மாதாந்தர வருமானம் சற்றுக் குறைவாகவே எதிர்பார்க்க முடியும்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்ரீனிவாசன், சுவாமிநாதன்
ஸ்ரீனிவாசன், சுவாமிநாதன்

மூன்றாண்டுகள் லாக்-இன் பீரியட் உள்ள இ.எல்.எஸ்.எஸ் திட்டத்தில் ரூ.2 லட்சத்தை என் தந்தை முதலீடு செய்திருந்தார். கடந்த மாதம் அவர் இறந்துவிட்டதால் அந்தப் பணத்தை லாக்-இன் பீரியட் முடியும்முன் எடுக்க முடியுமா?

வேல்முருகன், பரமக்குடி

சுவாமிநாதன், ஓம் ஸ்பெக்ட்ரம்

“இந்த முதலீட்டுக்கு மூன்றாண்டுகள் லாக்-இன் பீரியட் உள்ளது. லாக்-இன் பீரியடுக்கு முன்னதாகவே உங்கள் தந்தை இறந்துவிட்டார் என்பதால் மூன்றாண்டு லாக்-இன் பீரியட் முடியும்வரை காத்திருக்கத் தேவையில்லை. அந்த முதலீட்டுத் தொகையை முதலீடு செய்த தேதியிலிருந்து ஓராண்டுக்காலம் காத்திருந்து பின்னர் விண்ணப்பித்து எடுக்கலாம். ஏற்கெனவே ஓராண்டுக்காலம் முடிந்திருந்தால் உடனே விண்ணப்பித்து எடுக்கலாம். இந்த இ.எல்.எஸ்.எஸ் முதலீட்டில் உங்களுடைய பெயர் இரண்டாவது விண்ணப்பதாரராக இருந்தால், முதலாம் விண்ணப்பதாரர் உங்களுடைய தந்தை என்பதைக் குறிப்பிட்டு ஒரு கடிதமெழுதி, அதோடு உங்கள் தந்தையின் இறப்புச் சான்றிதழை இணைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். உங்களை முதன்மை விண்ணப்பதாரராக மாற்றிவிடுவார்கள். அதன்பின் பணத்தை எடுக்க முடியும். அல்லது நீங்கள் வாரிசுதாரராக இருந்தால், நீங்கள்தான் வாரிசுதாரர் என்று குறிப்பிட்டு, உங்களுடைய பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். நீங்கள் கே.ஒய்.சி செய்யவில்லை என்றால் அதைச் செய்ய சொல்வார்கள். பின்னர் உங்களுடைய பெயருக்கு அந்த முதலீட்டை மாற்றியதும் பணத்தை எடுக்கலாம்.”

முன்கூட்டியே ஓய்வுபெற எப்படி திட்டமிட வேண்டும்?

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு