Published:Updated:

வீட்டிலிருந்து ஆன்லைனில் வியாபாரம்... வங்கிக்கடன் கிடைக்குமா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

வீட்டிலிருந்தபடியே ஜவுளி வியாபாரத்தை ஆன்லைன் மூலம் செய்கிறேன். தற்போது ஏற்றுமதிக்கான வாய்ப்பும் வருகிறது. அதற்கான செலவுகளுக்கு ரூ.5 லட்சம் வங்கிக்கடன் வாங்க முடியுமா?

வரலட்சுமி, சேலம்

ஆர்.சுகுமார், உதவிப் பொது மேலாளர், சிட்பி

“வாங்க முடியும். முத்ரா திட்டத்தின்கீழ், வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.10 லட்சம் வரை வங்கிக்கடன் பெறலாம். எந்தவிதமான பிணை (செக்யூரிட்டி) மற்றும் மூன்றாம் நபர் ஜாமீன் ஏதுமின்றி, இந்தக் கடன் வழங்கப்படுகிறது. நீங்கள் ஈடுபட்டிருக்கும் தொழில், அடைந்த வெற்றிகள், தொழில் விரிவாக்கத்திற்குக் கைவசமுள்ள திட்டங்கள், அவற்றைச் செயல்படுத்தும் முறைகள் போன்றவற்றைத் தெளிவாக எடுத்துக் கூறுங்கள். அதேபோல், வங்கி அதிகாரி உங்கள் தொழிலைப் பற்றிக் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் எந்தவிதத் தயக்க மும் இல்லாமல் வெளிப்படையான பதில் அளித்து, அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினால் வங்கிக்கடன் கிடைக்கும்.”

நான் வாங்க உள்ள ஃப்ளாட்டில் சிலவற்றை நீக்கி, சில வசதிகளைக் சேர்க்கும்படி பில்டரிடம் சொன்னேன். இதனால், நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக தொகையை பில்டர் கேட்கிறார். விலை விவரங்களைக் காட்டவும் மறுக்கிறார். அவர்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாமா?

கோவிந்தராஜ், கோயமுத்தூர்

கே.அழகுராமன், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், சென்னை

“நீங்கள் ஃப்ளாட் வாங்க முன்பதிவு செய்தபோதே அந்த வீட்டின் கட்டுமானத்திற்கென கட்டுமான ஒப்பந்தம் (Construction Agreement) போட்டிருப்பீர்கள். அதில் கட்டுமானத்தின் தன்மை, கட்டவேண்டிய பரப்பின் அளவு மற்றும் என்னென்ன வசதிகள் உள்ளன என்று ஸ்பெசிஃபிகேஷன் (Specification) பகுதியில் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள். அதற்கான தொகையையும் குறிப்பிட்டிருப்பார்கள்.

வீட்டிலிருந்து ஆன்லைனில் வியாபாரம்...  வங்கிக்கடன் கிடைக்குமா?

அதில் சிலவற்றை மாற்றி, உங்கள் வசதிக்கென கூடுதலாகச் சேர்க்கும் போது அதற்கான செலவினங்களை எப்படி, யார் செலுத்துவது எனவும், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட கட்டுமானத்திற்கான தொகையை எப்படி ஈடு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தால், அதன் அடிப்படையில் ஒப்புக்கொண்ட தொகையைச் செலுத்துமாறு உரிமைகோரலாம்.

அதைவிட அதிகமான தொகையை எந்தக் காரணம் கொண்டும் பில்டர் கேட்க முடியாது. கூடுதலாகச் செய்யப்படும் கட்டுமானத்துக்கான விலை விவரங்களைக் கட்டாயம் உங்களிடம் பில்டர் காண்பிக்கக் கடமைப் பட்டவர். இவ்வாறு, கட்டுமான ஒப்பந்தத்தை மீறி அதிக தொகையைக் கோரும்பட்சத்தில், அவர்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆர்.சுகுமார், கே.அழகுராமன், கே.ஆர்.சத்யநாராயணன்
ஆர்.சுகுமார், கே.அழகுராமன், கே.ஆர்.சத்யநாராயணன்

நடப்பு 2019-20-ம் நிதியாண்டில் பங்கு முதலீட்டில் ரூ.75,000 இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசுப் பணியிலிருக்கும் நான், நடப்பு ஆண்டில் 3,50,000 ரூபாய்க்கு வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும். பங்குச் சந்தை இழப்பை வருமான வரி கணக்குத் தாக்கலில் காட்டிக் கழித்துக்கொள்ள முடியுமா?

எஸ்.குப்புசாமி, இ-மெயில் வழியாக...

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

“பங்குச் சந்தையில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பானது குறுகியகால மூலதன இழப்பாகக் கணக்கிடப்படும். இதனை வழக்கமான வருமான வரிக் கணக்குடன் சேர்த்து நேர்செய்ய முடியாது. வேறு ஏதேனும் குறுகிய கால மூலதன ஆதாயம் இருந்தால், அதில் இந்த இழப்பைக் கழித்து கணக்குக் காட்டலாம். அடுத்த எட்டாண்டுகள் வரை அதற்கான வாய்ப்பிருக்கிறது. குறுகிய கால மூலதன இழப்பைக் கணக்கில் காட்ட அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
எஸ்.ஸ்ரீதரன், ஜி.கோபால்கிருஷ்ண ராஜு, எஸ்.ராமலிங்கம்
எஸ்.ஸ்ரீதரன், ஜி.கோபால்கிருஷ்ண ராஜு, எஸ்.ராமலிங்கம்

இரண்டு ஆண்டுகளுக்குமுன் டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளுக்கான எஃப்.டி-யில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தேன். அந்த நிறுவனம் பற்றிய சமீபகாலச் செய்திகள் நல்லமுறையில் இல்லை. நான் செய்த எப்ஃ.டி முதிர்ச்சி அடைந்தவுடன், வட்டியுடன் அசல் தொகையை உரிய காலத்தில் அளிப்பார்களா எனச் சந்தேகமாக உள்ளது. நான் என்ன செய்யலாம்?

ரமேஷ், கோழிப்பாக்கம்

எஸ்.ஸ்ரீதரன், நிதி ஆலோசகர்

“டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனம் கடந்த ஓராண்டு காலமாகச் சரிவைச் சந்தித்துவருவதால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் வாங்கிய கடனை அவர்களால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. சிறிது கால அவகாசம் கேட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனம், வைப்புநிதித் திட்டத்தைப் புதுப்பிப்பதையும் புதிதாகத் தொடங்குவதையும் கடந்த மே மாதம் முதல் நிறுத்திவைத்துள்ளது. இந்த நிலையில், உங்களிடம் உள்ள எஃப்.டி-யைத் தற்போதே சரண்டர் செய்து பணத்தைத் திரும்பப் பெறுவதுதான் நல்லது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.”

தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்கப் பணிக்காகக் கையகப்படுத்தப்பட்ட எனது நிலத்துக்கென அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்கு வரி செலுத்த வேண்டுமா?

முருகவேல், சென்னை

ஜி.கோபால்கிருஷ்ண ராஜு, ஆடிட்டர்

“வருமான வரிச் சட்டம் 45 பிரிவு 5-ன்படி, கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடாகப் பெற்ற தொகைக்கு வரிப் பிடித்தம் (டி.டி.எஸ்) உண்டு. வருமான வரிச் சட்டம் 194 (LA) பிரிவின் படி, கையகப்படுத்தப்பட்ட உங்களுடைய நிலம் விவசாய நிலமாக இருந்தால் அதற்கு டி.டி.எஸ் பிடித்தம் கிடையாது. விவசாய நிலமாக இல்லை என்றால் அதற்கு டி.டி.எஸ் பிடிப்பார்கள். அதற்கான இழப்பீட்டுத்தொகை ரூ. 1 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால், 10% வரிப் பிடித்தம் செய்யப்படும்.

விவசாய நிலமாக இல்லையென்றால், அதற்கான இழப்பீட்டுத்தொகைக்கு நீண்டகால மூலதன ஆதாயத்தைக் கணக்கிட்டு வரிப் பிடித்தம் செய்வார்கள். அடுத்ததாக, உங்கள் நிலத்துக்கான இழப்பீடு போதுமானதாக இல்லையென்று நீதிமன்றத்தில் முறையிட்டு, கூடுதல் இழப்பீட்டைப் பெற்றீர்கள் என்றால், பெறப்பட்ட தொகைக்கு முழுமையாக வரிப் பிடித்தம் செய்வார்கள்.”

நான் (வயது 38) மூன்று ஆண்டுகளுக்குமுன் எஸ்.ஐ.பி முறையில் மாதம் 4,000 ரூபாயை ரிலையன்ஸ் ஸ்மால்கேப், எல்&டி எமெர்ஜிங் பிசினஸஸ் ஆகிய இரண்டு ஃபண்டு களில் எனது குழந்தைகளின் (8,10 வயது) மேற்படிப்பு மற்றும் கல்லூரிச் செலவுக்காக 8-10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தேன். தற்போது அவை இரண்டும் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளன. மேலும், வரிச் சேமிப்புக்காக இந்த வருடம் ரூ.40,000 முதலீடு செய்ய வேண்டும். தகுந்த ஆலோசனைக் கூறுங்கள்.

செல்வராகவன், திருச்சி

எஸ்.ராமலிங்கம், நிதி ஆலோசகர்

“நீங்கள் தேர்வு செய்துள்ள இரண்டு ஃபண்டு களும் அதிக ரிஸ்க், அதிக வருமானம் தரக் கூடியவை. தேர்வு செய்யும்போது ஃபண்டுகள் தரும் வருமானத்தை மட்டும் பார்க்காமல் அதன் ரிஸ்க், முதலீட்டுக் காலம், உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றையும் கணக்கில்கொள்ள வேண்டும்.

உங்களுக்கு 5-7 ஆண்டுகள் கைவசம் இருப்பதால், எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்ந்து செய்துவாருங்கள். மூன்று ஆண்டுகள் லாக்இன் உள்ள இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் ரூ.20,000 வீதம் ஆக்ஸிஸ் லாங்டேர்ம் ஈக்விட்டி, மிரே அஸெட் டாக்ஸ்சேவர் ஃபண்டுகளில் முதலீடு செய்துவந்தால் உங்கள் எதிர்பார்ப்பு ஈடேறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

வீட்டிலிருந்து ஆன்லைனில் வியாபாரம்...  வங்கிக்கடன் கிடைக்குமா?

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com