Published:Updated:

“நன்றி கொரோனா என்று நீங்கள் சொல்லத் தயாரா?” - நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல்

சி.கே.குமரவேல்
பிரீமியம் ஸ்டோரி
News
சி.கே.குமரவேல்

“நான் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று பேசி பிரயோஜனம் இல்லை. செயலில் இறங்குங்கள்.”

நாணயம் விகடன் நடத்திய வெபினார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். ‘தோல்வியிலிருந்து மீண்டு வர ஏழு படிநிலைகள்’ பற்றி அவர் பேசினார்.

நன்றி கொரோனா..!

‘‘இன்று நாம் ஒரு முக்கியமான காலத்தைக் கடந்து வருகிறோம். அடுத்த ஆண்டு டிசம்பரில் நம்மில் 70% பேர் இப்படிச் சொல்வார்கள்: ‘நான் நன்றாக வேலை செய்துகொண்டிருந்தேன். கொரோனா வந்ததால், என் சம்பளம் குறைந்தது; வேலை போனது. என் பிசினஸ் முடங்கியது. அரசாங்கம் எனக்கு உதவ மறுத்துவிட்டது. என் பிசினஸை மூடுவதைத் தவிர, எனக்கு வேறு வழி தெரியவில்லை.’ ஆனால், 30% பேர், ‘கொரோனா வந்ததால் என் திறமையை அதிகப்படுத்திக்கொள்ள முடிந்தது. புதிய வாய்ப்புகளைத் தேடிச் செல்ல முடிந்தது. முன்பைவிட இப்போது என் பிசினஸ் மிகச் சிறப்பாக நடக்கிறது. தாங்க்யூ கொரோனா’ என்று சொல்வார்கள்.

“நன்றி கொரோனா என்று நீங்கள் சொல்லத் தயாரா?” - நேச்சுரல்ஸ் சி.கே.குமரவேல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நீங்கள் 30% பேரில் ஒருவனாக இருக்க வேண்டும் எனில், நீங்கள் உங்களை, உங்கள் பிசினஸை, உங்கள் நிதிநிலையை மறுகண்டுபிடிப்பு செய்யுங்கள். நான் என் தொழிலில் அதைத்தான் செய்தேன். கொரோனாவுக்கு முன் நேச்சுரல்ஸ் நிறுவனம் ஒரு நல்ல பிராண்டா என்று மட்டும் பார்த்தனர். ஆனால், கொரோனாவுக்குப் பின் ‘இந்த சலூன் பாதுகாப்பானதா’ என்பதை மட்டுமே பார்க்கின்றனர். என் சலூன் பாதுகாப்பானதாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தேன். தவிர, வீடுகளுக்கே சென்று சேர்க்கிறோம். இதனால் எங்கள் பிசினஸ் வளர்ச்சியடைந்துள்ளது. எனவே, நான் கொரோனாவுக்கு நன்றி சொல்லும் நிலையில் இருக்கிறேன். நீங்களும் உங்களையும் உங்கள் பிசினஸையும் உங்கள் நிறுவனத்தின் நிதிநிலையையும் மறுகண்டு பிடிப்பு செய்தால், கொரோனாவுக்கு நன்றி சொல்லும் நிலையில் இருப்பீர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வெற்றி தரும் பி.ஹெச்.டி...

நீங்கள் வெற்றி பெற வேண்டுமெனில் உங்களிடம் பி.ஹெச்.டி இருக்க வேண்டும். இது டாக்டர் பட்டம் தரும் பி.ஹெச்.டி அல்ல. நான் சொல்லும் பி.ஹெச்.டி என்பது passionate, hungar, discipline ஆகிய வார்த்தைகளின் முதல் எழுத்துகளே. நீங்கள் எந்தத் தொழிலை செய்வதாக இருந்தாலும் அதில் முழுமையான ஈடுபாட்டுடன் இருப்பதே பேஷனேட். எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கிற அறிவுப்பசி உங்களிடம் இருப்பதுதான் ஹங்கர். எந்த வேலையைச் செய்தாலும் அதில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிப்பது தான் டிசிப்பிளின். இந்த மூன்றும் உங்களிடம் இருந்தால் உங்களிடம் இருந்தால், நீங்கள் எந்தத் தொழில் செய்தாலும் வெற்றிதான்’’ என்றவர், தோல்வியிலிருந்து மீண்டுவரும் ஏழு விஷயங்கள் பற்றிப் பேசினார்.

சி.கே.குமரவேல்
சி.கே.குமரவேல்

1. உங்கள் இலக்கு என்ன?

நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள், உங்கள் இலக்கு என்ன என்பதை முதலில் கண்டறியுங்கள். கோல் போஸ்ட் இல்லாத கால் பந்தாட்டம் எப்படி சுவாரஸ்யம் இல்லாத விளையாட்டாக இருக்குமோ, அதுமாதிரி இலக்கு இல்லாத வாழ்க்கையும் பயனுள்ளதாக இருக்காது. நீங்கள் எந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தால்தான் அதற்கான பஸ்ஸில் நீங்கள் ஏற முடியும். எனவே, நீங்கள் சென்றடைய வேண்டிய இலக்கு எது என்பதை அறியுங்கள்.

2. உங்கள் இலக்கை ஸ்மார்ட்டாக ஆக்கிக்கொள்ளுங்கள்

நான் பணக்காரனாக வேண்டும்; நான் உலகத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்பதெல்லாம் ஸ்மார்ட்டான இலக்குகள் அல்ல. 2022-க்குள் நான் ரூ.50 லட்சம் சம்பாதிக்க வேண்டும்; 2022-க்குள் நான் அமெரிக்காவுக்குப் போய் வர வேண்டும் என்று துல்லியமாக இலக்கை நிர்ணயித்துக்கொள்வதுதான் ஸ்மார்ட் கோல். உங்கள் இலக்கை ஸ்மார்ட்டாக ஆக்கிக்கொள்ளுங்கள்.

3. உங்களை நீங்கள் நம்புங்கள்

எத்தனை பெரிய விஷயமாக இருந்தாலும் அதை உங்களால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை உங்களிடம் இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை உங்களிடம் இருந்தால், இந்த உலகமே உங்களுக்கு எதிராக இருந்தாலும் உங்களால் ஜெயிக்க முடியும்.

“உங்கள் திட்டம் என்ன என்பதை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். இப்படி நீங்கள் தொடர்ந்து 30 நாள்களுக்கு எழுதினால், உங்கள் திட்டம் என்ன என்பது குறித்த தெளிவு உங்களுக்குக் கிடைக்கும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

4. உங்கள் திட்டத்தை பேப்பரில் எழுதுங்கள்

உங்கள் திட்டம் என்ன என்பதை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். இப்படி நீங்கள் தொடர்ந்து 30 நாள்களுக்கு எழுதினால், உங்கள் திட்டம் என்ன என்பது குறித்த தெளிவு உங்களுக்குக் கிடைக்கும். இந்தத் தெளிவு கிடைத்துவிட்டால், அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு உங்களுக்குத் தெரிந்துவிடும். அதன் பிறகு நீங்கள் செயல்படத் தொடங்கிவிடலாம்.

5. உங்கள் இலக்கைக் காட்சிப்படுத்திப் பாருங்கள்

உங்கள் இலக்கைக் காட்சிப்படுத்திப் பாருங்கள். அப்படிப் பார்க்கத் தொடங்கினால், நீங்கள் என்னென்ன விஷயங்களை அடைய வேண்டும், அதற்கு எப்படியெல்லாம் திட்டமிட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும்.

6. செயல்படுங்கள்...

நான் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று பேசி பிரயோஜனம் இல்லை. செயலில் இறங்குங்கள். நீங்கள் நீச்சல் வீரனாக வேண்டும் என்றால் முதலில் நீந்தக் கற்றுக்கொள்ளுங்கள். வெறும் கனவு அல்லது சிந்தனை என்பது உங்களை எங்கேயும் கொண்டு செல்லாது. செயல் மட்டுமே உங்களுக்கு வெற்றி தரும்.

7. முயற்சியை என்றும் விட்டுவிடாதீர்கள்..!

பிசினஸில் வெற்றி பெற வேண்டுமெனில் உங்கள் முயற்சியை ஒருபோதும் விட்டு விடாதீர்கள். பிசினஸில் பலமுறை தோற்றபின் மேற்கொண்டு அதைத் தொடராமல் விட்டுவிடுகிறார்கள். அந்த பிசினஸை வாங்கி, விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்பவர்கள் ஜெயிக்கிறார்கள்’’ என்று பேசி முடித்தார்.

சி.கே.குமரவேலுவின் இந்தப் பேச்சை வீடியோவில் பார்க்க விரும்புகிறவர்கள் https://bit.ly/3my0nl4 என்கிற லிங்க்கை க்ளிக் செய்து பார்க்கலாம்.

நாணயம் விகடன் யூடியூபில் சி.கே.குமர வேலுவின் வீடியோவைப் பார்க்க விரும்புகிறவர்கள் https://bit.ly/3iDjLux என்கிற லிங்க்கை க்ளிக் செய்து பார்க்கலாம்.

‘‘உங்கள் பிசினஸை வளர்க்க நான் உதவத் தயார்!’’

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னார் சி.கே.குமரவேல்.

1. நமக்கு வசதியாக இருக்கும் சூழலை (Comfort zone) உடைத்து வெளியே வருவது எப்படி?

‘‘நமக்கு வசதியாக இருக்கும் சூழலை உடைத்து வருவது நாம் அடுத்தகட்ட முன்னேற்றத்தை நோக்கிச் செல்வதற்கான முதல்படி. இந்தச் சூழலை உடைத்துவிட்டாலே போதும், நாம் பாதிக்கிணற்றைத் தாண்டிவிடுவோம். இந்தச் சமயத்தில் பெற்றோர் களுக்கு நான் ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். தயவு செய்து உங்கள் குழந்தைகளைக் கஷ்டப் படுவதற்கு கற்றுக்கொடுங்கள். அவர்களை நீங்கள் கஷ்டமே தெரியாமல் வளர்த்தால், பிற்பாடு அவர்கள் எந்தப் புதிய முயற்சியையும் செய்யாமல் இருந்துவிடுவார்கள். அவர்கள் தோல்வி அடைவதற்கு அனுமதியுங்கள். தோல்விதான் அவர்களுக்கு வெற்றியைக் கற்றுத் தரும். உங்களுக்குத் தேவை வசதியான வாழ்க்கையா அல்லது சுவாரஸ்யமான வாழ்க்கையா என்று நீங்கள் மூளையிடம் கேட்டால், வசதியான வாழ்க்கைதான் என்று சொல்லும். உங்கள் மூளையிடம் நீங்கள் உரையாடாதீர்கள். உங்களுக்கு என்ன தேவையோ, அதைச் செய்யும்படி மூளைக்குக் கட்டளையிடுங்கள்.’’

சி.கே ஏஞ்சல் பற்றி சொல்லுங்கள்!

‘‘30 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கடலூரில் சிறிய அளவில் தொழில் செய்து வந்தபோது, எங்கள் தயாரிப்புகளை இந்தியா முழுவதும் கொண்டுசெல்ல உதவியது காத்ரேஜ் நிறுவனம். இதன் பிறகு எங்கள் தயாரிப்புகள் இந்தியா முழுவதும் விற்பனையாகத் தொடங்கின. இன்றைக்கு நேச்சுரல்ஸ் நிறுவனம் ஃப்ரான்சைஸ் முறையில் பெரிதாக வளர்ந்திருக்கிறது. எந்த சிறிய நிறுவனமாக இருந்தாலும் அதைப் பெரிய அளவில் கொண்டுசெல்ல என்ன செய்ய வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும் என்பதால், என் அறிவையும் அனுபவத்தையும் தந்து, சிறிய நிறுவனங்களுக்கு வழிகாட்டத் தொடங்கி யிருக்கிறோம். முன்னேறத் துடிக்கும் தொழில் முனைவோர்கள் யார் வேண்டுமானாலும் எங்களை அணுகி, ஆலோசனை பெறலாம்’’ என்று பதில் அளித்த சி.கே.குமரவேல் தனது இ-மெயில் முகவரியையும் (ckk@naturals.in) வாட்ஸ்அப் நம்பரையும் (98840-66799) தந்து அசத்தினார்!