Published:Updated:

கேள்வி - பதில் : வீட்டுக் கடனில் வாங்கிய வீட்டை விற்க முடியுமா..? - என்ன செய்ய வேண்டும்..?

Q&A

பிரீமியம் ஸ்டோரி

நான் நான்கு வருடங்களுக்கு முன் ரூ.25 லட்சம் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கினேன். கடனை முடிக்க இன்னும் 16 வருடங்கள் உள்ளன. குடும்பச் சூழ்நிலையால் இந்த வீட்டை விற்க முடியுமா?

சரவணன், காஞ்சிபுரம்

பி.எல்.ரவிகுமார், துணைப் பொது மேலாளர், எஸ்.பி.ஐ - சென்னை தலைமை அலுவலகத்தின் ரியல் எஸ்டேட் & வீட்டுவசதி வாணிபப் பிரிவு

“நீங்கள் வீட்டுக் கடன் மூலம் வாங்கிய வீட்டை, கடன் தொகை பாக்கி இருக்கும்போது, வங்கியின் அனுமதி இல்லாமல் விற்க முடியாது. வீட்டை விற்பதற்கு முன், நீங்கள் வாங்கிய கடன் தொகையை மொத்தமாகக் கட்டி, வங்கிக் கடனை நீங்கள் அடைக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நீங்கள்தான் செய்ய வேண்டும். கடன் அடைக்கப்பட்டதும் வீட்டுப் பத்திரம் வங்கியிலிருந்து உங்கள் கைக்கு வந்துவிடும். அதன் பிறகு, அந்தச் சொத்தை நீங்கள் விற்று பணமாக்கிக்கொள்ளலாம்.”

நான் வாங்கப்போகிற இடத்தின் வழிகாட்டி மதிப்பு சதுர அடி ரூ.900 என உள்ளது. ஆனால், சந்தை மதிப்பு ரூ.250-ஆகத்தான் உள்ளது. இந்த நிலையில், அரசு வழிகாட்டி மதிப்புக்கும் குறைவாக சொத்தைப் பதிவு செய்யலாம் என என் உறவினர் ஒருவர் சொல்கிறார். அப்படிச் செய்ய முடியுமா?

சுந்தரபாண்டியன், சோழவந்தான்

ஆ.ஆறுமுக நயினார், வழக்கறிஞர் மற்றும் பதிவுத்துறை முன்னாள் கூடுதல் தலைவர்

ஆ.ஆறுமுக நயினார்
ஆ.ஆறுமுக நயினார்

“உங்கள் ஆவணத்தில் நீங்கள் என்ன மதிப்புக்கு சொத்தை வாங்குகிறீர்களோ, அந்த மதிப்பை எழுதுவதே சரியானதாகும். குறைத்துப் போட்டால் அது கிரிமினல் குற்றமாகும். உண்மையிலேயே நீங்கள் குறைவாக வாங்கினால் அந்தச் சொத்தை, அந்த மதிப்புக்கு முத்திரைக் கட்டணம் பெற்றுக்கொண்டு சார்பதிவாளர் பதிவு செய்வார். ஆனால், அவர் உடனடியாக அந்த ஆவணத்தை உங்களிடம் தர மாட்டார். உண்மையான அரசு வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்வதற்காகத் துணை கலெக்டருக்கு (முத்திரைத் தாள்) சார்பதிவாளர் அனுப்பி மதிப்பு நிர்ணயம் செய்வார். தேவைப்பட்டால், துணை கலெக்டர் (முத்திரைத் தாள்) குறிப்பிட்ட மனை உள்ள இடத்துக்கு நேரில் வந்து விசாரணை செய்து, வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்வார். அப்போது, ஏற்கெனவே நிர்ணயம் செய்யப்பட்ட அரசு வழிகாட்டி மதிப்பில் மாற்றம் இல்லை என்று சொல்லலாம் அல்லது வழிகாட்டி மதிப்பானது குறைக்கப் படலாம். அதன் அடிப்படையில் முத்திரக் கட்டணம் கட்டி, கிரயப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த நடவடிக்கை இந்திய முத்திரைச் சட்டம் 47ஏ பிரிவின்கீழ் மேற்கொள்ளப்படுகிறது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மிகக் குறைவாக ரிஸ்க் கொண்டது, ஓவர்நைட்ஃ பண்ட் என என் நண்பர் ஒருவர் சொன்னான். இதில் யார், எவ்வளவு காலத்துக்கு முதலீடு செய்யலாம்?

விவேக் சங்கர், இ-மெயில் மூலம்

ஸ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

ஸ்ரீகாந்த் மீனாட்சி
ஸ்ரீகாந்த் மீனாட்சி

‘‘ஓவர்நைட் ஃபண்டுகளை ஒரு முதலீட்டு சாதனமாகப் பார்க்காமல், ஒரு நிதி வைப்பகமாகப் பார்ப்பது நல்லது. வங்கிச் சேமிப்புக் கணக்கைவிட சற்றே அதிகம் லாபம் தரக்கூடும் என்ற வகையில், இவற்றைக் குறுகியகால முதலீட்டுக்கு (ஆறு மாதங்கள் அல்லது அதிகபட்சம் ஒரு வருடம்) இவற்றை உபயோக்கிக்கலாம். அதற்கு மேலான காலத்துக்கு நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் கடன் சந்தை வகையைச் சேர்ந்த மற்ற ஃபண்டுகளிலோ, ஹைபிரிட் ஃபண்டுகளிலோ முதலீடு செய்யலாம்.”

கடைகளில் நுகர்வோர் சம்மதம் தெரிவிக்காமல் கட்டாய ‘சுத்திகரிப்புக் கட்டணம்’ வாங்குவது சரியா?

செந்தில் குமார், சென்னை

எஸ்.சரோஜா, நுகர்வோர் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர், சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப்

எஸ்.சரோஜா
எஸ்.சரோஜா

“தற்போது, கொரோனா தொற்று காரணமாக சானிடைசர் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக, கடைக்கு வருபவர்களிடம் சானிடைசர் பயன்படுத்துவதற்கான கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது. விருப்பம் (voluntary) என்று பில்லில் குறிப்பிட்டு, கட்டணம் வசூலிப்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. பல இடங்களில், இவ்வாறு, கிருமி நாசினி / முகக்கவச கட்டணங்கள் என்ற பெயரில் பணம் வசூலிப்பது வழக்க மாகிவிட்டது. இது தொடர்பாக அரசாங்கம் தலையிட்டுத் தக்க விதிமுறைகளை வெளியிட வேண்டும்.’’

பங்குச் சந்தை டீமேட் கணக்கின் மூலம் வாங்கப்படும் சாவரின் கோல்டு பாண்டில் ஆண்டுக்கு 2.5% வருமானம் கிடைக்குமா?

மதன்குமார்.ஆர். இ-மெயில் மூலம்

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

ஷியாம் சுந்தர்
ஷியாம் சுந்தர்

“சாவ்ரின் கோல்டு பாண்டு்களை பங்குச் சந்தை மூலம் வாங்கினாலும் ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானம் உண்டு. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில், குறிப்பிட்ட வருடத்தில், வெளியிடப்பட்ட தொகுப்பு விலையின் மீது மட்டுமே வட்டியானது வழங்கப்படும். அதாவது, பங்குச் சந்தையில் பட்டியலாகும் விலைக்கு வட்டி தரப்பட மாட்டாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.”

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒரு வகையான கேப்பிடல் புரொடக்‌ஷன் ஃபண்டில் மூலதனத்துக்கு பாதுகாப்பு உண்டா? மூன்று ஆண்டுகள் அதன் லாக்இன் பிரீயட் முடிந்த பிறகு முதலீடு செய்த பணத்தைவிடக் கூடுதல் தொகை கிடைக்குமா?

அன்னலஷ்மி, கடலூர்

த.முத்துகிருஷ்ணன், சர்டிஃபைட் ஃபைனான்ஷியல் பிளானர்

த.முத்துகிருஷ்ணன்
த.முத்துகிருஷ்ணன்

“கேப்பிடல் புரொடக்‌ஷன் ஃபண்டுகள் (Capital protection funds), மூலதனத்துக்கு எந்த உத்தரவாதத்தையும் (Guarantee) அளிக்கவில்லை. மேலும், மூலதன மதிப்பு உயர்வுக்கு எந்த உறுதியையும் (Assurance) அளிக்க வில்லை. எனவே, நிலையான வருமானத்தை நீங்கள் எதிர்பார்த்தால், வங்கிகளின் நிலையான வைப்புகளில் (Fixed Deposits) முதலீடு செய்வது நல்லது.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com

பிட்ஸ்

ன்லைன் நாணயமான பிட்காயினின் விலை மீண்டும் 19,800 டாலரைத் தொட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்பு இதன் விலை குறைந்து 17,000 டாலர் வரை இறங்கியது குறிப்பிடத் தக்கது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு