Published:Updated:

கேள்வி - பதில் : வீடு ரூஃப் அமைக்க எப்படிப்பட்ட சிமென்ட் பயன்படுத்த வேண்டும்?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

பதில் சொல்கிறார் நிபுணர்

கேள்வி - பதில் : வீடு ரூஃப் அமைக்க எப்படிப்பட்ட சிமென்ட் பயன்படுத்த வேண்டும்?

பதில் சொல்கிறார் நிபுணர்

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

Q&A

நான் விரைவில் வீடு கட்டப்போகிறேன். கட்டுமானத்துக்கு ரூஃப் போடுவதற்கு எனத் தனித்தனியே சிமென்ட் ரகங்கள் உள்ளனவா. பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் பிராண்டட் சிமென்டுகளைத்தான் கட்டுமானத்துக்குப் பயன்படுத்த வேண்டுமா?

கே.முருகன், படப்பை.

பொறியாளர் ஜி.கணேஷ், ஆர்.ஜி அசோசியேட்ஸ், கோயம்புத்தூர்

‘‘சந்தையில் விற்பனைக்கு இருக்கும் அனைத்து சிமென்ட்டுகளும் சரியான முறையில் இந்திய தரக்கட்டுப் பாட்டு விதிமுறைகளுடன் தொழிற்சாலைகளிலிருந்து தயாராகி வருவதே. எனவே, அனைத்து வகை ஐ.எஸ்.ஐ (ISI) உள்ள சிமென்ட்டு்களையும் உபயோகிக்கலாம். மற்றபடி ஒருசில சிமென்ட் நிறுவனங்கள் ரூஃப் ஸ்லாப் அமைப்பதற்கு என்று தனியாக சிமென்ட் தயாரித்து விற்று வருகின்றன. தேவைப்பட்டால் அதையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.’’

சேமிப்புக் கணக்கில் சேரும் வட்டி வருமானத்துக்கு நிதி ஆண்டில் எவ்வளவு தொகை வரைக்கும் வருமான வரி கிடையாது. மூத்தக் குடிமக்களுக்கு ஏதாவது சலுகை இருக்கிறதா?

அ.தங்கையா, சுரண்டை.

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

‘‘60 வயதுக்கு உட்பட்ட பொதுப் பிரிவினருக்கு வருமான வரிப் பிரிவு 80TTA-யின்கீழ் சேமிப்புக் கணக்கு மூலமான வட்டி வருமானத்துக்கு நிதி ஆண்டில் ரூ.10,000 வரைக்கும் வரிவிலக்கு உண்டு. இதுவே 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் எனில், சேமிப்புக் கணக்கு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் எல்லாம் சேர்ந்து நிதி ஆண்டில் வருமான வரிப் பிரிவு 80TTB-யின்கீழ் ரூ.50,000 வரைக்கும் வரிச்சலுகை கிடைக்கும்.’’

பொறியாளர் ஜி.கணேஷ், கே.ஆர்.சத்யநாராயணன், சி.பாரதிதாசன், என்.பி.விஜயகுமார், ஸ்ரீதேவி கணேஷ்
பொறியாளர் ஜி.கணேஷ், கே.ஆர்.சத்யநாராயணன், சி.பாரதிதாசன், என்.பி.விஜயகுமார், ஸ்ரீதேவி கணேஷ்

மாதம்தோறும் ரூ.5,000 எஸ்.ஐ.பி முறையில் தங்கத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், கோல்டு இ.டி.எஃப் எது சிறந்ததாக இருக்கும்?

கே.அருணா, தூத்துக்குடி.

சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர்

‘‘கோல்டு சேவிங்ஸ் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம். இதற்கு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இருந்தால் போதும். கோல்டு இ.டி.எஃப்பில் முதலீடு செய்ய, டீமேட் கணக்குத் தேவை. இந்தக் கணக்கில் ஆண்டுப் பராமரிப்பு கணக்கு சுமார் 300 - 500 ரூபாய் உண்டு. நீங்கள் மாதம் ரூ.5,000-தான் முதலீடு செய்கிறீர்கள் என்கிறபட்சத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களில் உள்ள கோல்டு சேவிங்ஸ் ஃபண்டில் முதலீடு செய்துவரலாம். ஆனால், கோல்டு சேவிங்ஸ் ஃபண்டில் கோல்டு இ.டி.எஃப்பைவிட செலவு விகிதம் மிக அதிகமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து, கோல்டு சேவிங்ஸ் ஃபண்டா, கோல்டு இ.டிஎஃப் முதலீடா என முடிவு செய்துகொள்ளவும். அதேநேரத்தில், தற்போதுள்ள சூழ்நிலையில், தங்கத்தில் முதலீடு செய்து குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்ப்பது என்பது இயலாத காரியம். காரணம், கடந்த ஓராண்டில், கடந்த 10 ஆண்டில் ஏறாத விலை எல்லாம் சேர்த்து தங்கத்தின் விலை மிகவும் ஏறிவிட்டது. அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர் முடிவுக்கு வந்தால், கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், உலகப் பொருளாதாரம் வளர்ச்சி காண ஆரம்பித்து விட்டால், தங்கத்தின் விலை படிப்படியாகக் குறைய ஆரம்பித்துவிடும்.

எனவே, நீண்டகால முதலீடு என்றாலும் உங்களின் மொத்த முதலீட்டுத் தொகையில் சுமார் 10 - 15% வரை மட்டுமே தங்கம் சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யவும். மீதியை ஸ்மால்கேப், மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நீண்டகாலத்தில் லாபகரமாக இருக்கும்.’’

ரியல் எஸ்டேட் புரோக்கர் ஏமாற்றிவிட்டார் என்றால் யாரிடம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுப்பது?

கமலாவதி, குரோம்பேட்டை, சென்னை.

என்.பி.விஜயகுமார், வழக்கறிஞர்

‘‘ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டமான ரெரா (RERA), ரியல் எஸ்டேட் முகவர் (agent) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது, மேலும், இந்த வார்த்தையில் ரியல் எஸ்டேட் தரகரும் (broker) அடங்குவார். இந்தச் சட்டத்தின்படி, ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டுகள் ரெரா ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். ரெரா ஆணையத்தில் ரியல் எஸ்டேட் முகவருக்கு எதிராக நியாயமற்ற நடைமுறைகளுக்கு புகார் அளிக்க முடியும். இது தவிர, ரியல் எஸ்டேட் முகவர் மீதும் நுகர்வோர் மன்றங்களிலும் புகார் அளிக்கலாம். சாட்சியங்களில் சிக்கல் மற்றும் குழப்பமான சிக்கல் இருந்தால், நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கு தொடரலாம்.’’

என் வயது 38. என் இரு மகள்களின் உயர்கல்வி மற்றும் திருமணத்துக்கு சுமார் எட்டு ஆண்டுகள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். நான் நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்யலாமா அல்லது மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்யலாமா?

ராம்பாபு லலிதா, முகநூல் மூலம்

ஸ்ரீதேவி கணேஷ், நிதி ஆலோசகர்

‘‘உங்களின் முதலீட்டுக் காலம் மற்றும் முதலீடுகளுக்கான நோக்கம் பங்கு சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்ய ஏற்றதாக உள்ளது. உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் முதலீடு செய்வதற்குமுன் நீங்கள் தேர்ந்தெடுக்கும் முதலீட்டுத் திட்டங்களில் உள்ள ரிஸ்க் ஆகியவற்றை நீங்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் பங்குச் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை.

பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்து, நல்ல வருமானத்தை ஈட்ட உங்களுக்கு பங்குச் சந்தை மற்றும் நிறுவனங்கள் பற்றிய அறிவு, ஆராய்ச்சி மற்றும் கண்காணிக்க நேரம் மற்றும் பொறுமை இருக்க வேண்டும். இவை இல்லாத பட்சத்தில் ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்துவருவது நல்லது.’’

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com