Published:Updated:

கேள்வி பதில் : தங்கப் பத்திரத்தில் முதலீடு... பணமாக மாற்றுவது எப்படி..?

தங்கப் பத்திரங்களை தபால் நிலையங்களிலோ, வங்கிகளிலோ எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம்!

பிரீமியம் ஸ்டோரி

மத்திய அரசின் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு, விபத்துக் காப்பீட்டுக்கு ரூ.12 மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு ரூ.330 வங்கி சேமிப்புக் கணக்கு மூலம் பிடிக்கப்படுகிறது. இந்தத் தொகைக்கு வருமான வரிச் சலுகை உண்டா?

எஸ்.ரவீந்திர குமார், கோயம்புத்தூர்

கேள்வி பதில் : தங்கப் பத்திரத்தில் முதலீடு... பணமாக மாற்றுவது எப்படி..?

“வரிச் சலுகைக்கு க்ளெய்ம் செய்யலாம். ரூ.330 பிரீமியம் ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு கட்டப்படுவதால், அதை 80சி பிரிவின்கீழ் க்ளெய்ம் செய்யலாம். ரூ.12 பிரீமியம் மெடிக்ளெய்ம் பாலிசிக்கானது அல்ல. அது விபத்து பாலிசிக்கானது. அந்தத் தொகைக்கு வரிச் சலுகை கிடைக்காது.”

பிராண்டட் பொருள்களை ஏற்றுமதி செய்வது எப்படி?

ஆனந்தன் ராஜன் பாபு, இ-மெயில் மூலம்

கேள்வி பதில் : தங்கப் பத்திரத்தில் முதலீடு... பணமாக மாற்றுவது எப்படி..?

“பிராண்டட் பொருள்களை நாம் ஏற்றுமதி செய்யும்போது, அந்தப் பொருள்களை இறக்குமதி செய்யும் நாடு, எந்த வகை சந்தை அமைப்பைக் கொண்டிருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். பொதுவாக, சந்தையைத் திறந்த சந்தை (Open Market), மூடிய சந்தை (Closed Market) என இரண்டு வகைகளாகப் பிரித்துச் சொல்வார்கள். திறந்த சந்தையைக் கொண்ட நாடு (உதாரணம், சிங்கப்பூர்) என்றால், பொருள்களுக்கு அதிகபட்ச விலை (MRP) நிர்ணயிக்கப்பட்டிருக்காது. இந்த நாடுகளில் யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக வர்த்தகம் செய்ய முடியும். இந்த நாடுகளுக்கு யார் வேண்டுமானாலும் பிராண்டட் பொருள்களைத் தாராளமாக ஏற்றுமதி செய்யலாம். ஆனால், மூடிய சந்தை என்றால், பொருள்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் (உதாரணம், இலங்கை, இந்தியா). இது போன்ற நாடுகளுக்குக் குறிப்பிட்ட பிராண்டட் பொருளுக்கு ஏற்கெனவே விநியோகஸ்தர் இருக்கும்பட்சத்தில், இன்னொருவர் ஏற்றுமதி செய்ய முடியாது. விலையும் அந்தந்த நாடுகளின் அரசாங்கம் நிர்ணயிப்பதற்குமேல் விற்க முடியாது. இவற்றைக் கவனித்து நீங்கள் ஏற்றுமதி செய்ய வேண்டும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு என் மகனின் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு எவ்வளவு செலவாகும். அந்தச் செலவை ஈடுகட்ட எவ்வாறு திட்டமிட வேண்டும், அதற்கு எப்படி முதலீடு செய்யலாம்?

எஸ்.ராஜேஷ் கண்ணன், சிங்கம்பேட்டை.

கேள்வி பதில் : தங்கப் பத்திரத்தில் முதலீடு... பணமாக மாற்றுவது எப்படி..?

“பணவீக்க விகிதம் 6% என்று எடுத்துக்கொண்டால், பட்டப்படிப்புக்கு சுமார் ரூ.7.5 லட்சம், பட்டமேற்படிப்புக்கு சுமார் ரூ.7.15 லட்சம், ஆராய்ச்சி படிப்புக்கு சுமார் ரூ.6 லட்சம் செலவாக வாய்ப்புண்டு. பட்டப்படிப்புக்கான செலவை ஈடுகட்ட ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் புளூஷிப் ஃபண்டில் மாதம் ரூ.4.000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் இந்தியா ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்டில் மாதம் ரூ.2,000 முதலீடு செய்து வர வேண்டும். இந்த முதலீட்டை ஏழு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செய்து, அதற்கு ஆண்டுக்குச் சராசரியாக 10% வருமானம் கிடைத்தால், எதிர்பார்க்கும் தொகை கிடைத்துவிடும். பட்டமேற்படிப்புக்கு 10 ஆண்டுகளுக்கு டாடா லார்ஜ்கேப் & மிட்கேப் ஃபண்டில் மாதம் ரூ.3,500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். ஆண்டுக்கு 10% வருமானம் கிடைத்தால், நீங்கள் எதிர்பார்க்கும் தொகை சேர்ந்துவிடும். ஆராய்ச்சி படிப்புக்கு மாதம் ரூ.2,000 வீதம் யூனியன் மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்து வரலாம். ஆண்டுக்குச் சராசரியாக 12% வருமானம் கிடைத்தால் இலக்குத் தொகையான ரூ.6 லட்சம் கிடைத்துவிடும்.”

தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்ய விரும்புகிறேன். அதை தபால் நிலையத்தில் வாங்கினால், அங்கேயே விற்க முடியுமா அல்லது வங்கியில் கொடுத்துப் பணமாக மாற்றிக்கொள்ளலாமா, வாங்கிய நாளிலிருந்து நமக்குத் தேவைப்படும்போது எப்போது வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாமா?

ராமலிங்கம், வானொலி நகர், புதுச்சேரி

கேள்வி பதில் : தங்கப் பத்திரத்தில் முதலீடு... பணமாக மாற்றுவது எப்படி..?

“தபால் நிலையங்களிலோ, வங்கிகளிலோ எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம். அப்படி வாங்கும்போது, அந்த விண்ணப்பத்திலேயே உங்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவிப்பது அவசியம். அப்போதுதான், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் வட்டித் தொகையையும், முதிர்வுத் தொகையையும் உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடியும். முதிர்வுக் காலத்தில், அதை வாங்கிய இடத்திலேயே சமர்ப்பித்து, முதலீட்டைத் திரும்பப் பெறலாம். வாங்கிய நாளிலிருந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகுதான் திட்டத்திலிருந்து வெளியேற முடியும். பத்திரத்தை அடமானம் வைத்து வங்கிகளில் கடன் பெறலாம்.”

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மியூச்சுவல் ஃபண்டில் உள்ள ஓய்வுக்கால ரிட்டயர்மென்ட் ஃபண்டில் முதலீடு செய்ய முடியுமா?

அ.தீபன், கரூர்

கேள்வி பதில் : தங்கப் பத்திரத்தில் முதலீடு... பணமாக மாற்றுவது எப்படி..?

“தாராளமாக முதலீடு செய்ய முடியும். மூத்த குடிமக்களுக்கு வெளியேறும் கட்டணம் மற்றும் லாக்இன் பீரியட் கிடையாது. பொதுவாக, இத்தகைய திட்டங்களில் கன்சர்வேட்டிவ் - கடன் சந்தை மட்டும், மாடரேட் - கடன் மற்றும் பங்குச் சந்தை இரண்டிலும், அக்ரசிவ் - பங்குச் சந்தை மட்டும் என மூன்று வகைகளாக முதலீடு செய்வார்கள். தங்களுக்கேற்ற திட்டங்களை ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் ஈட்டுவதற்கு தங்களது முதலீட்டுத் தொகையில் ஒரு பகுதியை இந்த வகை ஃபண்டுகளில் முதலீடு செய்து பயன் பெறலாம்.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு