Published:Updated:

கேரளத்தை அதிரவைத்த நார்க்கோட்டிக் ஜிகாத்! - பிஷப் பேசியதன் பின்னணி என்ன?

பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட்
பிரீமியம் ஸ்டோரி
பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட்

கத்தோலிக்கப் பெண்களையும் இளைஞர்களையும் லவ் ஜிகாத், நார்க்கோட்டிக் ஜிகாத் மூலம் வீழ்த்துகிறார்கள்.

கேரளத்தை அதிரவைத்த நார்க்கோட்டிக் ஜிகாத்! - பிஷப் பேசியதன் பின்னணி என்ன?

கத்தோலிக்கப் பெண்களையும் இளைஞர்களையும் லவ் ஜிகாத், நார்க்கோட்டிக் ஜிகாத் மூலம் வீழ்த்துகிறார்கள்.

Published:Updated:
பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட்
பிரீமியம் ஸ்டோரி
பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட்

கேரளத்திலுள்ள பாலா மறைமாவட்ட பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட் அடிக்கடி ஏதாவது கருத்துகள் கூறுவதும், அவை சர்ச்சையாவதும் வாடிக்கை. ஏற்கெனவே பா.ஜ.க., லவ் ஜிகாத் பற்றிப் பேசிவந்த நிலையில், ‘‘லவ் ஜிகாத் மட்டுமல்ல... நார்க்கோட்டிக் (போதைக்குப் பழக்கி இளைஞர்களை வீழ்த்துவது) ஜிகாத்தும் கேரளத்தில் இருக்கிறது’’ என்று கூறி புதிய சர்ச்சைக்கு அச்சாரம் போட்டிருக்கிறார் பிஷப். இப்போது கேரள அரசியலில் அனலைக் கிளப்பியிருக்கும் டாபிக் இதுதான்!

‘‘பாலா மறைமாவட்டத்தில் உறுப்பினர்களாக இருக்கும், 2000-ம் ஆண்டுக்குப் பிறகு திருமணமான தம்பதியருக்கு ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். நான்கு குழந்தைகளுக்கு மேல் உள்ள தம்பதியரில் ஒருவருக்குக் கல்வித்தகுதியின் அடிப்படையில் மறைமாவட்ட மருத்துவமனையில் வேலை வழங்கப்படும்’’ என்று கடந்த ஜூலை மாதம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார் பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட். இதையடுத்து, “பெண்களைக் குழந்தை பெறும் இயந்திரமாக மாற்றும் செயல் இது” என பெண்ணிய அமைப்புகள் அப்போதே போர்க்கொடி தூக்கின.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

இந்தநிலையில்தான் சர்ச் ஒன்றின் யூடியூப் சேனலில் பேசிய பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட், ‘‘கத்தோலிக்கப் பெண்களையும் இளைஞர்களையும் லவ் ஜிகாத், நார்க்கோட்டிக் ஜிகாத் மூலம் வீழ்த்துகிறார்கள். ஏற்கெனவே, கேரள மாநிலம், பயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல் கேந்திரமாக இருப்பதாக முன்னாள் டி.ஜி.பி லோக்நாத் பெகரா கூறியிருந்தார். உலகத்தில் நீதியையும், சமாதானத்தையும், இஸ்லாத்தையும் நிலைநாட்ட யுத்தமும் போராட்டங்களும் செய்ய வேண்டும் என சில முஸ்லிம் குழுக்கள் நினைக்கின்றன. அவர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த இயலாத இடங்களில், சில சூழ்ச்சிகளைச் செயல்படுத்துகிறார்கள். அவற்றில் லவ் ஜிகாத், நார்க்கோட்டிக் ஜிகாத் முக்கியமானவை. இந்த விஷயத்தில் கத்தோலிக்கக் குடும்பங்கள் கவனமாக இருக்க வேண்டும்’’ என்று பேசியிருந்தார். பிஷப்பின் இந்தப் பேச்சு கேரளா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளத்தை அதிரவைத்த நார்க்கோட்டிக் ஜிகாத்! - பிஷப் பேசியதன் பின்னணி என்ன?

‘‘கேரளத்தில் இரு மதங்களுக்கு இடையே விரோதத்தையும், அரசியல்ரீதியான விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது பிஷப்பின் பேச்சு. இது சங் பரிவாரின் அஜெண்டா’’ என்று கொந்தளித்த எதிர்க்கட்சித் (காங்கிரஸ்) தலைவர் வி.டி.சதீசன், ‘‘பிஷப்பின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே சண்டை மூட்டும் வகையில் சமூக வலைதளங்களில் சிலர் கருத்துகளைப் பரப்பிவருகிறார்கள். கத்தோலிக்க சபை இந்தப் பிரச்னையைத் தீவிரமாகக் கருதுகிறது என்றால், அதை அரசு பரிசீலிக்கட்டும்; போலீஸ் விசாரணை நடத்தட்டும். ஆனால், இரு மதத்தினர் மோதிக்கொள்ளட்டும் என சி.பி.எம் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது சரியல்ல’’ என்று முதல்வர் பினராயி விஜயனையும் சேர்த்து வம்புக்கு இழுத்தார்.

முதல்வர் பினராயி விஜயனோ, ‘‘நார்க்கோட்டிக் ஜிகாத் என்ற வார்த்தையை இதுவரை கேட்டதுகூட இல்லை. பிஷப் எதற்காக அப்படிப் பேசினார் என்று தெரியவில்லை. உயர் பொறுப்பில் இருப்பவர்கள் பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது. நார்க்கோட்டிக் என்ற வார்த்தைக்கு மதச்சாயம் பூசவேண்டிய அவசியம் இல்லை. நார்க்கோட்டிக், சமூகத்துக்கே விரோதமானது; அது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் என்பதால், சட்ட நடவடிக்கை கடுமையாக்கப்படும்’’ என்று பதிலளித்தார்.

முரளீதரன்
முரளீதரன்

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், பிஷப்பின் பேச்சுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது கேரள பா.ஜ.க. கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முரளீதரன், ‘‘முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஜிகாதிகளின் பிரசாரகர்களாக மாறியிருக்கிறார்கள். உண்மையைச் சொன்ன பிஷப்புக்கு எதிராக பினராயி விஜயனும் வி.டி.சதீசனும் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்துகிறார்கள்’’ என்று காட்டமானார். பா.ஜ.க தலைவர்கள் சிலரும், பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட்டைச் சந்தித்து ஆதரவு அளித்துவருகிறார்கள்.

பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட் பேசியதன் பின்னணி பற்றி விசாரித்தோம். ‘‘கேரள கிறிஸ்தவர்களில் அதிக எண்ணிக்கையில் இருப்பது, சீரோ மலபார் சபையைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சில குடும்பங்களுக்கு ‘லவ் ஜிகாத்’ போன்ற பிரச்னைகள் இருப்பது குறித்து, சபையின் தலைமைக்குப் புகார் சென்றிருப்பதால், அப்படிப் பேசியிருக்கிறார்’’ என்கிறார்கள் மறை மாவட்ட உறுப்பினர்கள் சிலர்.

வி.டி.சதீசன்
வி.டி.சதீசன்

அதேசமயம், ரெய்டு பயத்தால் இது போன்ற பிரச்னையை பிஷப் கிளப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘‘கேரளத்தில் பிலீவர்ஸ் சர்ச் நடத்திவரும் கே.பி.யோகன்னானின் கோட்டயம் வீட்டிலும், திருவல்லாவிலுள்ள ஸ்தாபனங்களிலும் பத்து மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. அதில் கணக்கில் வராத சுமார் 200 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அவரது மருத்துவமனையில் நின்ற ஒரு காரிலிருந்து மட்டும் 8 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. அது போன்ற ஒரு ரெய்டு சீரோ மலபார் சபைகளில் நடந்தால், அவர்களுக்கு பாதிப்பு கடுமையாக இருக்கும். அதனால்தான் மத்திய பா.ஜ.க அரசைத் திருப்திப்படுத்த பிஷப் இது போன்று பேசுகிறார். கேரளத்தில் லவ் ஜிகாத் குறித்துப் பல விசாரணைகள் நடந்து முடிந்துவிட்டன. பயங்கரவாதத்தின் வேர்கள் கேரளத்தில் உண்டு என்பதும் உண்மைதான். ஆனால், லவ் ஜிகாத், நார்க்கோட்டிக் ஜிகாத் ஆகியவை இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை’’ என்கிறார்கள் கேரளத்தின் அரசியல் நோக்கர்கள்.

மதத்தில் அரசியல் கலப்பது எப்போதுமே ஆபத்தானது!