Published:Updated:

“60 ஆண்டுகளாக ஏமாறுகிறோம்!”

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்
பிரீமியம் ஸ்டோரி
நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்

இந்தியாவில் எங்க மக்கள் ஒரு கோடி பேருக்கு மேல இருக்காங்க. ஒவ்வொரு மாநிலத்திலேயும் ஒவ்வொரு பேரு வெச்சு எங்களை அழைக்கிறாங்க.

“60 ஆண்டுகளாக ஏமாறுகிறோம்!”

இந்தியாவில் எங்க மக்கள் ஒரு கோடி பேருக்கு மேல இருக்காங்க. ஒவ்வொரு மாநிலத்திலேயும் ஒவ்வொரு பேரு வெச்சு எங்களை அழைக்கிறாங்க.

Published:Updated:
நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்
பிரீமியம் ஸ்டோரி
நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமூகத்தினரை பழங்குடியினப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ‘இது 60 ஆண்டுக்காலப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி’ என ஒருபக்கம் கொண்டாடப்பட்டாலும் ‘இப்படித்தான் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஒவ்வொருமுறையும் ஏமாறுகிறோம். ஆனால், சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுவதில்லை’ என்ற விரக்தியில் இவர்கள் வெடிக்கிறார்கள் இன்னொரு பக்கம்.

குறைந்த கல்வியறிவு, பொருளாதாரத்தில் பின்தங்கிய வாழ்க்கைமுறை, தனிக் கலாசாரம், மக்கள்தொகை உயராமல் இருத்தல், தனித்து வசித்தல் உள்ளிட்ட ஐந்து காரணங்களைக் கொண்டிருக்கும் சமூகத்தினரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கலாம் என்பது மத்திய அரசின் வழிமுறை. கடந்த 1965-ம் ஆண்டில் இந்தியா முழுக்க ஆய்வு செய்த லோகூர் கமிட்டி ‘இந்த ஐந்து காரணங்களும் நரிக்குறவர்கள் சமூகத்திற்குப் பொருந்துகிறது என்பதால், அவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கலாம்’ என்று பரிந்துரை செய்தது. சுமார் 60 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால், இப்போதுவரை பரிந்துரை செய்யப்படுவதும், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதும் தொடர்கதையாகிக்கொண்டிருக்கிறதே தவிர, இதுவரை சட்டத்திருத்தம் செய்யப்படவில்லை.

“60 ஆண்டுகளாக ஏமாறுகிறோம்!”

கடந்த மார்ச் மாதம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ‘நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டும்’ என்று கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு. ஏற்கெனவே கடந்த 2016-ல் மத்திய அரசு நரிக்குறவர்களை எஸ்.டி பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்தது. அப்போதும் அது சட்டம் ஆகவில்லை. தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ள நிலையில் அச்சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பெரிய எதிர்பார்ப்பில்லாமல்தான் இருக்கிறார்கள்.

சென்னை, பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதியில் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் ராதிகா என்ற பெண்மணி பேசும்போது, “இதுமாதிரி செய்தியை நாங்க பலமுறை கேட்டுட்டோம். இப்போ வந்திருக்கிற அறிவிப்பும் அப்படி ஆகிடக்கூடாதேங்கிற கவலைதான் இருக்கே ஒழிய, கொண்டாடவெல்லாம் தோணல.

எனக்கு 43 வயசாகுது. அப்பவே, எங்களை அஞ்சாவது வரைக்கும் படிக்க வெச்சாங்க. எனக்கு மூணு பொண்ணு, ஒரு பையன். ரெண்டு பொண்ணுகளை கஷ்டப்பட்டு +2 வரைக்கும் படிக்க வெச்சுட்டேன். அதுக்குமேல படிக்க வைக்க வசதிப்படலே. நாங்க மிகவும் பிற்பட்டோர் சமூகத்துல இருக்கிறதால ஃபீஸும் அதுக்கேத்த மாதிரி கட்ட வேண்டியிருக்கு. பழங்குடியா அங்கீகரிச்சிருந்தா, எங்க புள்ளைங்களும் காலேஜ் போயிருக்கும். இனி அடுத்த தலைமுறைக்காவது அந்த வாய்ப்பு கிடைக்குதான்னு பாப்போம்...” என்கிறார்.

“60 ஆண்டுகளாக ஏமாறுகிறோம்!”

தமிழ்நாடு நரிக்குறவர், குருவிக்காரர் நல கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கரிடம் இதுகுறித்து உரையாடினேன்.

“இந்தியாவில் எங்க மக்கள் ஒரு கோடி பேருக்கு மேல இருக்காங்க. ஒவ்வொரு மாநிலத்திலேயும் ஒவ்வொரு பேரு வெச்சு எங்களை அழைக்கிறாங்க. பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்ல இருந்த எங்களை கலைஞர் ஆட்சியில எம்.பி.சி பட்டியலுக்கு மாத்தினாங்க. 1965-ல லோகூர் கமிட்டி சொன்னமாதிரியே 1967-ல நாடாளுமன்றக் கூட்டுக்குழுவும் எங்களை எஸ்.டி பட்டியலில் சேர்க்கப் பரிந்துரை பண்ணுச்சு. காமராஜர்ல ஆரம்பிச்சி கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, இப்போ ஸ்டாலின் வரைக்கும் எல்லோரும் இதை வலியுறுத்தி கடிதம் எழுதிட்டாங்க. ஆனா, யாரும் தீவிர அழுத்தம் கொடுக்கலை.

மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸும் சரி, இருக்கிற பா.ஜ.க-வும் சரி, சட்டத்திருத்தம் செய்யவே இல்லை. தமிழகத்தில் நாங்க ஒரு லட்சம் பேர் இருக்கோம். அப்படியிருந்தும் அரசியல்லயோ அதிகாரத்துலயோ எங்க சார்பா பேச யாருமில்லை. அதனாலதான் தொடர்ந்து போராடிக்கிட்டிருக்கோம்.

மற்ற சமுதாயத்தினர் இன்னைக்கும் எங்களை ரொம்ப இழிவாகத்தான் நடத்துறாங்க. பள்ளி, கல்லூரி, வேலை செய்யுற இடம்னு எல்லா இடத்துலயும் தீண்டாமைக் கொடுமையை அதிகமா அனுபவிக்கிறோம். எஸ்.டி பட்டியலில் சேர்த்துட்டா எங்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கும். தமிழ்நாட்டில் எஸ்.டி பிரிவில் 36 சாதிகள் இருக்கு. மத்திய அரசு பழங்குடியினர்களுக்கு வருடா வருடம் நிதி ஒதுக்குது. அந்த நிதி முறையா பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பப்படுது.

“60 ஆண்டுகளாக ஏமாறுகிறோம்!”

மணிமாலை செய்றதுதான் எங்க பிரதான தொழில். எங்ககிட்டேயிருந்து வியாபாரிகள் வாங்கி அதிக விலைக்கு விற்குறாங்க. எஸ்.டி பிரிவில் நாங்க இருந்தா, மத்திய அரசோட ‘ட்ரைபிள்ஸ் இந்தியா’ அமைப்பு மூலமா மத்திய அரசே எங்களிடமிருந்து வாங்கி விற்பனை செய்யும். அதன்மூலமா, எங்களுக்கு நியாயமான வருமானம் கிடைக்கும். வில்வித்தை, அத்லட்டிக், துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகளில் எங்க பிள்ளைங்களை அடிச்சுக்கவே முடியாது. ஒலிம்பிக் லெவலில் வருவாங்க. எஸ்.டி-யில் சேர்த்தால் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலமும் முன்னேறி வருவாங்க.

வங்கியில் கடன் வாங்கித் தொழில் தொடங்கலாம்னாக்கூட வாய்ப்பு மறுக்கப்படுது. அதுவே, எஸ்.டியில் இருந்தா அரசோட மானியம் கிடைக்கும். அதோட, கோயில் வாசல்களில் கடை போட எஸ்.சி, எஸ்.டிக்கு தனி ஒதுக்கீடு உண்டு. கர்நாடகா, ஆந்திராவுல எங்க இன மக்கள் எஸ்.டி பிரிவில் இருக்காங்க. அவங்களுக்கு விவசாயம் செய்ய நிலம், டிராக்டர், கிணறு தந்து வீடும் கட்டிக் கொடுக்குது அரசு. தமிழ்நாட்டுல அப்படி இல்ல. தமிழக அரசு இந்த முறையாவது எஸ்.டி பிரிவில் எங்களைச் சேர்க்க, மத்திய அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்கவேண்டும்” என்கிறார் அக்கறையுடன்.

“60 ஆண்டுகளாக ஏமாறுகிறோம்!”

“நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம் ஏற்கெனவே இருக்கும் பழங்குடியின மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத அளவுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தவேண்டும்’’ என்கிறார் பேராசிரியர் பிரபா.கல்விமணி. ‘‘தற்போது, தமிழகத்தில் பழங்குடியின மக்களுக்கு 1 சதவிகித இட ஒதுக்கீடுதான் வழங்கப்படுகிறது. இதில், நரிக்குறவர் மக்களையும் சேர்க்கும்போது ஏற்கெனவே உள்ள பழங்குடியின மக்களுக்கான வாய்ப்புகள் குறையும். அதனால், இந்த இட ஒதுக்கீட்டை 1.2 அல்லது 1.4 சதவிகிதம் என்று அதிகப்படுத்தவேண்டும். அதோடு, நரிக்குறவர்களுக்கு உள் இடஒதுக்கீட்டை வழங்கவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு முழுமையாகக் கிடைக்கும்’’ என்கிறார் அவர்.

‘நரிக்குறவர்களைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்க வேண்டும்’ என்று தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வரும் எம்.பி ரவிக்குமாரிடம் பேசினேன்.

‘‘ஒரு சாதியை எஸ்.டி, எஸ்.சி பட்டியலில் இருந்து நீக்குவது அல்லது சேர்ப்பது என்றால் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் விவாதித்து சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு நரிக்குறவர்களை எஸ்.டி பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்தது. 2018-ம் ஆண்டு மக்களவையில், நான்கைந்து மசோதாக்களுடன் சேர்த்து நரிக்குறவர் மசோதாவையும் தாக்கல் செய்தார்கள். மக்களவையில் ஒப்புதல் ஆனதும் மாநிலங்களவைக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால், செல்லவே இல்லை. 2019-ம் ஆண்டு அந்த நாடாளுமன்றத்தின் காலம் முடிந்ததால் அது காலாவதியாகிவிட்டது.

ரவிக்குமார், பிரபா கல்விமணி
ரவிக்குமார், பிரபா கல்விமணி

நரிக்குறவர்களைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்த்தால் மூன்றே வருடங்களில் விரும்பத்தக்க முன்னேற்றங்களை அடைந்துவிடுவார்கள். பா.ஜ.க அரசு வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் சட்டத்திருத்தத்தை இரண்டு அவைகளிலும் கொண்டுவரவேண்டும். அப்படி இல்லையென்றால் நாங்கள் அழுத்தம் கொடுப்போம்” என்கிறார் ரவிக்குமார்.

இன்னும் பழங்குடித்தன்மை மாறாமல் வாழும் நரிக்குறவர்களின் வாழ்க்கையை மாற்ற எல்லாக் கட்சியினரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டிய நேரம். நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்போம்!