சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

‘துப்பாக்கி இருந்தாத்தான் பொண்ணு...’ - விநோத விதிமுறையால் தடைப்படும் திருமணம்!

நரிக்குறவர்கள் காலனி
பிரீமியம் ஸ்டோரி
News
நரிக்குறவர்கள் காலனி

சத்தியமாச் சொல்றேன். இப்பல்லாம் நாங்க வேட்டையாட துப்பாக்கியைப் பயன்படுத்துறது இல்லை.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டினம் குப்பங்கரடு பகுதியில் அமைந்திருக்கிறது நரிக்குறவர்கள் காலனி. இங்கே வசிக்கும் மக்களில் சிலர், சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த கோரிக்கை மனு, அதிகாரிகளைப் புருவம் உயர்த்தவைத்திருக்கிறது!

‘துப்பாக்கி இல்லாததால், எங்கள் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலருக்குக் கல்யாணமே ஆகவில்லை. காரணம், எங்கள் குல வழக்கப்படி துப்பாக்கிவைத்திருக்கும் ஆணுக்குத்தான் பெண் கொடுப்பார்கள். ஆனால், குருவி, விலங்கினங்களை வேட்டையாடுகிறோம் என்று சொல்லி, நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் எங்களிடமிருந்து துப்பாக்கிகளை அரசு பறித்துக்கொண்டது. எனவே, கல்யாண வயதில் இருக்கும் இளைஞர்களுக்கு மட்டுமாவது துப்பாக்கி வைத்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் உரிமம் வழங்க வேண்டும்’ என்பதே அந்தக் கோரிக்கை.

‘துப்பாக்கி இருந்தாத்தான் பொண்ணு...’ - விநோத விதிமுறையால் தடைப்படும் திருமணம்!

இது தொடர்பாக பழங்குடி இனத் தலைவர் சங்கர் பேசியபோது, “துப்பாக்கி இருந்தாத்தான் பொண்ணுன்னு சொல்லுறது, வேட்டையாடுறதுக்காக இல்லை சார்... துப்பாக்கியையும் நாங்க குல தெய்வமாகத்தான் பார்க்கிறோம். கல்யாணச் சடங்கில்கூட துப்பாக்கியைச் சாத்தி அதன்மேல கருகுமணியைச் சுத்தி, அதுக்கு கீழே துப்பாக்கி லைசென்ஸ் வெச்சு சாமி கும்பிடுவோம். துப்பாக்கியைச் சுத்தியிருக்கிற கருகுமணியைத்தான் பொண்ணுக்குத் தாலியாகக் கட்டுவார் மாப்பிள்ளை. இப்படித்தான் எங்களது முன்னோர்களுக்கும், எங்களுக்கும் கல்யாணம் நடந்துச்சு. இன்றைய தலைமுறையில் வீட்டுக்கு ஒரு துப்பாக்கிக்கூட இல்லாததுதான், கல்யாணம் பண்ண முடியாத நிலைமையை ஏற்படுத்திருச்சு.

சத்தியமாச் சொல்றேன். இப்பல்லாம் நாங்க வேட்டையாட துப்பாக்கியைப் பயன்படுத்துறது இல்லை. பெரிய தோட்டங்கள்ல காவல் வேலைக்கு எங்களை அமர்த்துனாக்கூட, துப்பாக்கியில் புளியங்கொட்டையைப் போட்டுத்தான் சுடுவோம். ஏதோ ஒரு சிலர் செய்யும் தவறால, எல்லாரோட துப்பாக்கியையும் பறிக்கிறதையும், லைசென்ஸ் தர மறுக்கிறதையும் எப்படி ஏத்துக்க முடியும்... சேலம், தாரமங்கலம் பகுதியில் வசிக்கிற ஆறு இளைஞர்களுக்கும், அயோத்தியாப்பட்டினத்துல வசிக்கக்கூடிய 10 பேருக்கும் கல்யாணம் ஆகலை. இது தொடர்பாக மனு கொடுத்த எங்களை எஸ்.பி அலுவலகத்துக்கும், கலெக்டர் ஆபீஸுக்கும் மாறி மாறி அலைக்கழிக்கிறாங்க” என்றார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் கேட்டபோது, “சம்பந்தப்பட்ட பழங்குடியின மக்களின் மனு என்னுடைய பார்வைக்குச் சமீபத்தில்தான் வந்தது. இதில், காவல்துறையின் பரிந்துரை என்பது மிகவும் முக்கியமானது. அவர்கள் அனுமதி வழங்கினால் மட்டுமே நான் உத்தரவு கொடுக்க முடியும்” என்றார்.

இதையடுத்து மாவட்ட எஸ்.பி  அபினவ்-விடம் பேசினோம். “லைசென்ஸ் கேட்கும் பழங்குடி மக்கள்மீது குற்ற வழக்கு ஏதும் இருக்கிறதா என்று விசாரிப்பதற்குத்தான் எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. மற்றபடி துப்பாக்கி லைசென்ஸ் வழங்க வேண்டுமென்றால் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினால் மட்டுமே உண்டு” என்றார்.

‘அதெல்லாம் முடியாது... திருமணச் சடங்கை மாற்றிக்கொள்ளுங்கள்’ என்று சொன்னால்கூட பரவாயில்லை. எதற்கு இந்த அலைக்கழிப்பு!?