Published:Updated:

“நான் கலைஞரின் செல்லமகள்!”

நர்த்தகி
பிரீமியம் ஸ்டோரி
நர்த்தகி

தெருவில் இறங்கிப் போராடுவதோ, உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதோ மட்டும்தான் செயல்பாடு என்று இல்லை

“நான் கலைஞரின் செல்லமகள்!”

தெருவில் இறங்கிப் போராடுவதோ, உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதோ மட்டும்தான் செயல்பாடு என்று இல்லை

Published:Updated:
நர்த்தகி
பிரீமியம் ஸ்டோரி
நர்த்தகி

துளியும் பாசாங்கில்லாத, மலர்ந்த சிரிப்புதான் நர்த்தகியின் அடையாளம். சங்கீத் நாடக் புரஸ்கார் தொடங்கி பத்மஸ்ரீ வரை எவ்வளவு அங்கீகாரங்கள் வந்தாலும் எதையும் தலையில் தரித்துக்கொள்ளாமல் அவ்வளவு சினேகத்தோடு கைகளைப் பற்றிக்கொள்பவர். இப்போது வந்து சேர்ந்திருக்கிறது, மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழு உறுப்பினர் பொறுப்பு. முதல்வர் தலைமையிலான இந்தக்குழுவின் முதல்கூட்டமும் அண்மையில் நடந்து முடிந்திருக்கிறது.

“வாழ்த்துகள் நர்த்தகி’’ என்று கைகூப்பினால் சிரிப்பை பதிலாக உதிர்க்கிறார்.

“மாநிலத்தின் போக்கைத் தீர்மானிக்கிற முக்கியமான அரசு அமைப்பில் பொறுப்பு... எதிர்பார்த்தீங்களா?”

“இல்லைன்னுதான் சொல்லணும். தொலைபேசியில் தகவல் சொல்லப்பட்டபோது நம்பமுடியலே. டிவியில் பார்த்து உறுதி செய்துகொண்டேன். நிச்சயம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தணும்னு தோணுச்சு. ஸ்டாலின் அண்ணா முதல்வரா பொறுப்பேற்ற நாளிலிருந்து நிறைய நல்ல விஷயங்கள் நடந்துகிட்டே இருக்கு. அரசியலுக்குத் தொடர்பில்லாத அறிஞர்களை அடையாளம் கண்டு அவங்களுக்குப் பொருத்தமான பொறுப்புகளைக் கொடுத்து செயல்படவைக்கிறது உண்மையிலேயே புதுசா இருக்கு. மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவில் தேர்வுசெய்யப்பட்டுள்ள ஒவ்வொருவரும் நான் பார்த்து வியந்த மனிதர்கள். அவர்களோடு இணைந்து பணியாற்றப்போகிறேன் என்ற எண்ணமே மகிழ்ச்சியா இருக்கு. நான் நடத்தும் வெள்ளியம்பலம் அறக்கட்டளை நடனக் கலைக்கூடத்தின் வாசகம், ‘எதனால் எதனைப் பெற்றேனோ, அதனை அதற்கே அர்ப்பணித்தல்.’ அதைத்தான் இப்போதும் சொல்லத் தோணுது. இந்த வாய்ப்பு, என் நடனக்கலைக்காகவோ, பால்நிலை மாற்றத்தைக் கடந்து தைரியமா நின்னதுக்காகவோ தரப்பட்டிருக்கலாம். எதுவா இருந்தாலும் இது மிகவும் பொறுப்பு மிக்க பணி. அச்சத்தோடுதான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.”

“குழுவின் முதல் கூட்டம் எப்படியிருந்தது?”

“உண்மையிலேயே அந்தக்கணம் பெருமையா இருந்தது. எழுந்து நின்னு மிகுந்த உள்ளன்போடு எங்களை வரவேற்றார் முதல்வர். சினிமாவில வந்துபோற காட்சிமாதிரிதான் இருந்தது. நான் கலைஞரின் செல்லமகள். ஸ்டாலின் அண்ணா அன்று என்னைப் பார்த்தபோது, ‘அப்பா இடத்திலிருந்து உன்னை இங்கு கொண்டு வந்திருக்கிறேன்’ என்று சொல்வதுபோல இருந்தது. பெருமையோடும் நன்றியோடும் அங்கு இருந்தேன்.

நிறைய திட்டங்கள் இருக்கு. ஒரு கலைஞரா என் துறையில் மொழி, பண்பாடு, இலக்கியம், ஆன்மிகம் வருகின்றன. இவற்றையெல்லாம் உள்ளடக்கி, சில செயல்திட்டங்களை யோசித்திருக்கிறேன். ஒரு திருநங்கையாகவும் எனக்குச் சில பொறுப்புகள் இருக்கு. வேலைவாய்ப்புகள், சுகாதாரம், பொதுச் சமூக இணக்கம்னு நிறைய செய்யவேண்டியிருக்கு. பால்நிலை மாறியவர்கள் எல்லாருக்குமான வாய்ப்புகள் குறித்தும் பேசவேண்டும். என் குழுவோடு இதுகுறித்தெல்லாம் உரையாடுவேன்.”

“நான் கலைஞரின் செல்லமகள்!”

“பாலினக்குழப்பத்தோடு இலக்கில்லாமல் மதுரையில் தொடங்கிய பயணம்... மேல்நிலைக் கல்வியில் பாடமாக மாறியிருக்கிறீர்கள்... வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது எப்படியிருக்கிறது?”

“இப்போது யோசிக்கும்போது இதெல்லாம் நடந்திருக்கிறதா என்று வியப்பாகத்தான் இருக்கிறது. மதுரை டூரிங் டாக்கீஸில் யாருடைய நடனத்தைப் பார்த்து ஆடிப்பழகினேனோ, அதே பத்மினி அம்மா அமெரிக்காவில் எனக்காகக் காத்திருந்தார். ‘அவ பேட்டிகளைப் பார்த்தேன்... சமையலைப் பத்தி நிறைய பேசுறா... என்னைப் பார்க்க வரும்போது மதுரைச் சமையலைப் பண்ணி எடுத்துட்டு வரச்சொல்லு’ என்று சொல்ல, ஆசை ஆசையாக சமைத்து எடுத்துக்கொண்டு போனேன். எந்த இலக்குமேயில்லாமல் சுயம்புவா தொடங்கின எங்க வாழ்க்கையில எல்லாமே கனவுகளால கிடைச்சதுதான்.”

“நடராஜ் நர்த்தகியான கதை எங்களுக்குத் தெரியும். திருநங்கை என்ற பதத்தை நீங்கள்தான் முதலில் பயன்படுத்தினீர்கள். அந்த வார்த்தை உருவானது எப்படி?”

“என் பதின்பருவ நாள்களில் இப்போதிருப்பதைவிடவும் அழகாக இருப்பேன். எல்லோரும் ‘சிலை மாதிரியிருக்கா’ன்னு பாராட்டுவாங்க. எனக்கு அவ்வளவு பெருமையாக இருக்கும். ஆனால் அந்த மகிழ்ச்சி ரொம்பநாள் நீடிக்கலே. கோவையில் ஒரு நடனம். அரங்கு நிறைந்த கூட்டம். மிகப்பெரிய புரவலர் ஒருவர்... அவர்தான் அந்த நிகழ்ச்சிக்கான கொடையாளர். ஆள், அம்பு, பரிவாரங்களோடு அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். நிகழ்வின் இடைவேளை. நாட்டியக் கலைஞரைப் பாராட்டிப் பரிசு வழங்கும் நேரம். நான் மிகுந்த எதிர்பார்ப்போடு மேடைக்கு வந்தேன். என் அருகில் புரவலர் அமர்ந்தார். யாருக்கும் கேட்காதவாறு சொன்னார்... ‘இப்போதான் கேள்விப்பட்டேன்... நீ என்னை ஏமாத்திட்டே... ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். நீ பொண்ணுன்னு நினைச்சு ஏமாந்துட்டேன்...!’ என்றார்.

அந்த அரங்கமே என் நாட்டியத்தில் மயங்கிக் கிடக்கிறது. என்னைப் பாராட்டிப் பேச வேண்டிய மனிதர் அப்படிச் சொன்னதும் மெழுகாகி உருகிக் கரைந்துபோய்விட்டேன். அதே மனிதர் அடுத்த நொடியில் மேடையில் என்னைப் பாராட்டியும் பேசுகிறார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, யார் ஆட அழைத்தாலும் என்னைப் பால்நிலை மாறியவள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வலியுறுத்துவேன். அதற்கு அடையாளமாக நங்கைக்கு ‘திரு’ பெயரடை கொடுத்து ‘திருநங்கை’ என்ற வார்த்தையை உருவாக்கி எனக்கே நான் இட்டுக்கொண்டேன். கனிமொழி ஆரம்பக்காலத்திலிருந்து எனக்கு நெருக்கமான தோழி. அவர்மூலம் அந்த வார்த்தை கலைஞர் அய்யாவைச் சென்றடைந்து அவர் என் இனத்துக்கே சட்டபூர்வமாக அந்தப் பெயரைச்சூட்டினார்.”

“நர்த்தகி, திருநங்கை சமூகத்துக்கு ஒரு முன்மாதிரி... ஆனால் அவர்களுக்காக அவர் எதுவுமே செய்யவில்லை என்றொரு விமர்சனம் இருக்கிறதே?”

“தெருவில் இறங்கிப் போராடுவதோ, உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதோ மட்டும்தான் செயல்பாடு என்று இல்லை. நான் என்னை எப்போதும் சமூகச் செயற்பாட்டாளர் என்று அடையாளப்படுத்திக்கொண்டதும் இல்லை. தமிழிசை நடனக்கலைஞர் என்பதே என் அடையாளம். திருநங்கை என்பது என் ஆன்மாவுக்கான அடையாளம். இன்று எனக்குக் கிடைத்திருக்கும் எல்லா அங்கீகாரங்களும் என் நடனத்திற்காகக் கிடைத்தவையே ஒழிய நான் திருநங்கை என்பதற்காக அல்ல. நான், யாரும் என் பின்னால் நடந்துவாருங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் பல நூறு பேர் அந்தப்பாதையில் நடக்கிறார்கள். என் வாழ்க்கை, நிறைய செய்திகளைக் கொண்டிருக்கிறது. என் வெற்றிதான் அந்தச் செய்தி. பலருக்கு உந்துசக்தியாக இருந்திருக்கிறேன். இதோ இப்போது நேரடியாகக் களப்பணியாற்ற ஒரு வாய்ப்பை அரசு உருவாக்கித் தந்திருக்கிறது.”