Published:Updated:

‘‘கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஆபத்து!’’

கங்கைகொண்ட சோழபுரம்
பிரீமியம் ஸ்டோரி
கங்கைகொண்ட சோழபுரம்

பதறும் புராதன ஆர்வலர்கள்

‘‘கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஆபத்து!’’

பதறும் புராதன ஆர்வலர்கள்

Published:Updated:
கங்கைகொண்ட சோழபுரம்
பிரீமியம் ஸ்டோரி
கங்கைகொண்ட சோழபுரம்
ஐ.நா சபையால் அறிவிக்கப்பட்டுள்ள உலக பாரம்பர்யச் சின்னங்களுள் ஒன்று, அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் சிவன் கோயில்.

சோழப் பேரரசன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கி.பி 1036-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கோயில், பல நூறு ஆண்டுகளைக் கடந்து இன்றைக்கும் தமிழர்களின் பாரம்பர்ய கலைநயத்தையும் கட்டுமான அறிவுநுட்பத்தையும் உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக் கிறது. போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய இந்தக் கோயிலுக்கு, இங்கு அமையவுள்ள தேசிய நெடுஞ்சாலையால் பேராபத்து நெருங்கிக்கொண்டிருப்பதாக அபயக்குரல் ஒலிக்கிறது.

கோயில் அருகே நெடுஞ்சாலை - சிதிலமடைந்த சிலைகள்
கோயில் அருகே நெடுஞ்சாலை - சிதிலமடைந்த சிலைகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவரும் பொதுப்பணித் துறையில் ஓய்வுபெற்ற பொறியாளருமான கோமகன், ‘‘இது வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை உள்ளடக்கிய சோழப் பேரரசின் தலைநகரமாக, இது 300 ஆண்டுகள் இருந்துள்ளது. வட இந்தியாவின் கங்கைப் பகுதிகளை வென்ற ராஜேந்திர சோழன், அதன் வெற்றிச் சின்னமாகவே இந்த நகரத்தைக் கட்டமைத்து, இந்தக் கோயிலைக் கட்டியுள்ளார். தஞ்சை பெரிய கோயிலைப்போலவே இந்தக் கோயிலும் பல்வேறு சிறப்புகளைக்கொண்டது.

வெளிநாடுகளைச் சேர்ந்த கட்டடக்கலை நிபுணர்கள், இந்தக் கோயிலின் பொறியியல் நுட்பத்தைக் கண்டு பிரமிக்கின்றனர். இதனால்தான் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இந்தக் கோயில் உள்ளது. இன்னும் பல தலைமுறை களுக்கு பாதுகாக்கப்பட வேண்டிய கோயில், வடபுறம் உள்ள மாநில நெடுஞ்சாலையால் ஏற்கெனவே பல பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. இப்போது அதை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள உலக பாரம்பர்யச் சின்னங்களின் பாதுகாக்கப்பட்ட எல்லையான 300 மீட்டர் தூரம் வரை, எந்த ஒரு கட்டுமானமோ விரிவாக்கமோ செய்யக் கூடாது என்பது இந்திய தொல்லியல் துறையின் விதிமுறை. தற்போது உள்ள சாலை, கோயிலுக்கு மிக அருகில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், கோயிலின் வரலாற்றுபூர்வமான வளாகத்தினுள்தான் இந்தச் சாலையே உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்துக்கு முன்பு, கோயிலுக்கு இரு அடுக்குகளாக மதில் சுவர் இருந்திருக்கிறது. அணைக்கரை பாலமும் வெள்ளாறு பாலமும் அமைக்க, கோயிலின் இரு மதில்சுவர்களின் கருங்கற்களையும் பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர். இதற்காகத்தான் இரு மதில்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆங்கிலேயர்கள் சாலை அமைத்திருக்கின்றனர். அதுதான் தற்போது திருச்சி-சிதம்பரம் மாநில நெடுஞ்சாலையாக உள்ளது. அரியலூரிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிமென்ட்டும், காரைக்கால் துறைமுகத்திலிருந்து சிமென்ட் ஆலைகளுக்கு கரியும் இந்தச் சாலை வழியாகவே கொண்டுசெல்லப்படுகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் செல்வதால், அதிர்வு ஏற்பட்டு கோயில் கட்டுமானம் பாதிக்கப்படுகிறது. கோயிலின் வடமேற்கு மூலையின் மேற்கோபுரப் பகுதியில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனப் புகையின் நச்சுக்காற்றினால் இங்கு உள்ள கல்வெட்டுகள் சிதைகின்றன.

கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம்

இவை கண்ணுக்குத் தெரிந்த பாதிப்புகள். இன்னும் நம் கண்ணில் படாத பாதிப்புகள் என்னென்ன இருக்கின்றனவோ தெரியவில்லை. மாநில நெடுஞ்சாலையாக இருக்கும்போதே இந்த நிலை என்றால், தேசிய நெடுஞ்சாலையாக மாறினால் பாதிப்புகள் இன்னும் பல மடங்கு அதிகமாகும். ‘இங்கு மாநில நெடுஞ்சாலையே கூடாது. மாற்றுச்சாலை ஏற்படுத்த வேண்டும்’ என வலியுறுத்திவந்தோம். சுற்றுச்சூழலால் தாஜ்மஹால் மாசடைகிறது எனப் பிரச்னை எழுந்தபோது, 300 மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இங்கு, உலக பாரம்பர்யச் சின்னத்தின் மிக அருகிலேயே நெடுஞ்சாலை உள்ளது. இதை தேசிய நெடுஞ்சாலையாக விரிவாக்கம் செய்வது சட்டத்துக்குப் புறம்பானது. நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இந்திய தொல்லியல் துறையிடம் தடையில்லாச் சான்று பெறாமலேயே, தேசிய நெஞ்சாலையாக விரிவுப்படுத்தக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் சிவாஜியிடம் பேசினோம். ‘‘ஏற்கெனவே 10 மீட்டர் அகலத்தில் உள்ள தாா்ச்சாலையைத்தான் 12 மீட்டராக அகலப்படுத்தத் திட்டமிட்டோம். நான்கு வழிச்சாலையாக மாற்றப் போவதில்லை. தொல்லியல் துறை அனுமதித்தால்தான் இந்த விரிவாக்கத்தை மேற்கொள்வோம். விதிமுறைகளுக்குப் புறம்பாக எந்தப் பணியையும் மேற்கொள்ள மாட்டோம்’’ என்றார்.

இந்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டார கண்காணிப்பாளர் சுப்ரமணியன், ‘‘இது தொடர்பாக எந்த விண்ணப்பமும் எங்களுக்கு வரவில்லை. பெங்களூரில் உள்ள எங்களது மண்டல அலுவலகம்தான் இது தொடர்பாகப் பரிசீலித்து முடிவெடுக்கும்’’ என்றார்.

கோமகன்
கோமகன்

தொல்லியல் துறையின் தென்னிந்திய மண்டல இயக்குநர் மகேஸ்வரியிடம் கேட்டதற்கு, ‘‘தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து இதுவரை எங்கள் அலுவலகத்துக்கு எந்த விண்ணப்பமும் வரவில்லை. விண்ணப்பம் வந்தாலும் தடையில்லாச் சான்று வழங்க மாட்டோம். கோயிலின் பாதுகாக்கப்பட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தான் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு திட்டமிட்டுள்ளனர். இது விதிமுறைக்குப் புறம்பானது. எங்களிடம் தடையில்லாச் சான்று பெறாமலேயே பணிகள் மேற்கொண்டால், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். அந்தக் கோயில் பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பர்ய சின்னம். இதற்கு எந்த ஒரு பாதிப்பு வரவும் அனுமதிக்க மாட்டோம்’’ என்று உறுதிபட தெரிவித்தார்.

நல்லதே நடக்குமென்று நம்புவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism