அலசல்
Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
நேஷனல் ஹாட் பிட்ஸ்

NH பிட்ஸ்

வெளியே வந்த ஸ்வப்னா... வாய் திறக்கவில்லை!

கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில், சிறையிலிருந்த ஸ்வப்னா சுரேஷ், ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். திருவனந்தபுரத்திலுள்ள யு.ஏ.இ தூதரகத்துக்கு 2020-ம் ஆண்டு, ஜூலை மாதம் விமானத்தில் வந்த ஒரு பார்சலில், ரூ.14 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் இருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரன், ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்ட இந்த வழக்கில், முதல்வர் பினராயி விஜயனுக்கும் சம்பந்தம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பியதால், இந்த வழக்கு கேரள அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு, திருவனந்தபுரத்திலுள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்வப்னா சுரேஷ், 16 மாதங்களுக்குப் பிறகு நவம்பர் 6-ம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சிறை வாசலில் குவிந்திருந்த பத்திரிகையாளர்கள், ஸ்வப்னாவிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். ஆனால், வாய் திறக்காமலேயே அங்கிருந்து ஸ்வப்னா கிளம்பிவிட்டார். அவரது பேட்டிக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன கேரள ஊடகங்கள்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

மீண்டும் சர்ச்சையில் சித்து!

பஞ்சாப் காங்கிரஸுக்குள் மீண்டும் வெட்டுக்குத்து ஆரம்பித்துள்ளது. முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி நியமனத்தால் அதிருப்தி யடைந்த நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கர்ஜித்தார். கட்சியின் அகில இந்திய தலைமையின் நீண்ட முயற்சிக்குப் பிறகு சமாதானம் அடைந்த சித்து, மாநிலத் தலைவர் பதவியில் நீடிப்பதாகக் கூறினார். ஆனால், தற்போது அரசுத் தலைமை வழக்கறிஞர் ஏ.பி.எஸ்.தியோலுக்கும் சித்துவுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. முதல்வர் சன்னியால் நியமிக்கப்பட்டவர் என்பதால், தியோல் மீது பல குற்றச்சாட்டுகளை சித்து முன்வைக்கிறார். இதையடுத்து ‘என்னைச் செயல்படவிடாமல் சித்து தடுக்கிறார்’ என்று சித்துமீது குற்றம்சாட்டிய தியோல், அரசு வழக்கறிஞர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், அரசுத் தலைமை வழக்கறிஞரும் மோதிக்கொள்வது கட்சியின் அகில இந்திய தலைமைக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

உ.பி சிறையில் வன்முறை!

தேர்தல் நெருங்கும் உத்தரப்பிரதேசத்தின் ஃபரூக்காபாத் மாவட்டத்திலுள்ள ஃபதேகர் சிறைச்சாலையில், விசாரணைக் கைதிகள் மோசமாக நடத்தப்படுவதாகக் கைதிகள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அக்டோபர் 6 அன்று, ஃபதேகர் சிறைச்சாலையில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. சிறைக் காவலர்கள், அதிகாரிகள்மீது கற்களை வீசிய கைதிகள் தீவைப்புச் சம்பவங்களிலும் ஈடுபட்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் சிறைச்சாலையைக் கொண்டுவந்தனர். வன்முறையை அடக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் 30 காவலர்கள் காயமடைந்தனர். இந்த வன்முறையின்போது மரணமடைந்த இரு கைதிகளை, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மரணம் அடைந்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசு தலையிட்டு, இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணர வேண்டுமென்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன!