பிரீமியம் ஸ்டோரி

இனவாதத்துக்கு இடமில்லை!

`டான்ஸ் தீவானே’ என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கிவருகிறார் ராகவ் ஜுயல் என்கிற நிகழ்ச்சித் தொகுப்பாளர். நிகழ்ச்சியில் அஸ்ஸாமைச் சேர்ந்த போட்டியாளர் ஒருவரை அறிமுகப்படுத்தும்போது, `மோமோ’, `கிப்பெரிஷ் சைனீஸ்’ உள்ளிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினார் ராகவ் ஜுயல். இதையடுத்து, ``அஸ்ஸாம் மக்கள் ஒன்றும் சீனர்கள் அல்ல. ஆனால், எப்போதுமே இது போன்ற நிகழ்ச்சிகள் இனவெறிக் கருத்துகளையே பரப்புகின்றன. எப்போது இது நிறுத்தப்படும்?’’ என்று அஸ்ஸாமைச் சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பினர். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ``பிரபல ரியாலிட்டி ஷோ தொகுப்பாளர், கௌஹாத்தியைச் சேர்ந்த இளம் பங்கேற்பாளர் ஒருவருக்கு எதிராக இனவெறி வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். இது வெட்கக்கேடானது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இனவாதத்துக்கு நம் நாட்டில் இடமில்லை’’ என்றிருக்கிறார். ``அந்தப் போட்டியாளர், தனக்குச் சீன மொழி பேசத் தெரியும் என்று சொல்லியிருந்தார். அதனடிப்படையில் பேசியதுதான்’’ என்று விளக்கமளித்திருக்கிறார் ராகவ் ஜுயல்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

பழிவாங்கினோம்!

பீகார் மாநிலம், கயா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்ஜு போக்தா. கடந்த வாரத்தில் இவரது வீட்டுக்குள் புகுந்த மாவோயிஸ்ட்டுகள் சிலர், சர்ஜுவின் இரு மகன்கள், மருமகள்களைக் கொலை செய்து, வீட்டின் முன்புள்ள கால்நடைக் கொட்டகையில் தூக்கில் தொங்கவிட்டுச் சென்றிருக்கின்றனர். வீட்டின் சில பகுதிகளை வெடிகுண்டுவைத்துத் தகர்க்கவும் செய்திருக்கின்றனர். கடந்த ஆண்டு கயா மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் நான்கு மாவோயிஸ்ட்டுகளைச் சுட்டுக் கொன்றது காவல்துறை. ஆனால், “அது போலி என்கவுன்ட்டர். எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கும் உணவில் விஷம்வைத்தது, அவர்கள் தங்கியிருந்த இந்த வீட்டினர்தான். அவர்கள் உளவாளிகளாக இருந்து, போலீஸாரின் வழிகாட்டுதலிலேயே அதைச் செய்தனர். அதற்குப் பழிவாங்கவே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறோம்’’ என்று குறிப்பு எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். இந்தச் சம்பவம் நடந்தபோது சர்ஜு போக்தா வீட்டிலில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை!

ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸைச் சேர்ந்த நான்கு முன்னாள் அமைச்சர்கள், மூன்று முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் உட்பட மொத்தம் 20 பேர், ஆகஸ்ட் 17-ம் தேதி ஒரே நேரத்தில் கட்சியிலிருந்து விலகியிருக்கின்றனர். கட்சியிலிருந்து விலகியிருக்கும் தலைவர்கள், தங்கள் கோரிக்கை களைக் கட்சி மேலிடத் தலைவர்களிடம் முன்வைக்க நேரம் கேட்டதாகவும், ஓராண்டுக்கும் மேலாகக் கட்சி மேலிடம் நேரம் ஒதுக்கவில்லையென்றும் வருத்தத்தில் இருந்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்ரீநகர் வந்த ராகுல் காந்தியும் அவர்களைச் சந்திக்க நேரம் ஒதுக்க வில்லை. இதுதான் கட்சியிலிருந்து 20 தலைவர்கள் ஒரே நேரத்தில் விலகியிருப்பதற்குக் காரணமாகத் தெரிகிறது. இந்த 20 பேரும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு நெருக்கமானவர்கள் என்பதும், ராஜ்ய சபாவில், குலாம் நபி ஆசாத்தின் பிரிவு உபசார நிகழ்வின்போது மோடி கண்ணீருடன் பேசியதும் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கரைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டிருப்பது கட்சித் தலைமைக்குத் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு