Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

NH பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்

NH பிட்ஸ்

Published:Updated:
நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

“சாலைகள் கன்னங்களைப்போல இருக்க வேண்டும்!”

ராஜஸ்தானில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவை, சமீபத்தில் மாற்றப்பட்டது. அந்த மாற்றத்தின் மூலம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரானார் ராஜேந்திர சிங் குதா. ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ராஜேந்திர சிங்கிடம், `சாலைகள் அனைத்தும் மோசமாக இருக்கின்றன’ என அங்கிருந்த பொதுமக்கள் புகாரளித்தனர். இதையடுத்து, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரை நோக்கி, ``எனது தொகுதியில் சாலைகள் அனைத்தும் நடிகை கத்ரீனா கைஃப்பின் கன்னத்தைப்போல இருக்க வேண்டும்’’ என்றார் அமைச்சர். அவர் பேசிய அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. முன்னதாக, 2005-ம் ஆண்டில் பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ``பீகாரின் சாலைகள், நடிகை ஜெயமாலினியின் கன்னங்களைப்போல வழவழப்பாக இருக்கும்’’ என்று பேசியதும் குறிப்பிடத்தக்கது.

“கட்சியில் இணைய வேண்டிய அவசியமில்லை!”

நவம்பர் 24-ம் தேதியன்று டெல்லிக்குச் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் பா.ஜ.க-வைச் சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. சமீபகாலமாகப் பொருளாதாரச் சிக்கல், சீன எல்லை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விஷயங்களில் மோடி அரசைக் கடுமையாக விமர்சித்துவருகிற சுப்பிரமணியன் சுவாமி, கடந்த மாதம் பா.ஜ.க-வின் தேசியச் செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவில் பா.ஜ.க என்று குறிப்பிட்டிருந்ததை நீக்கினார். மம்தாவைச் சந்தித்த பின்னர், `திரிணாமுல் காங்கிரஸில் இணையப்போகிறீர்களா?’ எனச் செய்தியாளர்கள் கேள்வியெழுப்ப, ``நான் ஏற்கெனவே அவருடன்தான் இருக்கிறேன். எனவே, அவரது கட்சியில் இணையவேண்டிய அவசியமில்லை’’ என்றார் சுப்பிரமணியன் சுவாமி. தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ``நான் பார்த்த, பணியாற்றிய இந்திய அரசியல் தலைவர்களான ஜெயபிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், சந்திரசேகர், ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் ஆகியோருக்கு இணையாக மம்தா பானர்ஜி இருக்கிறார்’’ என்று அவர், மம்தாவைப் புகழ்ந்து தள்ளியிருப்பது, `கூடிய விரைவில் அவர் பா.ஜ.க-விலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் இணைவாரோ’ என்ற யூகத்துக்கு வழிவகுத்திருக்கிறது.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

பிவிசி பைப்புக்குள் பணம்!

நவம்பர் 24-ல் கர்நாடக மாநிலத்தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15 அதிகாரிகளுக்குத் தொடர்புடைய 68-க்கும் மேற்பட்ட இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணமும், அசையும், அசையா சொத்துகளும் சிக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடகாவின் கலாபுராகி பகுதியிலுள்ள பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ஒருவரது வீட்டில் சோதனை நடத்தியது ஊழல் தடுப்புப் பிரிவு. அப்போது கணக்கில் வராத பணத்தை வீட்டின் வெளிப்புறச் சுவரையொட்டி அமைக்கப்பட்டிருந்த பிவிசி பைப்பில் உதவிப் பொறியாளர் மறைத்துவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பைப்புக்குள்ளிருந்து கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை, ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வாளியில் பிடிப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism