Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

விவசாயிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
விவசாயிகள்

நாட்டையே உலுக்கிய நாகாலாந்து சம்பவத்தில், அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்தியாவின் மிக நீண்ட போராட்டம்!

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியின் எல்லைகளில் ஓராண்டுக்கும் மேல் நடந்த விவசாயிகள் போராட்டம்தான், சுதந்திர இந்தியாவின் மிக நீண்ட போராட்டம். மழை, வெயில், கொரோனா என எந்தவொரு சூழலிலும் பின்வாங்காமல் விவசாயிகள் போராடிவந்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார் பிரதமர் மோடி. இருப்பினும், `வேளாண் சட்டங்கள் முறையாகத் திரும்பப் பெறப்படும்வரை போராட்டம் தொடரும்’ என அறிவித்திருந்தனர் விவசாயிகள். அதோடு, குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட உத்தரவாதம், போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வதாகவும், அவர்களது மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. இதையடுத்து விவசாயிகள், கடந்த டிசம்பர் 11-ம் தேதி வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கினர். அவர்களுக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்புகள் அளிக்கப்பட்டன!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

உண்மைகள் வெளிவர வேண்டும்!

நாட்டையே உலுக்கிய நாகாலாந்து சம்பவத்தில், அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில், ``தொழிலாளர்கள் வந்த வாகனத்தை நிறுத்தச் சொல்லியும், நிற்காமல் போனதால்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது’’ என்று விளக்கமளித்திருந்தார் அமித் ஷா. ஆனால், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர் தப்பியவர், ``எங்கள் வாகனத்தை யாரும் நிறுத்தச் சொல்லவில்லை. எங்களை நோக்கி நேரடியாக அவர்கள் சுட்டுக்கொண்டேயிருந் தார்கள்’’ என்றிருக்கிறார். மோன் மாவட்ட பா.ஜ.க தலைவர் கோன்யாக், ``எங்கள் காரில் கட்சிக்கொடி இருந்ததைப் பார்த்த பிறகும், ராணுவத்தினர் எங்கள் காரை நோக்கிச் சுட்டனர். உயிரிழந்தவர்களின் உடைகளை நீக்கிவிட்டு, அவர்களுக்கு ராணுவத்தினர் காக்கி உடை அணிவித்ததை நாங்கள் பார்த்துவிட்டதால்தான், எங்களைச் சுட்டார்கள்’’ என்று அதிர்ச்சியளித் திருக்கிறார். மேகாலயாவில் பா.ஜ.க கூட்டணியிலிருக்கும் தேசிய மக்கள் கட்சியோ, ``அமித் ஷா உண்மைகளைத் திரித்துக் கூறுகிறார். நாங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டோம். அந்தச் சாலை மோசமானதாக இருந்தது. அதில், 10 கி.மீ வேகத்துக்கு மேல் செல்ல முடியாது. எனவே, தொழிலாளர்கள் தப்பிச்செல்ல வாய்ப்பில்லை. அந்த வாகனத்தின் முன்பகுதியிலுள்ள கண்ணாடியில் தோட்டாக்கள் துளைத்திருந்தன. தப்பிச் சென்றவர்களை, எப்படி முன் பக்கம் நின்று சுட்டிருக்க முடியும்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது. இந்த விவகாரத்தில், உரிய விசாரணை நடத்தி, உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டுமென்பதே நாகாலாந்து மக்களின் கோரிக்கையாக இருக்கிறது!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

‘இது மனிதத் தன்மையற்ற செயல்!’

பீகார் மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப் பஞ்சாயத்து ஒன்றில், சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் பல்வந்த் சிங் என்பவர் தோல்வியடைந்திருக்கிறார். பட்டியலின மக்கள் தனக்கு வாக்களிக்காததுதான் தோல்விக்குக் காரணமென்று கருதியிருக்கிறார் பல்வந்த் சிங். எனவே, கோபத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் இருவரை சாலையில்வைத்து அடித்திருக்கிறார். பின்னர், சாலையில் எச்சிலைத் துப்பி, அதை இருவரையும் நாவால் நக்கவைத்திருக்கிறார். என்ன விஷயமென்று விசாரித்தவர்களிடம், “பணம் வாங்கிக்கொண்டு இவர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை” எனச் சொல்லியிருக்கிறார். இந்தச் சம்பவங்களை உள்ளடக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ‘இது மனிதத் தன்மையற்ற செயல்... பல்வந்த் சிங்கைக் கடுமையாக தண்டிக்க வேண்டும்’ எனக் குரல்கள் எழ, இப்போது அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்துகிறது பீகார் காவல்துறை.