Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
நேஷனல் ஹாட் பிட்ஸ்

NATIONAL HOT BITS

நேஷனல் ஹாட் பிட்ஸ்

* உத்தரப்பிரதேசம், காஸியாபாத்தில் பா.ஜ.க-வில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்ட கபில் குஜ்ஜார் என்பவரை அடுத்த சில மணி நேரங்களிலேயே கட்சியைவிட்டு நீக்கியிருக்கிறார்கள். ஷாஹீன் பாக் போராட்டத்தின்போது பொதுவெளியில் துப்பாக்கியால் சுட்டதற்காகக் கைதுசெய்யப்பட்டவர் இந்த கபில் குஜ்ஜார். கட்சியில் அவர் இணைந்த சில மணி நேரத்தில் அவரைப் பற்றிய தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகி விமர்சனங்கள் எழவே, அவரைக் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். இது குறித்து காஸியாபாத் மாவட்ட பா.ஜ.க தலைவரான சஞ்சீவ் சர்மாவிடம் கேட்டதற்கு, “எனக்கு ஷாஹீன் பாக் சம்பவத்தில் கபில் குஜ்ஜார் சம்பந்தப்பட்டிருந்தது தெரியாது” என்று சமாளித்திருக்கிறார். #உலகமகா நடிப்புடா சாமி!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

* உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் கபில் தேவின் சகோதரர் லலித் அகர்வால், விளம்பரப் படங்கள் எடுக்கும் ஏஜென்சியை நடத்திவருகிறார். சமீபத்தில், பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இருவரின் புகைப்படத்தையும் ஒரு மொபைல் போன் நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் லலித் அகர்வால் பயன்படுத்தியிருந்தார். அந்த விளம்பரம் பரவலாக கவனம் பெறவே, இருவரின் புகைப்படங்களையும் அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக லலித் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். #ராங் கால்!

* குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ‘சாத்தி சேவா குரூப்’ என்ற அமைப்பு, பத்து வருடங்களாக ஒரே அறைக்குள் தங்களைப் பூட்டிக்கொண்ட மூவரை மீட்டிருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னர் தாய் இறந்த சோகத்தில், அவரின் பிள்ளைகளான அம்ரிஷ், மேக்னா, பாவேஷ் ஆகிய மூவரும் ஓர் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டார்கள். தந்தை எவ்வளவோ அழைத்தும் வெளியே வரவே இல்லை. ஒருகட்டத்தில், ‘அவர்களுக்கு செய்வினை வைத்திருக்கிறார்கள். விடுங்கள்... அவர்கள் அறைக்குள் இருப்பதுதான் நல்லது’ என்று யாரோ சொன்னதை தந்தையும் நம்பியிருக்கிறார். தினமும் அறைக்கு வெளியே சாப்பாடு மட்டும் வைப்பாராம். பலரும் முயன்றும் அவர்களை வெளியே கொண்டுவர முடியாத சூழலில், ‘சாத்தி சேவா குரூப்’ அமைப்புக்குத் தகவல் போயிருக்கிறது. மிக லாகவமாக அவர்கள் மூவரையும் மீட்டிருக்கிறார்கள். அம்ரிஷ், மேக்னா, பாவேஷ் ஆகியோரின் இன்றைய வயது முறையே 41, 39, 31. தற்போது, மூவரையும் காப்பகத்தில்வைத்து மனநல சிகிச்சை அளித்துவருகிறார்கள். #கொடுமை!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

* டெல்லி பிரேம் நகரில், மூட்டையுடன் இளைஞர் ஒருவர் சுற்றிக்கொண்டிருப்பதை கன்ட்ரோல் ரூமிலிருந்து சிசிடிவி-யில் கவனித்த போலீஸார், சந்தேகத்தின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள். அவரை போலீஸார் நெருங்கியபோது அவரிடம் மூட்டையைக் காணோம். விசாரித்தால், “க்ளோஸ் ஃப்ரெண்டு சார். க்ளோஸ் பண்ணிட்டேன். புதைக்க இடம் தேடிட்டிருந்தேன். பக்கத்துல இருக்குற பார்க்ல புதைச்சுட்டேன்” என்று கூலாகப் பதில் சொல்லியிருக்கிறார். ஷாக்கான காவலர்கள், வழக்கு பதிவுசெய்து அவரைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். #கொலையும் செய்வான் நண்பன்!