Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

அஜித் பவார்
பிரீமியம் ஸ்டோரி
News
அஜித் பவார்

பேருந்து நிலையத்தில் சாவியோடு நின்றுகொண்டிருந்த தனியார் பேருந்தை எடுத்துக்கொண்டு நான்கு மாவட்டக் காவல்துறையினரை ஏமாற்றி சுமார் 200 கி.மீ பயணம் செய்திருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் காஸியாப்பூர், பாலியா பகுதிகளை ஒட்டியிருக்கும் கங்கை நதிக்கரையில் பிணங்கள் மிதந்த சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொரோனாவால் இறந்த பலரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் உ.பி-யில் கங்கை ஆற்றில் வீசிவிட, மிதந்து வந்த 71 பிணங்களைக் கைப்பற்றி அடக்கம் செய்திருக்கிறது பீகார் அரசு. மக்கள் பீதியடையக் கூடாது என்பதற்காக வலைகள் அமைத்து உ.பி-யிலிருந்து வரும் பிணங்களைப் பிடிப்பதற்கான பணியிலும் இறங்கியிருக்கிறது பீகார். உ.பி., பீகாரை இணைக்கும் பக்ஸர்-பாலியா மேம்பாலத்துக்குக் கீழும் சில பிணங்கள் ஒதுங்கியிருப்பது இரு மாநில மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் சமூக ஊடகக் கணக்குகளை ஓராண்டுக்கு கவனித்துக்கொள்ள, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி வழங்கி, அதற்கு ரூ. 5.98 கோடி நிதியும் ஒதுக்கியிருக்கிறது மகாராஷ்டிர அரசு. இதை விமர்சித்து, பா.ஜ.க எம்.எல்.ஏ ராம் கதம், ‘‘தடுப்பூசிகளுக்கு உரிய நிதி இல்லாதபோது ஒருவரின் தனிப்பட்ட இமேஜுக்காக இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்குவதா?’’ என்று குரலெழுப்பினார். ஆம் ஆத்மி கட்சியினரும் இதை எதிர்த்து விமர்சித்துவருகின்றனர். மகாராஷ்டிர அரசின் மக்கள் தொடர்புத்துறை இயக்ககமோ, ‘‘சமூக ஊடகங்களை கவனித்துக்கொள்ளத் தகுதிவாய்ந்த நபர் எங்கள் வசம் இல்லாததால்தான் இந்த ஏற்பாடு. துணை முதல்வரின் அரசு நிமித்தமான பணிகளுக்கு இவை அவசியம்தான்’’ என்று சப்பைக்கட்டுக் கட்டி ஒரு பதிலளித்திருக்கிறது.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த தினூப் என்பவர், கோழிக்கோட்டிலிருந்து மனைவியைப் பார்க்க பத்தனம்திட்டா மாவட்டம், திருவல்லாவுக்குச் செல்ல முயன்றிருக்கிறார். முழு ஊரடங்கு என்பதால் பேருந்து கிடைக்காமல் திண்டாடிய தினூப், பேருந்து நிலையத்தில் சாவியோடு நின்றுகொண்டிருந்த தனியார் பேருந்தை எடுத்துக்கொண்டு நான்கு மாவட்டக் காவல்துறையினரை ஏமாற்றி சுமார் 200 கி.மீ பயணம் செய்திருக்கிறார். காவல்துறையினர் செக் போஸ்ட்டில் மடக்கும்போதெல்லாம், ‘‘வெளிமாநில தொழிலாளர்களை அழைத்துவரச் செல்கிறேன்’’ என்று சொல்லித் தப்பித்திருக்கிறார். கடைசியில் குமரகம் பகுதியில் காவல்துறையினரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதில் சொல்ல, அந்தப் பேருந்தின் பதிவு எண்ணைவைத்து, உரிமையாளரைக் காவல்துறையினர் தொடர்புகொண்டிருக்கிறார்கள். அவர் நடந்தவற்றைச் சொல்ல, தினூப் மீது வழக்கு பதிந்து கைதுசெய்திருக்கிறது கேரள போலீஸ்!

டெல்லி முழுவதும் ஆக்ஸிஜன் சிலிண்டருக்காகப் பல கொரோனா தொற்றாளர்கள் காத்திருக்க, ட்விட்டரில் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் போட்ட ட்வீட்டால் அதிர்ச்சிக்குள்ளாகினர் நெட்டிசன்கள். ‘‘என்னுடைய தோழியின் சகோதரி, தன் தந்தைக்காக அவர் வசிக்கும் அபார்ட்மென்ட்டில் ஆக்ஸிஜர் சிலிண்டர் வைத்திருந்த ஒருவரிடம் உதவி கேட்டபோது, சம்பந்தப்பட்ட நபர் அந்தப் பெண்ணைப் பாலியல் உறவுக்குச் சம்மதிக்கச் சொல்லியிருக்கிறார்’’ என்பதே அந்த ட்வீட். அவருக்கு வந்த பதிலில் வேறு ஒரு பெண்ணும் ‘‘எனக்கே இந்த மாதிரி நடந்தது. புகார் கொடுத்தாலும் இல்லையென்று மறுப்பார்கள். காவல் நிலையத்தைவிட மருத்துவமனையை நாடுவதுதான் என் தேவை என்பதால் அதை அப்போது பெரிதுபடுத்தவில்லை’’ என்றிருக்கிறார். இப்படி ஏதும் நடந்தால் டெல்லி போலீஸிடம் புகார் அளிக்கலாம் என்று சில வி.ஐ.பி-க்கள் போலீஸாரை டேக் செய்து நம்பிக்கை வார்த்தைகளை அளித்திருக்கிறார்கள்.