குஜராத்தின் பரோடா பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஷாமா பிந்து, ``என்னை நானே திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். திருமணத்துக்குப் பிறகு கோவாவுக்கு ஹனிமூன் செல்லப்போகிறேன்’’ என்று பரபரப்பைக் கிளப்பியிருந்தார். இதற்கு, குஜராத்திலுள்ள பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்த எதிர்ப்புகளை மீறி ஜூன் 8 அன்று, தனது நெற்றியில் தானே குங்குமமிட்டு தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டார் பிந்து. இந்தியாவில் நடக்கும் முதல் `சோலோகமி’ (Sologamy) திருமணமான இதில், மெகந்தி, மஞ்சள் பூசும் நிகழ்வு உட்பட அனைத்து வழக்கங்களும் கடைப்பிடிக்கப்பட்டன. திருமணத்துக்குப் பிறகு, ``இறுதியாக, திருமணமான பெண்ணாக உணர்கிறேன். சோலோகமி திருமணத்துக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால், மூன்று நாள்களுக்கு முன்பாகவே தோழிகள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டேன். எனது உணர்வுகளைப் புரிந்துகொண்டு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’’ என்று கூறியிருக்கிறார். தற்போது பிந்துவின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல்!
ஜூன் 8 அன்று, சிறுமி ஒருவர் கை கால்கள் கட்டப்பட்டு உச்சி வெயிலில் மொட்டை மாடியில் சுருண்டுகிடக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. டெல்லியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ வைரலானதை அடுத்து, `அந்தச் சிறுமியின் குடும்பத்தைக் கண்டுபிடித்துவிட்டோம். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என டெல்லி காவல்துறை தெரிவித்தது. அந்த வீடியோவிலிருப்பது, டெல்லி கராவால் நகரில் வசிக்கும் ராஜ்குமார், சப்னா ஆகியோரின் 5 வயது மகள்தான் என்ற செய்தியும் பின்னர் வெளியானது. மேலும், ``வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காகத்தான் 1-ம் வகுப்பு படிக்கும் தன் மகளின் கை கால்களைக் கட்டி உச்சி வெயிலில் நிற்க வைத்திருக்கிறார் தாய் சப்னா. வெயிலின் தாக்கத்தால் சுருண்டு கீழே விழுந்திருக்கிறார் அந்தச் சிறுமி’’ என்று காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது. ``இதேபோல தன்னுடைய மகனைக் குளிர்காலத்தில் ஆடையின்றி மாடியில் நிற்கவைத்திருக்கிறார் சப்னா. அப்போது அக்கம் பக்கத்திலிருப்பவர்கள்தான் அவனுக்கு ஆடைகளைக் கொடுத்தார்கள்’’ என்ற அதிர்ச்சிகரத் தகவலும் வெளியாகியிருக்கிறது. இதையடுத்துக் காவல்துறை அவர்களை விசாரித்து, நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
பீகார் மாநிலம், சமஸ்டிபூரில் வசித்துவரும் மகேஷ் தாக்கூரின் மகன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல்போனார். இந்த நிலையில், சதாரிலுள்ள அரசு மருத்துவமனையில் தன் மகனின் உடல் இருக்கும் தகவல் கிடைத்ததும் பதறியடித்துச் சென்றிருக்கிறார் மகேஷ். அங்கே அவரிடம் அந்த உடலைக் காண்பித்து, அது அவருடைய மகன்தான் என்பதை உறுதிசெய்துகொண்ட மருத்துவமனை ஊழியர்கள் `உன் மகனின் உடல் வேண்டுமென்றால் 50,000 கொடு’ எனக் கேட்டிருக்கின்றனர். இதையடுத்து, மகனின் உடலைப் பெறுவதற்காக மகேஷும், அவரின் மனைவியும் பிச்சை எடுக்கும் காணொளி இணையத்தில் வைரலானது. பீகாரைச் சேர்ந்த அரசியல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோர் இது தொடர்பான செய்தியைப் பகிர்ந்து, நிதிஷ் குமார் அரசை விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து, `இதில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என சதார் அரசு மருத்துவமனை தெரிவித்திருக்கிறது!