Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்

N H பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்

N H பிட்ஸ்

Published:Updated:
நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
நேஷனல் ஹாட் பிட்ஸ்
நேஷனல் ஹாட் பிட்ஸ்

கடந்த ஒரு வார காலமாக மும்பையில் பெய்துவரும் கனமழையால், அங்குள்ள சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. மும்பையின் சாந்திவெலிப் பகுதியிலும் சாலைகள் முழுக்க வெள்ளநீரால் நிரம்பிவிட, அந்தப் பகுதியின் சிவசேனா எம்.எல்.ஏ திலீப் லாண்டேயின் தொண்டர்கள் களத்தில் இறங்கி, சாக்கடைகளைத் தூர்வாரி வெள்ளநீர் வடிய வழிசெய்தனர். இதையடுத்து, இந்தப் பணிக்காக நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் சம்பவ இடத்துக்கு வர, அவரை மழைநீரில் உட்காரவைத்ததோடு, அவர்மீது தனது கட்சியினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்களைவைத்து குப்பைகளையும் கொட்டச் செய்தார் திலீப் லாண்டே. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, சிவசேனா எம்.எல்.ஏ-வுக்கு எதிராக விமர்சனங்கள் குவியத் தொடங்கின. ``ஒவ்வோர் ஆண்டும் மழைவெள்ளம் வடியப் பல கோடி ரூபாய் செலவுசெய்யப்படுகிறது. ஆனால், ஒரு வருடம்கூட மழைநீர் சரியாகச் சென்றதில்லை. இதற்கான முழுப்பொறுப்பையும், 25 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியை ஆட்சிசெய்துவரும் சிவசேனாதான் ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. #ஒழுங்கா கொட்ட வேண்டிய இடத்துல குப்பையைக் கொட்டுங்கப்பா!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

கோவையைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்திலுள்ள ஜுஹி ஷுகுல்பூரில், கொரோனாவை தெய்வமாக்கியிருக்கிறார்கள். அதை தெய்வமாகக் கருதி பூஜை செய்தால், கோபம் தணிந்து கிராமத்தைவிட்டு விலகிச் செல்லும் என்ற நம்பிக்கையில், கடந்த ஜூன் 7-ம் தேதி ‘கொரோனா மாதா’வுக்குச் சிலை அமைத்திருக்கிறார்கள். இந்த விஷயம் அக்கம் பக்கத்து கிராமங்களுக்குத் தெரியவர, கோயிலுக்கு ஏராளமானோர் வந்து குவிந்துள்ளனர். அந்த இடம் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிவிடுமோ என்ற அச்சம் எழுந்த நிலையில் நாகேஷ் என்பவர், ‘சிலை இருக்கும் இடம் என்னுடையது. அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கைப்பற்றவே அங்கு சிலை அமைத்திருக்கின்றனர்’ என்று காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், சிலையைக் கைப்பற்றியதோடு, அங்கிருந்த சிறிய கோயிலையும் அப்புறப்படுத்தியிருக்கிறது உ.பி காவல்துறை. #அப்பாவி மக்களின் அச்சத்தைவைத்து விளையாடாதீங்க பாஸ்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

பிரபல கன்னட எழுத்தாளரும், தலித் மக்களின் குரலாக இருந்தவருமான சித்தலிங்கையா ஜூன் 11-ம் தேதியன்று, தனது 67-வது வயதில் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்திருக்கிறார். கர்நாடக மாநிலம், மஞ்சனபெல்லா கிராமத்தில் பிறந்த இவர், பள்ளிப் பருவத்திலேயே கவிதை எழுதத் தொடங்கியவர். தலித் மக்களின் வலியையும், விடுதலை உணர்வையும் தன் கவிதைகளில் வெளிப்படுத்தி, கன்னட இலக்கிய உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். தன் நண்பர்களுடன் இணைந்து, தலித் மக்களின் உரிமைகளுக்காக `தலித் சங்கர்ஷ சமிதி’ என்ற அமைப்பைத் தொடங்கி, இந்தியா முழுவதுமுள்ள தலித் மக்களின் ஆதரவைப் பெற்றார். இவரது சுயசரிதையான `ஊரும் சேரியும்’ தமிழிலும் மொழிபெயர்ப்பாகி, இலக்கிய வட்டாரத்திலும் கவனம் ஈர்த்தது. இரண்டு முறை கர்நாடக சட்ட மேலவை உறுப்பினராக இருந்த சித்தலிங்கையா, அமைச்சர் பதவிக்கு இணையான கன்னட வளர்ச்சித்துறையின் தலைவராகவும் இருந்திருக்கிறார். உயரிய அரசு விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் சித்தலிங்கையாவின் நினைவாக ஓர் ஆய்வு மையம் நிறுவவிருப்பதாக, கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது. ஆளுமைமிக்க கவிஞரை தேசியக்கொடி போர்த்தி, அரசு மரியாதையுடன் வழியனுப்பிவைத்திருக்கிறது கர்நாடக அரசு. #போராட்ட குணம் கொண்ட கவிதைகளுக்கு மரணமில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism