அரசியல்
Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
நேஷனல் ஹாட் பிட்ஸ்

மறுபடியும் மொதல்ல இருந்தா!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

ஜனவரி 26-ம் தேதி, விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு டெல்லி செல்லவிருக்கும் விவசாயிகளை மத்தியப்பிரதேச மாநிலம், சைலானாவில் சந்தித்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹர்ஷ் விஜய் கெலாட். அப்போது அவர்களுடன் சப்-டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு ஒன்றை வழங்கச் சென்றார். அப்போது, சப்-டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் காமினி தாக்கூருடன் நடந்த வாக்குவாதத்தில், ‘‘நீ மட்டும் ஆணாக இருந்திருந்தால், உன் காலரைப் பிடித்து இழுத்து உனக்கு மெமோ கொடுத்திருப்பேன்’’ எனத் திட்டியிருக்கிறார் ஹர்ஷ் விஜய். அங்கிருந்த சிலர் இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, ஹர்ஷ் விஜய்க்கு தற்போது எதிர்ப்பு வலுக்கிறது. #அதிகாரம்... அதிக காரம்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

மும்பை சத்ரபதி பன்னாட்டு விமான நிலையத்தை மையமாகக்கொண்டு சமீபத்தில் நடந்த ஓர் ஊழல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள், அங்கீகாரம் பெற்ற மருத்துவரிடம் ‘ஹோம் குவாரன்டைன் சர்ட்டிஃபிகேட்’ பெறுவது அவசியம். அந்த சர்ட்டிஃபிகேட்டை போலியாகத் தயார்செய்து கொடுத்திருக்கிறார் சப்-இன்ஜினீயர் தினேஷ் கவாண்டே. பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவரைக் கைதுசெய்த காவல்துறை, அவரிடமிருந்து 1.4 லட்சம் இந்திய ரூபாய், 200 சவுதி ரியாலைக் கைப்பற்றியுள்ளது. ஒரு சர்ட்டிஃபிகேட்டுக்கு 4,000 ரூபாய் பெற்றுக்கொண்டு, பெரிய மருத்துவர்களின் பெயரில் போலியான ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்து சர்ட்டிஃபிகேட்டை வழங்கியிருக்கிறார் தினேஷ். அவரின் கூட்டாளிகள் இருவரையும் கைதுசெய்துள்ளனர் காவல்துறையினர். இவரிடம் போலி சர்ட்டிஃபிகேட் பெற்று, பல பயணிகள் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து பல இடங்களுக்குப் பயணித்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. #மறுபடியும் மொதல்ல இருந்தா!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

ஜம்மு - காஷ்மீரின் டோடா மாவட்ட மலைக் கிராமமான கனவ்ரி டான்டா (Ganouri-Tanta) மக்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மின்விளக்கு வெளிச்சத்தையே கண்டிராத அந்தக் கிராமத்தில், முதன்முறையாக மின்சார வசதி கிடைத்து, மின்விளக்குப் பொருத்தப்பட்டுள்ளது. இணையவழி மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் வாயிலாக வந்த கோரிக்கையின் அடிப்படையில், இந்த மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது. பல வருடங்களாக அதிகாரிகளிடம் முறையிட்டும் அந்தக் கிராமத்துக்கு மின்சார வசதி செய்து தரப்படாத நிலையில், லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா இந்தக் குறையைத் தீர்த்திருக்கிறார். #வெளிச்சம் பரவட்டும்!

உத்தரப்பிரதேசத்தின் பரேலி நகரத்தில் கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டபோது, அதிகாரிகளுக்கு வில்லங்கமும் ஏற்பட்டுள்ளது. அந்த நகரத்தில் தடுப்பூசி முகாமுக்கு அருகே சில துண்டுப் பிரசுரங்கள் கிடந்துள்ளன. அதில் ‘தடுப்பூசிப் போட்டுக்கொள்வது நம் இனத்துக்கு எதிரானது’ என ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்பில் அச்சிடப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க, பரவிக்கிடந்த துண்டுப் பிரசுரங்களைச் சேகரித்து அப்புறப்படுத்தியது காவல்துறை. அதை விநியோகித்த சிலரை கைதுசெய்து விசாரணையும் நடத்திவருகிறார்கள். #உயிரோடு விளையாட்டா!

குஜராத்தில் 32 வயதான ஆஷிஷ் அஹிர் (Ashish Ahir) என்பவரைக் கைதுசெய்துள்ளது மும்பை காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு. Shoppiiee.com என்ற பெயரில் போலி ஆன்லைன் ஷாப்பிங் தளத்தை உருவாக்கி ஃபேஸ்புக், ட்விட்டரில் விளம்பரம் கொடுத்துள்ளார் ஆஷிஷ் அஹிர். தள்ளுபடி அதிகமாக இருந்ததால், மக்களும் ஆர்வத்துடன் ஆர்டர் செய்ய, சிக்கியவர்களிடமெல்லாம் பணத்தை வாரிச் சுருட்டிக்கொண்டு தளத்தை முடக்கிவிட்டார். இதுவரை 22,000 பேரிடம் 70 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியுள்ளார். அவரைப் பற்றிய புகார்கள் குவியவே, மும்பை போலீஸார் குஜராத்தில்வைத்து அவரை வளைத்துள்ளனர். #பேராசை... பெருங்கஷ்டம்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

`தி நேஷன் வான்ட்ஸ் டு நோ’ என்று உச்சஸ்தாயியில் நிகழ்ச்சி நடத்திய ரிபப்ளிக் டி.வி-யின் உரிமையாளரும், நெறியாளருமான அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ்அப் உரையாடல்கள்தான் இப்போது வைரல். டி.ஆர்.பி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அர்னாப்பின் வாட்ஸ்அப் உரையாடல்கள் சிலவற்றை ஆய்வு செய்திருக்கிறது மும்பை காவல்துறை. இதையடுத்து, இந்தியாவில் டி.ஆர்.பி ரேட்டிங்கைக் கணக்கிடும் BARC நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ பார்த்தோ தாஸ்குப்தாவுடன் அர்னாப் நிகழ்த்திய வாட்ஸ்அப் உரையாடல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. புல்வாமா தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த பாலகோட் தாக்குதல், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்வது ஆகியவை குறித்து முன்கூட்டியே வாட்ஸ்அப்பில் பேசியிருக்கிறார் அர்னாப். மேலும், ‘மத்திய அரசின் எல்லா அமைச்சர்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். பிரதமர் அலுவலகம்கூட எங்களுக்கு உதவும்’ என்றும் அர்னாப் கோஸ்வாமி, தாஸ்குப்தாவிடம் கூறியிருக்கிறார். இந்த உரையாடல்கள் ட்விட்டரிலும் வெளியாகி வைரலாக, ``அர்னாப், ஊடகத்தைப் பயன்படுத்தி அதிகார தரகராகச் செயல்பட்டிருக்கிறார். சட்டப்படி நீண்டகாலம் சிறையில் தள்ளப்பட வேண்டியவர் அர்னாப்’’ என்று கொதித்திருக்கிறார் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண். #தி நேஷன் அல்ரெடி நோ