Published:Updated:

இன்பமான வாழ்வுக்கு ‘இயற்கை’ இல்லம்!

காட்வின் இமானுயேல் -ஒபிலியா வினோதினி
பிரீமியம் ஸ்டோரி
News
காட்வின் இமானுயேல் -ஒபிலியா வினோதினி

வீடு

ரூர் மாவட்டம், குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையில் இருக்கிறது களத்துப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் காட்வின் இமானுயேல். இவர் மனைவி ஒபிலியா வினோதினி. இருவரும் கட்டடக் கலை சம்பந்தப்பட்ட முதுகலைப் படிப்பை முடித்துவிட்டு, தற்போது பிஹெச்.டி படித்து வருகிறார்கள். இருவரும் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்கள். களத்துப்பட்டியில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில், தென்னை மரங்கள், பழமரங்கள் புடைசூழ, நடுவில் ‘டிவைன் கட்டடக்கலை’ முறையில் இயற்கை இல்லத்தை அமைத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து காட்வின் இமானுயேலுவிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``எங்களுக்குச் சொந்த ஊர், மணப்பாறை பக்கமுள்ள கொத்தமேட்டுப்பட்டி. அப்பா ஆசிரியரா இருந்தார். அவர், இந்தக் களத்துப்பட்டியில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தை 1991-ம் ஆண்டு வாங்கினார். அதில் போர்வெல் அமைச்சு நெல், நிலக்கடலை, காய்கறிகள்னு விளைவிச்சார். நான், 2003-இல் கட்டடக்கலை இளங்கலைப் படிப்பைப் படிச்சு முடிச்சேன். பிறகு, பெங்களூரு, மும்பைனு வேலை பார்த்தேன். அதன்பிறகு, சென்னையில் முதுநிலை கட்டடக்கலை படிப்பு படிச்சேன்.

காட்வின் இமானுயேல் -ஒபிலியா வினோதினி
காட்வின் இமானுயேல் -ஒபிலியா வினோதினி

அப்போதான், 2009-ம் வருஷம் என்கூடப் படிச்ச ஒபிலியா வினோதினியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். 2010-ம் வருஷம் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டு பேரும் வேலையில் சேர்ந்தோம். சொந்த ஊர்ல உள்ள வீட்டுல பாதியை நெடுஞ்சாலைத்துறையினர் விரிவாக்கத்துக்கு இடிச்சாங்க. அதனால், களத்துப்பட்டியில் உள்ள இந்த இடத்தில் வீடுகட்டி, வாழ முடிவெடுத்தோம். நாங்க கட்டடக்கலை படிப்பு படிச்சதாலும், அதன்மேல் இருந்த காதலாலும், இயற்கைக்கு ஊறு செய்யாத, அதிகம் வெப்பத்தை வெளிப்படுத்தாத இயற்கையான இல்லத்தை அமைக்க முடிவெடுத்தோம். பாண்டிச்சேரி ஆரோவில் போய் அதற்கான பயிற்சியை எடுத்துக்கிட்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2012-இல் வீடு கட்டும் வேலையைத் தொடங்கினோம். அடித்தளத்துக்கு இந்தப் பகுதியில் இயற்கையாகக் கிடைக்கும் அரளைக் கற்களை எடுத்துப் பயன்படுத்தினோம். கட்டடம் எழுப்ப 93 சதவிகிதம் செம்மண், வெறும் 7 சதவிகிதம் சிமென்ட் கலந்த கலவைக் கொண்டு செய்யப்பட்ட சுடாத கம்ப்ரஸ்டு எர்த் பிளாக் என்ற கற்களை உருவாக்கிப் பயன்படுத்தினோம். சுவர்களுக்குப் பூச்சு பூசலை. ஆனால், பாயின்டிங் மட்டும் பண்ணினோம். ஒவ்வொரு கல்லுக்கும் மேலும் பயன்படுத்த செம்மண் சாந்தைப் பயன்படுத்தினோம்.

7 அடி வரை சுவரை எழுப்பியபின், உறுதித்தன்மைக்காக அடுத்து கான்க்ரீட் பீம் அமைத்தோம். அதன்மீது, மறுபடியும் மூன்று அடி வரை கம்ப்ரஸ்டு எர்த் பிளாக்கால் சுவர் எழுப்பினோம். சுவர்களுக்கு மேல் அமைக்கப்படும் சீலிங்கின் கணத்தைக் குறைப்பதற்காக, ஃபில்லர் ஸ்லா ப்ரூஃபிங் டெக்னிக்கைப் பயன்படுத்தினோம். சிமென்ட் கான்கிரீட் மூலமாக அதிகமான வெப்பம் உள்ளே வரும். இதற்கு மாற்றாக வெப்பத்தைக் குறைக்கத்தான் கேரளாவில் கிடைக்கும் குருடி பிளாக்கைக் கொண்டு சீலிங் அமைத்தோம். இதன்மூலம், வழக்கமான கான்கிரீட் சீலிங்கைவிட, இரண்டு டிகிரி வரைக்கும் குறைவான வெப்பம் உள்ளே வரும்.

அதேபோல், தரைக்கு வெறும் கைகளால் செய்யப்படுகிற ஆத்தங்குடி டைல்ஸைப் பயன்படுத்தினோம். தேக்குல ஜன்னலைப் படுக்கைவசத்தில், இயற்கையான சூரிய ஒளி உள்ளே வர்றமாதிரி அமைச்சோம். வேஸ்ட் மெட்டிரியலை வைத்து கதவுகளை அமைச்சோம். ஒரு ஹால், ஒரு கிச்சன், 2 பெட்ரூம்கள், 2 டாய்லெட்டுகள்னு இந்த வீட்டுல அமைச்சோம். வீட்டுக்குள் பகலில் சூரிய வெளிச்சமும், இரவில் நிலா வெளிச்சமும் வந்து, இயற்கை ஒளியைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, ஹாலில் இரண்டு இடத்திலும், இரண்டு டாய்லெட்டுகளிலும் சீலிங்கில் கேப் விட்டோம். அந்த கேப்புகளில் தடிமனான டப்பன்ட் கிளாஸைப் பொருத்தினோம்.அதன்மூலமாக, சூரியன் மற்றும் நிலா ஒளி வீட்டுக்குள் வரும். அந்த இயற்கை ஒளி வரும் இடத்தில்தான் டைனிங் டேபிளை வெச்சிருக்கிறோம். டாய்லெட்டுகளில் டப்பன்ட் கிளாஸ் வழியாகச் சூரிய வெளிச்சம் வருவதால், டாய்லெட்டுகள் ஈரமாக இல்லாமல் காய்ந்துபோய்விடும்.

பண்ணையில் உள்ள வீடு
பண்ணையில் உள்ள வீடு

இந்த வீட்டை அமைக்க, 25 லட்சம் ரூபாய் வரை செலவாச்சு. உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக, ஒருதுளி பெயின்டைக்கூட அடிக்கவில்லை. அந்தந்தப் பொருள்களோட இயல்பு நிறத்திலேயே இருக்கும்படி விட்டுவிட்டோம். எல்லாவற்றைவிட, இந்த வீட்டுக்காகத் தோப்பில் உள்ள ஒரு உயிரான மரத்தைக்கூட வெட்டவில்லை. காம்பவுண்டு சுவர் அமைக்கலை. மாற்றாக, உயிர்வேலி அமைச்சிருக்கிறோம். வீட்டைச் சுற்றியுள்ள புல்லை மேய்றதுக்காகக் கன்று ஒன்றை வளர்க்கிறோம்.

வீட்டின் ஓர் அங்கமாக கிச்சன் கார்டனும் இயற்கை முறையில் அமைச்சிருக்கிறோம். 10 வருஷமாக இயற்கையாக விளைந்த உணவுப்பொருள்களைதான் சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். இந்தப் பசுமை இல்லத்தின் (டிவைன் இல்லம்) மூலமாக, வெப்பத்தைக் குறைத்திருக்கிறோம். எங்கப் பகுதிகள்ல கிடைச்ச பொருள்களைக் கொண்டே, மரபுவீடாக அமைச்சிருக்கிறோம். வீட்டுக்குள் 60 சதவிகிதம் வரை இயற்கையான ஒளி வரும்படி செய்திருக்கிறோம். நான், மனைவி, மகன், பெற்றோர் என அனைவரும், ஆனந்தமான, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கிறோம்” என்றார் மகிழ்ச்சியாக!