Published:Updated:

மிருகங்களுக்கான கொரோனா பரிசோதனை மையம் சென்னையில் அமைக்கப்பட வேண்டும்!

உயிரியல் பூங்கா
பிரீமியம் ஸ்டோரி
உயிரியல் பூங்கா

உயிரியல் பூங்கா துணை இயக்குநர் கோரிக்கை

மிருகங்களுக்கான கொரோனா பரிசோதனை மையம் சென்னையில் அமைக்கப்பட வேண்டும்!

உயிரியல் பூங்கா துணை இயக்குநர் கோரிக்கை

Published:Updated:
உயிரியல் பூங்கா
பிரீமியம் ஸ்டோரி
உயிரியல் பூங்கா

1855-ம் ஆண்டில், எட்வர்ட் கிரீன் பால்ஃபோர் (Edward Green Balfour) என்பவரால் தோற்றுவிக்கப்பட்டதுதான் வண்டலூர் உயிரியல் பூங்கா. இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவான வண்டலூர் பூங்கா, நாளடைவில் விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று 1,490 ஏக்கர்களில் பரந்து விரிந்திருக்கிறது. கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான இங்கு, புலி, சிங்கம், சிறுத்தை, கரடி, யானை, மான், நீர்யானை, காண்டாமிருகம், முதலை, பாம்பு வகைகள், வரிக்குதிரை, ஓநாய், குரங்குகள், கொக்குகள், கழுகு உள்ளிட்ட மிருகங்கள், பறவைகள் என சுமார் 2,600 உயிரினங்கள் இருக்கின்றன.

ஒன்றரை ஆண்டுகள், இரண்டு அலைகள் என உலக மக்களைத் தன் பிடியில் வைத்து, ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா நோய்த்தொற்று. கொரோனா முதல் அலை தொடங்கியபோதே, மனிதர்களைத் தாண்டி மிருகங்களையும் இது தாக்குமா என்ற விவாதங்கள் எழுந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, அமெரிக்காவின் பிரான்க்ஸ் (Bronx) உயிரியல் பூங்காவிலுள்ள புலிக்கு, ஏப்ரல் 2020-ல் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்தப் பூங்காவிலுள்ள மேலும் சில புலிகளுக்கும் தொற்று உறுதியானது.

மிருகங்களுக்கான கொரோனா பரிசோதனை மையம் சென்னையில் அமைக்கப்பட வேண்டும்!

இந்தியாவில் முதன்முதலாகக் கடந்த மே மாதம் 4-ம் தேதியன்று, ஹைதராபாத்திலிருக்கும் நேரு உயிரியல் பூங்காவிலுள்ள 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தொடர்ந்து ஜெய்ப்பூர் உயிரியல் பூங்காவிலிருக்கும் ஒரு சிங்கத்துக்கும் தொற்று உறுதியானது. இந்த நிலையில், சென்னை வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருக்கும் 12 சிங்கங்களில் கர்ப்பமாக இருக்கும் ஒரு சிங்கத்தைத் தவிர்த்து, மீதமுள்ள 11 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை எடுத்து அனுப்பியதில், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் ஒன்பது வயதான நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கர்ப்பமாக உள்ள சிங்கம் இந்த மாதத்தில் குட்டி ஈனவிருக்கிறது. எனவே, மருத்துவர்களின் ஆலோசனைப்படி அந்த சிங்கத்துக்கு பரிசோதனை மேற்கொள்ளப் படவில்லை.

சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறித்து வண்டலூர் உயிரியல் பூங்காவின் துணை இயக்குநர் நாகா சதீஷிடம் (IFS) பேசினோம். ``கடந்த மே மாத இறுதியில், `ரேண்டமாக சில மிருகங்களைத் தேர்வுசெய்து, அவற்றுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்’ என மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திலிருந்து சுற்றறிக்கை வந்தது. இதையடுத்து நான்கு சிங்கங்களிடம் மாதிரிகள் எடுத்து கொரோனா பரிசோதனை மையத்துக்கு அனுப்பிவைத்தோம். அடுத்த சில நாள்களில் இரண்டு சிங்கங்கள் சரியாக உணவு எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீதமிருக்கும் ஏழு சிங்கங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கான மாதிரிகளை எடுத்து அனுப்பி வைத்தோம். அனுப்பப்பட்ட 11 மாதிரிகளில் ஒன்பது சிங்கங்களுக்குத் தற்போது கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த ஒன்பது சிங்கங்களில் ஒன்றுதான் ஜூன் 3-ம் தேதியன்று உயிரிழந்த நீலா எனும் பெண் சிங்கம். நீலா உயிரிழந்த ஒரு மணி நேரம் கழித்துத்தான், சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கும் தகவல் எங்களுக்குக் கிடைத்தது.

மீதமிருக்கும் எட்டு சிங்கங்களில் ஐந்து சிங்கங்களுக்கு, கடந்த மே 26-ம் தேதி முதலே இருமல், சளி, பசியின்மை உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தன (மற்ற மூன்று சிங்கங்களுக்கும் Asymptomatic). எனவே, உயிரியில் பூங்கா மருத்துவர்கள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் என மருத்துவக்குழு அந்த ஐந்து சிங்கங்களுக்கும் சிகிச்சை அளித்துவருகின்றனர். இந்த ஐந்து சிங்கங்களுக்கு மட்டுமல்லாமல் மீதமிருக்கும் சிங்கங்களுக்கும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே சிகிச்சை வழங்கத் தொடங்கிவிட்டோம். இருந்தும், எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இருந்த நீலா சிங்கம் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துவிட்டது.

அறிகுறிகளுடன் இருக்கும் ஐந்து சிங்கங்களில், மூன்று சிங்கங்கள் வேகமாக குணமடைந்து வருகின்றன. மீதமிருக்கும் இரண்டு சிங்கங்கள் வயதானவை என்பதால், குணமடையும் வேகம் குறைவாக இருக்கிறது. அவை இரண்டுக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்துவருவதால் விரைவில் அவை குணமடையும் என்று நம்புகிறோம். மற்றவை எப்போதும்போல உணவு எடுத்துக்கொள்கின்றன; இயல்பாக இருக்கின்றன’’ என்றவரிடம், “கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத இரண்டு சிங்கங்கள் தனிமைப்படுத்தப் பட்டிருக்கின்றனவா?” என்ற கேள்வியை முன்வைத்தோம்.

``சிங்கங்கள் குழுவாகத்தான் இருக்கும் என்பதால், அவற்றைப் பிரிக்க முடியாது. எனவே, கொரோனா தொற்றில்லாத இரண்டு சிங்கங்களுக்கும் அனைத்து சிகிச்சைகளும் அளித்துக்கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் RT-PCR சோதனையில் நெகட்டிவ் என்று முடிவு வந்தாலும், கொரோனா தொற்று இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே, எல்லா சிங்கங்களுக்கும் சிகிச்சை வழங்குகிறோம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், மருந்துகள் வழங்கிவருகிறோம். மல்டி வைட்டமின் மருந்துகளும் கொடுத்துவருகிறோம்’’ என்றார் நாகா சதீஷ்.

மிருகங்களுக்கான கொரோனா பரிசோதனை மையம் சென்னையில் அமைக்கப்பட வேண்டும்!

“சிங்கங்களைப் பராமரிப்பவர்களுக்கு எப்படிப்பட்ட பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன?” என்ற நம் கேள்விக்கு ``இரண்டாம் அலை தொடங்கியதிலிருந்தே, பராமரிப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் அனைவரும் பிபிஇ உடை அணிந்துதான் பணி செய்துவருகிறார்கள். பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் செய்துவருகிறோம். மிருகங்களுக்கு வழங்கப்படும் உணவுகளைக்கூட யூவி ரேடியேஷன் மூலம் பரிசோதனை செய்த பின்னரே வழங்குகிறோம். இருந்தும், முதல் சிங்கத்துக்கு எப்படித் தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், ஒரு சிங்கத்திடமிருந்துதான் மற்ற சிங்கங்களுக்குத் தொற்று பரவியிருக்க வேண்டும். இது குறித்து இனிதான் ஆய்வுசெய்து கண்டறிய வேண்டும். வண்டலூர் உயிரியல் பூங்காவைப் பொறுத்தவரை, வேறெந்த மிருகத்துக்கும் கொரோனா அறிகுறிகள் இல்லை. மற்ற மிருகங்கள் அனைத்தும் இயல்பாகவே இருக்கின்றன. இருந்தும், முன்னெச்சரிக்கையாகப் புலிகளிடமிருந்து மாதிரிகள் எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம்’’ என்றவரிடம், “இது தொடர்பாக அரசிடம் ஏதாவது கோரிக்கைகள் இருக்கின்றனவா?” எனக் கேட்டோம்.

``மிருகங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் மையங்கள் இந்தியாவிலேயே மொத்தம் நான்குதான் இருக்கின்றன. இந்த நான்கும்கூட வேறு மாநிலங்களில் இருப்பதால், மாதிரிகளை கூரியர் மூலம் அனுப்பிவைத்து முடிவுக்காகக் காத்திருப்பதால், சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. மாதிரிகள் சேகரிக்கப்பட்டதிலிருந்து மூன்று நாள்களுக்குள் பரிசோதனை செய்யாவிட்டால் மாதிரிகளும் வீணாகிவிடும். எனவே, சென்னையில் மிருகங்களுக்கான கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை’’ என்கிறார் நாகா சதீஷ்.

முக்கியப் பேசுபொருளாக மாறியிருக்கும் வண்டலூர் உயிரியல் பூங்காவில், கடந்த ஞாயிறன்று ஆய்வு மேற்கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சிங்கங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், இதர விலங்குகளை கொரோனாவிலிருந்து காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். உயிரியல் பூங்கா நிர்வாகம் முன்வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism