
பிரிட்டிஷ் சர்க்கார் கழுத்தை நீட்டிக்கிட்டு நிக்கிற அப்பாவி ஆடா என்ன? வேங்கடகிரி மாதிரி உயர்ந்த பர்வதம்
“உங்க புது மகாராஜா பூனாவுக்குப் போறாரா ஓய்? ஏதோ காங்கிரஸ்னு சபா ஒண்ணு ஆரம்பிக்கிறாளாமே? உங்க ராஜா அவசியம் போவார். பிரிட்டிஷ் சர்க்காருக்கு யாரெல்லாம் அணுக்கமோ, அவாதான் மொத ஆளா சபாவுல கலந்துக்கிறாளாமே?” திவான் ராமய்யங்காரிடம் லக்ஷ்மணன் கேட்டார்.
“பிரிட்டிஷ் சர்க்காருக்கு நாங்க அணுக்கமா?” திவானுக்குள் எரிச்சல் வந்தது.
“பிரிட்டிஷ் பேரரசிக்குத் தந்தத்துல அரியாசனம் செஞ்சு அனுப்பினவாள அணுக்கம்னு சொல்லாம என்ன சொல்றது ஓய்?”

“ஓய் லக்ஷ்மணா, உமக்குத் தெரியாதா? பக்கிங்காம் அரண்மனையில இருக்கிற அதிசயமான பொருள்கள்ல பாதிக்குமேல, இந்திய சமஸ்தானபதிகள் கொடுத்ததுதான். இதுல நாங்க கொடுத்த தந்த அரியாசனம்தான் உமக்குக் கண்ணுல படுதா? நீர் கொஞ்ச நேரம் வெத்தலையைக் குதப்பும். மகாராஜா வந்ததும் நான் பார்த்துட்டுக் கிளம்புறேன்.”
“இந்தாரும், சீரங்கம் வெத்தலையையும் சீவலையும் நீரும் ஒரு வாய் உள்ளே தள்ளும். பேஷாயிருக்கும். பிரயாணத்துல களைச்சுப் போயிருக்கிறீர். நான் கேள்விப்பட்டதைச் சொன்னேன். மீரட் கலகத்துக்கப்புறம் கல்கத்தா, மெட்ராஸ், பம்பாய்ல ஆரம்பிச்ச யுனிவர்சிட்டியில படிச்சு டிகிரி வாங்குன மக்குப் பசங்க ஒண்ணு சேர்ந்து கூட்டம் போடுறாளாம். உத்தியோகத்துலயும் செல்வாக்கிலேயும் உசந்தவல்லாம் ஒண்ணு சேர்ந்துட்டாளாம். மகாராஜாங்களும் ‘நீங்க போறீகளா, நீங்க போறீகளா’ன்னு ஒருத்தர ஒருத்தர் கேட்டுக்கி றாங்களாம். திருவிதாங்கூர் எப்பவுமே பிரிட்டிஷ் சர்க்காருக்கு ஒரு அழகான காதலி மாதிரி...”
“உம்மோட வர்ணனைகளைக் கேக்குற அளவுக்கெல்லாம் நான் இப்போ தயாரா இல்லை ஓய். நிறுத்தும். இன்னும் அம்பது காத தூரம் பிரயாணம் செய்யணும். தெம்பில்லை. வந்த காரியமும் தெம்பு தர்ற மாதிரி நடக்கலை. மகாராஜா எப்போ வருவாருன்னு பாரு.”
வேங்கடகிரி மகாராஜா ராஜகோபால கிருஷ்ண யச்சேந்திர பகதூர் அப்போது உள்ளே நுழைந்தார்.
“திவான் சமூகம் பொறுத்தருளணும்.”
திவான் சட்டென்று எழுந்து நின்றார்.
“உட்காருங்க திவான், கவர்னர் கிளம்புவார் என்று காத்திருந்தேன். அவர் ஓய்வெடுத்துவிட்டு நாளை வேலூர் செல்லவிருப்பதாகச் சொன்னார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதுதான் தாமசம்.”
“வாஸ்தவம்தானே, உடனே கிளம்பிவிட முடியாதே மகாராஜா.”
“முக்கியமாக ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னர் நான் பம்பாய் போகிறேனா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பிப் பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தார்.”
“பம்பாய்க்கா மகாராஜா? பூனாவில் நடப்பதாகத்தானே சொல்லியிருந்தீர்கள்?” லக்ஷ்மணன் கேட்டார்.
“பூனாவில் கொள்ளை நோய் வந்து டுச்சாம். பிளேக்ன்னு சொல்றாங்களே, அது. பூனா முழுக்க ஜனங்க அங்கங்கே வீட்டை விட்டுட்டு வயக்காட்டுலயும் பாறையிலும் மலையிலும் இருக்கிறாங்களாம். இந்த நேரத்துல அங்க கூட்டம் போட்டு, காங்கிரஸ் தொடங்கும் போதே கூண்டோட போயி டுச்சுன்னா?” வேங்கடகிரி ராஜா கேலியாகச் சிரித்தார்.
“ஹிஸ் எக்ஸலென்ஸி வைஸ்ராயுடைய ஒப்புதலுடன்தான் இந்தக் காங்கிரஸ் தொடக்கம் நடக்குதா மகாராஜா?”
“வைஸ்ராய் லேசா தலையசைச்சாகூட வேணாம்னு சொல்றாருன்னு நிறுத்திடுவாங்களே? டப்ரின் பிரபு முழு ஆதரவாம். ஆக்டேவியன் ஹியூமும் சுரேந்திரநாத் பானர்ஜியும் வைஸ்ராயைத் தினம் சந்திக்கிறாங்களாம்.”
“ஆச்சரியமா இருக்கு மகாராஜா. பிரிட்டிஷ் சர்க்காரே பிரிட்டிஷ் சர்க்காருக்கு எதிரா ஒரு அமைப்பை உருவாக்க ஆதரவு தர்றதும், அதுக்கு பிரிட்டிஷ் சர்க்கார்கிட்ட பென்ஷன் வாங்குற அதிகாரிகளே வழி காட்டுறதும்.”
“ராமய்யங்கார் எவ்ளோ பெரிய ராஜதந்திரி. தெரியாத மாதிரி சொல்றீங்களே? இதுக்கு என்ன காரணம் இருக்கும்னு உங்களுக்கு நல்லாத் தெரியும் தானே?”
“மகாராஜாவிடமா நான் மறைச்சுப் பேசுவேன்? ஏழெட்டு மாசமா அரசல்புரசலா சேதிங்க வந்துகிட்டுதான் இருக்கு. எனக்கு என்ன ஆச்சரியம்னா, இந்தியா வோட சமஸ்தானபதிங்க எல்லாம் ஆர்வம் காட்டுறதும் பிரிட்டிஷ் ஐ.சி.எஸ் அதிகாரிகளும் முக்கியஸ்தர்களும் ஆர்வம் காட்டுறதும் ஏன்னு புரியலை. தன் கழுத்தை வெட்டிக்க எந்த ஆடாவது தானே கத்தியக் கூர் தீட்டிக்குமா?”
“பிரிட்டிஷ் சர்க்கார் கழுத்தை நீட்டிக்கிட்டு நிக்கிற அப்பாவி ஆடா என்ன? வேங்கடகிரி மாதிரி உயர்ந்த பர்வதம். எது கூரான ஆயுதம்னு பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டு, அதைத் தூள் தூளாக்கிடும். சிப்பாய்க் கலகம் மாதிரி இன்னொரு கலகம் இந்தியாவுக்குள்ள வந்துடக் கூடாதுன்னு பிரிட்டிஷ் மகாராணி ரொம்ப கவனமா இருக்காங்க. மகாராணி, மீரட் கலகத்துக்குப் பழியை ஈஸ்ட் இந்திய கம்பெனி மேலயும் அதிகாரிங்க மேலயும் போட்டுட்டாங்க. இப்போ எல்லாத்துக்கும் மேன்மைதாங்கிய பிரிட்டிஷ் பேரரசியைத்தானே நேரடி காரணமாச் சொல்லுவாங்க. தக்காணத்துலயும் வங்காளத்துலயும் மெட்ராஸ் பிரசிடென்சியிலும் வந்த கொடும் பஞ்சத்த ஒழுங்கா கையாளலன்னு மக்கள் கோபமா இருக்கிறது சர்க்காருக்குத் தெரியும். ஏரி உடைஞ்சிடாம இருக்க அப்பப்ப மதகைத் தெறந்து விடுற மாதிரி, மக்களோட கோவம் பெருசா வெடிச்சுடாம இருக்க, அவங்க கருத்தைக் கேட்கிறோம்னு இப்படி வேலையை ஆரம்பிச்சிருக்காங்க.”
வேங்கடகிரி மகாராஜா சொல்லியதைக் கேட்டதும் திவானுக்குச் சந்தேகமாக இருந்தது. வேங்கடகிரி மகாராஜா பிரிட்டிஷ் சர்க்காரின் அங்கமாகத் தன் சமஸ்தானத்தைக் காண்பித்துக்கொள்ள விரும்புபவர். அவருடைய பழக்கவழக்கங்கள் எல்லாமே பிரிட்டிஷ் ஐ.சி.எஸ் அதிகாரிகளுடனும், கவர்னர்களுடனும்தான். மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர்கள் வேங்கடகிரிக்குச் சிறப்பு வருகையின் பேரில் அழைக்கப்பட்டுவிடுவார்கள். வேங்கடகிரி மகாராஜாவின் அன்பைப் பெற்ற கவர்னர்கள், பிரதி உபகாரமாக மகாராஜாவின் குடும்பத்தினர் மெட்ராஸ் பிரசிடென்சிக்கு வரும் நேரங்களில் தங்களின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த துணைப்படைத் தளபதியின் சிறப்பு அணிவகுப்புடன் வரவேற்பார்கள். வைஸ்ராய் டப்ரின் பிரபுவின் மனைவி முயற்சியெடுக்கிறார் என்பதற்காகவே விக்டோரியா மகாராணியின் பெயரில் கட்டிக்கொண்டிருக்கும் கோஷா ஆஸ்பத்திரிக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறார். பிரிட்டிஷின் அணுக்க மான மகாராஜா, வைஸ்ராயின் போக்கை விமர்சிப்பது ராமய்யங் காருக்கு வியப்பாக இருந்தது.
“தங்களுக்கு உடன்பாடு இல்லையா மகாராஜா? பரோடா, போபால், அயோத்தி சமஸ்தானபதிகள் அவர்களின் ஆதரவைத் தெரிவித்திருப்பதாக அறிந்தேன்.”
“எதிர்காலத்துல பாருங்கோ, இந்தக் காங்கிரஸ் பிரிட்டிஷ் சர்க்காருக்குப் பெரும் தலைவலியைக் கொண்டு வரும் என்பது என் அபிப்பிராயம்.”
“என்ன சொல்றீங்க மகாராஜா?” திவான்.
``மகாராஜா சொல்றதைத்தான் நானும் நெனைச்சேன். ஹிஸ் எக்ஸலென்ஸி வைஸ்ராயிடம் மக்களோட கருத்தைச் சொல்றதுக்குத்தான் சபா ஆரம்பிக்கிறோம்னு இன்னைக்குச் சொல்றாங்க. நாளைக்கு வைஸ்ராய்தான் பிரச்சினையேன்னு சொல்ல மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? அயோத்தி, ஜான்சி, மீரட்னு எல்லா சமஸ்தானமும் ஒரு காலத்துல ஈஸ்ட் இந்தியா கம்பெனியோட அணுக்கமா இருந்தவங்கதானே? அப்புறம் அவங்களுக்குள்ள முட்டிக்கிடலையா? அப்படித்தான் இதுவும் ஆகும்.”
“லக்ஷ்மணன் சொல்றது சரிதான். நான் வேட்டைக்காரன். புலி வேட்டையில் குறி வைப்பவனும் புலியின் இலக்காக இருப்பான் என்பதை நன்கறிவேன்.”
``வாஸ்தவம்தான் மகாராஜா. போன வருஷம் நான் மயிலாப்பூர் வந்தபோது சொன்னாங்க. மெட்ராஸ் மகாஜன சபான்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்கன்னு. மொத்தமே இருபது பேருக்குள்ளதான் கலந்துகிட்டாங்களாம். அப்புறம் அந்த மகாஜன சபை என்னாச்சுன்னு தெரியலை.”
“அந்த மகாஜன சபைதான் இப்போ தொடங்கப்போற காங்கிரஸுக்கு காரணம்னு சொல்றாங்க. அமெரிக்காக்காரன் அமெரிக்கன் காங்கிரஸ்னு பேர் வச்ச மாதிரி, இவங்க இந்தியன் காங்கிரஸ்னு பேர் வைக்கப்போறாங்களாம். நான் அடுத்த முறை கல்கத்தா பிரயாணம் போகும்போது வைஸ்ராயைப் பார்த்துப் பேசணும்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்.”
“முன்னாடி இருந்த ரிப்பன் பிரபைவிட தன்னைப் பெரிய சீர்திருத்தவாதியா காமிச்சிக்க வைஸ்ராய் நெனைக்கிறார் போல இருக்கிறது.”
“ஆமாம். டப்ரின் பிரபு வந்தபோது இந்தியா முழுக்கவே அச்சத்துல இருந்ததே, ரஷ்யாக்காரன் நம்மள எந்த நேரத்திலயும் தாக்கிடுவான்னு பயந்துகிட்டே இருந்த நெலைமையைப் புது வைஸ்ராய் வந்துதானே மாத்துனாரு? அதனால அவருக்கு லண்டன்ல பெரிய புகழ் இருக்கு. பிரிட்டிஷ் பேரரசியும் இந்தியச் செயலரும் இவர் அனுப்பற கோரிக்கை எல்லாத்துக்கும் உடனே அனுமதி கொடுத்திடுறாங்களாம்.”
திவானுக்குச் சட்டென்று தன் கவலைகள் நினைவுக்கு வந்தன. பிரிட்டிஷ் சர்க்கார் எல்லாம் தாங்கும், நம் வேலையைப் பார்ப்போம் என்று நினைத்தபடி, வேங்கடகிரி மகாராஜாவைப் பார்த்தார்.
“மகாராஜாவிடம் கவர்னர் வேறு ஏதேனும் சேதி சொன்னாரா?”
திவான் ராமய்யங்காரின் குரலில் இருந்த சோர்வை உணர்ந்த வேங்கடகிரி அரசர், “உங்களுக்கு கவர்னரைப் பற்றிச் சரியாகத் தெரியாதா? அவர் அப்படித்தான் முரண்பாடாகச் சொல்வார். பின்னர் தான் சொன்னதையே மறந்துவிடுவார்” என்றார்.
திவானுக்கு மேலும் அதிர்ச்சி. “என்னது, மறந்துவிடுவாரா?” என்றார்.
“அவர் இருபது நாளுக்குள்ள இன்ஜினீயர்களோட அறிக்கை தரணும்னு சொன்னதை நினைச்சுதானே சோர்ந்துட்டீங்க?”
“ஆமாம் மகாராஜா. திரும்புற திசையெல்லாம் குழப்பமும் தெளிவுமில்லாத சேதியா வர்றதை நினைச்சுப் பெரும் அயர்ச்சியா இருக்கு.”
“உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை, திவான். நீங்க கவலையில்லாம சமஸ்தானத்துக்குப் புறப்படுங்க. உங்க ஆளுகள உடனடியா மேல்மலைக்குப் போய் ஆய்வு நடத்த ஏற்பாடு செய்யுங்க.”
“அதுக்கும் ஹிஸ் எக்ஸலென்ஸி, எங்கள் ரெசிடென்ட் ஹானிங்டன்னுக்குக் கடிதம் அனுப்ப வேண்டுமே?”
“அனுப்பிடுவார். கடிதம் திருவிதாங்கூர் வரும்வரை நீங்க மத்த ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கலாம்.”
திவான் முகத்தில் குழப்பம் வேரோடி நின்றிருந்தது.
``எப்போது திருவிதாங்கூர் புறப்பாடு?”
“நாளை பகல் வேளையிலேயே கிளம்ப உத்தேசம் மகாராஜா. அங்கும் கைப்பிள்ளையைப்போல் வேலைங்க எப்போ எப்போ என்று காத்துக்கிட்டிருக்கும்.”
“என்னுடன் ஜமீனுக்கு வந்து செல்லலாமே? புதியதாகக் கட்டியுள்ள இந்திரமகாலில் தங்கி களைப்பு நீங்கிச் செல்லலாம். வேங்கடகிரியில் புதியதாக நிறைய மகால்கள் கட்டியுள்ளேன்.”
“கட்டடங்கள் மீதான தங்களின் பிரேமம் அறிவேன் மகாராஜா. வேங்கடகிரி சமஸ்தானத்தின் ஜமீனின் 28வது மகாராஜாவாகப் பதவியேற்றுக்கொண்ட இந்த ஆறாண்டுகளில் வேங்கடகிரி ஜமீனே புதுப்பொலிவு பெற்றுவிட்டதே.”
“திவான் நேரில் வந்து பார்த்துச் சொன்னால் மகிழ்வேன். நம் வேங்கடவனையும் தரிசிக்கலாம். அனந்தசயனனை தரிசிக்கும் உங்கள் கண்களுக்கு, நின்ற கோலத்தில் உள்ள வேங்கடேச தரிசனம் அரிதுதானே?”
திவான் மகாராஜாவை நோக்கி இருகரம் குவித்து வணங்கினார்.
“தங்களின் பேரன்புக்குத் தன்யனானேன் மகாராஜா. இப்போதைக்கு என் சூழல் அப்படி. தங்களிடம் அனுமதி கேட்டுவிட்டு நான் அடுத்த முறை ஜமீனுக்கு வருகை தருவேன்.”
``சரி, நீங்கள் வேங்கடகிரி வரவில்லையென்றால் என்ன, நான் மெட்ராஸ் ராஜதானிக்கு வருகிறேன்.”
லக்ஷ்மணன் வெற்றிலை மெல்லுவதை நிறுத்தி, நிதானமாக மகாராஜாவை நிமிர்ந்து பார்த்தார். திவான் வியப்புடன் நிமிர்ந்து பார்த்தார்.
“என்ன சொல்லுகிறீர்கள் மகாராஜா, இப்போதேவா? என்னுடனா?”
“எனக்கு வாரத்திற்கொருமுறை எங்காவது போக்குவரத்தில் இருக்க வேண்டும். இம்முறை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பெருமைமிகு திவானுடன் பிரயாணம் செய்வது ஒரு பிராப்திதானே?”
“நான் சொல்ல என்ன இருக்கிறது, எல்லாம் பெருமாளின் கண்ணசைவுதானே? பரமாத்மாவின் கடைவிழி ஓட்டத்தினைப் பின்தொடரும் எளிய ஆத்மாக்கள்தானே நாம்?” வேங்கடகிரியின் திசை பார்த்து இரு கை குவித்து வணங்கினார் திவான்.
வேங்கடகிரி மகாராஜா ஆண்டுக்கொரு முறை இந்தியாவையே சுற்றி வந்து விடுவார். பனி உருகும் இமயமலை முதல், மணல் உருகும் பாலைவனங்கள் வரை அவரின் பிரயாணங்கள் விதவிதமானவை. வைணவத் திருத்தலங்களாக ஒருதரம், சந்நியாசிகளின் தீர்த்தயாத்திரைபோல் ஒருதரம், இந்திய சமஸ்தானங்களின் மகாராஜாக்களையும் அவர்களின் அரண்மனைகளையும் பார்த்து வருவதற்காக ஒருதரம், காடு மலைகளில் வேட்டைக்காக ஒருதரம் என அவரின் கால்கள் புதிய பூமியை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும். அவரின் சம்பாஷணைகளில் பிரயாணத்தின் ருசி நிரம்பி வழியும்.
“லக்ஷ்மணன், நம் பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள். திவானின் குதிரைகள் சோர்வுற்று இருந்தால், நம் குதிரைகளைப் பூட்டச் சொல்லுங்கள்.”
“உத்தரவு மகாராஜா… நானும்?”
“சுண்ணாம்பு போட்டால்தான் வெற்றிலை சிவக்கும். நீங்கள் இல்லாமல் சுவாரசியப்படாது பிரயாணம்.”
“பெரும் பாக்கியம்… பெரும் பாக்கியம்... உலகத்தையே மூன்றடியில் அளந்த பெருமாளே நிலைகொண்டிருக்கும் ஏழுமலை பர்வதத்தை ஆளும் மகாராஜாவின் பாராட்டு பெருமாளின் பாராட்டாச்சே.” வணங்கியபடியே எழுந்த லக்ஷ்மணன், குதிரைக்காரர்களைத் தயார்படுத்தச் சென்றார்.
கவர்னரைச் சந்தித்தபின், ராமய்யங்காரை வேங்கடகிரி மகாராஜா வரவேற்பறையில் காத்திருக்கச் சொல்லியிருந்தார். முக்கியமான ஆலோசனைகள் ஏதேனும் வழங்குவார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த ராமய்யங்காருக்கு முற்றிலும் வேறான மனநிலையுடன் இருந்த மகாராஜாவுடன் ஒன்ற முடியவில்லை. காரியமாற்றுவதே அவருக்கு அருந்தவம். பிரயாணத்திலோ, நண்பர்கள் சந்திப்பிலோ அவர் மனம் குவிவதில்லை. மகாராஜா தன்னுடன் மெட்ராஸ் பிரசிடென்சிக்குப் புறப்படக் காலதாமதமானால் என்ன செய்வதென்று சிந்தனைகள் திவானின் மனத்தில் அலைபுரண்டன.

``திவான் அதற்குள் எந்த ஆழ்கடலுக்குள் மூழ்கிவிட்டீர்கள்?” மகாராஜா பகதூர்.
“ஒன்றுமில்லை மகாராஜா. ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னரின் சந்திப்பைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.”
“நீங்கள் அயர்ச்சியடையும் அளவிற்கு ஒன்றும் இல்லையென்று சொல்லிவிட்டேனே?”
“மகாராஜாவிடம் தாழ்மையான ஒரு விண்ணப்பம் செய்து கொள்ளலாமா?”
“சொல்லுங்கள் திவான்…”
“கவர்னர் அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கை அறிவேன். நாளை நீங்கள் மெட்ராஸ் பிரசிடென்சி வருவதால் இந்த விண்ணப்பம்.”
“எதற்கு இத்தனை பீடிகை? பேரியாறு அணை கட்டுமானத்திற்கு ராயல் இன்ஜினீயர்கள் இருவரை நியமித்து கவர்னரின் செயலாளரின் மூலம் கையோடு கடிதம் வாங்கிக் கொடுக்கிறேன். இதைத்தானே எதிர்பார்க்கிறீர்கள்?”
திவானுக்கு நா தழுதழுத்தது.
“மகாராஜா, வெங்கடேச பெருமாள் விண்ணளவு உயர்ந்து நிற்பதைத் தினம் பார்க்கும் உன்னத புருஷர் அல்லவா நீர்? அந்தப் பரமாத்மா பக்தர்களின் உள்ளக்கிடக்கையை அறிவதுபோல் நீங்களும் அறிந்துகொண்டீர்கள். அப்படி நடந்தால் நான் சமஸ்தானத்திற்கு நிம்மதியாகச் செல்வேன்.”
``முதலில் நல்ல விருந்து. பிறகு, பிரயாணம். வாருங்கள்.” மகாராஜா பகதூர் அழைக்க, திவான் தலைப்பாகையை அணிந்து புத்துணர்ச்சியுடன் பின்தொடர்ந்தார்.
மேலெழுந்த புழுதி திரண்டு மேகம்போல் நிற்க, பூஞ்சாறு அரசரின் கோச் வண்டி வந்து நின்றது. தங்களுக்குக் காணி கொடுத்து, மேல்மலையில் வாழ்வதற்குப் பாதுகாப்பையும் பூஞ்சாறு அரசர் கொடுப்பதாகவே மன்னான்களும் பளியர்களும் நம்புகிறார்கள். கடவுளைக் கண்ட அடியார்களின் பரவசத்துடன் காணிகள் எழுந்து நின்றார்கள்.
“பூஞ்சாற்றுத் தம்புரானுக்கு, நாப்பத்திரண்டு காணிகளோட தேவன்மன்னானாகிய இந்த ராஜமன்னானின் வணக்கங்கள்.”
ராஜமன்னானைத் தொடர்ந்து நாற்பத்திரண்டு காணிகளும் பளியர் மக்களும் பூஞ்சாறு அரசரை வணங்கினார்கள்.
``நாங்க பூசை போடப் போனோம். எங்க குலசாமியே வந்துடுச்சி.” பளியர் பெண்ணொருத்தி மனம் உருகிச் சொன்னாள்.
தேவந்தி பூஞ்சாறு அரசரை வணங்கி நின்றாள். அவள் கண்கள் கலங்கின. கலங்கிய அவளின் கண்களைப் பார்த்து கோட வர்மாவுக்கும் முகம் சோர்ந்தது.
“பளியர் காணியில மூப்பனும் போயிட்டான். மூத்த மகனும் போயிட்டான். அடுத்தவனுக்கு மூப்பன் பட்டம் கட்ட கூப்டாங்க ராஜா. புவனேந்திர ராஜா நீங்களே வந்துட்டீங்க. பளியனுங்களுக்கு முத்தியம்மையோட பூரண அநுகிரகம் கிடைச்சிடுச்சி. நீங்களே மூப்பனுக்குப் பட்டம் கட்டிவிடணும் தம்புரான்.”
“நீதான் வனராஜா. ராஜமன்னான். நீ செய்றதுதான் முறை. என்னோட மூதாதையருங்க உங்களுக்குன்னே பதவி, பொறுப்பு எல்லாம் பிரிச்சுக் கொடுத்துட்டாங்களே. நான் பூஞ்சாறு அரசன்னா, நீ இந்த வனராஜா. உன்னோட பொறுப்புல நான் தலையிடக் கூடாது.”
கோரைப் புற்களைக் கொளுத்தி, மங்கிய வெளிச்சமிருந்த இடங்களில் வெளிச்சம் உண்டாக்கினார்கள் வீரர்கள்.
“நான் இப்போது இரவோடு இரவாகப் பயணித்து வந்ததற்குக் காரணம் அதுவல்ல.”
“நீங்க மங்கலதேவி கோயிலுக்கு வந்து போனதில் இருந்து நிலைகொள்ள முடியலை தம்புரானே… நீங்க கிளம்பிப்போன மறுநாளே நான் உடையானைப் போய்ப் பார்த்தேன். இந்த மேல்மலைக்கும் கண்ணகிக்கும் எந்த ஆபத்தும் வந்துடக் கூடாதுன்னுதான் மன்னான்களோட மொத்த காணிங்களையும் வரவழைச்சு பூசை செய்யுறோம். உங்க அருளால அணை கட்டுறத தடுத்து நிறுத்துறதுக்கு எதுனா வழி பார்த்தீங்களா ராஜா?”
“மொதல்ல தம்புரான் தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கட்டும். சாப்பிடக் கொடுங்க.”
“தம்புரானுக்குக் கஞ்சி பிடிக்குமே, இதோ குடுக்கிறேன்.” அழகி எழுந்தோடினாள்.
“இந்தக் குளிருக்குத் தம்புரானுக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியும், வெலகுங்க…” குப்பான் காணி கஞ்சா இலைகளைக் கசக்கிப் பொடி செய்து அடைத்து வைத்திருந்த இளம்பச்சைக் குருத்து மூங்கில் குழாயின் நுனியை, கனன்று கொண்டிருந்த கோரைப் புல்லின் நுனியில் காட்டிப் பற்ற வைத்தான்.
கடவுளுக்கு முன்னால் வைக்கும் நேர்ச்சைப் பொருள் களைக் கையாளும் பூரணத்து வத்துடன் பூஞ்சாறு அரசரிடம் மூங்கில் குழாயை நீட்டினான். கஞ்சா இலையின் நெடி காற்றில் பரவியது.
கையில் வாங்கிய கோட வர்மா மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, பின் புகையை வெளியேற்றினார். “சிவப் பிரசாதம், சிவப் பிரசாதம்” என்று கண் மயங்கி உச்சரித்தார்.
உடையான் கண்ணசவைப் புரிந்துகொண்ட காணிகளும் பளியர்களும் ஆங்காங்கு இருந்த பாறைகளுக்கும் மரத்தடிகளுக்கும் நகர்ந்தனர்.
“இந்த மலையை விட்டா நமக்குப் போக்கிடம் இல்லையே தம்புரான்? பேரியாறும் கண்ணகி அம்மையும் சபரிமலை சாஸ்தாவும் குடிகொண்டிருக்கிற மலைக்கு ஆபத்துன்னு தேவந்தி வந்து சொன்னவுடனே ஈரக்கொலையே நடுங்கிப்போச்சு. தம்புரானைப் பாத்துச் சொல்லணும்னு எண்ணம். ஆனா அனந்தபுரத்துல இருக்க பெரிய தம்புரானும் வெள்ளைக்காரங்களும் சம்பந்தப்பட்டிருக்காங்கன்னு சொன்னாங்க. தம்புரான் என்ன சொல்வீங்கன்னு தெரியலை. அதான் முத்தியம்மைகிட்டயே முறையிடுவோம்னு இந்த நேர்ச்சையைச் செய்யலாம்னு ஏற்பாடு செஞ்சிருந்தோம். அம்மை உங்களைக் கொண்டுவந்து சேர்த்துட்டா” உடையானின் குரல் நெகிழ்ந்திருந்தது.
“மீனாட்சி என்ன மனசுல நெனைச்சிருக்காளோ? அவளோட பிள்ளைக நாம. நமக்கு இன்னும் என்ன சோதனை வச்சிருக்காளோ?” குழப்பத்துடன் கேட்டார் கோட வர்மா.
“அம்மை என்னைக்குப் பிள்ளைகள சோதிச்சிருக்கா. கல்யாணம் கட்டாம தனியாளா இருக்குற சாஸ்தாதான் கடுமையானவன். அவனுக்குத்தான் நம்ம மேல என்ன கோவம்னு தெரியலை. சாஸ்தாவ கும்பிடுறப்ப நாம அவர அப்பனா நெனைச்சுக் கும்பிடுறோம். காட்டுல மேட்டுல சுத்தறபோது நம்ம கைப்புள்ளையா நெனைச்சு அவர பத்திரமா பாத்துக்கிறோம். பந்தள இளவரசனா அவன் விளையாடற மலைக்கே ஆபத்துன்னா அவன்தானே விழிச்சு வரணும். வரட்டும் பய புள்ள, சும்மா புலிமேல ஏறிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கிறத விட்டு, நம்ம காலத்துலயும் அதிசயம் நடத்திக் காட்டட்டுமே’’ உறுதியாகச் சொன்னான் உடையான்
“தம்புரான், நீங்க இந்த மலைக்கு என்னைக்கு வந்தீங்களோ அந்த நாள்ல இருந்தே உங்க சொல்படியே நடந்துட்டோம். எங்களுக்கு ஒரு வழியைக் காட்டுங்க. கண்ணகி அம்மையும் இந்தக் கோயிலும் இல்லைனா நான் உயிரோட இருக்க மாட்டேன்.” கலங்கினாள் தேவந்தி.
“இந்த ஏசாத்துக் காணியும் இருக்காதே தேவந்தி” உடையானின் குரல் உடைந்தது.
“நாம அச்சப்படுற மாதிரி எதுவும் நடக்காது.”
“என்ன சொல்றீங்க தம்புரான், அணை கட்டுறத நிறுத் திட்டீங்களா?” தேவந்தி ஆச்சரியமாகக் கேட்டாள்.
“அணை கட்டுறதை நிறுத்தக்கூடாது. மீனாட்சி உங்க சொல்லுல வந்துட்டான்னா காரியம் நின்னு போயிடும். அணை கட்டியே ஆகணும். அதைச் சொல்லத்தான் நான் வேகமா வந்தேன்.”
“தம்புரான்… அப்போ எங்க நிலை?” தேவந்தி அதிர்ந்தாள்.
“அணையும் கட்டணும், கண்ணகி அம்மை கோயிலையும் நாம பாதுகாக்கணும். அதுக்குத்தான் வழி பாக்கணும்.”
“தம்புரான், அணையைக் கட்ட விடாம தடுக்கணும்னு அன்னிக்குச் சொன்னீங்களே?”

“பேரியாத்துல அணை கட்டினா அந்தத் தண்ணி நம்ம அம்மை மீனாட்சி குடியிருக்கிற மதுரைக்குத்தான் போகுதாம். கையில அவளத் தூக்கிட்டு தங்களுக்குன்னு ஒரு பூமி தேடி அலைஞ்ச நம்மோட மூதாதைக்கு இந்த மலையையும் காமிச்சுக்கொடுத்து, ஒரு சமஸ்தானத்தையும் உருவாக்கிக் கொடுத்திருக்கான்னா அது அவளோட கருணை. அம்மையின் தேசத்தில் அவளோட ஆட்சியில இருக்க குடிகளெல்லாம் தண்ணி இல்லாம வறட்சியிலும் பஞ்சத்திலும் செத்துக்கிட்டு இருக்கும்போது, அவளோட பிள்ளைகளாகிய நாம ஆட்சி செய்யுற இந்த மலையில இருக்க தண்ணி அவளுக்குத்தானே போகணும்? அதானே தர்மம்? அவளோட அருளால உயிர் பிழைச்சவங்க அவளுக்குத் தண்ணி கொடுக்கிறதுதானே அவளுக்குச் செய்யுற கைம்மாறு” கோட வர்மாவின் குரல் நெகிழ்ந்தது.
“அப்படின்னா அம்மை எங்கள இந்த மலையில இருந்து வெளியேறச் சொல்லி உத்தரவு கொடுத்துட்டாளா?” உடையானின் குரல் துயரத்தில் உடைந்தது.
“உங்களை வெளியேறச் சொல்லவா இந்த நள்ளிரவில் வந்திருக்கேன் உடையான்?”
பதிலற்று அரை இருளில் மின்னிய கோட வர்மாவின் முகத்தைப் பார்த்தனர் உடையானும், தேவந்தியும்.
“தம்புரான், அம்மை மீனாட்சிக்கும் அய்யன் சுந்தரேசனுக்கும் நடந்த கல்யாணத்துக்கு எண்ணூறு கடவுளையும் அழைச்சிக்கிட்டு வந்தது எங்களோட மூதாதை தேவன் அரையன்னு காலம் காலமாச் சொல்லிக்கிட்டிருக்கோம். அத்தனை தேவாதி தேவர்களோட ஆசீர்வாதங்களை வாங்கிக் கொடுத்த எங்களுக்கு, அம்மை கையகல பூமிகூட இல்லாம ஆக்கிடுவாளோ?”
“அணையும் கட்டணும், கண்ணகி கோயிலும் இருக்கணும், ஏசாத்துக் காணிங்களும் இருக்கணும்… அதுக்கு என்ன வழின்னு ரோசனை பண்ணணும்.”
கோட வர்மா மூங்கில் குழாயில் இருந்த கஞ்சாவைப் புகைத்தார்.
“முல்லையாறும் பேரியாறும் ஒண்ணு சேர்ற முல்லைக்கொடி கிட்டதான் அணை கட்டுவாங்கன்னு தேவந்தி சொல்லுது. அங்கதான் வெள்ளைக்காரங்க அடிக்கடி வந்து அளவெடுத்துக்கிட்டுப் போயிருக்காங்களாம். முல்லைக்கொடியில அணை கட்டுனா, சுத்தியிருக்கிற காடெல்லாம் தண்ணி தேங்கும். கண்ணகி கோயில் இருக்க மலையைச் சுத்தி தண்ணி நிரந்தரமா நிக்கும். நம்மோட ஏசாத்துக் காணியும் முழுகிடும்.”
காற்றில் ஈரம் சேர்ந்து குளிர் நடுக்கியது.
உடையானும் புகைக்கத் தொடங்கினார். புகை அவர்களின் துயரத்தை வெளியேற்றும் என்று நம்பி உடையான் புகைத்தார். குளிரை மட்டும் வெளித்தள்ளி, புகை துயரத்தை மிச்சம் வைத்திருந்தது.
“இதுக்கு என்னதான் வழி? எல்லாருமே மருகி மருகி உட்கார்ந்திருந்தா?”
தேவந்தி தயக்கத்துடன் பூஞ்சாறு அரசர் ராம கோட வர்மாவைப் பார்த்துக் கேட்டதுடன், “ராஜா, ஒரு யோசனை சொல்லவா?” என்றாள்.
“சொல்லு தேவந்தி.”
“கொரங்கு வால் மாதிரி காட்டுல ஓடுற ஓடையில்லை பேரியாறு. மேல் மலையில ஆரம்பிச்சு எவ்ளோ நீளத்துக்கு ஓடுது? நம்ம கண்ணகி அம்மை கோயிலையும் ஏசாத்துக் காணிங்களையும் விட்டுட்டு, வேற எங்கனா அணை கட்டுனா என்ன? நமக்கும் பாதிப்பு இருக்காது. அம்மையோட தேசத்துக்குப் போற தண்ணியைத் தடுத்து நிறுத்துன பாவமும் நமக்கு வராது.”
பூஞ்சாறு அரசரின் விழிகள் வியப்பில் இருந்தன.
“ஆயிரம் வருஷமா கண்ணகி அம்மைக்குப் பூசை செய்யிற வம்சத்துல வந்த தேவந்தி நீ. உன் வார்த்தை, சத்தியமா உன் வார்த்தையில்லை. அந்தக் கண்ணகி அம்மையே வந்து அருள்வாக்கு சொல்லியிருக்கா.”
“ஆனா இதை யார்கிட்ட மத்தியசம் சொல்லுறது? நாம சொன்னா கேட்டுப்பாங்களா தம்புரானே?”
“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். தேவந்தி உனக்கு இன்னொன்னும் சொல்லவா? நீ சொல்ற யோசனையைக் கேட்டா, அணை கட்டுற இடம் தள்ளிப் போயிடும், பூஞ்சாறு சமஸ்தானத்துடைய இடத்துல அணை வராது. திருவிதாங்கூர் மேல் எனக்குக் கூடிக்கொண்டு வரும் கசப்பும் போய்விடும். ஒப்பந்தம் போடுபவர்களின் இடத்திலேயே அணையும் வந்துவிடும்” உற்சாகமான கோட வர்மா,
“மூப்பா, உனக்குக் காணிப் பட்டம் கொடுக்கிற நேரம் நல்ல நேரம்டா. தளுகை போட்டு, கொட்டடிக்கச் சொல்லுடா” என்றார்.
- பாயும்