Published:Updated:

நீரதிகாரம் - 27 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம் - 27 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...
பிரீமியம் ஸ்டோரி
நீரதிகாரம் - 27 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

மனத்தில் தோன்றியதையெல்லாம் நினைத்து நினைத்துத் தன்னையே பலவீனமாக்கிக் கொண்டிருந்த மூலம் திருநாள்,

நீரதிகாரம் - 27 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

மனத்தில் தோன்றியதையெல்லாம் நினைத்து நினைத்துத் தன்னையே பலவீனமாக்கிக் கொண்டிருந்த மூலம் திருநாள்,

Published:Updated:
நீரதிகாரம் - 27 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...
பிரீமியம் ஸ்டோரி
நீரதிகாரம் - 27 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“யாரையும் சந்திக்கும் மனநிலையில் இல்லை. என்ன சேதியென்றாலும் அடுத்த வாரம் திருவிதாங்கூர் வந்து சந்திக்கச் சொல்.”

உள்ளே வந்து சேதி சொன்ன வாயில் காப்போனிடம் கோபம் காட்டினார், திருவிதாங்கூர் அரசர் மூலம் திருநாள்.

நீரதிகாரம் - 27 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

அஞ்சுதெங்கு கடற்கரையில் இருந்து கொட்டாரத்துக்கு வந்த பிறகும் மூலம் திருநாளின் மனம் சமநிலைக்குத் திரும்பவில்லை. ‘இப்போதைக்குத் திருமணம் வேண்டாமென தான் எடுத்திருக்கிற முடிவு சரியா? கற்பித்துக்கொண்ட அச்சத்தினால் தன் சொந்த வாழ்வின் மகிழ்ச்சியைப் புறக்கணிக்கிறோமா? தம்புராட்டி ஆனந்தலெட்சுமி சமஸ்தானத்துத் தம்புராட்டிகளின் வழக்கப்படியே குழந்தை பிறந்த சிறிது காலத்தில் இறந்துபோனாள். ஐந்து வருஷங்கள் மறைந்தோடிவிட்டன. அவள் இறந்த வருஷமே, அன்பிற்குரிய மாமா விசாகம் திருநாள், உடனடியாகத் திருமணம் செய்துகொள்ளக் கட்டாயப்படுத்தினார். உயிராய் இருந்த அண்ணன் அஸ்தம் திருநாளின் உடல்நலிவும், அவருடைய திடீர் மறைவும் வாழ்க்கையைச் சூன்யமாக்கியது. தாயும் தந்தையுமற்ற வாழ்வில் எல்லாமுமாக இருந்த அண்ணனின் திடீர் இழப்பு, அகழ்ந்தெடுக்கப்படும் வேர், தன்னைப் பிணைத்திருந்த பூமியை உதறிவிட்டு வருவதுபோல், எல்லாவற்றையும் உதறிவிடச் செய்துவிட்டது.

அஸ்தம் திருநாளே மாமா விசாகம் திருநாளுக்குப் பிறகு சமஸ்தானத்தின் மகாராஜாவாகியிருக்க வேண்டும். காலம் தன்னுடைய நாட்குறிப்பில் என்ன எழுதி வைத்திருக்கிறது என்பதை அறிய முடியவில்லையே? பிரபஞ்சப் பெருவாழ்வு குறித்து காலத்தின் குறிப்புகளைப் புரிந்துகொள்ளும் ஞானம், குறைந்த அறிவுகொண்ட மனிதர்களுக்கு எங்கிருக்கிறது? ஞானம் பெறுவதற்குத்தான் முயல்கிறோம். தேடல், மனமென்னும் கேள்வி யந்திரத்தின் முடிச்சுகளை அவிழ்த்துவிட்டுச் செல்கிறதே தவிர, தீர்வுகளைத் தருவதில்லை.

கார்த்தியாயினி, தம்புராட்டி ஆனந்தலெட்சுமியுடனே இருந்தவள். நாஞ்சில் நாட்டில் நாயர் குடும்பத்தில் பிறந்தவள். குழந்தைப் பிராயம் முதல் தரவாட்டின் தத்துப்பிள்ளையாக வளர்ந்தவள்.

ஆனந்தலெட்சுமி சரீர பலகீனத்துடன் இருந்த சமயங்களில் கார்த்தியாயினி அருகிருந்து அவளைப் பராமரித்தவள். அவள் கண்களில் துலங்கும் இளமையின் குறுகுறுப்பைவிட, வியாதியஸ்தருக்குச் சேவகம் செய்யும் மருத்துவச்சியின் பக்குவம் மேலோங்கி நிற்கும். வயதை மீறிய முதிர்ச்சி, அவள் உருவத்திற்குத் துயரத்தின் சாயலைக் கொடுத்தது. கோயில் பிரகாரத்தின் அழகிய சிற்பத்தினைத் தழுவிநிற்கும் எண்ணெய்ப் பிசுக்கேறிய ஆடையைப்போல், துயரம் அவளை மூடியிருந்தது. அவளின் துயரச் சாயல்தான் என்னைக் கவர்ந்தது. பிறந்ததில் இருந்து துயரச் சுவையை அனுபவிக்கும் ஒருவனுக்குத் துயரச் சாயல் கொண்ட பெண் பிடித்துப்போவதில் விந்தை என்ன இருக்கிறது?

அழகியென்று சொல்லிவிட முடியாது. ஆனால் நடனப்பயிற்சியின்போது அவள் பிடிக்கும் அபிநயங்கள் அவளை வேறொருத்தியாகக் காட்டும். ராக ஆலாபனைகளில் அங்கங்கள் குழைந்து, ராதையாகவும் கோபிகையாகவும் அவள் காட்டும் பாவங்கள் காதலின் குறியீடுகளாகி நிற்கும்.

கார்த்தியாயினியின் சலங்கையொலிக்கும் அவளின் குரலிசைக்கும் வேறுபாடில்லையென்று ராணி லெட்சுமி கொச்சம்மை சொல்லுவார். கார்த்தியின் தந்தை கவிபுனையும் ஆற்றல் கொண்டவர். அவரின் நாநயம், இவளின் கால்களுக்கும் கண்களுக்கும் இடம் பெயர்ந்திருந்தது. இயல்பிலேயே துயரச் சித்திரமான கார்த்தியாயினிக்கு, கலையின் ஆழ்ந்த துயரமும் சேர்ந்து புதியதோர் ரசக்கலவையைத் தந்திருந்தது. கலையின் துயரமா? ஆம், மென்கசப்பாய் உள்ளிறங்கும் துயரம். என் துயரச் சிலையே… கார்த்தி… கார்த்தி… கார்த்தி…’

மூலம் திருநாளின் மனம் அலைபாய்ந்தது. கார்த்தியாயினி நடந்து சென்ற மணல்தடம் மனக்கண்ணில் எழுந்தது.

நீரதிகாரம் - 27 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

‘அவளது ஈரக் கால்தடங்கள் தன்னிடமிருந்து விடைபெறுவதன் அறிகுறியா? திரும்ப வருவேன் என்பதன் நம்பிக்கையா? அவள் இந்த க்ஷணமே வந்துவிடுகிறேன் என்றுதானே சொல்கிறாள்? சந்தோஷத்தின் பொற்குடத்தை, என் காதல் அமிழ்தத்தை வேண்டாம் என்று மறுதலிக்கும் துர்பாக்கியசாலி நான்தானே? இழப்புகளின் ஆழ்கடலுக்குள் கிடப்பவனை மீட்டெடுக்கும் இன்பக்கடலைப் புறங்கையால் விலக்குவதேன்? என் மனவுறுதியைக் குலைக்கும் தீய சக்தி எது? மனம் முழுக்க அவநம்பிக்கைகளால் நிரப்பி என் நம்பிக்கையை நிராதரவாக விட்டவர்கள் யார்?

கார்த்தியாயினி, நீ என் காதல். உன்னை விலகிப் போ என்கிறேன். நீ அருகிருந்தால் வாழ்க்கை சொர்க்கம். தள்ளிப் போ என்கிறேன். உன்னை மணந்தால் போதும், சந்தோஷ தேவதை நம்மை ஆசீர்வதிப்பாள். உன்னை அணைத்துவிடாமல் என் இரு கைகளையும் கட்டிக் கொண்டுள்ளேன். என் தெய்வமே, என் குழப்பங்களைத் தீர்க்கவில்லையாயினும் பரவாயில்லை. நினைவுகளையாவது அழித்துவிடு.’

மனத்தில் தோன்றியதையெல்லாம் நினைத்து நினைத்துத் தன்னையே பலவீனமாக்கிக் கொண்டிருந்த மூலம் திருநாள், கார்த்தியாயினி கிளம்பிச் சென்றதிலிருந்து மனம் வெறிச்சோடி இருந்தார். உட்காரவும் நிற்கவும் முடியாமல் நடந்து சோர்ந்தார்.

கதவை மெல்லத் திறந்த மெய்க்காவலன் தயக்கத்துடன் பார்த்தான். மகாராஜாவின் நிலையைப் பார்த்துப் பேசுவதற்கு பயந்து இருமுறை வெளியேறியவன் இம்முறை மகாராஜாவின் எதிரில் வந்து நின்று வணங்கினான். எடுத்து வைக்கும் அடிகள் பிறழ நடந்துகொண்டிருந்த மகாராஜா, தன் எதிரில் நிற்கும் காவலனைப் பார்த்து நடையை நிறுத்தினார்.

“மெட்ராஸ் பிரசிடென்சியின் இன்ஜினீயர் பென்னி குக் தங்களைக் காணக் காத்துக் கொண்டிருக்கிறார் மகாராஜா.”

“யாரையும் சந்திக்கும் மனநிலையில் இல்லை என்றேனே?” எரிச்சல் வெளிப்பட்டது குரலில்.

“குழந்தைகளுடனும் அவர்தம் மனைவியுடனும் நீண்ட நேரமாகக் காத்திருக்கிறார் என்று தாசில்தார் சொல்லச் சொன்னார்.”

மூலம் திருநாள் நடையை நிறுத்தி, காவலனிடம் கேட்டார்.

“என்ன சொன்னார் தாசில்தார்?”

“பென்னி குக் பேரியாறு அணைத் திட்டத்தினுடைய இன்ஜினீயராம். உங்களைப் பார்த்துப் பேச வந்திருக்கிறார் என்றார் மகாராஜா.”

“திவான் ஊரில் இல்லையே? வந்தவுடன் திவானிடம் பேசச் சொல்லுங்கள்.”

மெய்க்காவலன் அமைதியாக நின்றான். என்ன என்பதுபோல் பார்த்தார் மகாராஜா.

“பென்னி குக் மனைவி, மகாராஜாவைத்தான் பார்க்க வேண்டும், அவரைப் பார்க்காமல் போக மாட்டோம் என்கிறாராம்.”

“எத்தனை முறை சொல்வது? பைத்தியமா உனக்கு?”

“மகாராஜா கோபம் கொள்ளக்கூடாது. கார்த்தியாயினி கொச்சம்மைக்கு வேண்டிய பாதிரியார் உடன் வந்திருக்கிறார். கொச்சம்மைக்கு இங்கிலீஷ் சொல்லிக்கொடுக்கும் பாதிரியின் அண்ணன்தான் இவர். சமஸ்தானத்தின் கிடங்கில் மிளகு ஏஜென்டாக இருப்பவர்.”

கார்த்தியாயினியின் பெயரைச் சொன்னவுடன் மூலம் திருநாள் நிதானித்தார். அவளின் பெயரைச் சொல்வதாலேயே சந்திக்க மறுக்கலாமா என்ற கோபம் தோன்றியது. அவளுக்கு வேண்டியவரைச் சந்தித்தால், அவளுக்குச் சேதி செல்லும். அவளையறிந்த ஒருவருடன் பேசுவது அவள் நினைவை அதிகப்படுத்தும். துயரத்தின் தீச்சுவாலையைப் பற்ற வைப்பதுடன் எரிநெய்யை ஊற்றித் தீயைத் தழைக்கச் செய்யும் செயல். நம் தசை கருகும் பச்சை வாசத்தை உணர ஒரு வாய்ப்பு. எல்லா ஆயுதங்களின் கூர்மையையும் தனதாக்கிக் கொண்டு கொல்லும் பிரிவுத் துயர், காதலைக் கொடூர விலங்காக்கி நிறுத்துகிறது. நினைவுகளுக்குள் மூழ்கிய மூலம் திருநாளுக்குத் தன் முன்னால் நிற்கும் மெய்க்காவலனின் நினைவு மறந்துபோனது.

உள்ளேயே நிற்பதா, வெளியேறுவதா என்ற குழப்பத்தில் மெய்க்காவலன் தயங்கி நின்றான். உள்ளே சென்ற காவலன் தகவல் சொல்லி மீளாமல் என்ன செய்கிறான் என்று உள்ளே வந்த மூலம் திருநாளின் உதவியாளன், சூழலைப் பார்த்தவுடன் நிலைமையை யூகித்தான்.

“மகாராஜா...” மெய்க்காவலனைவிட தனக்கு உரிமை அதிகம் என்பதைக் காட்ட, மெதுவான குரலில் அழைத்தான்.

“வரச்சொல்...” என்றார் மகாராஜா.

மூன்று குழந்தைகளையும் மனைவியையும் உடன் அழைத்து வந்து, தன் முன்னால் அமர்ந்திருக்கும் ராயல் இன்ஜினீயர் பென்னி குக்கை வியப்புடன் பார்த்தார் மகாராஜா. அரை நாழிகைக்குமுன் அவர் மனத்தில் இருந்த அழுத்தம் குறைந்திருந்தது.

“குழந்தைகளுடன் சந்திக்க வந்திருக்கிறீர்கள், காரணம்?”

பென்னி பதில் சொல்வதற்குள் ஜார்ஜியானா பேசினாள்.

“யுவர் ஹைனெஸ் முதலில் எங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஹிஸ் எக்ஸலென்ஸி திருவிதாங்கூர் ரெசிடென்ட் அவர்களின் அனுமதி இல்லாமலும், திவான் அவர்களிடம் தகவல் சொல்லாமலும் நாங்கள் வருகை தந்ததற்கு வருந்துகிறோம். சம்பிரதாயமான அறிமுகம் வேண்டுமென்பதற்காகச் சொல்கிறேன். இவர் என் கணவர் லெப்டினென்ட் பென்னி குக். பொதுப்பணித்துறையில் பணி செய்கிறார். பெரியாறு அணை கட்டும் திட்டத்தின் சிறப்பு அலுவலர். நான் ஜார்ஜியானா...” எனத் தன்னையும் குழந்தைகளையும் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தினாள். அவர்களின் மூத்த மகள் டோரா மார்கரெட், மகாராஜாவைப் பார்த்துச் சிரித்தது. குழந்தை சிரித்ததை மகாராஜா கவனிக்கவில்லை. பெரியாறு அணை பெயரைக் கேட்டவுடன் அவர் முகத்தில் சிந்தனையோடியது.

“சொல்லுங்கள், என்ன விஷயம்?”

ஜார்ஜியானா பென்னியைப் பார்த்தாள்.

“யுவர் எக்ஸலென்ஸி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மகாராஜாவாகத் தாங்கள் பதவியேற்றதற்கு என் வாழ்த்துகள்.”

“நன்றி மிஸ்டர் பென்னி. அஞ்சுதெங்குவிற்கு எப்படி வந்தீர்கள்?”

“பாதிரியார் ஒருவர் அழைத்து வந்தார்.”

“பாதிரியாரை எப்படித் தெரியும்?”

“கொடைக்கானலில் ஏசு சபை பாதிரியார் ஒருவர் மூலம் இவர் அறிமுகமாகி உதவ முன்வந்தார்.”

“என்ன உதவி?”

பென்னி, தனக்குள் வந்த தயக்கத்தை உதறினார். இருக்கையின் முன் நகர்ந்து உட்கார்ந்தார்.

“யுவர் எக்ஸலென்ஸி, லண்டனில் இருக்கும் இந்தியச் செயலர் பெரியாறு அணைத் திட்டத்தினை ஏற்று, அணை கட்ட அனுமதி கொடுத்து, அந்தப் பணிக்காகவே என்னை நியமித்து மூன்று வருஷங்கள் முடிந்துவிட்டன. மெட்ராஸ் பிரசிடென்சியின் பஞ்சகாலத்தின் இழப்புகளை, குறிப்பாக மதுரா டிஸ்ட்ரிக்ட்டின் வறட்சியைக் கருத்தில் கொண்டுதான், பிரிட்டிஷ் பேரரசி, நீர்வளத்தைப் பெருக்க நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி தந்திருக்கிறார்...”

“நீங்கள் சொல்வதெல்லாம் நான் அறிந்தவைதான் மிஸ்டர் பென்னி...”

“யுவர் எக்ஸலென்ஸி அறிந்திருக்கிறீர்கள் எனில், என் முயற்சி இன்னும் எளிதாகிவிடும். ஒதுக்கப்பட்ட நிதி, குறிப்பிட்ட காலத்திற்குள் செலவு செய்யப்பட வேண்டும். யுவர் எக்ஸலென்ஸி அறியாத சர்க்கார் காரியமில்லை. விதிகளுமில்லை. அணை கட்டும் பணி உடனடியாகத் தொடங்க வேண்டும். அதற்கு சமஸ்தானம் இடம் கொடுக்க வேண்டும்.”

“திவான் ராமய்யங்கார் வரட்டும். உங்களின் கோரிக்கை குறித்துப் பேசச் சொல்கிறேன்.”

பென்னியும் ஜார்ஜியானாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். தங்களின் பதற்றம் எந்தவிதத்திலும் மகாராஜாவின் கவனத்தைத் திருப்பவில்லையே என்ற கலக்கம் அவர்கள் பார்வையில் இருந்தது. கொட்டாரத்தில் காத்திருக்கும்போதே, ‘மகாராஜாவைச் சந்திக்க இது சரியான தருணமல்ல; ஒன்றிரண்டு நாள் காத்திருங்கள், சூழல் சரியான பிறகு சந்திக்கலாம்’ என்றார் பாதிரியார். கார்த்தியாயினி கொச்சம்மையைச் சந்திக்க நேரம் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டதற்கு, இருவரிடத்திலுமே அணுக்கமான சூழல் இல்லையென்பதை அவர் நாசூக்காகத் தெரிவித்தார். மூலம் திருநாளை கடற்கரையில் சந்தித்துப் பேசிய பின், கண்கள் கலங்கிய நிலையில் கார்த்தியாயினி கொட்டாரத்துக்குள் சென்றதாக, காவலுக்கு நின்றிருந்தவர்கள் ரகசியக் குரலில் பேசிக் கொண்டிருந்ததைப் பாதிரி கேட்டிருந்தார். தவறான நேரத்தில் சந்திக்க வந்துவிட்டோமோ என்று இருவரின் விழிகளும் தங்களுக்குள் கேள்விகள் கேட்டன. பென்னியின் முகம் சோர்வது கண்டு, ஜார்ஜியானா உறுதியானாள்.

“யுவர் ஹைனெஸ், திவானும் ரெசிடென்டும் பென்னியும் சமஸ்தானத்தின் மூத்த அதிகாரிகளும் பலமுறை பேசிவிட்டார்கள். திருவிதாங்கூரின் கோரிக்கைகள் மேற்கென்றால், மெட்ராஸ் பிரசிடென்ஸி கிழக்கில் நிற்கிறது. சமஸ்தானத்தின் கோரிக்கைகள் குறித்தோ, அதற்கு கவர்னரின் மறுப்பு குறித்தோ நாங்கள் பேச வரவில்லை. இது மற்ற அரசுத் திட்டங்களைப்போல் என்றால் பென்னி, என்றோ அதிலிருந்து விலகியிருப்பார். ஹிஸ் எக்ஸலென்ஸி ரெசிடென்ட் ஹானிங்டனும் இதில் அக்கறை காட்டியிருக்க மாட்டார். அக்கறையுள்ள அதிகாரிகளான இவர்கள் மதுரா டிஸ்ட்ரிக் மக்களுக்காகத்தான் கவலைப்படு கிறார்கள்.”

சற்றே வளர்ந்த குழந்தைபோல் இருக்கும் ஜார்ஜியானாவை வியப்புடன் பார்த்தார் மகாராஜா.

“திருவிதாங்கூருக்கும் மதுரா டிஸ்ட்ரிக்ட்டுக்கும் இடையில் ஒரு மலை, ஒரே ஒரு மலைதான் இருக்கிறது மகாராஜா. அந்த மலைதான் உங்கள் சமஸ்தானத்தைச் சொர்க்க பூமியாகவும், மதுரா டிஸ்ட்ரிக்ட்டை வறட்சி நிலமாகவும் வைத்திருக்கிறது. திருவிதாங்கூர் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும்போது மதுரா மக்கள் நீரின்றிச் சாகிறார்கள். நதிகளைப் பிறப்பித்து உங்களுக்கு அனுப்பும் அதே மலைதான், எதிர்ப்பக்கம் வெயிலை ஊற்றிக் கருக்குகிறது. உங்களுக்கு மழை, அவர்களுக்கு வெயில். இருவருக்கும் பொதுவான மலை உங்களுக்குக் காப்பரண். அவர்களுக்குக் காளவாசல். பென்னியைப்போல் நானும் பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவள்தான். மதுரா பற்றி அறிவேன். பென்னிக்குத் தமிழ் கற்றுக்கொடுத்த வித்வான் ‘தமிழின் வரலாறே மதுராவின் வரலாற்றில் இருந்துதான் ஆரம்பிக்கிறது’ என்று மதுராவின் பெருமைகளைச் சொல்லுவார். பண்பாட்டில் வளமான மதுரையை முதன்முதலில் நேரில் பார்த்து அதிர்ந்துபோனேன். மாவட்டம் முழுக்க மலை. ஆனால் மழைத்தாவரங்கள் இல்லாத பாறைகளாலான வறண்ட மலை. வைகை, மழையை நம்பிய நதி. பிரியா நட்பைப்போல் விலகவே விலகாத பஞ்சம். சொல்லி வைத்ததுபோல் இரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை ஊரில் இருக்கிற பயிர் பச்சைகளைச் சுரண்டி எடுத்துச் சென்றுவிடுகிறது வறட்சி. சர்க்கார் நிதியை ஒதுக்கி, மக்களைக் கொஞ்சம் தேற்றுவதற்குள் அடுத்த பஞ்சம் வந்து நின்றுவிடுகிறது. வெயிலில் பயிர் விளையும் என்றால்தான் அந்த ஊர் மக்கள் விவசாயம் செய்ய முடியுமோ என்னவோ?”

ஜார்ஜியானாவுக்கு பேச்சை எங்கு நிறுத்துவதென்று தெரியவில்லை. மகாராஜா, ஜார்ஜியானாவின் உள்ளத்திலிருந்து பொங்கி வரும் பேச்சை ஆழ்ந்து கவனித்தார். ஜார்ஜியானா உணர்ச்சிவசப்பட்டுப் பேசியதில், அவள் மடியில் இருந்த கைக்குழந்தை எடித் வீறிட்டு அழுதது. அதன் அழுகை, அறையின் இறுக்கத்தைத் தளர்த்தியது.

“தங்களுடைய மலையில் உற்பத்தியாகும் நதிநீரே தங்களுக்கு உதவாமல் போகும் துர்பாக்கியசாலிகள் மதுரா மக்கள். இயற்கையின் பாரபட்சத்தால் அவதிப்படும் மக்களுக்குப் பென்னி நிவாரணம் கொடுக்க விரும்புகிறார். அதற்கு மகாராஜாவின் மாபெரும் கருணை தேவைப்படுகிறது.”

“திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நலன்தான் பிரதானம். இதில் என் கருணை என்ன இருக்கிறது?”

“யுவர் ஹைனெஸ், நாங்கள் வேண்டுவதெல்லாம் வீணாகப் போய்க் கடலில் கலக்கும் நீரைத்தான்.”

“வீணான நீரென்று எப்படிச் சொல்ல முடியும்? வெள்ளம் புரண்டோடினால்தானே மண்ணுக்கு வளம்?”

“உண்மைதான் யுவர் ஹைனெஸ், அணை வழியாகத் திருப்பிவிடப்போவது, பெரியாறு ஆற்றின் பத்து சதவிகிதம் தண்ணீர்தான்.”

“நீரை அளந்தா எடுத்துக்கொள்வீர்கள்? அதுவும் புரண்டோடும் வெள்ளத்தை?”

“ஆம் மகாராஜா… நீர் வெளியேறுவதை அளக்க முடியும்” என்ற பென்னி, தொடர்ந்தார்.

“பெரியாறு அணைக் கட்டுமானத்தில் உண்மையான பிரச்சினையே, மனிதர்கள் வாழமுடியாத அந்த அடர் காட்டில் தங்கி, அணை கட்டுவதும், பெரியாற்றின் போக்கை திசை திருப்புவதும்தான். பிரிட்டிஷ் இந்தியா ஆளும் நாடுகளில் வேறெங்கும் பிரிட்டிஷ் ராயல் இன்ஜினீயர்கள் நதியைத் திருப்ப முயன்றதில்லை. முதன்முறையாகப் பெரியாறு அணையில், மதுரா மக்களுக்காக முயற்சி செய்கிறோம். அணை கட்டும் இடத்திற்கான ஒப்பந்தத்திற்கே மூன்றாண்டுகளைச் செலவழித்துவிட்டோம். உண்மையான சவாலே எங்களுக்கு அடர்ந்த மேற்கு மலைத் தொடரில்தான் காத்திருக்கிறது. மகாராஜா அனுமதி கொடுத்தால் விரைந்து வேலைகளைத் தொடங்கிவிடுவோம்.”

“இத்தனை வருஷங்கள் காத்திருந்ததற்குப் பதிலாக மெட்ராஸ் பிரசிடென்சி, மதுரையில் ஏரி, குட்டை, கால்வாய்களை அதிகப்படுத்தியிருக்கலாமே? புதிதாக ஊருக்கு இரண்டு குளங்களை வெட்டியிருக்கலாம்.”

“மழை பெய்தால்தானே குளத்திற்கும் கால்வாய்க்கும் தண்ணீர் வரும் யுவர் எக்ஸலென்ஸி? பருவமழை வருஷா வருஷம் குறைந்துதானே வருகிறது? மதுராவில் பேரணை, சிற்றணை உட்பட ஏராளமான அணைகளும் நீர்த் தேக்கங்களும் இருக்கின்றன. எல்லாமே காய்ந்து கிடக்கின்றன. மேற்கு மலைத் தொடரில் உற்பத்தியாகும் நதியில் வருஷம் முழுக்க வெள்ளம் பெருக்கெடுத்தோடுவது பெரியாறுதான். பெரியாற்றின் போக்கைத் திருப்பினால் கிடைக்கும் தண்ணீர், இரண்டரை மில்லியன் மக்களின் உயிரைக் காக்கும் யுவர் எக்ஸலென்ஸி.”

நீரதிகாரம் - 27 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் மிஸ்டர் பென்னி. நாங்கள் பிரிட்டிஷ் சர்க்காருக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்லர். எங்கள் சமஸ்தானத்தின் விதிகளுக்கு உட்பட்டுத்தான் எந்த முடிவும் எடுக்க முடியும். திவான் வர வேண்டும். மராமத்து செகரட்டரி, எங்கள் இன்ஜினீயர்கள் இருக்க வேண்டும். ஏற்கெனவே மகாராஜா விசாகம் திருநாள் அணை கட்ட இடம் கொடுப்பதற்குச் சில நிபந்தனைகள் சொல்லியிருந்தார். எல்லாவற்றையும் சிந்தித்துதான் முடிவெடுக்க வேண்டும்.”

“யுவர் ஹைனெஸ், அணை கட்ட இடம் கொடுப்பதில் எந்த இழப்பும் இல்லை. நீங்கள் கடவுளிடம் உங்கள் தேசத்தை ஒப்படைத்து, அவரின் சேவகராக இருக்கிறீர்கள். மக்களின் நலத்தில் உங்களுக்கு அக்கறை இருக்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்து மக்களாக இருந்தால் என்ன, மதுரா டிஸ்ட்ரிக்ட் மக்களாக இருந்தால் என்ன, மக்கள் மக்கள்தானே?”

“நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன். உங்கள் மதுரை மக்கள் என்னை மகாராஜாவாக ஏற்றுக்கொள்வார்களா மிஸஸ் பென்னி?” மகாராஜா புன்னகைத்தார்.

ஜார்ஜியானா, மகாராஜாவின் கேள்வியில் திகைத்தாள்.

“இந்தக் கேள்விக்கு நான் நேரடியான பதிலளிக்க முடியாது யுவர் ஹைனெஸ். ஆனால் ஒன்று மட்டும் சொல்ல முடியும். நீங்கள் தண்ணீர் கொடுத்தால் தலைமுறை தலைமுறைக்கும் உங்களை மகாராஜாவாக நினைக்க மாட்டார்கள்; அவர்களின் குலதெய்வமாக நினைப்பார்கள் யுவர் ஹைனெஸ்.”

மகாராஜா வியப்புடன் ஜார்ஜியானாவைப் பார்க்க, பென்னியும் வியந்து பார்த்தார். எடித் அழுகையை நிறுத்தி, ஜார்ஜியானாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டது.

“மைடியர் லேடி, இளம் வயதில் அதிக முதிர்ச்சியுடன் இருக்கிறீர்கள்.”

“யுவர் ஹைனெஸ், நீங்களும் இளம் வயதில்தானே இரண்டரை மில்லியன் மக்களுக்கு மகாராஜாவாகியிருக்கிறீர்கள்?”

“எதிரிருப்பவரின் மனப்போக்கு அறிந்து பேசும் நுட்பம் கற்றிருக்கிறீர்கள். சந்தோஷம். உங்கள் கோரிக்கையை திவானிடம் சொல்லி, சமஸ்தானத்தின் அதிகாரிகளுடன் பேசி, உடன் நிறைவேற்றச் சொல்கிறேன்.”

“மன்னிக்க வேண்டும் யுவர் ஹைனெஸ். மீண்டும் பேச்சுவார்த்தை, ஆலோசனை என்பதெல்லாம் எங்களுக்கு அவநம்பிக்கையைக் கொடுக்கிறது. தயவுசெய்து இப்போதே நீங்கள் உங்கள் சம்மதத்தைத் தெரிவிக்க வேண்டும். அதிக உரிமை எடுத்துக்கொள்வதாக நினைக்க வேண்டாம். சுயகாரியங்கள், நியாயமற்ற கோரிக்கைகள் என்றால்தான் தயங்க வேண்டும். ஒரு பிராந்தியத்தின் எதிர்காலம் சார்ந்த கோரிக்கை என்பதால் யுவர் ஹைனெஸிடம் உரிமையுடன் கேட்கலாம் என்ற துணிவில் கேட்கிறேன்.”

மகாராஜா பென்னியைப் பார்த்தார்.

“எனக்கு அவகாசம் வேண்டாமா மிஸ்டர் பென்னி?”

“யுவர் எக்ஸலென்ஸி, திருவிதாங்கூர் ஏற்கெனவே அணைகட்ட இடம் தருவதாக ஒப்புக்கொண்டது. அதன்பேரில்தான் எல்லா ஏற்பாடுகளும் நடந்துவருகின்றன. எழுத்துபூர்வமான ஒப்பந்தம் கையெழுத்தாவதில்தான் சிக்கல் நீடிக்கிறது. சமஸ்தானம் வைத்துள்ள கோரிக்கைகளை மெட்ராஸ் கவர்னர் ஏற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்களால் அப்படியே தடைபட்டு நிற்கிறது.”

“ஆமாம், எங்கள் இடத்தைச் சும்மா கொடுக்க முடியாதல்லவா?”

பென்னி அமைதியாக இருந்தார்.

“யுவர் ஹைனெஸ், நிலத்திற்கான மொத்த மதிப்பையோ, வருஷக் குத்தகையையோ பெற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.”

பென்னியின் மடியில் உட்கார்ந்திருந்த லூசி இறங்கிப் போகப் பார்த்தது. பென்னி மென்மையாகக் குழந்தையின் கைகளைப் பிடித்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டார்.

“சின்னக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, எங்கிருந்து பயணப்பட்டு வந்திருக்கிறீர்கள்?”

“கொடைக்கானலிலிருந்து வருகிறோம் யுவர் எக்ஸலென்ஸி.”

“உங்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் மிஸ்டர் பென்னி?”

“பறவைகள், விலங்குகள், தாவரங்களுக்குக்கூட கடவுள் அவற்றுக்கான உணவைக் கொடுத்திருக்கிறார். மனிதர்கள் உணவின்றியும் நீரின்றியும் சாவது மனித குலத்திற்கே விரோதமான செயல் அல்லவா யுவர் எக்ஸலென்ஸி? அதை எண்ணியே எப்படியாவது இந்தத் திட்டத்தை நிறைவேற்றியாக வேண்டும் என விடாப்பிடியாக உள்ளேன். மனிதர்களே சென்றறியாத காட்டில் அணை கட்டிவிட முடியுமா என்பது இன்னொரு சவால். கடவுளின் திருவுளம் எப்படி இருக்கிறதோ? எல்லைகளைக் கடந்து, மனிதகுலத்தின் நலனைப் பிரதானமாக நினைக்கும் அரசியல் நடவடிக்கைக்கு மகாராஜா முன்மாதிரியாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.”

மகாராஜா மன ஓர்மையுடன் கவனித்தார்.

“யுவர் ஹைனெஸ், இரண்டு சர்க்கார் சம்பந்தப்பட்ட விஷயம். பென்னியும் நானும் நேரடியாக உங்களைச் சந்திக்க வந்தது மெட்ராஸ் கவர்னருக்குத் தெரிந்தால் பென்னி பணிநீக்கம் செய்யப்படலாம். லண்டனில் அவர்மேல் விசாரணை நடத்தப்படலாம். நாங்கள் இருவரும் துணிந்து வர ஒரே காரணம்தான். பஞ்சத்தாலும் வறட்சியாலும் வருஷா வருஷம் மக்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறுவதையும், உணவில்லாமல் செத்துப்போவதையும் தடுக்க வேண்டும். இந்தியாவில் உள்ள நதிகளெல்லாம் பல நூறு மைல்களுக்குப் பாய்ந்து மக்களுக்கு நன்மையைக் கொடுத்துவிட்டுத்தான் கடலில் கலக்கின்றன. பெரியாறு ஒரு காட்டாறு. மலையிறங்கி வரும் அதன் வேகம் குறைவதற்குள்ளாகவே கடலில் கலந்துவிடுகிறது. பெரியாற்றின் முழுப் பயனே இல்லாமல் போகிறது. மெட்ராஸ் பிரசிடென்சியில் காவிரி நதிக்கென்று ஒரு நாகரிகம் இருக்கிறது. தாமிரபரணிக்கும் பாலாற்றங்கரைக்கும்கூடத் தனித்த நாகரிகம் இருக்கிறது. பெரியாற்று நீர், மதுராவிற்குள் வர வேண்டும். பெரியாற்றங்கரை நாகரிகம் ஒன்று உருவாக வேண்டும். அதற்கு மகாராஜா மனமிறங்க வேண்டும்.”

`இவ்வளவு பேசுகிறாளே’ என்று ஜார்ஜியானாவைப் பார்த்து பென்னிக்கு வியப்பாக இருந்தது.

மூலம் திருநாள் தன்னெதிரில் அரை விழிப்பில் தத்தளித்தபடி இருக்கும் மூன்று குழந்தைகளைப் பார்த்தார். ரோஜா இதழின்மேல் ஒளிரும் பனித்துளிகளைப் போல், தூய்மையான அழகுடன் இருந்த குழந்தைகளின் இருப்பு, பத்மநாபரின் முன்னால் மனம் நிச்சலமின்றி நிற்கும் தருணத்தை ஒத்திருந்தது. உடனே கார்த்தியாயினி ஓவியத்தில் வரைந்திருந்த குழந்தைகள் நினைவுக்கு வந்தார்கள். வற்றித் தொங்கிய மார்புக் காம்பைக் கவ்விப் பிடிக்க முடியாமல் துவண்டு விழும் குழந்தைகளின் ஓவியங்கள். மூலம் திருநாளுக்கு ஒரு கணம் மனம் அதிர்ந்தது.

“நீங்கள் உணவருந்தி ஓய்வெடுங்கள். விரைவில் அழைக்கிறேன்.” சட்டென்று மகாராஜா விடைகொடுத்ததில் திடுக்கிட்டனர் பென்னியும் ஜார்ஜியானாவும்.

வெண்கல மணியின் ஒலி வெளியில் கேட்டதில் மராமத்து தாசில்தார் உள்ளே வந்தார்.

“இவர்கள் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்” என்றார் மகாராஜா.

மனமின்றி எழுந்து நின்ற இருவரையும் பார்த்த மகாராஜா, “உங்கள் நோக்கங்களுக்காகப் பச்சிளம் குழந்தைகளைத் தொந்தரவு செய்யாதீர்கள். பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி நிறுத்தியவர், “குழந்தைகள் முன்னால் கோரிக்கைகளை நிராகரிக்கும் அளவுக்கு என் மனம் கடினமாகவில்லை” என்றார்.

“யுவர் எக்ஸலென்ஸி…” பென்னியும் ஜார்ஜியானாவும் மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர்.

திருவிதாங்கூரிலிருந்து கடற்கரை ஓரமாகவே பயணம் செய்த ஹானிங்டனின் கோச் வண்டி, அஞ்சுதெங்குக்கு ஒரு மைல் முன்பாக வந்து கொண்டிருந்தது. குருவாயிக்கும் ஹானிங்டனுக்கும் வழிக்காட்சிகளை வேடிக்கை பார்ப்பது மிகவும் பிடிக்கும். கடல் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு வந்தவர்களுக்குக் கடல் தன் இயல்பில் இல்லை என்பது புலப்பட்டது.

“ஹனி, கடல் ரொம்பக் கொந்தளிப்பா இருக்கிற மாதிரியில்ல?”

“யெஸ் டியர், நானும் அதான் யோசிக்கிறேன். மழைக்காலம் ஏறக்குறைய முடிஞ்சிடுச்சே? அது தெரியாம கடல் எதுக்கு முறுக்கி முறுக்கிக் கோபம் காட்டுது?”

திரைச்சீலைகளை அகற்றி, வானத்தைப் பார்த்தார் ஹானிங்டன். வானம் இருந்த இடம் காணாமல்போய், கருங்கடல் ஆகாசத்திற்குச் சென்றதுபோல் இருந்தது.

“திருவிதாங்கூருக்கு மழை என்ன அதிசயமா, அடுத்த வீட்டுக்காரரைப்போல் நினைத்தால் நினைத்த நேரத்தில் வந்துவிடுமே?” ஹானிங்டன்.

“ஆனால் வழக்கமான மூட்டமாக இல்லையே ஹனி? வானம் கறுக்கிட்டு இருக்கிறதப் பார்த்தா அசாதாரணமா இருக்கு.”

ஹானிங்டனும் கறுத்து இறங்கும் மழை மேகத்தை அச்சத்துடன் பார்த்தார்.

கோழிக்குஞ்சைக் கவ்வ வரும் பருந்தினைப்போல், இமைக்கும் நேரத்திற்குள் புரண்ட நான்கடி உயர வெள்ளம் கோச் வண்டியைத் தொடர்ந்தது.

உயிர்காக்கும் தண்ணீர், உயிர்கொல்லும் உன்மத்தம் கொண்ட ஆழிப் பெருவெள்ளமாய்ப் பின்தொடர்ந்தது.

- பாயும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism