
குதிரை இழுக்க, வெள்ளம் இழுக்க, கோச் வண்டியின் தேக்குப் பலகை தனித்தனியாக உடைந்துபோனது. பின்னால் உட்கார்ந்திருந்த குருவாயி உடைந்த பலகையுடன் சேர்ந்து வெள்ளத்தில் விழுந்தாள்
பாறைகளை உருட்டித் தள்ளியது; காற்றை ஏவி மரங்களின் கிளைகளை ஒடித்தெறிந்தது; வளைந்துகொடுக்காத மரங்களின் வேர்களை, நுனிவரை அகழ்ந்தெறிந்தது; மேய்ச்சல் காடுகளில் மேய்ந்துகொண்டிருந்த கால்நடைகளைக் கருணையற்று அள்ளியெடுத்துக்கொண்டது.
வெள்ளம் சூழ்ந்த அரை நாழிகையில் தங்கள் தலை மூழ்கும் தண்ணீரில் ஆடுகள் நீர் குடித்து, மூச்சுத் திணறி சுவாசம் நிறுத்தி, நீருக்குள் மூழ்கின. உயிர் பிழைத்துவிடும் தத்தளிப்பில் கழுத்தை மேலுயர்த்திக்கொண்ட காளைகளும் பசுக்களும் வெள்ளத்தின் வேகத்தில் இழுபட்டோடின. மாடுகளின் கண்களில் தெரிந்த மிரட்சி, மரணத்தின் புன்னகையாக விரிந்தது.
தன் கீழிருக்கும் உயிருள்ள, உயிரற்றவற்றை இழுத்துச் செல்லும் வன்மத்துடன் வாமனபுரம் ஆற்றின் வெள்ளம் புரண்டோடி வந்தது. மரம் நிலையாகத்தான் இருக்கிறது. இடம் பெயர்ந்து உயிரினங்களை அச்சுறுத்துவதில்லை. விலங்குகள் மனிதர்களைத் தேடிவந்து தாக்குவதில்லை. பால்வீதியில் சுழலும் நட்சத்திரங்களும் நிலவும் சூரியனும் தன் நிலைமாறிச் சுழன்றதில்லை. ஜடத்தில் இருந்து உயிர்த்தெழுந்த ஜீவன் உயிர் தரிக்க கர்த்தாவாய் இருக்கும் வடிவற்ற நீர் மட்டும் எப்படியெல்லாம் அச்சுறுத்துகிறது? எத்தனை வடிவமெடுக்கிறது? சிறு பிள்ளையும் கையள்ளிப் பருகும் ஊற்று நீர், கால்களில் அளைந்துவிடக்கூடிய நீரோடைகள், நீந்தத் தெரிந்தவர்கள் குதூகலத்துடன் மூழ்கித் திளைக்கும் பொய்கை, தடாகம், கடலோடு கலக்கும் கழிமுகம், முகத்துவாரம் என வடிவற்றிருப்பதாலேயே பல வடிவம் கொள்கிறது. பழகிய யானையைப்போல் உடனிருந்து, வெள்ளமாய்ப் பெருக்கெடுத்தோடும்போது தனித்த காட்டின் மூர்க்கம் கொண்ட யானையாய் மாறி, கிடைப்பதையெல்லாம் துவம்சம் செய்கிறது. இடம் பெயரக்கூடியதாய் இருப்பதனாலேயே நீருக்கு எவ்வளவு வலிமை?
அறிகுறிகள் காட்டாமல் திடீரென்று தொடங்கிய மழையில் நிலத்தின் இயக்கம் ஸ்தம்பித்தது. அஞ்சுதெங்குவின் அழகான காயலை நீர் மூழ்கடித்தது. தரையிருந்த கடல் விண்ணுக்குச் சென்று திரும்புகிறதோ என்று அஞ்சும்படி பேராழியாய் மழை மண்ணிலிறங்கியது. மனிதன் பலவீனமான உயிரினம் என்பதை மழை வெள்ளம் ஏளனத்துடன் சொல்லிச் சென்றது.
ரெசிடென்ட் ஹானிங்டனின் குதிரை டாமினேஷன், தன் நுண்ணுணர்வில் பெருமழையை உணர்ந்து மின்னலென விரைந்தது. ஹானிங்டனும் குருவாயியும் வெள்ளத்தின் உக்கிரத்தைப் பார்த்து அதிர்ந்தார்கள். குருவாயி ஹானிங்டனின் கைகளைக் கோத்துக்கொண்டாள்.
“அஞ்சுதெங்கு போயிட முடியுமா? வழியில் நின்று போகலாமே?” குருவாயி சாரதியிடம் கேட்டாள். சுளீர் சுளீரென்று முகத்திலும் முதுகிலும் அறையும் மழையுடன் போராடிக் கொண்டிருந்தவனுக்கு குருவாயி சொன்னது கேட்கவில்லை. எப்படியும் அஞ்சுதெங்கு சென்றுவிட வேண்டும் என்று சவுக்கைக் குதிரையின்மீது சொடுக்கினான்.
குதிரையின் வேகத்தை வெள்ளம் முந்தியது. கோச் வண்டி வெள்ளத்தில் இழுபட, குதிரை திணறியது. இருகரை அணைத்தோடும் ஆற்று வெள்ளத்தின் முன்னால் குதிரையின் வேகம் எதிர்கொண்டு நிற்க முடியுமா? குதிரை, வண்டியுடன் நீரில் மிதக்கத் தொடங்கியது. முன்னால் சென்ற வீரர்கள் ஏற்கெனவே வெள்ளத்தில் குதிரைகளைத் தவறவிட்டு நீந்துவதும் நீரின் போக்கில் இழுபடுவதுமாக இருந்தார்கள்.
‘‘ஹனி...” குருவாயி கூச்சலிட்டாள்.
“குருவாயி... பயப்படாதே. கெட்டியாக என் கையைப் பிடி.”
‘பயப்படாதே’ என்று சொன்னாலும் ஹானிங்டனின் குரலில் அப்பட்டமாய் பயம் தெரிந்தது. கடைசி ஊழிபோல் புரளும் தண்ணீரை மரண பயத்துடன் பார்த்தார்.
திருவிதாங்கூரை இயற்கையின் பேரழகுடன் வைத்திருக்கும் மழை, இயல்பு திரியும் வேளையில் உருக்குலைத்துப் போடுவதற்குத் தயங்குவதில்லை. மழையின் மோனத்தை ரசிக்கும் குடிகளை, வருஷத்திற்கு ஒன்றிரண்டு முறை, ‘என்னை எளிதாக நினைத்துவிடாதீர்கள்’ என எச்சரித்துச் செல்வதுபோல் வெள்ளம் பெருகும். திருவிதாங்கூருக்குப் பலமும் பலவீனமும் அதிக தண்ணீர்தான்.
குதிரை இழுக்க, வெள்ளம் இழுக்க, கோச் வண்டியின் தேக்குப் பலகை தனித்தனியாக உடைந்துபோனது. பின்னால் உட்கார்ந்திருந்த குருவாயி உடைந்த பலகையுடன் சேர்ந்து வெள்ளத்தில் விழுந்தாள். குருவாயியின் கைகளுடன் கைகோத்திருந்த ஹானிங்டனும் அவளுடன் வெள்ளத்தில் இழுபட்டார். கழுத்தை உயர்த்தி நீந்திக்கொண்டிருந்த குதிரை டாமினேஷன், குருவாயியின் அலறலைக் கேட்டுத் திரும்பியது. பின்னால் வந்த வீரர்களில் ஒருவன், கையிலிருந்த வேல் கம்பை, ஹானிங்டனை நோக்கி எறிந்தான்.
“யுவர் எக்ஸலென்ஸி, வேல் கம்பைக் கையில் பிடிங்க. தம்புராட்டியையும் பிடிக்கச் சொல்லுங்க.”
நீரில் தத்தளித்தபடி இருந்த ஹானிங்டன் தன்னருகில் வந்த ஆளுயர வேல் கம்பைக் கையில் பிடித்தார். பிடித்த வேகத்தில் ஊன்றுவதற்கு முயல்வதற்குள் அவருக்கு முன்னால், குருவாயி வெள்ளத்தில் இழுபட்டுச் செல்வது தெரிந்தது. “குருவாயி...” ஹானிங்டன் அலறினார்.
“ஹனி...” குருவாயியும் அலறினாள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் வெள்ளம் குருவாயியை இழுத்துக் கொண்டோடியது. ஹானிங்டன் அதிர்ந்து பார்க்க, வெள்ளம் அவரை உள்ளே அழுத்தியது. தண்ணீருக்குள் மூழ்கியவர், தண்ணீரைக் குடிக்க, மூச்சுத் திணறி, வேல் கம்பை ஊன்ற முயன்றார். நான்கைந்து இடங்களில் ஊன்ற முயன்றும் நீர் கம்பைத் தள்ளிவிட, மற்றோரிடத்தில் கம்பு உள்ளிறங்கி நின்றது. சிறு பாறைகளுக்கிடையில் சரியாக அகப்பட்ட வேல் கம்பு, வெள்ளத்தின் வேகத்தினைத் தாங்கி நின்றது.
ஹானிங்டன் வேல் கம்பை இறுக்கிப் பிடித்தார். “குருவாயி, குருவாயியைக் காப்பாத்துங்க...” வீரர்களைப் பார்த்துக் கூச்சலிட்டார்.

வேல் கம்பைத் தூக்கியெறிந்த வீரனும் அவன் குதிரையும் வெள்ளத்தைச் சமாளித்து ஹானிங்டனை நெருங்கி, அவருக்குக் கை நீட்டினான்.
“இங்கயே நான் சமாளிச்சு நிக்கிறேன். ப்ளீஸ், சேவ் மை கம்பேனியன்” ஹானிங்டனுக்குக் குரல் உடைந்து அழுகை வந்தது.
“ஜீசஸ்...” ஹானிங்டன் திடீரென்று அலறினார். வெள்ளத்தில் மிதந்த எருமையொன்று ஹானிங்டனின் மேல் மோதிச் சென்றது.
ஹானிங்டன் தன் முன்னாலும் பின்னாலும் திரும்பிப் பார்த்தார். அடர்பழுப்பு வண்ணத்தில், புது மெருகு குறையாத மண்வாசத்துடன் ஆக்ரோஷமாகப் புரண்டோடும் வெள்ளத்தில் கூக்குரலுடன் ஆங்காங்கே மனிதர்கள். பனை நார் திரித்துக்கொண்டிருந்தவர்களை வெள்ளம் இழுத்துச் சென்றது.
முன்னால் பார்த்தார். குருவாயி கண்ணுக்கெட்டிய தொலைவில் இல்லை. ஹானிங்டனுக்கு மயக்கம் வந்தது. வேல் கம்பை இறுக்கிப் பிடித்திருந்த கை தளர்ந்தது. காற்றில் தலை விரித்தாடிய தென்னை மரங்கள் சூழலுக்கு அமானுஷ்யத்தைக் கொடுத்தன.
திருவிதாங்கூர் மகாராஜா மூலம் திருநாள் அணை கட்டுவதற்கு இடம் தர வாக்குறுதி கொடுத்த மகிழ்ச்சியில் திக்கித்து நின்ற பென்னியும் ஜார்ஜியானாவும் மகாராஜாவுக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியில் வந்தார்கள்.
கொட்டாரத்திற்குள் இருக்கும்போதே அவ்வப்போது இடி இடிக்கும் சத்தமும் மழை பெய்யும் சத்தமும் கேட்டது. வெளியில் வந்தபோது, நீர்க்காடாய்த் தோற்றம் கொண்டிருந்தது ஊர். இதமான கடற்காற்றும், குறைந்த மக்கள் நடமாட்டமும் கொண்ட கடற்கரைத் துறைமுகமாய், அழகை அள்ளித் தந்த ஊரை, பூவின் இதழ்களைக் கத்தியால் கிழித்தெறிவதுபோல் உக்கிரம் கொண்டு நீர்ப்பூதம் குலைத்துப் போட்டுக்கொண்டிருந்தது. ஆளுயரம் எழும்பிய அலைகள் அச்சமூட்டின. அந்திக்கு இன்னும் நான்கைந்து நாழிகள் இருக்கும் வேளையில் ஊர் கும்மிருட்டில் இருப்பதைப் பார்த்து பென்னிக்குத் திடுக்கிட்டது. ஜார்ஜியானாவுக்கு அடிவயிற்றில் பயம் சில்லிட்டது. உறங்கிக்கொண்டிருந்த எடித்தை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.
நாயர் படை வீரர்கள் மழையில் நனைந்தவாறு கொட்டாரத்தின் கதவுகளையும் சாளரங்களையும் மூடினர். மூலம் திருநாளின் மெய்க்காவலன், பென்னியையும் ஜார்ஜியானாவையும் விரைந்து வருமாறு அழைத்தான்.
“பருவமில்லாத பருவத்தில் மழை வந்தாலே பேராபத்துதான். மழை எப்போது நிற்குமென்று சொல்ல முடியாது. பத்திரமாக வாங்க.”
விருந்தினர்களுக்கான அறை நோக்கி விரைந்தான் மெய்க்காவலன்.
பென்னி லூசியைத் தூக்கிக்கொண்டார். டோராவின் கைகளைப் பிடித்துக்கொண்டு விரைந்தார்.
“பப்பா, மழையை யார் அனுப்புவாங்க?” டோரா கேட்டது.
“கடவுள்தான் அனுப்புவார்.”
“ஏன் இவ்ளோ மழையை அனுப்பணும்? நமக்கு வேணும்னும்போது கொஞ்ச கொஞ்சமா கொடுக்கலாமே கடவுள்?”
“கடவுளா கொடுக்கிறத வாங்கிக்கணும் டியர். நமக்கு வேணும்போது கடவுள் கொடுப்பாரான்னு சொல்ல முடியாது.”
“எவ்ளோ தண்ணி பப்பா? எல்லாம் எங்க போவும்?”
“கடலுக்கு.”
“கடல் குடிச்சிடுமா இவ்ளோ தண்ணியையும்?”
“சூரியன் குடிச்சிடும்...”
மின்னல் ஒன்று ஒளிர்ந்து அடங்கியது.
“பப்பா...” கத்திய டோராவை அள்ளி அணைத்தார்.
“பப்பா உன்கூடவே இருக்கேன் டோரா... பயப்படாதே.”
வானமே தெரியவில்லையே என்று ஜார்ஜியானா யோசித்தாள். சாளரத்தின் வழியாக, பயணங்களில், காலை, மாலை பலகணிகளில் என அவளுக்கு அறிமுகமான வெளிச்சமும் இருட்டும் அல்ல இது. வெளிச்சம் ஊடுருவ முடியாத இருள். மழையும் சேர்ந்து அவளை அச்சுறுத்தியது. நல்லவிதமாகக் குழந்தைகளுடன் ஊர் திரும்ப வேண்டுமே என்று பயமாக இருந்தது.
“உன்னதமான காரியமொன்றுக்கு ஒப்புதல் வாங்கியிருக்கிறோம். சந்தோஷப்படுவதற்கு அவகாசமே இல்லாமல் மழை அடித்து வெளுக்குதே?” ஜார்ஜியானா வருந்தினாள்.
பென்னிக்கு அணை கட்டப்போகும் காடு நினைவுக்கு வந்தது. ஓரிரவில் இருபது, முப்பது இஞ்ச் அளவு பெய்யப்போகும் மழை குறித்துக் கவலை கொண்டார். மனித நடமாட்டமற்ற இடத்தில் பெருமழைகளில் அணையை எப்படிக் கட்டப்போகிறோமோ என்று மலைப்பாக உணர்ந்தார்.
குழந்தைகளையும் ஜார்ஜியானாவையும் அழைத்துச் சென்று அறைக்குள் விட்டுவிட்டு, பலகணிக்கு விரைந்தார்.
எதிர் இருப்பவர் தெரியாத வண்ணம் மழைத் தாரைகள் அடர்த்தியாகத் தரை இறங்கின. எதிரில் கடல் இருந்த இடம் வெண்படலமாய் மாறி இருந்தது. ‘வெள்ளம், வெள்ளம்.’ இதை மதுரா டிஸ்ட்ரிக்ட்டுக்குக் கொண்டு போகத்தான் இத்தனை பாடு. ‘நீரை அதன் போக்கில் விட்டால் அழிவுதான். ஒழுங்கு செய்தால் எத்தனை நன்மை. பேராற்றல். ஓடும் நீரைத் தேக்கிவிட்டால் போதும், சரிபாதி வருஷம் பூமியின் வளம் பெருகும்.’ பென்னியின் சிந்தனைகள் வெள்ளத்தைப் பின்தொடர்ந்தன.
‘இயற்கைக்குத் தெரியாதா, தேங்கி நிற்க வேண்டுமா, பெருக்கெடுத்தோட வேண்டுமா என்று. இயற்கையின் நுண்ணறிவை மனித அறிவினால் மிஞ்சிவிட முடியுமா?’ பென்னியின் மனமே எதிர் வழக்காடியது.
‘இயற்கைக்கு மனிதர்களைப்போல் திட்டமிடத் தெரியாது. முக்கியமாக இயற்கைக்கு நாளை என்பது கிடையாது. நாளை என்ற சிந்தனை மனிதர்களுக்கு உள்ளது. நாளை என்ற எண்ணம் உருவானது முதல் மனிதன் இன்றை அழித்துவிட்டான். நாளைக்குப் பாதுகாப்பைத் தேடும் எண்ணத்தில்தான் இயற்கையின் வளங்களைத் தன்வசப்படுத்தினான். இயற்கை என்பது கொட்டிக் கிடக்கும் மாபெரும் அற்புதப் புதையல். இயற்கைக்கு என்ன விளக்கம் சொல்ல முடியும்? இயற்கை இயற்கைதான். மண்ணைச் சீர்படுத்தினால் தானியத்தை விளைவிக்க முடியும் என்று கண்டறிந்த மனிதன் எத்தனை உயர்வானவன்? கிடைப்பதை உண்பதை விட்டு, விரும்பியதை உண்பது என்ற தற்சார்புக்குத் திரும்பிய முதல் மனிதன் பாராட்டுதலுக்குரியவன். ஓடும் ஆற்றில் தன் கட்டுப்பாட்டுக்குள் தேங்கி நிற்கும் கால்வாயை வெட்டிக்கொண்டவன், மில்லியன் வருஷ பிரபஞ்ச வரலாற்றின் போக்கில் தனித்த பாதை உருவாக்கிய முதல் மனிதன். கால்வாய், ஏரி, குளம் வெட்டி, அணை கட்டி, காட்டாறாய்ப் பெருகும் மழை வெள்ளத்தை மனிதர்கள் எப்படியெல்லாம் வசக்கிவிட்டார்கள்? எப்படி வசக்கினாலும் குணம் திரிந்த நிமிஷத்தில் பெருக்கெடுத்தோடி அழிவைச் செய்வதில் வெள்ளத்திற்கு நிகர் வெள்ளம்தான்.
அஞ்சுதெங்கு கடற்கரையும் மழை வெள்ளமும் பிரித்தறிய முடியாத அளவு ஒன்றாக இருந்தன. மகாராஜாவின் வீரர்கள் உயிருடன் தத்தளித்தபடி வரும் ஆடு மாடுகளை நீண்ட கம்புகள் வைத்து, தடுத்து நிறுத்தி, வெள்ளத்திலிருந்து மீட்டுக் கொண்டிருந்தார்கள். கடற்கரையில் இருந்த ஓடங்களையும் கட்டுமரங்களையும் வெள்ளத்திற்குள் இறக்கி உயிர்களை மீட்டார்கள்.
“தம்புராட்டி...” வீரர்களின் கூக்குரல் கேட்டது. பென்னி திடுக்கிட்டார். ‘தம்புராட்டியா? கார்த்தியாயினியைச் சொல்கிறார்களா? அவர் எப்போது வெளியில் சென்றார்?’ பென்னி பலகணியை விட்டுப் பாய்ந்தோடினார்.
வெள்ளம் அடித்து வந்த குருவாயியை, ஆட்டுக்குட்டி ஒன்றை இழுத்து ஓடத்திலேற்றிய வீரன் ஒருவன்தான் முதலில் பார்த்தான். கணத்தில் ஓடத்தைத் திருப்பியவன், வீரர்களை உதவிக்கு அழைத்தான். ஒருவன் துடுப்பினால் ஓடத்தை ஓரிடத்தில் நிறுத்தினான். இருவர் நீரில் குதித்து குருவாயியின் தலைமுடியைக் கெட்டியாகப் பிடித்து நிறுத்தினர். நீரின் வாகுக்குத் திரும்பி நின்றபடி முன்னேறி, ஓடம் அருகில் வந்தனர்.
“குருவாயி தம்புராட்டி... இங்க எப்படி வந்தாங்க? மூச்சு இருக்கான்னு பாருங்க. சீக்கிரம், சீக்கிரம். வல்லத்துல ஏத்துங்க.” மூன்று நான்கு வீரர்கள் குருவாயியைத் தூக்கி ஓடத்தில் வைக்க, இருவர் துடுப்புப் போட்டு, கொட்டாரத்தை நோக்கி ஓடத்தைச் செலுத்தினர்.
“ரெசிடென்ட்டோட குதிரையும் வருதே...” அடுத்த வல்லத்தில் இருந்த வீரனொருவன் கத்தினான்.
“டாமினேஷன்...” குதிரையை நன்கறிந்த வீரன், குதிரையை நோக்கி நீந்தினான்.
“டாமினேஷன் இருக்குன்னா, ரெசிடென்ட் இருக்கணுமே? முன்னால் போய்ப் பாருங்க. நான் டாமினேஷனைப் பாத்துக்கிறேன்...” வெள்ளத்தை எதிர்த்து நீந்தியவன் டாமினேஷனை நெருங்கினான்.
குருவாயியைத் தூக்கிக்கொண்டு வீரர்கள் கொட்டாரத்திற்குள் வருவதற்குள், பென்னியும் கீழே ஓடி வந்திருந்தார். மழை சுளீரென்று முகத்தில் அறைந்தது.
உடல் விறைத்து, மூச்சற்றுக் கிடந்த குருவாயியைப் பார்த்து பென்னிக்கு உடல் அதிர்ந்தது.
“ஹர் எக்ஸலென்ஸி...” அருகே ஓடினார்.
மழைக்கு ஒதுங்கியிருந்த மீனவர்களை அழைத்து வந்தார்கள் வீரர்கள். வயதில் மூத்த மீனவர் ஒருவர், குருவாயியின் கையை எடுத்து நாடி பிடித்துப் பார்த்தார். சுற்றி நின்றிருந்தவர்கள் முகத்தில் கவலை உறைந்திருந்தது.
வெளியில் கடற்கரையையொட்டி பெரும் அலறல் கேட்டது. ஓடத்தில் இருந்த வீரர்கள் உடனே துடுப்புப் போட்டு விரைந்தனர்.
`குருவாயி வந்திருக்கிறார் என்றால், ரெசிடென்ட்டும் வந்திருக்க வேண்டுமே’ பென்னியின் மனம் அலைபாய்ந்தது. பயம் சிலீரென்று வயிற்றுக்குள் குறுங்கத்தியாய் இறங்கியது.
‘‘அரண்மனையில் டாக்டர் இருந்தால் சீக்கிரம் கூட்டிட்டு வாங்க’’ பென்னி உத்தரவிட்டார்.
‘‘நாட்டு வைத்தியர்தான் இருப்பாரு துரை’’ வீரன் ஒருவன் சொன்னான்.
‘‘பரவாயில்லை. அழைச்சுட்டு வாங்க. ரெசிடென்ட்டும் ஹர் எக்ஸலென்ஸிகூட வந்திருப்பாருன்னு நினைக்கிறேன். நான் போய்ப் பார்க்கிறேன். ஒவ்வொரு நிமிஷமும் முக்கியம். ஓடுங்க சீக்கிரம்’’ வீரர்களை விரட்டிய பென்னி, படகோட்டியைத் துடுப்பு போடச் சொன்னார்.
வெள்ளத்தின் போக்கில் சுழன்று திரும்பிய ஓடத்தைத் துடுப்பு கொண்டு, ஓட்டத்தின் எதிர் திசைக்குச் செலுத்தப் பார்த்தான் ஓடம் வலிப்பவன்.
அவர்களை நோக்கி வந்த கட்டுமரத்தில் பரிதவிப்புடன் ஹானிங்டன் இருப்பதைப் பார்த்தார் பென்னி. உடனே தன் ஓடத்தை நிறுத்தச் சொன்னார். ஹானிங்டன் பத்திரமாக இருப்பதைப் பார்த்து, பென்னிக்கு சுவாசம் சீரானது.
‘‘பென்னி, மை பாய், குருவாயி எப்படி இருக்கா?’’ ஹானிங்டன் அங்கிருந்தே சத்தமாகக் கேட்பது புரிந்தது.
‘‘யுவர் எக்ஸலென்ஸி, இந்நேரம் விழித்து எழுந்து உட்கார்ந்திருப்பாங்க. நீங்க கவலைப்படாம வாங்க’’ பென்னி ஆதரவான குரலில் சொன்னார்.
ஹானிங்டன் இருந்த கட்டுமரம் அருகில் வந்தவுடன் பென்னி ஹானிங்டனின் கையைப் பிடித்துக்கொண்டார். இருவரும் கொட்டாரத்தின் அருகில் வந்தவுடன் பதற்றத்துடன் காவலர்களைப் பார்த்தனர், அவர்கள் முகத்தில் அசாதாரணமான அறிகுறிகள் தென்படுகிறதா என்று.
உள்ளே இருந்து ஓடி வந்த வீரன் ஒருவன் ஹானிங்டனைப் பார்த்துக் கூச்சலிட்டான்.
‘‘தம்புரான், தம்புராட்டி முழிச்சிட்டாங்க. உங்களைத்தான் பாக்கணும்னு சொல்றாங்க.’’
ஹானிங்டன் அப்படியே மண்டியிட்டு அமர்ந்தார்.
‘‘என் கர்த்தாவே, எல்லாமே உம் கிருபை. எம் நன்றியை ஏற்றுக்கொள்ளும்.’’
கண்ணீர் மல்க வானத்தைப் பார்த்துக் கும்பிட்ட ஹானிங்டன், நெஞ்சில் சிலுவையிட்டுக் கொண்டார்.
பென்னி ஹானிங்டனின் கையைப் பிடிக்க, எழுந்து உள்ளே வந்தார்.
‘‘யுவர் எக்ஸலென்ஸியை நான் இங்கு எதிர்பார்க்கவில்லை.’’
‘‘நீ இங்கிருப்பாய் என எனக்குத் தெரியும் பென்னி. அதனால்தான் நானும் குருவாயியும் கிளம்பி வந்தோம்.’’
‘‘மகாராஜாவைச் சந்திக்க நாங்கள் உள்ளே செல்லும்போது ஊர் சாதாரணமாகத்தான் இருந்தது. மிதமான வெயில் அடித்தது. இரண்டு மூன்று மணி நேரத்திற்குள் ஊர் வெள்ளக்காடாக இருக்கிறதே? மழையின் வேகத்தைப் பார்த்தால் எப்போது ஓயுமென்று தெரியலையே?’’
‘‘இந்த ஊரோட குணமே அப்படித்தானே துரை. முரட்டுக் குழந்தை மாதிரி. எப்போ என்ன செய்யும்ணு சொல்ல முடியாது. ஒரு நாழியில நின்னாலும் நின்னுடும். ராத்திரி முழுக்க நிக்காமப் பேஞ்சாலும் பேயும். அது போக்குதான்’’ ஒதுங்கி நின்றிருந்த மீனவர் ஒருவர் சொன்னார்.
ஹானிங்டன் தரையில் இறங்கி ஈரம் சொட்ட நின்றார். வலது காலில் இருந்த கம்பூட் எங்கு விழுந்ததென்று தெரியவில்லை. இடது காலில் இருந்த பூட்டைக் கழற்றி வீசினார்.
“குருவாயி எங்கிருக்கிறாள் பென்னி?” கேட்டபடியே உள்ளே விரைந்தார்.
“ஹனி...” ஹானிங்டன் உள்ளே செல்வதற்கும் குருவாயி வெளியில் வருவதற்கும் சரியாக இருந்தது. குருவாயி அழுகை பீறிட ஹானிங்டனை அணைத்துக்கொண்டாள். வார்த்தைகளின்றி இருவரும் ஒருவரையொருவர் அணைத்து ஆறுதல் தந்தனர். தலைமேல் விழுவதுபோல் இடி ஒன்று கீழிறங்கியது.
“இடி இடிக்கும்போது மூத்த பிள்ளை வெளியில் இருக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க துரை” மீனவர் பொதுவாய்ச் சொன்னவுடன், பென்னி ஹானிங்டனுக்கான ஏற்பாடுகள் செய்ய உள்ளே சென்றார். ஹானிங்டனுடன் வந்த பெட்டிகள் வெள்ளத்தில் போனதில், மாற்று ஆடைகளும் அவருக்கான அத்தியாவசியப் பொருள்களையும் கொண்டு வர, பென்னி உத்தரவிட்டார்.
“மகாராஜா அரண்மனையில் இருக்காரா?”
“மன்னிக்கணும் யுவர் எக்ஸலென்ஸி, உங்களுக்கு நேர்ந்த ஆபத்தில் மகிழ்ச்சியான விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன். மகாராஜா ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒத்துக்கொண்டார்.”
“கிரேட்... மை டியர் பாய். சாதித்துவிட்டாய். சமஸ்தானத்துக்கு ரெசிடென்ட்டா வந்ததுக்கு என்னோட முக்கியமான கடமையைச் செஞ்சுட்டேன். கிரேட் மை பாய்.”

குருவாயி முழுமையாகத் தெளியாமல் இருந்தாலும் பென்னி சொன்ன சந்தோஷமான சேதி கேட்டதில் அவளுக்குள் அளவு கடந்த உற்சாகம் எழுந்தது.
“இப்படியொரு நற்செய்தியைச் சொல்லத்தான் மழை பெருக்கெடுத்து வருதோ? நன்னிமித்தமாகவே எண்ணுவோம். நூற்றாண்டுக் கனவு. உங்கள் இருவருக்கும் பெரும் பங்கு இருக்கிறது” என்றாள் குருவாயி.
பென்னி நெகிழ்ச்சியுடன் நின்றார்.
“பென்னி, ஜார்ஜியானா எங்கே?”
“குழந்தைகளுடன் உள்ளே இருக்கிறாள். ஹிஸ் எக்ஸலென்ஸி மகாராஜாவிடம் அனுமதி வாங்கியது ஜார்ஜியானாவின் திறமைதான். பக்குவமும் தெளிவும் கூடிய பேச்சு. நானே எனக்குத் தெரியாத முதிர்ச்சியடைந்த ஜார்ஜியானாவைப் பார்த்தேன்.”
“தேவனின் கிருபை… இன்று உயிர் பிழைத்தது. அந்த நடுக்கம் இன்னும் குறையவில்லை. உள்ளே போகலாம் வாருங்கள்” ஹானிங்டன் முன்னால் சென்றார்.
“யுவர் எக்ஸலென்ஸி, மகாராஜாவைச் சந்திக்க தாங்கள் செய்தி அனுப்பியிருக்கீங்களா?”
“ரொம்ப விமர்சையாகப் போய் அவருக்கு நன்றி சொல்லணும். இப்போ இருக்கிற நிலையில் அவரைப் பார்க்க வேண்டாம். நாம் வந்திருக்கிற செய்தியை அனுப்பச் சொல்லு பென்னி.”
கையில் மதுக் கோப்பையுடன் சாளரத்தின் முன் நின்றிருந்தார் ஹானிங்டன். அவருக்குப் பின்புறம் இருந்த இருக்கையில் பென்னியும், அவருக்கு வல இடமாக குருவாயியும் ஜார்ஜியானாவும் அமர்ந்திருந்தனர். மழையின் வேகம் கொஞ்சமும் குறையவில்லை. வெள்ளம் ஆளுயரத்திற்குச் சென்றது. கடற்கரையை ஒட்டியிருந்த மீனவர்களின் குடிசைகளை நீர் பெயர்த்தெடுத்துச் சென்றிருந்தது. எச்சரிக்கையாக இருந்தவர்கள் உயிர் தப்பி, ஆங்காங்கு இருந்த கல்வீடுகளில் ஒண்டினார்கள்.
வெயிலில் உலர்த்தப்பட்டிருந்த தேங்காய்கள் மனிதத் தலைகளைப்போல் வெள்ளத்தில் மிதந்து சென்றன. திரித்துப் போடப்பட்டிருந்த தேங்காய் நார்களும், சணல்களும் இருக்கும் இடம் தெரியவில்லை.
“ஜார்ஜிக்காகத்தான் இன்றைய ஸ்பெஷல் டின்னர்.”
“யுவர் எக்ஸலென்ஸியின் அன்புக்குப் பாத்திரமாவதே பெரிய வரம்” ஜார்ஜியானா குருவாயியைப் பார்த்துச் சொன்னாள்.
“பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராய்கள், லண்டனில் இருக்கும் இந்தியச் செயலர்கள், மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர்கள், மதுரை கலெக்டர்கள், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ரெசிடென்டுகள், மகாராஜாக்கள், பப்ளிக் வொர்க்ஸ் டிபார்ட்மென்டின் ராயல் இன்ஜினீயர்கள், இர்ரிகேஷன் இன்ஜினீயர்கள், ராம்நாட் ராஜா முத்துராமலிங்க சேதுபதி, அவருடைய அமைச்சர் முத்திருளப்ப பிள்ளை என நூறு வருஷமாய் பலருடைய விருப்பமாய், கனவாய் இருந்த நற்காரியமொன்றை, சின்னஞ்சிறிய பெண்ணான உன்னுடைய சொல் சாதித்திருக்கிறது. அவர்கள் அத்தனை பேருடைய விருப்பத்தையும் எடுத்துச்சொல்லி, காரியத்தைச் சாதிக்கக்கூடிய வாக்குச் சாதுர்யம் உனக்குக் கூடி வந்திருக்கிறது என்றால் அது சாதாரண நிகழ்வல்ல. முன்னோர்களின் ஆசீர்வாதம் உனக்குப் பரிபூரணமாய் இருக்கிறது. நிலமிருந்தும் மழையில்லாமல் பட்டினியில் மாய்ந்துபோன மக்களின் சரித்திரம் மதுரையில் முடிந்துபோகும். உங்கள் இருவராலும் மதுரை மாவட்டமே இன்று நாளையல்ல, தலைமுறை தலைமுறைக்கும் செழிப்பாக இருக்கும். நிலம்தான் குடிகளின் சொத்து. அவர்களின் செல்வம். அந்த நிலம் வெள்ளாமையின்றி இருப்பது மரண வலி. நீ அந்த வலியைத் துடைக்க முயற்சி செய்திருக்கிறாய். உன்னை வாழ்த்துகிறேன் ஜார்ஜி.”
ஜார்ஜி எழுந்து வந்து குருவாயியை அணைத்துக்கொண்டாள்.
“மெட்ராஸிலிருந்து திவான் ராமய்யங்கார் இன்னும் வரவில்லை. அவர் வந்து புதிதாக எதுவும் காரணங்களைக் கண்டறியாமல் இருக்கணும்.”
“நோ ஹனி. மகாராஜா சம்மதித்த பிறகு திவான் என்ன சொல்லுவார்?” குருவாயி குறுக்கிட்டாள்.
“திவான்களைப் பற்றித் தெரியாதா? மகாராஜா ஒப்பந்தத்தை ஏற்க சம்மதித்தாரே தவிர, நிபந்தனைகளுக்குச் சம்மதிக்கவில்லை என்று புதிதாக ஒரு அத்தியாயத்தைத் தொடங்குவார். இப்ப நாமிருக்கிற அஞ்சுதெங்குவை விட்டுக் கொடுத்தே ஆக வேண்டும் என்பார். சமஸ்தானத்தின் இன்ஜினீயர் குழு ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையோடுதான் அவர் மெட்ராஸ் போய் கவர்னரைப் பார்த்துத் திரும்பி வர்றார். இல்லை 999 வருஷ குத்தகை அதிகம், அதைக் குறைக்கணும் என்பார்.”
“ஹிஸ் எக்ஸலென்ஸி சொல்வது உண்மைதான். மகாராஜா சம்மதம் சொன்ன பிறகும் எனக்குக் கவலை குறையவில்லை. திவான் என்றில்லை, யார் என்ன சொல்லி, முதலிலிருந்து வேலையைத் தொடங்கச் சொல்வார்களோ என்று பயமாகவே இருக்கு.”
“பயப்படாதே பென்னி. மகாராஜா சம்மதிக்காதவரைதான் திவானின் கை ஓங்கும். நான் முன்பு சொன்னதெல்லாம் நடக்கும். ஆனாலும் நான் விட மாட்டேன். திவானையும் மராமத்து செக்ரட்டரியையும் என்னோட ஆபீஸுக்கு வந்து கையெழுத்துப் போட்டுட்டுப் போகச் சொல்வேன்.”
ஹானிங்டன் செய்யக்கூடியவர் என்பது அங்கிருந்தவர்களுக்குத் தெரியும் என்பதால், ஆசுவாசப்படுத்திக்கொள்ள அவரவர் பானத்தைப் பருகினர்.
‘மழை யாரின் தாகம் தணிக்க, மின்னலின் வேகம் கொண்டு புரண்டோடுகிறதோ? தாகம் தணித்தே தீராத தன் தாகத்தைத் தீர்க்கப் புரண்டோடுகிறதோ?’ பென்னி கையில் மதுக்குவளையுடன் பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தைப் பற்றி யோசித்தார்.
“திவானோ, திருவிதாங்கூர் மகாராஜாவோ, பூஞ்சாறு மகாராஜாவோ இவர்கள் யாருமே அணை கட்டத் தடையாக இருக்க மாட்டார்கள். இருக்கவும் முடியாது. மகாராஜாவின் சம்மதம் முழுமையான அதிகாரம் பெற்றது. ஒப்பந்தத்தின் ஷரத்துகளைப் பேசிச் சரிசெய்துகொள்ள முடியும். அணை கட்டுவதற்கு ஒருபோதும் சம்மதிக்காத, அனுமதி தராத பலம் வாய்ந்த தடை ஒன்று இருக்கிறது.”
“மறுபடியுமா... பென்னி… நோ…” குருவாயி அலறினாள். ஹானிங்டனும் அதிர்ச்சியுடன் பார்த்தார்.
“நம்மைத் தோற்கடிக்க ஒவ்வொரு நிமிஷமும் முயற்சி செய்யும் எதிரி ஒருவர் இருக்கிறார்.”
“யார் அந்த எதிரி பென்னி?”
“யுவர் எக்ஸலென்ஸி, இயற்கைதான் நமக்குப் பெரும் எதிரியாக இருக்கப்போகிறது. ஆம். இயற்கை நம் நோக்கத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்கும். ஆர்தர் காட்டன் அதைத்தான் குறிப்பிட்டார். கடவுள் நினைத்தாலும் அடர்ந்த காட்டில் அணை கட்ட முடியாதென்று” பென்னியின் குரலில் கவலை தோய்ந்திருந்தது.
கொட்டாரத்துக்கு வெளியே வெள்ளம் கரை புரண்டோடிக்கொண்டிருந்தது.
- பாயும்