
பாதிப்புகளைச் சீர்செய்த மராமத்துத் துறையினர் இப்போதுதான் கொஞ்சம் ஆசுவாசப்பட்டார்கள். அதற்குள் ரெசிடென்ட் பேரியாறு அணை ஒப்பந்தத்திற்கான ஷரத்துகளை அனுப்பச் சொல்லிக் கடிதம் அனுப்பிவிட்டார்.
“மிஸ்டர் திவான், ஒப்பந்தத்தின் ஷரத்துகளை முறைப்படுத்திவிட்டீர்களா?” திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ரெசிடென்ட் ஹானிங்டன், திவான் ராமய்யங்காரிடம் கேட்டார்.
“யெஸ் யுவர் எக்ஸலென்ஸி, இன்னும் சிலதைத் தங்களுடன் விவாதித்துவிட்டுச் சேர்க்க எண்ணியுள்ளோம்.”
“இன்னும் விவாதிக்க என்ன இருக்கிறது அய்யங்கார்? ஹிஸ் எக்ஸலென்ஸி மகாராஜா உடனே ஒப்பந்தம் தயார் செய்யச் சொல்லிவிட்டாரே?”
திவான் ராமய்யங்கார் தயங்கினார். ரெசிடென்ட் ஹானிங்டன், தான் மறுத்துச் சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வாரோ என்ற தயக்கம்.
மெட்ராஸ் பிரசிடென்சியிலிருந்து திவான் ராமய்யங்கார் வருவதற்குள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருந்தது. திடீரென்று ஆரம்பித்து சுழற்றியடித்த புயலும் பேய்மழையும் ஊரைப் புரட்டிப் போட்டிருந்தன. ரெசிடென்ட் ஹானிங்டனும் அவர் மனைவி குருவாயியும் வெள்ளத்தில் அகப்பட்டு, கணநேரத்தில் காப்பாற்றப்பட்டிருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் செத்துப்போயின. வீடுகள் இடிந்து விழுந்தும் வயல்களில் நீர் தேங்கியும், திரும்பிய திசையெங்கும் வெள்ளச் சேதாரம். இன்னமும் நீர் முழுமையாக வடிந்துவிடவில்லை.
வேங்கடகிரி அரசர் ராஜகோபால கிருஷ்ண யச்சேந்திர பகதூர் உறுதியளித்தபடி, கவர்னர் அலுவலகத்தில் கடிதம் பெற்றுத் தந்தார். ‘திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் இன்ஜினீயர்கள் மேல்மலைக்குச் சென்று ஆய்வு செய்யலாம். ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கும் ஆய்வுக்கும் தொடர்புபடுத்தக் கூடாது. ஒப்பந்தம் கையெழுத்தாகி அணை கட்டத் தொடங்குவதற்குமுன் ஆய்வறிக்கையைக் கொடுக்க வேண்டும்’ என்று கவர்னர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தார்கள். திவானுக்கு யோசனையாக இருந்தது. ‘ஆய்வு செய்யாமல் எப்படிக் கையெழுத்திட முடியும்?’ என்றார். ‘இடத்தைக் கொடுக்க உங்களுக்குக் கருத்து வேறுபாடில்லை. மற்ற நிபந்தனைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ள முடியுமே?’ என்று சமாதானம் சொல்லிவிட்டார் வேங்கடகிரி அரசர்.
‘பிரிட்டிஷ் சர்க்காருடன் பேசித் தீர்த்துக்கொள்ள முடியுமா? அவர்கள் நினைப்பதைத்தான் நடத்துவார்கள்’ என்று திவான் சொன்னாலும் அவர் மனத்திற்குள்ளும், பேரியாறு அணை கட்டும் விஷயத்தில் பிரிட்டிஷ் சர்க்கார் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளும் என்ற நம்பிக்கை இருந்தது.
வேங்கடகிரி அரசருக்கு நன்றி சொல்லிவிட்டு சமஸ்தானத்திற்கு வருவதற்குள் இங்கு நீர்ப் பிரளயமே நிகழ்ந்துவிட்டிருந்தது. ஒவ்வொரு முறையும் மழை வந்து வெள்ளம் பெருக்கெடுக்கையில் திருவிதாங்கூர் தன் குடிகளையும் செல்வங்களையும் இழப்பது வாடிக்கை. அதன் அமைவிடம் அப்படி. தென்கிழக்கிலிருந்தும் வடமேற்கிலிருந்தும் வரும் இரண்டு பருவக்காற்றும் வளத்தைக் கொண்டுவரும் அளவிற்கு பாதிப்பையும் கொண்டு வந்துவிடும். சுதாரிப்பின்றி இருக்கும் தாயின் கன்னத்தில் அடித்துவிட்டுச் சிரிக்கும் குழந்தையைப்போல், இயற்கையின் ஆசீர்வாதத்தில் திளைக்கும் குடிகளை அவ்வப்போது தண்டித்தும்விடும்.
பாதிப்புகளைச் சீர்செய்த மராமத்துத் துறையினர் இப்போதுதான் கொஞ்சம் ஆசுவாசப்பட்டார்கள். அதற்குள் ரெசிடென்ட் பேரியாறு அணை ஒப்பந்தத்திற்கான ஷரத்துகளை அனுப்பச் சொல்லிக் கடிதம் அனுப்பிவிட்டார். மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்து திரும்பியவுடன் மகாராஜா, அணை கட்ட இடம் கொடுப்பதற்கான தன் சம்மதத்தைத் தெரிவித்ததுடன் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யவும் சொன்னார். ‘இரண்டு ராஜ்ஜிய நலன்களையும் கணக்கில் கொண்டு ஒப்பந்தத்தை எழுதுங்கள். எதிர்வரும் காலத்தினர் நம்மைப் பழித்துவிடக் கூடாது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்’ என்ற ஒரேயொரு குறிப்பை மட்டும் மகாராஜா உறுதியாகச் சொல்லியிருந்தார். கோட்டயம் பகுதி பேஷ்கார் ராமா ராவ், சீப் இன்ஜினீயர் ஜேம்ஸ் வில்சன், மராமத்து செக்ரட்டரி குருவில்லா ஜோசப், காட்டிலாகா அதிகாரி ஜேக்கப் முதலானோருடன் ஒரு வாரமாக அனுதினமும் விவாதங்கள் நடத்தி, ஒப்பந்தத்தின் ஷரத்துகள் ஓரளவிற்கு முழுமைக்கு நெருக்கமாக வந்துள்ளன. ரெசிடென்ட் ஹானிங்டனும் முன்கூட்டியே பென்னி குக்குடன் விவாதித்து ஒப்பந்த ஷரத்துகளைத் தயார் செய்திருந்தார். இருதரப்பும் தயாராக வந்திருந்ததில் தேவையற்ற பேச்சும் நேர விரயமும் தவிர்க்கப்பட்டிருந்தன.
“பென்னி முதலில் பேசட்டும். அவருக்குத்தான் பெரியாறு திட்டம் பற்றித் துல்லியமாகத் தெரியும்.” தன்னுடைய பங்களாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த கூட்டத்தை ஹானிங்டன் வழிநடத்தினார்.
“யுவர் எக்ஸலென்ஸி சொல்வது சரிதான். மிஸ்டர் பென்னி முதலில் தொடங்கட்டும்.”
பென்னிக்கு முகம் முழுக்க பூரிப்பாக இருந்தது. ஜார்ஜியானாவுடனும் குழந்தைகளுடனும் மகாராஜாவைச் சந்திக்கச் சென்ற நாள், பொருத்தமான நாளன்று. சூழலின் அணுக்கமின்மை தங்களுக்கு எதிராகச் சென்றுவிடுமோ என்ற தங்களின் அச்சத்தை மகாராஜாவின் உறுதி துடைத்தெறிந்தது. மகாராஜாவின் புரிதலில்தான் காட்சிகள் துரிதமாக மாறின. அணை கட்டத் திட்டமிட்டதைவிட, திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் இடம் கேட்டு ஒப்பந்தம் செய்ய அலைந்ததில்தான் மனம் மிகவும் சோர்ந்துபோனது. ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கும் இந்த நாள் என்றென்றும் தன் வாழ்வில் முக்கியமான நாளாக இருக்கும். காலையில் கிளம்பும்போதே ஜார்ஜியானா அப்பாவின் காலணியைப் போட்டுக்கொள்ளச் சொன்னாள். சில்லியன்வாலா போர்க்களத்தில் இறந்துபோன அப்பாவின் காலணியை பிரிட்டிஷ் ராணுவம் அம்மாவிடம் ஒப்படைத்தது. முழங்கால்வரை நீளும் தோலாலான அழகிய அந்தக் கம்பூட்ஸை ஒன்பது வயது சிறுவனாக இருந்த தன்னிடம்தான் அம்மா கொடுத்தார். அப்பாவின் நெருக்கத்தை அந்தக் காலணியே கொடுத்துக்கொண்டிருக்கிறது. காலையில் ஜார்ஜியானா போட்டுக்கொள்ளச் சொன்னதும் மனத்தில் பூரிப்பு வந்தது. ஒருவேளை அணை கட்டுவது போர்க்களத்திற்குச் செல்வது என்று நினைத்தாளோ என்னவோ. பென்னியின் மனம் நிறைந்திருந்தது.
மனத்தின் நிறைவு குரலுக்குக் கனிவைத் தந்திருந்தது.
“அணை கட்டுவதற்கான அத்தியாவசியத்தை உணர்ந்து அனுமதியளித்த மகாராஜாவுக்கு, ஹிஸ் எக்ஸலென்ஸி மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர் இன் கவுன்சில் சார்பாக நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். மகாராஜாவின் புரிதல், மதுரா டிஸ்ட்ரிக்ட் வரலாற்றில் ஒரு மைல்கல். மழை பெய்தால் வளமாக இருக்கும் பூமி, இனி வருஷம் முழுக்க வளமாக இருக்கும்.”
“மிஸ்டர் பென்னியின் கணிப்பு சரியானதுதான். எதிர்காலம் பற்றிய தீர்க்கதரிசனத்துடன்தான் மகாராஜா ஒப்புதல் அளித்துள்ளார்” என்றார் திவான்
“பென்னி, உன் தேவைகளை முதலில் சொல்லிவிடு. பிறகு அவர்கள் தரப்பைக் கேட்போம்.”
“யெஸ் யுவர் எக்ஸலென்ஸி. முதலில் தேவையான இடத்தை முடிவு செய்துவிடுவோம். அணையின் உயரம் 155 அடி இருக்க வேண்டும். ஆற்றின் மட்டம் பூஜ்யம் என்று வைத்துக் கொண்டால், 155 அடி நீர் தேங்க அதிகபட்சம் எட்டாயிரம் ஏக்கர் நிலம் தேவை. எட்டாயிரம் ஏக்கர் நிலம் தேவையென்பதை நாம் ஏற்கெனவே விவாதித்துள்ளோம்.”
“யெஸ் மிஸ்டர் பென்னி. நீர்ப்பிடிப்புப் பகுதியான எட்டாயிரம் ஏக்கர் நிலமென்பது குன்றுகளையும் காடுகளையும் உள்ளடக்கியது என்பதால் எங்களுக்கு அதில் ஆட்சேபனை இல்லை. எட்டாயிரம் ஏக்கர் பிரிட்டிஷ் சர்க்கார் எடுத்துக்கொள்ளும்போது அதற்கு ஈடாக எங்களுக்கு என்ன தரப்போகிறீர்கள்? அங்குதான் நமக்கு முரண்பாடே வருகிறது. ஹிஸ் எக்ஸலென்ஸி மகாராஜா விசாகம் திருநாள் காலத்தில் எட்டாயிரம் ஏக்கரில் இருக்கும் மரங்களும், மீன்பிடி உரிமையும் படகு விடும் உரிமையும் சமஸ்தானத்திற்குக் கொடுப்பதாக, பிரிட்டிஷ் சர்க்கார் சொல்லியிருந்தது...”
திவான் பேசி முடிக்கும் முன்பே ஹானிங்டன் குறுக்கிட்டார்.
“மிஸ்டர் அய்யங்கார், எட்டாயிரம் ஏக்கர் எங்களுக்குக் கொடுக்கிறீர்கள் என்றால், அதற்கான முழு உரிமையும் சேர்த்துத்தான் கொடுக்க வேண்டும். நீர் தேங்கும் இடத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் மீன்பிடிக்க வருகிறோம், மரம் வெட்ட வருகிறோம் என்று எந்த உரிமையும் கோரக் கூடாது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசாட்சிக்கு உட்பட்ட இடம் என்பதை ஒருபோதும் நாங்கள் மறுக்க மாட்டோம். ஆனால் அணை கட்டும் இடமும் நீர்ப்பிடிப்பு இடமும் முழுக்க முழுக்க எங்களின் சுதந்திரமான ஆளுகையில் இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் அணை கட்டப்போகும் இடத்தினால் சமஸ்தானத்திற்கு யாதொரு அனுகூலமும் இல்லை. இந்த உண்மையைப் புரிந்துகொண்டு அதைக் கிரயம் செய்துகொடுத்தால் மகிழ்ச்சி. இல்லையென்றால், குத்தகைக் காலம் முழுக்க பிரிட்டிஷ் சர்க்கார் சுதந்திரமாக ஆண்டுகொள்ள அனுமதியளிக்க வேண்டும்.”
“யுவர் எக்ஸலென்ஸி, இடத்திற்கான கிரயம் ஏழு லட்சமும், அஞ்சு தெங்கு, தலைச்சேரி கோட்டைகளையும் கேட்டிருந்தோம். பிரிட்டிஷ் சர்க்கார் எங்களின் கோரிக்கைகளை ஏற்காததால், இடத்தைக் கிரயத்திற்குக் கொடுப்பது என்பதற்குப் பேச்சே இல்லை. வருஷ குத்தகையே பேசி முடிவு செய்வோம்.”
“உங்கள் கோரிக்கையை நானோ, மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர் இன் கவுன்சிலோ மட்டும் முடிவு செய்ய முடியாது. பிரிட்டிஷ் பேரரசி வரை சென்று அனுமதி பெற்ற பிறகுதான் இறுதி முடிவெடுக்க முடியும் அய்யங்கார். நீங்கள் பேச்சுவார்த்தையைத் தொடக்கப்புள்ளிக்கே இழுத்துச் செல்லாதீர்கள். உங்கள் புழக்கத்திலேயே இல்லாமல் அடர்ந்த காட்டுக்குள் கிடக்கும் இடத்திற்கும், கடலில் வீணாய்க் கலக்கும் நீருக்கும் எவ்வளவுதான் வருமானம் எதிர்பார்ப்பீர்கள்?”
“யுவர் எக்ஸலென்ஸி, குறுக்கிடு வதற்கு மன்னிக்க வேண்டும், வீணாய்ப் போகும் என்று சொல்லாதீர்கள். அதேபோல எங்கள் புழக்கத்திலேயே இல்லாத இடமென்றும் சொல்லாதீர்கள். எங்களுடைய இடமது. இன்றல்ல, என்றைக்கு இருந்தாலும் எங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் பயன்படக்கூடும். இன்றைக்குப் பயன்பாடில்லை என்பதற்காக, நாங்கள் உங்களுக்கு விட்டுக்கொடுக்க முடியாது. எங்களுக்குத்தான் பேரியாற்றுத் தண்ணீர் அபரிமிதம். ஆனால் உங்களுக்குப் பெருத்த பலன் கொடுக்கப்போகிறதே? ஒரு லட்சம் ஏக்கருக்குப் பேரியாற்றுத் தண்ணீரைப் பயன்படுத்தப் போகிறீர்கள். ஏழு சதவிகிதம் வருமானம் வரப்போவதாகத் திட்டத்தில் குறித்துள்ளீர்கள். அதனால் எங்களுக்கு வீணாய்ப் போகிறது என்று கணக்கிடக் கூடாது. உங்களுக்குக் கிடைக்கப்போகும் பலனில் இருந்துதான் எங்களின் கோரிக்கை எழுகிறது.”
ஹானிங்டன் முகத்தில் கோப ரேகைகள் தென்படத் தொடங்கியதைப் பார்த்த பென்னி, உடனே தலையிட்டார்.
“யுவர் எக்ஸலென்ஸி, எப்போது பேச ஆரம்பித்தாலும் சிக்கலில் நிற்கும் இடம் இதுதான். கடைசியாக இந்த ஷரத்தைப் பேசுவோமா?”
ஹானிங்டன் அமைதியாக இருந்தார். உதவியாளனைப் பார்த்தார். குறிப்பறிந்த அவன் வெளியில் சென்று, மதுக்குடுவையையும் குவளைகளையும் தாங்கி உடனே உள்ளே வந்தான்.
“முதல் ஷரத்தைக் கடைசியாகப் பேசலாம், இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது மிஸ்டர் பென்னி. அடுத்ததைச் சொல்லுங்கள்” திவான்.
ஹானிங்டனின் உதவியாளன் ஒவ்வொருவருக்கும் முன்பாக மதுக்கோப்பைகளை வைத்தான். அய்யங்கார் தனக்குக் காப்பி வேண்டும் என்று சொன்னார்.
“நீர்ப்பிடிப்பிடமான எட்டாயிரம் ஏக்கர் நிலம் தவிர்த்து, அணை கட்டவும், மற்ற கட்டுமானங்களுக்கும் தனியாக நூறு ஏக்கர் நிலம் தேவைப்படும். ஆனால் எட்டாயிரம் ஏக்கர் போல், நூறு ஏக்கர் நிலம் ஒரே இடத்தில் தேவைப்படாது. கட்டுமானம் தொடங்கியபிறகு தேவைப்படும் இடத்தில் நூறு ஏக்கரை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.”
“எட்டாயிரம் ஏக்கர்தான் நம் ஒப்பந்தம். கூடுதலாகத் தேவைப்படும் இந்த நூறு ஏக்கருக்குத் தனியாகத் தொகை கொடுக்க வேண்டும்.”
திவான் சொன்னவுடன் பென்னி, “நூறு ஏக்கருக்குத் தனியாக நாம் பேசிக்கொள்ளலாம்” என்றார்.
“நீர்ப்பிடிப்புக்கு இடம் ஒதுக்கிவிட்டு அணை கட்ட இடம் கொடுக்காமல் போய்விடப் போகிறார்கள், சமஸ்தானத்துப் புத்திசாலிகள்” ஹானிங்டன் கோபத்தை நகைச்சுவையாக்கிப் பேசினார்.
சமஸ்தானத்தின் அலுவலர்கள் விரும்பாத அமைதியொன்று அங்கே நுழைந்தது.
“அணையில் தேங்கும் நீர் முழுவதும் பிரிட்டிஷ் சர்க்காருக்கு உரிமையுடையது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு அதில் உரிமையில்லை.”
“திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும் அணையின் நீர் தேவைப்பட்டால்?”
“தேவைப்படுமெனில் மதுரா டிஸ்ட்ரிக்ட்டுக்கு நாங்கள் என்னென்ன விதிகளின் அடிப்படையில் நீர் கொடுக்கிறோமோ அதே விதிகளின்படி திருவிதாங்கூருக்கும் தண்ணீர் கொடுக்கலாம். அதிலெந்த ஆட்சேபனையும் எங்களுக்கு இல்லை.”

“ஒரு ஷரத்து விவாதங்களின்றி ஏற்கப்பட்டதில் மகிழ்ச்சி.”
“மிஸ்டர் அய்யங்கார், எல்லா ஷரத்துமே விவாதங்களின்றி ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்தான். நீங்கள் உங்கள் கோரிக்கைகளை நியாயத்தோடு முன்வையுங்கள்.”
“இடத்தின் உரிமையாளர் எந்தக் கோரிக்கையை முன்வைத்தாலும் அது நியாயத்தின் பாற்பட்டதுதான் யுவர் எக்ஸலென்ஸி.”
ரெசிடென்டும் திவானும் மோதிக்கொள்ளும் விவாதங்களுக்குள் அடிக்கடி சென்று வருவதைப் பார்த்து பென்னிக்கு லேசாக பயம் வந்தது. இந்த நேரத்தில் ஹர் எக்ஸலென்ஸி குருவாயி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்.
“பென்னி, என்ன யோசனை?”
“ஒன்றுமில்லை யுவர் எக்ஸலென்ஸி...”
“குருவாயி இங்கிருந்தால் நல்லது என்றுதானே நினைத்தாய்?”
“யுவர் எக்ஸலென்ஸி...” பென்னிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.
“என்னை அறிந்தவர்கள் எல்லாரும் என்ன நினைப்பார்கள் என்று நான் சரியாகச் சொல்லிவிடுவேன். குருவாயிக்குப் பதில் இதோ இது இருக்கே, நான் என்னைச் சமன்படுத்திக் கொள்கிறேன். கவலைப்படாதே மை பாய்” என்று மதுக்கோப்பையை உயர்த்திக்காட்டினார்.
“யுவர் எக்ஸலென்ஸி ரெசிடென்டின் நோக்கம் காரியம் முடிய வேண்டும் என்பதுதானே தவிர, அவர் யாரையும் காயப்படுத்த மாட்டார் என்பதை நானும் அறிவேன் மிஸ்டர் பென்னி. நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். ஒப்பந்தம் கையெழுத்தாவதை மகாராஜா உறுதிப்படுத்தி விட்டார். அதனால் உங்களுக்குக் கவலை வேண்டாம்.”
திவான் சொன்னதைக் கேட்டு பென்னி ஆசுவாசமடைந்தார்.
“நீர்ப்பிடிப்புப் பகுதியில் இப்போது இருக்கும் மரங்கள், இனி வளரப் போகும் மரங்கள், மதிப்பு வாய்ந்த மரங்கள், விறகுக்குப் பயன்படும் மரங்கள் என எல்லா மரங்களுமே பிரிட்டிஷ் சர்க்காருக்குச் சொந்தமானவை.”
“அங்கே இருக்கிற மரத்தையும் மணலையும் கல்லையும் எடுத்தே அணை கட்டிவிட்டால், அணை கட்டப் போட்டிருக்கிற செலவினத்தில் பாதிக்குமேல் செலவாகாது போலிருக்கிறதே?” திருவிதாங்கூர் பொறியாளர் ஜேம்ஸ் வில்சன் குறுக்கிட்டார்.
“திவானைத் தவிர வேறு யாரும் பேச அனுமதி இல்லை. மகாராஜாவின் சார்பாகப் பேச அய்யங்காருக்கு மட்டுமே அனுமதி” ஹானிங்டனுக்குக் கோபம் அதிகமானது. தன் முன்னால் ஒரு இன்ஜினீயர் சகஜமாகக் கேலி பேசுவதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
“ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டிய ஷரத்துகளை நான் சொல்லுகிறேன். பிறகு அதன் மீதான கருத்துகளைச் சொல்லுங்கள். இடையில் யாரும் குறுக்கிட வேண்டாம்” பென்னி சூழலை இயல்பாக்க உடனே ஷரத்துகளை வாசிக்கத் தொடங்கினார்.
“எட்டாயிரம் ஏக்கர் நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீர் பிடிக்கும் உரிமை பிரிட்டிஷ் சர்க்காருடையது. அடுத்து, குமுளியில் இருந்து மலைக்குமேல் கட்டுமானப் பொருள்களை எடுத்துச்செல்ல வல்லக்கடவு வழியாகப் பாதையொன்று தேவை. பாதை திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குச் சொந்தமான இடத்தில் அமையும். ஆனால் இரண்டு சர்க்காரைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.”
“மலைக்குமேல் சாமான்களை எடுத்துச்செல்ல வல்லக்கடவு பாதை அவசியம்தான்.”
“யெஸ் மிஸ்டர் அய்யங்கார். பாதை போட்ட பிறகுதான் வேலை தொடங்க நாங்கள் உள்ளேயே செல்ல முடியும்.”
“ஏற்றுக்கொள்கிறேன் மிஸ்டர் பென்னி.”
“அடுத்து பிரிட்டிஷ் சர்க்காருக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் 999 வருஷங்களுக்குத் தொடரும். ஒப்பந்தத்தை இருதரப்பாரும் நீட்டிக்க விரும்பினால், மீண்டும் 999 வருஷங்களுக்குக் குத்தகையை நீட்டித்துக்கொள்ளலாம். 999 வருஷங்கள் முடியுமுன், இருதரப்பாருக்கும் ஏதேனும் ஆட்சேபனை எழுந்தால் இருதரப்பும் உடன்பட்டு ஏற்றுக்கொள்ளும் மத்தியஸ்தர்களை நியமித்து, தங்களின் முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளலாம்.”
பென்னி சொல்லி முடித்த பின்பும் திவான் ராமய்யங்காரின் முகம் யோசனையில் இருந்தது. அவர் பதிலளிக்காததால் பிறரும் அமைதியாக இருந்தார்கள்.
அப்போது குருவாயி அனைவரையும் கும்பிட்டபடி உள்ளே நுழைந்தாள். குருவாயியைப் பார்த்தவுடன் பென்னிக்கு உற்சாகமும் நம்பிக்கையும் வந்தது.
“யுவர் எக்ஸலென்ஸிக்கு வணக்கம்...” பென்னி
“பென்னி எதிர்பார்த்துக்கொண்டே இருந்தார் டியர்.”
திவானும் மற்றவர்களும் குருவாயிக்கு வணக்கம் சொல்லினர்.
“திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மகாராஜாவையே சம்மதிக்க வைத்தவராச்சே பென்னி... இனியென்ன, எல்லாம் சுபம்தான்...” குருவாயி அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்தாள்.
“தேநீர் கொடுக்கலாமா என்று நினைத்தபடி உள்ளே வந்தேன். சுறுசுறுப்பு பானத்தைத் தவிர்த்து, மனச்சாந்தி பானத்திற்குத் தாவி விட்டீர்கள் போலிருக்கிறதே?”
“யுவர் எக்ஸலென்ஸி, எல்லார்முன்பும் கோப்பைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஹிஸ் எக்ஸலென்ஸி மட்டுமே மது அருந்தினார். நாங்கள் எல்லாரும் உங்களின் தேநீருக்காகத்தான் காத்திருக்கிறோம்.”
“நல்லது. தயாராகத்தான் இருக்கிறது. உடனே வரும்” என்று சொல்லிய குருவாயி ஹானிங்டனைப் பார்த்தாள். அவர் வெண்கல மணியின் கயிற்றை இழுத்தார். வெண்கல மணிச்சத்தம் தழைந்து குறைவதற்குமுன், வெள்ளிக் கோப்பைகளும் தேநீர்க் குவளையும் சுமந்து உதவியாளன் நுழைந்திருந்தான்.
“மிஸ்டர் அய்யங்காருக்குக் காப்பியை முதலில் கொடுத்துவிடு” குருவாயி சொன்னவுடன் லேசான புன்னகையுடன் தலையசைத்தார் திவான்.
“999 வருடக் குத்தகை எதற்கென்று தெரிந்துகொள்ளலாமா யுவர் எக்ஸலென்ஸி?”
“கிரயத்திற்குக் கேட்டால் கொடுக்காமல், ஆயிரத் தெட்டுநிபந்தனைகளையும் கோரிக்கைகளையும் சொல்கிறீர்கள். உங்களைப் போன்றவர்களிடமிருந்து வேறெப்படி நிலத்தைப் பெற முடியும்? 999 வருஷம் என்று சொல்லிவிட்டால் இடம் கைக்கு வந்த மாதிரிதானே?”
‘பிரிட்டிஷ் சர்க்காரின் உள்நோக்கமாக இருக்கக் கூடும் என்ற யூகங்களையெல்லாம் உண்மைபோல இப்படிப் போட்டுடைக்கிறாரே’ என்று ஹானிங்டன் சொல்லியதைக் கேட்ட பென்னிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“ஹனி, பென்னியை அச்சுறுத்தாதீங்க... ப்ளீஸ்.”
குருவாயி சொன்னதைக் கேட்டவுடன் ஹானிங்டன் வாய்விட்டுச் சிரித்தார்.
“பென்னிக்கு பயமா? இருக்காதே! வெள்ளத்தில் இருந்து நாம் தப்பித்து வந்ததே இந்த ஒப்பந்தம் போடத்தான் என்று பென்னிக்குத் தெரியும். சரிதானே மை பாய்?”
“யெஸ் யுவர் எக்ஸலென்ஸி...”
“நீ பயப்படாதே. அய்யங்காருக்கு நான் விளக்கம் சொல்கிறேன். அய்யங்கார், நான் முதலிலிருந்து சொல்லி வருவதுதான். நீங்கள் சுதேசி அரசர்கள். பிரிட்டிஷ் சர்க்கார் உங்களுடன் ஒப்பந்தம் செய்வதில் நிறைய சட்டச் சிக்கல்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அணை கட்டும்போதும் என்னென்ன பிரச்னைகள் வரப்போகுதோ? அடர்ந்த காட்டுக்குள் எல்லாக் குற்றங்களுக்கும் வாய்ப்பிருக்கிறது. யாருமே யூகிக்க முடியாத எதிர்பாராத சிக்கல்கள் வரலாம். பிரிட்டிஷ் சர்க்கார் பேக்டரி கட்ட இடம் எடுப்பதைப்போல் அல்ல, அணை கட்ட எடுக்குமிடம். ஓரிடத்தில் பேக்டரி கட்டி வர்த்தகம் சரியாக நடக்கவில்லையென்றால் பேக்டரியைக் காலிசெய்துவிட்டு, வேறொரு இடத்திற்கு இடம் பெயர்ந்துவிடலாம். அணை விஷயம் அப்படியல்ல, காலாகாலத்துக்கும் நிலைத்து நிற்கப்போவது. 999 வருஷமென்பது திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு மட்டுமான கட்டுப்பாடு அல்ல. உங்களுக்குக் கொடுத்த உத்தரவாதங்களை மதித்து நடந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு பிரிட்டிஷ் சர்க்காரைச் சேர்ந்த எங்களுக்கும் இருக்கிறது என்பதைத்தான் இந்தக் குத்தகைக் காலம் சொல்கிறது. நீங்கள் இதற்கெல்லாம் தயங்க வேண்டாம் அய்யங்கார்.”
“மத்தியஸ்தர் சொன்னீர்களே, அவர்கள் இருதரப்பும் சேர்ந்திருக்க வேண்டுமா, இல்லை, இருதரப்பும் சாராதவர்களாக இருக்க வேண்டுமா?”
“இருதரப்பும் சாராத மூன்றாமவர் இருந்தால்தான் அதற்குப் பெயர் மத்தியஸ்தம் மிஸ்டர் அய்யங்கார்.”
குருவாயி எழுந்து ஹானிங்டன் அருகில் வந்தாள்.
“ஹனி, பென்னிக்கு இப்போதான் பதற்றம் குறைந்திருக்கு. நீங்க கூட்டிடாதீங்க.”
“நோ நோ டியர். திவான் விளையாட்டாகக் கேட்டதற்கு நானும் விளையாட்டாகச் சொன்னேன்.”
ஹானிங்டன் பென்னியை நோக்கிக் கை நீட்டினார். பென்னி அவரின் கைகளைப் பிடித்துக் குலுக்கியபோது அதில் அன்பின் ஈரமிருந்தது.
“மிஸ்டர் பென்னி, சமஸ்தானத்தின் இன்ஜினீயர்கள் மேலாய்வுக்குச் செல்ல அனுமதிப்பது பற்றி நீங்கள் இன்னும் சொல்லவில்லையே?”
“குத்தகை ஒப்பந்தத்துடன் விவாதிக்க வேண்டிய விஷயமல்லவே அய்யங்கார்?”
“இல்லை மிஸ்டர் பென்னி, குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தாகும்முன் இறுதிசெய்துகொள்ள வேண்டும்.”
“உண்மைதான். மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னரால் அதற்கான அனுமதிக் கடிதம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டதே?”
“ஆமாம் யுவர் எக்ஸலென்ஸி. ஆனால் எங்கள் சமஸ்தானத்து இன்ஜினீயர்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன.”
“ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் நீங்கள் ஆய்வு செய்யலாம் என்று கவர்னரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே?”
“அதைத்தான் சொல்ல வருகிறேன். அவர்கள் குறைந்தது ஆறு மாத காலம் அவகாசம் கேட்கிறார்கள். எட்டாயிரம் ஏக்கர் இடம் கொடுப்பதற்கான நிபந்தனைகள் முடிவானவுடன் ஒப்பந்தம் கையெழுத்துப் போடுகிறோம். ஆனால் அணை கட்டும் திட்டத்தின் மீதான எங்கள் இன்ஜினீயர்களின் ஆய்வறிக்கையைப் பிறகு சமர்ப்பிக்கிறோம்.”
“அணைக் கட்டுமானத்தைப் பற்றி உங்களுக்கு ஆராய்ச்சியே தேவை இல்லை மிஸ்டர் அய்யங்கார். அணை பற்றி ஆராய்ச்சி செய்து என்ன செய்யப்போகிறீர்கள்? பிரிட்டிஷ் சர்க்காரின் கவலை அது.” ஹானிங்டன் குறுக்கிட்டார்.
“யுவர் எக்ஸலென்ஸி, அவர்கள் ஆய்வு செய்யட்டும். நமக்கொன்றும் அதில் தடையில்லை. ஒப்பந்தம் முதலில் கையெழுத்தாகட்டும்” பென்னி குறுக்கிட்டார்.
கதவை ஒலியின்றித் திறந்துகொண்டு வாயில் காப்போன் உள்ளே வந்தான். நேராக ஹானிங்டன் அருகில் சென்றவன், குனிந்து காகித உறையொன்றை நீட்டினான்.
‘என்ன’ என்பதுபோல் பார்த்தார்.
“லெட்சுமி தம்புராட்டி அனுப்பியதாகச் சமஸ்தானத்தின் சேதிக்காரன் கொண்டு வந்தான். கூட்டம் முடியும்முன் உங்களிடம் கொடுக்கச் சொல்லி தம்புராட்டி உத்தரவாம்” பணிவாய்க் குனிந்து அரைக்குரலில் சொன்னான்.
“உறையைப் பிரித்துக் கொடு.”
கையுடன் கொண்டு வந்திருந்த சிறு கத்தியினால் கடிதத்தின் மேலுறையைக் கிழித்து, உள்ளே இருந்த தாளை எடுத்தான்.
“போகலாம்.” ஹானிங்டன் சொல்லி முடிக்குமுன் வெளியேறியிருந்தான்.
திவான் உட்பட அரங்குக்குள் இருந்த அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ‘காலையில் கிளம்பும்போது தம்புராட்டியைப் பார்த்துவிட்டுத்தானே வந்தோம், அப்போது சொல்ல முடியாத என்ன சேதியை ரெசிடென்ட்டுக்கு எழுதியனுப்பியிருக்கிறார்கள்?’ திவானுக்குள் மங்கலான யோசனை ஓடியது.
கடிதத்தைப் படித்துக்கொண்டிருந்த ஹானிங்டனின் முகத்தைப் படித்தார் பென்னி. எழுத்துகளின் மேலாகத் தாழ்ந்தும் உயர்ந்தும் பயணித்த விழிகளில் வெளிப்பட்ட உணர்ச்சிகளைப் பார்த்த பென்னிக்கு மனம் பதறியது. ‘உவப்பில்லாத ஒன்று நடந்தேறப் போகிறது’ என்று அவர் மனம் எச்சரிக்கை செய்தது.
“தம்புராட்டியைத் தவறாக வழிநடத்துபவர் யார்?” ஹானிங்டன் கோபமாகக் கேட்டார்.
திவானும் பென்னியும் அதிர்ந்தார்கள்.
“பெரும்பாடு பட்டு மகாராஜாவின் சம்மதம் பெற்ற பிறகு, ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் தன்னுடைய கோரிக்கையையும் நிறைவேற்றச் சொல்லிக் கேட்கிறார் என்பது நற்குணமல்ல.”
“என்ன விஷயமென்று சொல்லுங்கள் யுவர் எக்ஸலென்ஸி” பென்னி பதறினார்.
“எட்டாயிரம் ஏக்கர் நிலத்திற்கு ஈடாக பிரிட்டிஷ் சர்க்காரின் பேக்டரி ஒன்றைக் கொடுத்தே ஆக வேண்டுமாம். அஞ்சுதெங்கு, தலைச்சேரியைக் கொடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லையாம். தங்கச்சேரியைக் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறார்கள்.”
‘கொடுக்கிறோம் என்றும் சொல்ல முடியாது, கொடுக்க மாட்டோம் என்றும் சொல்ல முடியாது. புதிதாக வந்திருக்கிற கோரிக்கையை ரெசிடென்ட், மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னருக்கு எழுதி, கவர்னர் இந்தியாவின் வைஸ்ராய்க்கு எழுதி, கல்கத்தாவில் இருக்கும் வைஸ்ராய் லண்டனில் இருக்கும் செக்ரட்டரி ஆப் ஸ்டேட்ஸுக்கு எழுதி, அவர் பிரிட்டிஷ் அரசியிடம் விவாதித்து, கடிதம் சென்ற அதே வழியில் பதில் திரும்பி வர வேண்டும். அதற்கு எத்தனை மாதம், வருஷம் ஆகும்?’
யோசிக்க யோசிக்க பென்னிக்குத் தலைசுற்றியது.
- பாயும்