சினிமா
Published:Updated:

நீரதிகாரம் - 59 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு… ஏ அப்பு… நானும் சின்னப்பிள்ளையா இருந்து என் ஆத்தாகிட்ட வெடி கேட்டு வளந்தவன்தான், வெத்திலையைக் கொடு. வெளையாடாதே

தேக்கடி, பெரியாறு முகாம் அலுவலகம்.

கண்ணாடிக் குடுவைகளால் மூடப்பட்டிருந்த பெரிய மெழுகுவத்திகள் காற்றில் அலையாத நிலைத்த தீபத்தை ஒளிரச் செய்தன. அந்தி சாய்ந்து மூன்று நாழிகை கடந்திருந்த நேரம். அடைக்கலம் தேடி வீடுகளுக்குள் குளிர் நுழைந்துவிட்ட பொழுது. கங்காணிகள் கட்டுமானப் பொருள்கள் குவிந்து கிடந்த இடத்திற்குச் சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்தனர்.

குளிரிலிருந்து தப்பிக்க குத்த வைத்து, காதின் விளிம்பு வெளித்தெரியாதபடி தலைப்பாகையை இழுத்துக்கட்டி உட்கார்ந்திருந்தனர் கங்காணிகள். கூலியாட்கள் சிலர் ஆங்காங்கு சாக்குகளைப் போர்த்திக்கொண்டு முடங்கியிருந்தனர்.

நீரதிகாரம் - 59 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

குளிர் உறையச் செய்ததில், பொறுக்க முடியாத அந்தோணிமுத்து எழுந்து நின்று, மெதுவாகத் தன் வேட்டி நுனியில் போட்டிருந்த முடிச்சை அவிழ்த்தான்.

“என்ன வச்சிருக்கடா? குளிரு குத்தூசியா குத்துதே?” பெரியவர் ஒருவர் முணங்கினார்.

வாடியிருந்த ஒரே ஒரு வெற்றிலையை வேட்டி நுனி முடிச்சில் இருந்து பத்திரமாக வெளியில் எடுத்தான் அந்தோணிமுத்து.

“கொஞ்ச வயசுப் பையன் நீ... குளிரு தாங்குவ, நான் முட்டி செத்தவன். ஏலாம குத்த வச்சிருக்கேன். எனக்குக் குடு அப்பு” என்று பெரியவர் கேட்டதும்,

“வாட வெத்திலை வதங்க வெத்தில

வாய்க்கு நல்லால்லே

நேத்து வச்ச குங்குமப் பொட்டு

நெத்திக்கு நல்லால்லே...”

அந்தோணிமுத்து வேட்டியைத் தொடை வரை திரைத்துவிட்டுத் தாளம் போட்டுப் பாட ஆரம்பித்தான்.

நீரதிகாரம் - 59 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

அந்தோணிமுத்து, பாளையத்தில் இருந்து அணை வேலைக்காக வந்திருக்கிறான். அணை வேலை நடக்கும் தகவலை முதலில் ஊரில் தண்டோரா போட்டுச் சொல்லும்போது அவனுக்கு ஆர்வம் வரவில்லை. ‘யார் மலைமேல போய் குளிர்லயும் காத்துலயும் வெள்ளத்துலயும் கஷ்டப்படுறது’ என்று ஆர்வம் காட்டவில்லை. சந்தனத் தேவனை ஒரு நாள் போலீஸ் கச்சேரியில் பார்த்தபோது, அவன்தான், ‘டேம் வேலைக்குப் போனா ரெண்டு மடங்கு கூலி. வேளா வேளைக்குக் கஞ்சியும் ஊத்திடுவாங்க. ஊர்ல என்ன வேலை செய்றோமோ அதையே மலைமேல செஞ்சா போதும்’ என்று அவன் சொன்னதில் அந்தோணிக்கு ஆர்வம் வந்தது.

சந்தம் கட்டிப் பாடுவதில் அந்தோணிமுத்துக்கு அதிக திறமை. சின்னச் சம்பவம் நடந்தாலும் அதற்கொரு பாட்டும் சொலவடையும் தானாய் வந்துவிழும். மரம் வெட்டுவதற்காக மலைக்கு வந்த அந்தோணி, கூலியாட்கள் அழைத்து வந்து கங்காணிகளுக்கு உதவிசெய்யும் அளவிற்கு நம்பகமானவனாகிவிட்டான். இளம் வயதும் சுறுசுறுப்பும் துள்ளலும் பாட்டும் வேடிக்கையுமாக இருக்குமிடத்தைப் பொலிவுறச் செய்வதில் வல்லவன். அவன் பாட வேண்டுமென்றால் வெற்றிலை வேண்டும். வெற்றிலை வாங்கவே அவன் கூலியில் கால்பங்கைத் தயக்கமின்றிச் செலவு செய்வான்.

“வெத்தலைக்கும் சுண்ணாம்புக்கும் செலவழிச்சே தீத்துடாதே, வரப்போறவளுக்குக் கொஞ்சம் சேத்து வை அப்பு” என்று பலர் அங்கலாய்த்தாலும் பொருட்படுத்த மாட்டான்.

``பாடுறது இருக்கட்டுமப்பு. ஒரே ஒரு வெத்தலைக் காம்பக் கொடேன்.” பெரியவர் மீண்டும் இறைஞ்சினார்.

“நான் கொடிக்கால் மொதலாளி பாருங்க, எங்கிட்ட வெத்தலை கேளுங்க. நானே கள்ளத்தனமா வெத்தலையை வெளிக்காட்டாம சுருட்டி வச்சிருக்கேன்” என்று முணங்கிய அந்தோணி, வதங்கியிருந்த வெற்றிலையை மடியில் வைத்துக் குழந்தையை நீவுவதைப்போல் நீவிவிட்டான்.

“சிய்யான் கேக்குறேன், வெளயாட்டுக் காட்டுறியா?” கோபித்தார் பெரியவர்.

“நானொரு புதிர் போடுறேன், புதிரை அவிழ்த்துட்டு வெத்தலையை வாங்கிக்கோ” பெரியவரைப் போட்டிக்கு இழுத்தான் அந்தோணி.

“குளிர்ல என்னத்த சொல்ல, வாய் நடுக்குது. சரி கேளு.”

லேசாய் தொண்டையைக் கனைத்துக்கொண்டே அந்தோணி சொன்னான்;

“முத்துப்பல் கோட்டைக்குள்ள

மூணு பேர் போனாங்க,

போன யாரும் திரும்பல

ரத்தமா வெளி வருது, அது என்ன?”

“வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு… ஏ அப்பு… நானும் சின்னப்பிள்ளையா இருந்து என் ஆத்தாகிட்ட வெடி கேட்டு வளந்தவன்தான், வெத்திலையைக் கொடு. வெளையாடாதே.”

“சுலபமானது சொல்லிட்டேனா, இப்போ சொல்லுறேன்.

ஆணைக் காதுத்தண்டி,

ஆயிரம் அடை தின்னாலும்

பச்சிலை பசியடங்காது. அது என்ன?”

“ஆணைக் காதுத்தண்டி அடையா, என்னாது? ஏ கணேசா, ஒனக்கு ஏதும் புரிபடுதா?” ஆளாளுக்குக் கேட்டுப் பார்த்தார்கள். ஒருத்தருக்கும் புதிரை அவிழ்க்கத் தெரியவில்லை.

“ஒரு வெத்தலையைக் கேட்டு, இருக்கிற நாத்தண்ணியும் வத்திடும்போல. எனக்கொன்னும் வேணாம் போ அப்பு” பெரியவர் வருத்தமாய் முகத்தை வைத்துக்கொள்ள, “ஆயிரம் அடை தின்னாலும் பச்சிலை பசியடங்காது, இந்தா புடி” எனப் பெரியவரின் கையில் நன்கு நீவித் தெளிய வைத்திருந்த ஒற்றை வெற்றிலையைக் கொடுத்தான்.

அப்போது ரத்தினம் பிள்ளை வெளியில் வந்தார். வாய் நிறைய வெற்றிலையை வைத்துச் சவைத்தபடியிருந்தார். சிவந்த அவரின் உதடுகள் கோவைப்பழமாக அசைந்தது. ஒரு வெற்றிலைக்குத் தவதாயப்பட்டுக்கொண்டிருக்கும் பெரியவருக்கு, தளதளவென்று வாய்நிறைய வெற்றிலையுடன் வந்த ரத்தினம் பிள்ளையைப் பார்த்தவுடன், முகம் வாடியது. ஆளுக்கு இரண்டு வெற்றிலையைக் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்றபடி அவரின் வாயைப் பார்த்தனர் மற்ற கூலிகளும்.

கங்காணிகள் வெற்றிலையைத் தலைப்பாகைக்குள் மறைத்து வைத்திருந்தார்கள். அன்றைய கணக்குப் பார்த்துவிட்டு, பிள்ளை கிளம்பிய பிறகு, வெற்றிலையின் நடு நரம்பை உருவி, வாகாக இரண்டாகப் பிளந்து, காளவாய்ச் சுண்ணாம்பைத் தடவி, உள்ளே முழுக் கொட்டைப் பாக்கை வைத்து மடித்து, கூலிகளை மிரட்டிக்கொண்டு வெற்றிலை போட்டால்தான் வெற்றிலைக்கு மரியாதை என்பது அவர்கள் எண்ணம். சும்மா வாய்ச்சுவைக்கு வெற்றிலை போடுவது வீண். தாம் போடும் வெற்றிலை தம்முடைய ஆகிருதியின், அதிகாரத்தின் பிரதியென்று கங்காணிகள் நினைத்தனர்.

ரத்தினம் பிள்ளை மெல்லிய குரலில்தான் பேசினாரென்றாலும் வனாந்தரத்தில் பெருகி ஒலித்தது.

“அடுத்த சீசனுக்குக் கொறஞ்சது ஆயிரம் கூலியாளுங்களாவது வரணும். அறுவடை வந்துடுச்சி, வெள்ளாமையை எடுக்கணும்னெல்லாம் காரணம் சொல்லக்கூடாது. போன முறை கூலிய வாங்கிட்டு ஓடிப்போனவனையெல்லாம் கையோட புடிச்சிக் கூட்டிக்கிட்டு வர்றவனுக்கு ஓரணா தர்றேன். இந்த முறை, சீசன் முடியறப்பதான் கூலி. பார்த்துக்கிடுங்க, தொர ரொம்பக் கறாராச் சொல்லிட்டாரு.”

“கூலிய முன்பணமா குடுத்தாத்தான் சாமி வேலைக்கு வருவாங்க. வீட்ல இருக்க பொண்டு புள்ளைங்ககிட்ட காலணா, அரையணா குடுத்துட்டு வந்தாத்தானே வர்றவன் நிம்மதியா வேலை செய்வான்?” கங்காணி ஒருத்தன் சொன்னான்.

“நல்ல ரோசனை சொல்றப்பா. மொத்த அட்வான்சு துட்டையும் வீட்ல குடுத்துட்டு, மேல வந்து சாராயத்துக்கும் வெத்தலைக்கும் பாதிப்பேர் திருடப் போறாங்க. பிரச்சினையே அங்கதான். மலைக்கு வந்தமா, வேலையைப் பாத்தமான்னு இருக்க மாட்டீங்கறாங்க. செலவுக்குக் கொஞ்சம் கையில துட்டு வச்சிக்கணும்னு சொல்லிடு...” காட்டமாகச் சொன்னார் பிள்ளை.

“சொல்லிப் பாக்குறோம் எசமான்...”

“சொல்லிப் பாக்குறதா? அதான் தொரையோட உத்தரவு. கறாராச் சொல்லிடு. டேம் வேலைக்குன்னு வந்துட்டு ஏலத்தோட்டத்துல எறங்குறது, கஞ்சா பறிக்கப் போறதுன்னு இருக்கக் கூடாது, பாத்துக்கிடுங்க.”

“சரிங்க சாமி.”

“கூலிகள கூட்டிக்கிட்டு வர்ற நாலு கங்காணிக போதும். ஒருத்தர் ரெண்டு பேர் கூடலூர்லயும் கம்பத்திலயும் மாட்டு வண்டிகளத் தோது பண்ணுங்க. வர்ற சீசனுக்கு வேலை ஆரம்பிச்சிடுவாங்க. குருவனூத்துல இருக்க சுண்ணாம்ப மேல கொண்டாரணும். மாட்டு வண்டிக்கும் வண்டிக்காரனுக்கும் சேர்த்துக் கூலி பேசுங்க. அப்புறம் இங்க வந்துட்டு, மாட்டுக்குத் தனிக் கூலி, வண்டிக்குத் தனி, வண்டி ஓட்டுறவனுக்குத் தனிக் கூலின்னு ஒறண்ட இழுக்கக் கூடாது. கொறஞ்சது அம்பது வண்டி வரணும். வெரசா பண்ணுங்க” என்று சொல்லி, ரத்தினம் பிள்ளை உத்தரவிட்டார். சட்டென்று குரலைத் தாழ்த்தி, “சிலும்பி இருக்காப்பு, இருந்தா ஒன்னு குடு. தொரமாருங்க உள்ள இருந்து வர்றதுக்குள்ள ஒரு இழுப்பு இழுப்போம். எலும்பு வரைக்கும் நடுக்குதே குளிரு?” என்று கங்காணிகளிடம் கேட்டார்.

‘இருக்கு’ என்றால் ‘ஏன் நீயாகக் கொடுக்கவில்லை’யென்று திட்டுவார். இல்லையென்றாலும் ‘சிலும்பியத் தோது பண்ணாம பெருசா என்ன காரியம் செஞ்ச’ என்றும் பாய்வார். ‘இருக்கு என்றும் இல்லையென்றும் ஒரே நேரத்தில் எப்படிச் சொல்வது?’ என்று தலையைச் சொறிந்தார்கள் கங்காணிகள்.

கஞ்சா இலையைச் சுட்டாவது முகர்ந்தால்தான் மலைக் குளிரைத் தாங்க முடியும். அசராமல் மேடு, பள்ளம் ஏறி இறங்க முடியுமென்று எப்போதுமே கைவசம் வைத்திருப்பார்கள். கொஞ்சமாக இடுப்பு வேட்டி நுனியிலோ, தலைப்பாகையிலோ மறைத்து வைத்திருந்தால், மலை ஓவர்சீயரிடம் அகப்பட்டாலும் ஒன்றும் சொல்ல மாட்டார். கைப்பையிலோ சின்ன முடிச்சாகவோ கஞ்சா இலையை வைத்திருந்தால், தொலைத்துவிடுவார்கள். பாரஸ்ட் சட்டம் வந்த பிறகு, ஒவ்வொரு இடத்திலும் நிறுத்திச் சோதனை செய்யாமல் விடுவதில்லை. அதற்கு பயந்தே கங்காணிகள், கூலிகளிடம் கொடுத்து ஆளுக்குக் கொஞ்சம் வைத்துக்கொள்ளச் சொல்வது. கூலிகளும் கஞ்சா விஷயத்தில் விவரம்தான். கங்காணிகள் கொடுக்கும் கஞ்சா இலையை, அடையாளம் வைத்து ஒரு மரத்தில் மறைத்து வைத்துவிட்டு வந்துவிடுவார்கள், திரும்பிப் போகும்போது எடுத்துக்கொள்ளலாம் என்ற திட்டத்தில். கங்காணிகள் கூலிகளின் தலைப்பாகையை வாங்கிப் பார்த்து ஏமாறுவார்கள். ‘எப்படி அவ்வளவு இலையும் தீர்ந்துபோச்சு?’ என்றால், ‘வழியில விழுந்துடுச்சோ என்னமோ தெரியலையே?’ என்று கதையை முடித்துவிடுவார்கள். ஒன்றிரண்டு முறை பொறுத்துப் போகும் கங்காணிகள், பலநேரம் கூலிகளைக் கடுமையாகத் தண்டிப்பார்கள். மலையில் இருந்து மறைத்து எடுத்துப் போகச் சொல்லியிருந்த இலையைக் கூலியொருவன் சாப்பிட்டுவிட்டான் என்று ஒரு கங்காணி ஓங்கி உதைத்திருக்கிறான். நிலை தடுமாறிய கூலி, மலையிலிருந்து விழுந்துவிட்டான். அவன் உடலைக்கூடக் கண்டெடுக்க முடியவில்லை.

மலைக்குள் ஊடுருவிய மனிதர்கள் வழி, அபின், கஞ்சா, சாராயமும் சேர்ந்தே ஊடுருவிவிட்டன.

ரத்தினம் பிள்ளை சிலும்பியில் வாய் வைத்துப் புகையை உள்ளிழுத்தார்.

“திவான் ராமய்யங்கார் ரெசிடென்டுடன் ஒத்து வருபவர். குத்தகை ஒப்பந்தத்திற்குப் பெரும் முயற்சியெடுத்தவர். திடீரென்று பதவி விலகப் போகிறார் என்று கேட்டவுடன் பதறிவிட்டேன். புதிதாக வரும் திவான் எவ்வளவு தூரம் உதவியாக இருப்பாரென்று சொல்ல முடியாது” என்று யோசனையோடு பென்னி சொன்னார்.

“உதவித்தானே ஆகணும் பென்னி, உதவாமல் எங்கு போகப்போகிறார்கள்? கவலைப்படாதே. நீ இங்கிலாந்து கிளம்பும் நேரத்தில் எல்லா விஷயத்தையும் போட்டுக் குழப்பாதே. இங்கு நடக்க வேண்டிய வேலைகளை எங்கள் மூவருக்கும் பிரித்துக் கொடு. அடுத்த சீசனுக்கான வேலையை எப்போது தொடங்கலாம், முதலில் எந்த வேலையைத் தொடங்குவது என்று எல்லாம் சொல். நாங்கள் குறிப்பெடுத்துக்கொள்கிறோம்” என்றார் டெய்லர்.

“இதென்ன டெய்லர், உங்க மூன்று பேருக்குமே நல்லாத் தெரியும். நான் என்ன புதுசா விளக்கணும்?”

“மிஸ்டர் பென்னி, ஒருமுறை வேலைகளை ஒழுங்கு செய்துகொள்வது நல்லதுதான்” மெக்கன்சி.

“சரி, பேசிடலாம்” என்ற பென்னி, பேசிக்கொண்டே அகன்ற வரைபடத்தாளொன்றை அங்கிருந்த சாய்வு மேசையில் பொருத்தினார்.

“வரும் ஜனவரியில் மழையில்லாமல், காலநிலை ஏதுவாக இருந்தால் ஒருவாரம் முன்கூட்டியே ரத்தினம் பிள்ளைக்குத் தகவல் சொல்லுங்கள். கங்காணிகள் கீழே சென்று கூலிகளைக் கூட்டி வருவார்கள். போன முறை நிறைய பேர் முன்கூட்டியே கொடுத்த கூலிகளை வாங்கிக்கொண்டு வேலை செய்யாமல் கிளம்பிவிட்டனர். இம்முறை வேலை செய்த நாள்களைக் கணக்கில் வைத்து, சீசன் முடிகிற அன்றுதான் கூலி கொடுக்க வேண்டும்.”

“யெஸ் பென்னி. மலைமேல் வந்த கூலிகளை, வேலையில்லாத நாள்களில் சமாளிப்பதுதான் பெரிய தலைவலி. ஏலத்தோட்டங்களுக்குள் கூலிகள் நுழைந்துவிட்டார்கள் என்று திருவிதாங்கூர் போலீசு இரண்டுமுறை வந்து மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறது” லோகன்.

“அணை கட்டிமுடிக்கும் வரை புதுப் புதுப் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். நாமொன்றும் தடுத்து நிறுத்த முடியாது. அணை கட்டுமிடம், சுரங்கம் வெட்டுமிடம், சுரங்கத்திற்குத் தண்ணீர் கொண்டுபோகும் கால்வாய் வெட்டுமிடம், மூன்று இடங்களிலுமே அடுத்த பருவத்தில் வேலை தொடங்க வேண்டும். லோகன், நீ சுரங்கம் வெட்டும் வேலையைக் கவனித்துக் கொள். மலையின் இரண்டு பக்கமிருந்தும் ஒரே நேரத்தில் சுரங்கம் வெட்ட ஆரம்பிக்க வேண்டும்.”

“கூலிகளுக்குக் குடிசைகள் தயாராகிவிட்டால் பெரிய நிம்மதி. பாவம், குளிரில் அவர்களால் சமாளிக்க முடியவில்லை.”

“ஆமாம் டெய்லர். நதியுடைய இடக் கரை முழுக்க கூலிகளுடைய குடிசைகள் இருக்கட்டும். மூங்கில் கழிகளும் மரச் சாரங்களும் தயாரா இருக்கும். இங்க பாருங்க...” என்று பென்னி, ஒரு தாளில் வரைந்து காட்டினார்.

“நதியோட வலப்புறம்தான் நீரை வெளியேற்றப் போகிறோம். வெளியேறும் நீர் நேராக, இந்த இடத்தில் வந்து சேரணும்” என வரைபடத்தாளில் அந்த இடத்தை வட்டமிட்டுவிட்டு, அடுத்து, “இந்த இடத்தில்தான் நாம் டர்பன் வைக்கணும். மலைமேல் டர்பன் சுழற்சியிலிருந்து மட்டும்தான் நமக்குத் தேவையான மின்சாரம் பெற முடியும். மின்சாரம் எடுத்த பிறகு வெளியேறும் நதி நீர், மீண்டும் தன்னோட போக்கில், நேராகச் செல்லும். டர்பைனை ஒட்டித்தான் நாம் பெரிய கூடாரமோ, கூரை வேய்ந்தோ ஒரு கட்டடம் கட்டணும். அங்குதான் வெல்டிங் செய்வது, இரும்பு அடிப்பது எல்லாம்.

அதற்குப் பக்கத்திலேயே சுண்ணாம்பு அரைக்குமிடம். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு...” என ஐந்தாறு இடங்களை வட்டமிட்ட பென்னி, “இங்கெல்லாம் சுண்ணாம்பு அரைக்க சின்னச் சின்னக் கூரைகள் போட்டுடலாம். சுண்ணாம்பு அரைக்கறதுக்குப் பக்கத்துலேயே மாட்டுக் கொட்டகை இருக்கட்டும். அரைக்கிற மாடுகளை முறை மாத்தணும்னாலும் பக்கத்திலேயே கொட்டகை இருந்தால் நல்லது. மாட்டுக் கொட்டகைகளுக்குப் பக்கத்தில் சுண்ணாம்பு அரைக்கிற கூலியாட்கள் குடிசைகள் இருக்கட்டும். வலது கரையோரம், பொதுவாகவே மேஸ்திரி, கொத்தனார், ப்ளம்பர், ஆசாரி, வெடி வைப்பவர்கள் இவர்களோட குடிசைகள் அடுத்தடுத்து இருப்பது நல்லது. பெரியாறு நதியுடைய வலக்கரையில் இருக்கிற குன்றுகளையும் மலைகளையும்தான் கல்லுக்காக உடைக்கப்போகிறோம். வொர்க் ஷெட்டும் வலப்புறம் இருப்பதால், அவர்களெல்லாம் அருகருகே இருப்பது நல்லது.”

“பென்னி, வரும் சீசனில் நமக்கு வீடு கட்ட ஆரம்பித்துவிடலாமா?”

“கட்டாயம். இடது கரையோரம், கூலியாட்களுக்கு மேலே சின்னக் குன்று இருக்கே, அங்கு வரிசையாக நம் ஐந்து பேருக்கும் சின்னச் சின்னதாக வீடு கட்டிடலாம்.”

“சின்னதா?” அதிருப்தியோடு லோகன் கேட்க,

“மிஸ்டர் லோகன், அங்கென்ன உல்லாசப் பயணமா போகப்போறோம்? குளிருக்கு முடங்கிக்கொள்ள ஒரு கட்டிலும், பிரார்த்தனை செய்ய சிறு அறையும் இருந்தால் போதாதா?” என்றார் டெய்லர்.

“எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினீயர் ஒருத்தர், அசிஸ்டென்ட் இன்ஜினீயர் இரண்டு பேர், ஐந்து ஓவர்சீயர்கள், இரண்டு அக்கவுன்டென்டுகள், ஹாஸ்பிடல் அப்போதகிரி ஒருத்தர், அசிஸ்டென்ட் ஒருத்தர்... இவங்களுக்கெல்லாம் நம்முடைய வரிசையில் இருக்கட்டும்.”

“பென்னி, இந்த அக்கவுன்டென்டையும், கிளார்க்கையும், தபால் காப்பி எடுக்கிற ரைட்டரையும் மட்டும் தனிக் குன்றில் போட்டுடுங்க. அவங்க ஒவ்வொரு அணாவுக்கும் கணக்கெழுதி சரி செய்வதற்குள் நமக்கு மூச்சுத் திணறிடும்” டெய்லர்.

“அவங்க இல்லைன்னா, அந்த வேலையையும் சேர்த்து நாம்தான் செய்யணும்.”

“ஹாஸ்பிடலுக்கு எஸ்தரை ஆயாவாகப் போடுங்க பென்னி.”

“ஆமாம் லோகன். அந்தப் பெண் இருந்தால்தான் கூலிகள் வைத்தியம் பார்த்துக்க வருவாங்க. இல்லைன்னா ஊசி, மாத்திரைன்னு பயந்துகிட்டு ஒரு ஆள் ஆஸ்பத்திரி பக்கம் வர மாட்டான்.”

“நம்மோட குதிரை லாயங்கள், கோடவுன்கள் கட்டும் பொறுப்பெல்லாம் டெய்லரிடம் விட்டுவிடுகிறேன். கட்டும் நேரத்தில் எந்த இடம் வசதியோ அதற்கேற்ற மாதிரி திட்டத்தில் சிறிய மாற்றங்கள் செய்துகொள்ளுங்கள். கூலிகள் குடிசையில் வழக்கமான 9x10 என்றிருக்காமல் கொஞ்சம் அளவு கூட்டிக் கொள்ளுங்கள். குடும்பத்தோடு இருக்கிறவர்கள் அங்கு தங்கிக்கொள்ளட்டும். ஹெட் கூலி, ப்யூன், லஸ்கர் என ஒவ்வொருவருக்குமே அவரவர் நிலைக்கு ஏற்ப வீடு ஒதுக்குங்கள். பிரிட்டிஷ் வேலையாட்களைச் சுதேசிக் கூலிகளோடு சேர்க்க வேண்டாம். தேவையில்லாமல் பதில் சொல்ல வேண்டியிருக்கும். பிரிட்டிஷாருக்கு 11x12 அளவு வீடு இருக்கட்டும். மற்றபடி, நீண்ட கூடங்கள் கொண்ட 30x8 இருக்கிற மாதிரி தனித்தனிக் குடில்கள் கொஞ்சம் போடலாம். கூலிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது, பத்துப் பதினைந்து பேராக ஓரிடத்தில் தங்க வைத்துக்கொள்ள நீண்ட கூடங்கள் உதவும்.”

“பென்னி, தேக்கடியிலும் அணைகட்டுமிடத்திலும் அவசியம் ஒரு ரெஸ்ட் ஹவுஸ் அல்லது இன்ஸ்பெக்‌ஷன் பங்களா தேவை. கவர்னர் கன்னிமாரா வந்த அன்று மிகவும் சிரமப்பட்டார். எப்படியும் மாதத்திற்கொருவராவது அணை வேலைகளைப் பார்வையிட வருவார்கள்.”

“ஏற்கெனவே திட்டத்தில் இருக்கு மெக். இந்த வருஷ ஒதுக்கீட்டில் அதற்குப் பணம் ஒதுக்கப்படவில்லை. நம்மிடம் சென்ற பருவத்திற்கான கால்வாய் வேலை ஒதுக்கீட்டில் பத்தாயிரம் ரூபாய் மீதமிருக்கிறது என்றாலும், கட்டடம் கட்ட அந்தத் தொகையைப் பயன்படுத்த முடியாது. அடுத்த ஒதுக்கீட்டில் பணம் வந்துவிடும். அப்போது திட்டமிடலாம்.”

“பென்னி, எனக்குத்தான் கவலையாக இருக்கிறது.”

“உன்னைத்தான் சூப்பிரண்டெண்டாக நியமிக்கப்போகிறார்கள் டெய்லர்... கவலை, பயமென்று சொன்னால் நான் இங்கிலாந்து போக முடியாது.”

“கூலிகளைச் சமாளிப்பதுதான் எனக்கு பயம். இரண்டாவது, ரிப்போர்ட் எழுதுவது.”

“வேறு வழியில்லை டியர் டெய்லர். செய்துதான் ஆகவேண்டும். இதைப் பொதுப்பணித்துறையின் வேலையாக மட்டும் நினைக்காமல் இருந்தால் நிச்சயம் செய்ய முடியும்.”

“ஓ... மிஸ்டர் பென்னி. நான் அந்தத் துறையின் சாதாரண எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினீயர். அதற்குமேல் வேறென்ன சொல்ல முடியும்? மலையில் வேலை செய்வதற்காக இரு மடங்கு அலவன்ஸ் கேட்கும் ஊழியன். அவ்வளவுதான்.”

நீரதிகாரம் - 59 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

டெய்லர் சொன்னவுடன், பென்னி எழுதிக்கொண்டிருந்த பேனாவையும் தாளையும் வைத்துவிட்டார். ஜன்னலுக்கு வெளியில் இறங்கிக்கொண்டிருந்த இருட்டைப் பார்த்தார்.

“டெய்லர் சொல்வது சரிதானே மிஸ்டர் பென்னி?” மெக்கன்சி.

“சரிதான். திண்டுக்கல் ரேஞ்ச் எக்ஸ்க்யூட்டிவாக இருக்கும்போது பெரியகுளம் தாண்டினாலே இரு மடங்கு ஹில் அலவன்ஸ் கேட்டு, சூப்பிரண்டெண்டிங் இன்ஜினீயருடன் சண்டையிட்டிருக்கிறேன். அலவன்ஸ் கேட்பது, ஃபர்லோ கேட்பதெல்லாம் தனி. சில காரியங்கள் நம்மால்தான் முடியுமென்று இருக்கும். அதை நிறைவேற்ற முடியாமல் சந்தர்ப்பச் சூழல்கள் பின்னுக்கு இழுக்கும். ஆனாலும் அந்தக் காரியம் நம்மால்தான் செய்து முடிக்கப்படும். இந்தப் பெரியாறு அணையை நான் அப்படித்தான் நினைக்கிறேன்.”

பென்னியின் முகம் சிந்தனைவயப்பட்டதைப் பார்த்து டெய்லருக்குச் சற்று கவலை வந்தது. ‘தன்னுடைய வார்த்தை பென்னியைக் காயப்படுத்திவிட்டதோ’ என்று.

“சாரி பென்னி...”

“பரவாயில்லை டெய்லர். மாயன் சொன்னது மாதிரி இந்த வேலைக்கு வர்ற ஒவ்வொருத்தருக்குமே இதோட முக்கியத்துவம் தெரியணும், கூலியா இருந்தாலும், இன்ஜினீயரா இருந்தாலும், கங்காணியா இருந்தாலும். ஒரே ஒரு விஷயம் மட்டும் நினைவில் இருக்கட்டும், இந்த அணையை நம்முடைய தொழில்நுட்பத்தால் மட்டும் கட்டி முடிக்க முடியாது. நதியுடைய சமநிலை, காட்டின் பருவங்கள், இந்தக் காடு, கூலிகள், நம் சர்க்கார், திருவிதாங்கூர் சமஸ்தானம் எல்லாம் ஒரே புள்ளியில் கலந்து நிற்கணும். திவான் பதவி விலகுகிறார்னு சேதி வந்தபோது நான் அதைரியம் கொண்டது அதனால்தான். இந்தச் சக்கரத்தில் இருந்து ஒரு ஆரமும் விலகக் கூடாது. இன்னும் ஏழெட்டு வருஷம் நாம் எல்லோருக்குமே ஆதார சிந்தனை இதுதான். இந்த அணையைக் கட்டிமுடிச்சிட்டா இதில் வேலை செய்த ஒருத்தருக்கும் வேறொரு நற்காரியம் தேவைப்படாது. வாழ்நாளுக்கு இது பேர் சொல்லும்.”

பென்னி பேசி முடித்த பிறகும் அமைதியாக இருந்தார்கள் மூவரும்.

“பென்னி, நீங்க உணர்ச்சிவசப்பட்டுப் பேசினால்லாம் நல்லா இல்லை. எப்பவும்போல் கோபமா, மிரட்டலா சொன்னாத்தான் நல்லாருக்கு. பாருங்க, ஒவ்வொருத்தருக்கும் முகம் சுருங்கிடுச்சி. கனவான்களே, நம்முடைய இரவு உற்சவத்தைத் தொடங்கலாமா?” மெக்கன்சி சூழலின் இறுக்கம் தணிக்க முயன்றார்.

“உற்சவம் தொடங்கணும் என்றாலே, பென்னியின் புராணமொன்றை எடுத்தால் தானாக வந்துவிடப்போகிறது” லோகன்.

“மூத்தவர்களிடம் பணிவும், கண்ணியமும் காட்ட வேண்டுமென்ற பிரிட்டிஷ் கலாசாரத்தைக் காற்றில் விட்டுவிடாதீர்கள் நண்பர்களே. நானே இந்தக் குழுவின் தலைவனும் மூத்தவனும் ஆவேன்” என்று சொல்லி, பென்னி தப்பிக்கும் முயற்சியில் நின்றார்.

“எம்மை ஆசீர்வதியுங்கள், தனயனே...” டெய்லர் தன் கால்களை இணைத்து, பிரிட்டிஷ் முறைப்படி, நின்ற நிலையில் அமர்வதுபோல் உடலை அமிழ்த்தி எழுந்தார்.

பென்னி, உதவியாளனை அழைத்தார்.

“இன்று எந்த ஊருக்கு நாம் செல்கிறோம் கனவான்களே?” லோகன் சத்தமாகக் கேட்டார்.

உதவியாளன் மதுக்குவளையையும் கோப்பைகளையும் கொண்டுவந்து வைத்தான்.

கால் கோப்பையளவிற்கு நிரப்பிக்கொண்ட மதுவுடன், அறைக்குள் நடமாடத் தொடங்கியவர்கள், ஒவ்வோரிடத்தில் அமர்ந்தார்கள்.

“பென்னி, நார்த் ஆர்க்காட்டில் நீங்கள் வேலை செய்தீர்கள்தானே? அப்போது, அந்த முனிசிபல் சேர்மனைப் படுத்திய பாடு பற்றி டிபார்ட்மென்டில் வீரதீரமாகப் பேசுகிறார்களே?”

“அதில் வீரதீரம் ஒன்றுமில்லை மெக். சீப் செக்ரட்டரியிடம் பாட்டு வாங்கியதுதான் மிச்சம்.”

“பரவாயில்லை சொல்லுங்க. வீரதீரமா என்று நாங்க சொல்கிறோம்.”

“அவன் ஒரு அயோக்கிய ஓவர்சீயர். வழக்கமாக ஜமீன்தார், பண்ணையார், பெரிய நிலச்சுவான்தார்கள் வயல்களின் நிலவரிகளைத் தாசில்தார் வசூலித்துவிடுவார். கால் காணி, அரைக் காணி நிலங்கள் வைத்திருக்கிற ரயத்துகளின் வரி வசூலை லஸ்கர்கள் செய்து, ஓவர்சீயரிடம் கொடுத்து வைப்பார்கள். ஓவர்சீயர் டிஸ்ட்ரிக் இன்ஜினீயரிடம் கொடுத்து, கருவூலத்தில் கட்ட வேண்டும். நான் நார்த் ஆர்க்காட் டிஸ்ட்ரிக் இன்ஜினீயராக இருந்தபோது, ஐந்தாவது சர்க்கிளின் சூப்பிரண்டெண்டிங் இன்ஜினீயர் ஃபர்லோவில் இங்கிலாந்து போயிருந்தார். எனக்கு ஆக்டிங் பொறுப்பு கொடுத்திருந்தார்கள். அந்தச் சமயத்தில் பணம் வசூலித்து வைத்திருந்த அந்த ஓவர்சீயர் பணத்தைக் கருவூலத்தில் கட்டாமல் ஏமாற்றிவிட்டான். இரண்டு முறை ஏமாற்றிவிட்டு, வேலூர் முனிசிபல் ஆபீசுக்கு ஓவர்சீயராக டெபுடேஷனில் போய்விட்டான். என்னுடைய கவனத்திற்கு வந்தபிறகு, நான் அவனை வேலையில் இருந்து நீக்கிவிட்டு, வேறொருத்தரை நியமித்தேன். அவ்வளவுதான்.”

“அதெப்படி, அவ்வளவுதான். விவகாரம் சூடுபிடித்ததே இதற்குப் பிறகுதானே? அதைச் சொல்லுங்கள்.” மெக்கன்சி விடவில்லை.

ஒரு மிடறு மதுவருந்திய பென்னி, ஜன்னலோரம் வந்து நின்று, கவிழும் இருட்டைப் பார்த்தார்.

“எங்கு சென்றாலும் என்னுடைய வேலையில் தலையிட யாராவது ஒருத்தர் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்பது வாடிக்கைதானே, இப்போது போய்லோ செய்வதைப்போல்?”

“என்னதான் செய்தீங்கன்னு சொல்ல மாட்டீங்களா?” மெக்கன்சி.

“பொழுது போகலைன்னா குருவனூத்துக்குப் போய் சுண்ணாம்பு ஏற்றுவதற்குக் கழுதைகள் கேட்கச் சொல்லியிருந்தேன். மூணாற்றில் இருந்து வர வேண்டுமென்றார்கள். அதைப் போய்ப் பார்த்துவிட்டு வா மெக்.”

“எங்களுக்கு உண்மை தெரிஞ்சாகணும்...” மூவரும் ஒரே குரலில் கேட்டார்கள்.

“இப்போதைக்குச் சொல்ல முடியாது. அது பெரிய கதை. என்றாவது வேலை நெருக்கடியாக இருக்கும்போது சொல்கிறேன்.”

“நெருக்கடிதானே, அதுதான் இந்த இருட்டு மாதிரி நம் வேலைக்குள் நிரந்தரமாக வந்துவிட்டதே? எப்போதும் கூடவே இருக்கிறது. நீங்கள் உங்கள் கோபக்கதையைச் சொல்லுங்கள்.”

“வேலூர் முனிசிபாலிட்டியின் சேர்மன், அந்த ஓவர்சீயரை டிஸ்மிஸ் செய்ய எனக்கு அதிகாரமில்லையென்று சொன்னார்.”

“ஏன் அப்படிச் சொன்னார்?”

“அந்த ஓவர்சீயர் முனிசிபாலிட்டியில்தானே டெபுடேஷனில் வேலை செய்தார்?”

“ஒரு டிபார்ட்மென்ட் தாண்டி இன்னொரு டிபார்ட்மென்ட், ஓகோ... வாய்ப்பே இல்லையே...” மூவரும் கதை கேட்க உற்சாகமானார்கள்.

மேல்மலையின் தனிமையில், காத்திருக்கும் வேலையின் அழுத்தம் தணிக்க, வலிந்து வரவைத்துக்கொண்ட மகிழ்ச்சியில் நள்ளிரவு கடந்தும் மூவரும் பேசித் தீர்த்தார்கள்.

அன்றைய இரவு பேரமைதியில் திளைத்தது.

- பாயும்