Published:Updated:

நாங்களும் தற்கொலை செஞ்சுக்குறதை தவிர வேற வழியில்ல!

தீக்குளிப்பு
பிரீமியம் ஸ்டோரி
தீக்குளிப்பு

நெல்லை கந்துவட்டி தீக்குளிப்பு சம்பவத்தில் தொடரும் மிரட்டல்கள்... கதறும் குடும்பம்!

நாங்களும் தற்கொலை செஞ்சுக்குறதை தவிர வேற வழியில்ல!

நெல்லை கந்துவட்டி தீக்குளிப்பு சம்பவத்தில் தொடரும் மிரட்டல்கள்... கதறும் குடும்பம்!

Published:Updated:
தீக்குளிப்பு
பிரீமியம் ஸ்டோரி
தீக்குளிப்பு

கடந்த 2017, அக்டோபர் 23-ம் தேதி, கந்துவட்டிக் கொடுமையால் தென்காசி அருகேயுள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து - சுப்புலட்சுமி தம்பதி, தங்களின் இரு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் நடந்தது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே நடந்த அந்தக் கொடூரம் அப்போது நாட்டையே உலுக்கியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத நிலையில், அவர்களைக் கந்துவட்டி கும்பல் மீண்டும் மிரட்டுவதாகப் புகார் எழுந்திருக்கிறது!

கோபி
கோபி

சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், வழக்கு இன்னும் முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டிருப்பதாக உயிரிழந்த இசக்கிமுத்துவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகிறார்கள். இது தொடர்பாக நம்மிடம் பேசிய இசக்கிமுத்துவின் தம்பி கோபி, ‘‘புது வீடு கட்டுறதுக்காக எங்க அண்ணன் ஊருக்குள்ள சிலர்கிட்ட கடன் வாங்கினாரு. அப்படி, பக்கத்து வீட்டுல வசிக்கும் தளவாய்ராஜின் மனைவி முத்துலட்சுமிகிட்ட ஒண்ணே முக்கால் லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்காரு. அந்தக் கடனுக்காக ரெண்டு லட்சம் ரூபாய் வரை திருப்பிக் கட்டிட்டாரு. ஆனாலும், அசல் குறையாம அப்படியே இருக்குறதா சொன்னதால, தொடர்ந்து வட்டி கட்டிக்கிட்டு வந்திருக்காரு. ஒரு கட்டத்துல எங்க அண்ணனால வட்டி கட்ட முடியலை. அதனால தளவாய்ராஜ், அவரோட மனைவி முத்துலட்சுமி, அப்பா காளி, தம்பி கார்த்திகேயன்னு ஒட்டுமொத்தக் குடும்பமும் சேர்ந்து எங்க அண்ணனுக்கு நெருக்கடி கொடுத்திருக்காங்க. அசிங்கமாப் பேசினதால, அவரு கேரளாவுக்குப் போயி கூலி வேலை செஞ்சு வட்டி கட்டினாரு. சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம் தளவாய்ராஜ் குடும்பத்தைச் சேர்ந்தவங்க அசிங்கமாப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததால பயந்துபோய் போலீஸ்ல புகார் செஞ்சுருக்காரு. ஆனா, அவங்க நடவடிக்கை எடுக்கலை. அதனால, நெல்லை மாவட்ட கலெக்டர்கிட்ட நாலு தடவை மனு கொடுத்திருக்காரு. அந்த மனு எல்லாமே லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு வந்திருக்கு. ஆனா, போலீஸும் சேர்ந்து அண்ணனை மிரட்டியிருக்காங்க.

கடன் கொடுத்தவங்களும் போலீஸும் சேர்ந்து நெருக்கடி கொடுத்ததால மனம் உடைஞ்சிருந்த அண்ணன், அஞ்சாவது தடவை மனு கொடுக்குறதுக்காக கலெக்டர் ஆபீஸுக்குக்குப் போயிருந்தப்ப குடும்பத்தோட தீக்குளிச்சிட்டார். நெல்லை ஜி.ஹெச்-சுல சிகிச்சையில இருந்தப்ப, எங்க அண்ணனும் மதினியும் எல்லா விவரத்தையும் மரண வாக்குமூலமா கொடுத்திருக்காங்க.

நாங்களும் தற்கொலை செஞ்சுக்குறதை தவிர வேற வழியில்ல!

கைதுசெய்யப்பட்ட தளவாய்ராஜ் குடும்பத்தைச் சேர்ந்த நாலு பேரும் இப்போ ஜாமீன்ல வந்துட்டாங்க. மாவட்ட மாஜிஸ்ட்ரேட் கோர்ட்ல வழக்கு நிலுவையில இருக்கு. எதிர்த்தரப்புக்கு ஆதரவா உள்ளூரைச் சேர்ந்த அ.தி.மு.க மாநில நிர்வாகி ஒருத்தர் இருக்காரு. அதனால, எனக்கும் எங்க குடும்பத்துக்கும், போன்லயும் நேர்லயும் நிறைய மிரட்டல் வந்துக்கிட்டிருக்கு. கேஸைக் கண்டுக்காம இருக்கச் சொல்லி மிரட்டுறாங்க. அதனால, எங்களுக்குப் பாதுகாப்பு கேட்டு தென்காசி கலெக்டர்கிட்ட புகார் செஞ்சேன். அதை விசாரிச்ச போலீஸ் இன்ஸ்பெக்டர், என்னைக் குத்தம் சொன்னாங்களே தவிர, எங்க தரப்பு நியாயத்தைக் கேட்கவே இல்லை. அந்த அளவுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கறவங்களோட சப்போர்ட் கந்துவட்டிக் கும்பலுக்கு இருக்கு’’ என்று ஆதங்கப்பட்டார்.

இசக்கிமுத்து குடும்பத்தினர் தீக்குளித்த சம்பவம் தொடர்பான வழக்கை, விரைவாக விசாரிக்கக் கோரி அவரின் தந்தை பலவேசம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். தங்களுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பது பற்றி நெல்லை மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்துள்ளார்கள். பலவேசத்திடம் பேசினோம். ‘‘என் மகனும் குடும்பமும் தீயில வெந்த பிறகும், நிறைய நெருக்கடி வந்துக்கிட்டிருக்குய்யா... கந்துவட்டி கும்பலும் அவங்களுக்கு ஆதரவா இருக்குறவங்களும் செல்வாக்கு உள்ளவங்க. அதனால, எங்க மேல ஏதாவது பொய்ப்புகார் கொடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைச்சு மிரட்டுறாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல வெத்துப் பேப்பர்ல கையெழுத்து கேட்டாங்க. நான் மறுத்ததால என்மேல போலீஸ்காரங்க கோபப்பட்டாங்க. மவனும் பிள்ளைகளும் உயிரிழந்ததை நினைச்சு கவலைப்பட்ட என் மனைவி பேச்சியம்மாளுக்கு நெஞ்சுவலி வந்துருச்சு. அவளுக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுக்கக்கூட பணமில்லை. எங்களைக் கந்துவட்டி கும்பல் இன்னமும் மிரட்டினா, நாங்களும் தற்கொலை செஞ்சுக்குறதைத் தவிர வேற வழியில்லை’’ என்று கலங்கினார்.

நாங்களும் தற்கொலை செஞ்சுக்குறதை தவிர வேற வழியில்ல!

இசக்கிமுத்து குடும்பத்தினருக்குத் தொடர்ச்சியாகக் கந்துவட்டி கும்பலிடமிருந்து மிரட்டல் வருவது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் வேல்கனியிடன் கேட்டோம். ‘‘தென்காசி மாவட்டத்தில் கந்துவட்டியை முற்றிலுமாகத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கந்துவட்டி வழக்குகள் பதிவானால், உடனடியாக உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கிறோம். இசக்கிமுத்து குடும்பத்தின் தீக்குளிப்பு விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், அது பற்றி எதுவும் பேச முடியாது. அவருக்கு மிரட்டல்வருவதாகத் தெரிவித்த புகாரையும் விசாரித்துவருகிறோம். அது உண்மையாக இருக்குமானால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கந்துவட்டிப் பிரச்னை மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருப்பது, சமூக ஆர்வலர்களைக் கவலையடையச் செய்திருக்கிறது. பல குடும்பங்களின் உயிரைக் குடித்தும் இன்னும் வெறியடங்காத கந்துவட்டிக் கும்பலை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் தமிழக அரசு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism