ஆதாயத்துக்காக இந்தக் கொலை நடந்திருக்கக் கூடும் என்கிற அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய போலீஸாருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், தி.மு.க-வைச் சேர்ந்த சிலருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆனால், அதற்கான ஆதாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி இருக்கிறார்கள்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, “அரசியல் காரணமாகவே உமா மகேஸ்வரி கொலை நடந்திருக்கிறது. தடயத்தை அழித்த கொலையாளிகள், கொலையைத் திசை திருப்பும் நோக்கத்துடனேயே உமா மகேஸ்வரி அணிந்திருந்த நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர். கொலை நடந்த வீட்டின் அருகில் இருந்த ஹோட்டலின் சி.சி.டி.வி கேமரா மூலம் சில ஆதாரங்கள் கிடைத்திருக் கின்றன. தனிப்படையினர் மேற்கொண்ட விசாரணையின் மூலம் அரசியல்ரீதியாகவே இந்தக் கொலை நடந்திருப்பது உறுதியாகி யிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சிப் பிரமுகர் ஒருவருக்கு சீட் வாங்கிக் கொடுக்க சுமார் ஐம்பது லட்சம் ரூபாய் உமா மகேஸ்வரி பெற்றதாகத் தெரிகிறது. ஆனால், சீட் வாங்கித் தர முடியவில்லை. சீட்டுக்காகக் கட்சியினர் சிலரிடம் கொடுத்த பணத்தையும் அவரால் திரும்பி வாங்கித் தர முடியவில்லை. இந்த விவகாரத்தால் அவர் சொந்தக் கட்சியினராலேயே கொல்லப்பட்டுள்ளார்’’ என்கிறார்கள்.

இதற்கிடையில், இந்தக் கொலை குறித்த விசாரணை, சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் பிறகாவது உண்மை வெளிவருமா எனக் காத்திருக்கிறார்கள் நெல்லை மக்கள்.
