Published:Updated:

எக்கச்சக்க கேர்ள் ஃபிரெண்ட்ஸ்... உல்லாச வாழ்க்கைக்காக கொள்ளையடித்த மாணவர்கள்!

வீரவநல்லூர்
பிரீமியம் ஸ்டோரி
வீரவநல்லூர்

சம்பவத்தன்று சுதாகர் பைக்கில் நின்றுகொள்ள, மருதுபாண்டியும் அய்யப்பனும் மைதீன் பிச்சையை அரிவாளால் வெட்டி, நகையைக் கொள்ளையடித்துள்ளனர்

எக்கச்சக்க கேர்ள் ஃபிரெண்ட்ஸ்... உல்லாச வாழ்க்கைக்காக கொள்ளையடித்த மாணவர்கள்!

சம்பவத்தன்று சுதாகர் பைக்கில் நின்றுகொள்ள, மருதுபாண்டியும் அய்யப்பனும் மைதீன் பிச்சையை அரிவாளால் வெட்டி, நகையைக் கொள்ளையடித்துள்ளனர்

Published:Updated:
வீரவநல்லூர்
பிரீமியம் ஸ்டோரி
வீரவநல்லூர்

நெல்லையில் நகைக்கடை அதிபரை அரிவாளால் வெட்டி, நான்கரை கிலோ நகையைக் கொள்ளையடித்தவர்களில் நான்கு பேர் மாணவர்கள். இதுவே அதிர்ச்சி என்றால், ‘ஆடம்பரத்துக்கும் உல்லாச வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக’ அவர்கள் அளித்திருக்கும் வாக்குமூலமோ பேரதிர்ச்சி!

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் மெயின் பஜாரில், நகைக்கடை நடத்திவருபவர் மைதீன் பிச்சை. அந்தப் பகுதியில் திருட்டு பயம் அதிகம் என்பதால், தினமும் இரவில் நகைகளைக் கடையில் வைக்காமல் கையோடு வீட்டுக்கு எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இதை நோட்டமிட்ட ஒரு கும்பல் ஏப்ரல் 11-ம் தேதி இரவு, கடையை அடைத்துவிட்டு இரண்டரைக் கோடி ரூபாய் மதிப்புமிக்க நான்கரை கிலோ தங்க நகைகளுடன் வீடு திரும்பிய மைதீன் பிச்சையை அரிவாளால் வெட்டி, நகைகளைப் பறித்துச் சென்றது.

எக்கச்சக்க கேர்ள் ஃபிரெண்ட்ஸ்... உல்லாச வாழ்க்கைக்காக கொள்ளையடித்த மாணவர்கள்!

இந்த வழக்கில் தீவிர விசாரணைக்குப் பிறகு, கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த எட்டுப் பேரையும் 30 மணி நேரத்துக்குள்ளாகக் கொத்தாகத் தூக்கியிருக்கிறது காவல்துறை. இது குறித்து நம்மிடம் பேசிய தனிப்படைப் போலீஸார், “தன்னை அரிவாளால் வெட்டியவர்களை இதற்கு முன்பு தான் பார்த்ததே இல்லை என்று மைதீன் பிச்சை சொல்லிவிட்டார். அதோடு, சம்பவம் நடந்த இடத்திலும் சிசிடிவி கிடையாது. எனவே, எங்களுக்கு எந்த ‘க்ளூ’வும் கிடைக்கவில்லை. அதனால், பஜார் பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தோம். அதில், ஒரு பைக்கில் மூன்று பேர் வேகமாகப் போவது தெரிந்தது. ஆனாலும், ஆள் அடையாளம் தெரியவில்லை. கொள்ளை நடந்த இரவில் ரோந்துப் பணியில் இருந்த காவலர் ஒருவர், ‘அன்னிக்கு ராத்திரி மூணு பேர் ஒரே பைக்கில வேகமா போனாங்க. அவங்களோட பைக்குல நம்பர் பிளேட் இல்லை’ என்று சொன்னதும் எங்களுக்குப் பொறி தட்டியது. குற்றவாளிகள் உள்ளூரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என மூவரின் அங்க அடையாளத்தையும் வைத்து விசாரணையைத் தொடங்கினோம்.

சம்பவம் நடந்த பகுதியிலிருந்த செல்போன் டவரில் பதிவான நம்பர்களை ஆய்வுசெய்தோம். அதில், சுதாகர் என்ற பாலிடெக்னிக் படிக்கும் மாணவன், செல்போனில் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அதோடு, நகைக்கடையைச் சில நாள்களாக நோட்டமிட்டதையும் கண்டுபிடித்தோம். அதனால் சந்தேகத்தின் பேரில் பாறையடி கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவனை விசாரித்தோம். அவன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் ‘வழக்கமான பாணியில்’ விசாரணை செய்தோம். அதன் பிறகே உண்மையை ஒப்புக்கொண்டான்.

அழகுசுந்தரம், இசக்கிப்பாண்டி, அய்யப்பன், மருதுபாண்டி
அழகுசுந்தரம், இசக்கிப்பாண்டி, அய்யப்பன், மருதுபாண்டி

இந்தக் கொள்ளையில் மூளையாகச் செயல்பட்ட சுதாகர், தனக்குத் துணையாகப் பத்தாம் வகுப்பு படிக்கும் தனது தம்பி மணிகண்டனையும் சேர்த்துக்கொண்டிருக்கிறான். மணிகண்டனின் நண்பனான ஐ.டி.ஐ படிக்கும் அஜித், சட்டக் கல்லூரி மாணவனான மந்திரமூர்த்தி உள்ளிட்ட எட்டுப் பேர் இந்த டீமில் இருந்திருக்கிறார்கள். இதில், சுதாகருக்கு உதவியாக இருந்த அழகுசுந்தரம் என்ற டிரம்ஸ் கலைஞரும், அவரது தம்பி இசக்கிப்பாண்டியும், ‘நாம் நேரடியாகக் கொள்ளையில் ஈடுபட்டால் மாட்டிக்கொள்வோம். அதனால் வெளியூரிலிருந்து ஆள் கூட்டிவந்து கொள்ளையடிக்க வைப்போம்’ என்று ஆலோசனை கூறியதோடு, பக்கத்து கிராமத்திலிருந்து மருதுபாண்டி, அய்யப்பன் என்ற இளைஞர்களைக் கூட்டிவந்திருக்கின்றனர்.

சம்பவத்தன்று சுதாகர் பைக்கில் நின்றுகொள்ள, மருதுபாண்டியும் அய்யப்பனும் மைதீன் பிச்சையை அரிவாளால் வெட்டி, நகையைக் கொள்ளையடித்துள்ளனர். நகைகளை உடனே விற்றால், போலீஸில் சிக்கிக்கொள்ள வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கையோடு, நகைகளை டிரம்ஸ் வாத்தியத்துக்குள் மறைத்துவைத்து வயல் பகுதியில் புதைத்துவைத்துள்ளனர்” என்றவர்கள், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கொடுத்த வாக்குமூலம் பற்றியும் பேசினார்கள்.

மைதீன் பிச்சை
மைதீன் பிச்சை
சரவணன்
சரவணன்

“சுதாகருக்கு நிறைய கேர்ள் ஃபிரெண்ட்ஸ் உண்டு. அவர்களுக்குப் பரிசுப் பொருள்கள் வாங்கிக் கொடுத்தும், உயர்ரக ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றும் தன் வலையில் வீழ்த்தியிருக்கிறான். அண்மையில் ஒரு பெண்ணுக்கு ஸ்கூட்டியே வாங்கிக் கொடுத்திருக்கிறான். அவனது தம்பி மணிகண்டனுக்கும் நிறைய பெண்களோடு தொடர்பு உள்ளது. விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே நிறைய பெண்களிடமிருந்து போன் கால்களும், மெசேஜ்களும் வந்துகொண்டேயிருந்தன. இப்படி ஆடம்பர வாழ்க்கைக்கும், பெண்களோடு உல்லாசமாக ஊர் சுற்றுவதற்கும் ஆசைப்பட்டு, குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க நினைத்து இப்படியொரு குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்” என்றனர்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய மாவட்ட எஸ்.பி சரவணன், ‘‘இதுவரை 3.1 கிலோ நகையையும் 25,000 ரொக்கத்தையும் மீட்டுக் கொடுத்திருக்கிறோம். எஞ்சிய நகைகளையும் பணத்தையும் விரைவில் மீட்டு ஒப்படைப்போம்” என்கிறார்.

உழைக்காமல் குறுக்குவழியில் உல்லாசமாக வாழ ஆசைப்பட்டால், என்ன நடக்கும் என்பதற்கு மாணவர்களே குரூரமான வகையில் பாடமாகியிருக்கிறார்கள். குடும்பம், கல்வியமைப்பு, சமூகம் இதில் எதை நொந்துகொள்வது எனத் தெரியவில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism