நாடு முழுவதும் குற்ற ஆவணக் காப்பகங்களில் பணியாற்றும் காவல்துறையினரின் திறமையை மதிப்பீடு செய்து அவர்களுக்கு விருது வழங்கும் விழா புதுடெல்லியில் கடந்த 15-ம் தேதி நடந்தது. அதில், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களின் திறமைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. அதில், நெல்லை மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்தில் பணியாற்றும் பெண் தலைமைக் காவலர் தங்கமலர் மதி, தனது அணியில் சிறப்பாகப் பணியாற்றியிருப்பது தெரியவந்தது.

காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், அவர்களின் தரவுகளை ஆராய்ந்து 29 பேரை கண்டுபிடிக்க உதவியுள்ளார். அதேபோல அடையாளம் காணப்படாத 26 பிரேதங்களின் தரவுகளை ஒப்பீடு செய்து அவர்களை அடையாளம் கண்டறிந்துள்ளார். இது தவிர, நெல்லை மாவட்டத்தில் காணாமல் போன 19 இருசக்கர வாகனங்களைக் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
நெல்லையில் பணியாற்றும் பெண் தலைமைக் காவலர் தங்கமலர் மதி, பல்வேறு குற்ற ஆவணங்களை ஆராய்ந்து வழக்குகளில் முன்னேற்றம் காண உதவியுள்ளார். குறிப்பாக, 2013-ல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுத் தலைமறைவாக இருந்த பழைய குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார். அதோடு, தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகளை மறைத்து வெளிநாடு செல்ல முயன்ற 14 பேரையும், வழக்குகள் இருப்பதை மறைத்து அரசு மற்றும் தனியார் வேலையில் சேர முயன்ற 14 வழக்குகளையும் கண்டுபிடித்துள்ளார்.

பெண் தலைமைக் காவலர் தங்கமலர் மதியின் தன்னலமற்ற பணிக்காக அவருக்குத் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் விருது வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி அறிந்த தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு, தலைமைக் காவலர் தங்கமலர் மதியை நேரில் அழைத்துப் பாராட்டினார். அத்துடன், நெல்லை மாவட்ட காவல்துறையினரும் அவருக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்துக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.