கட்டுரைகள்
Published:Updated:

அதிகரிக்கும் நேபாள கொள்ளையர்கள்... என்ன செய்கிறது காவல்துறை?

நேபாள கொள்ளையர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
நேபாள கொள்ளையர்கள்

‘வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துகொண்டுதான் உள்ளே போனோம். முதலில் ஐந்து லட்சம் ரூபாய் பணம், ஐந்து சவரன் நகையைக் கொள்ளையடித்தோம்.

சமீபகாலமாக, தமிழகத்தில் நாளுக்கு நாள் வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதைத் தாண்டி அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்த கொள்ளையர்களின் அடாவடி, கொடூரச் செயல்கள் எல்லை கடந்துவிட்டன. கடந்த சில மாதங்களில் மட்டும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய கொள்ளைச் சம்பவங்கள் நம்மை அதிரவைக்கின்றன.

மது, கறி விருந்து...கொண்டாட்டத்துடன் கொள்ளை!

ஓய்வுபெற்ற நீதிபதி ஞானப்பிரகாசத்துக்குச் சொந்தமான சென்னை அண்ணாநகர் வீட்டில், கடந்த ஏப்ரல் மாதம் நகை, பணம் கொள்ளைபோனது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், ஷெனாய் நகரில் வசித்துவரும் நேபாளத்தைச் சேர்ந்த பூபேந்திரா என்பவரிடம் விசாரணை நடத்தியது போலீஸ். அவர் கொடுத்த தகவலின்படி, நேபாளத்தைச் சேர்ந்த மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில், ‘‘வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துகொண்டுதான் உள்ளே போனோம். முதலில் ஐந்து லட்சம் ரூபாய் பணம், ஐந்து சவரன் நகையைக் கொள்ளையடித்தோம். அடுத்த நாளும் யாரும் அந்த வீட்டுக்கு வரவில்லை என்பது தெரிந்தவுடன், அந்த வீட்டிலேயே தங்கி மது அருந்தி மேலும் சில பொருள்களைத் திருடிச் சென்றோம்’’ என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார்கள் கொள்ளையர்கள்.

அதிகரிக்கும் நேபாள கொள்ளையர்கள்... என்ன செய்கிறது காவல்துறை?

கொலைசெய்த கார் டிரைவர்... பணத்துக்காக வெறிச்செயல்!

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஸ்ரீகாந்த். இவரின் மனைவி அனுராதா. ஐடி நிறுவனம் நடத்திவரும் ஸ்ரீகாந்த்தின் பிள்ளைகள் இருவருமே அமெரிக்காவில் வசித்துவருகிறார்கள். கடந்த மே 8-ம் தேதி, இவர்கள் இருவரின் எண்ணும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தன. நேபாளத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கிருஷ்ணாவையும் காணவில்லை. கிருஷ்ணாவை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தியதில், ஸ்ரீகாந்த் சமீபத்தில் 40 கோடி ரூபாய்க்கு ஒரு சொத்தை விற்பனை செய்தார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த என் நண்பர் ரவிராயுடன் கூட்டுச் சேர்ந்து, அந்தப் பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டோம். அதன்படி அவர்கள் இருவரையும் கட்டையால் அடித்தும், கழுத்தில் கத்தியால் குத்தியும் கொலைசெய்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்தபடி வீட்டில் பணம் இல்லை. வீட்டிலிருந்த நகைகளை மட்டும் கொள்ளையடித்துவிட்டு, அவர்கள் உடலை, ஈ.சி.ஆரில் உள்ள ஸ்ரீதரின் பண்ணை வீட்டில் குழிதோண்டிப் புதைத்துவிட்டோம்’’ என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து 10 கிலோ தங்கம், 70 கிலோ வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டன.

அதிகரிக்கும் நேபாள கொள்ளையர்கள்... என்ன செய்கிறது காவல்துறை?

கூலிக்கு ஆள்வைத்து கொள்ளையில் ஈடுபட்ட காவலாளி!

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பன்சிதர் குப்தா. கடந்த செப்டம்பர் 14-ம் தேதி, இவர் வீட்டில் இல்லாதபோது, மாடிக் கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த பத்து லட்சம் ரூபாய் பணம், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அதே சமயத்தில், வீட்டில் காவலாளியாக வேலை பார்த்துவந்த நேபாளத்தைச் சேர்ந்த ராஜன் என்ற திபேந்திரா என்பவரைக் காணவில்லை. போலீஸ் விசாரணையில், காவலாளி ராஜன், நேபாளத்தைச் சேர்ந்த ஏழு பேருடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய நேபாளத்தைச் சேர்ந்த பாஜி டமாய், கைலாஷ் பகதூர் ஆகிய இருவரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தியதில், ராஜன் 25 ஆயிரம் ரூபாய் கூலி கொடுத்து அவர்களைக் கொள்ளையில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

நடிகரின் மனைவியைக் கட்டிப்போட்டு கத்திமுனையில் கொள்ளை!

பிரபல திரைப்பட நடிகர் ஆர்.கே என்ற ராதாகிருஷ்ணன். இவர் நந்தம்பாக்கம் டிஃபென்ஸ் காலனியில் வசித்துவருகிறார். நவம்பர் 10-ம் தேதி, அவரின் மனைவி ராஜி மட்டும் தனியாக இருந்திருக்கிறார். திடீரென வீட்டுக்குள் நுழைந்த சிலர், அவரைக் கட்டிப்போட்டுவிட்டு, 250 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

போலீஸ் விசாரணையில் ஆர்.கே வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த நேபாளத்தைச் சேர்ந்த ரமேஷும், அவருடைய நண்பர்கள் ஐந்து பேரும் சேர்ந்து இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளையர்கள் நேபாளத்துக்குத் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், அவர்களைப் பிடிக்க தனிப்படை நேபாளத்துக்கு விரைந்திருக்கிறது.

அதிகரிக்கும் நேபாள கொள்ளையர்கள்... என்ன செய்கிறது காவல்துறை?

நேபாளத்தைச் சேர்ந்த சிலர் தொடர்ச்சியாக இப்படியான குற்றச் செயல்களில் ஈடுபடுவது குறித்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

‘‘சென்னையில் பல வெளிமாநிலத்தவர்களை, நேபாள நாட்டைச் சேர்ந்தவர்களைக் காவல் பணிக்கு, வீட்டு வேலைக்கு பணியமர்த்துகிறார்கள். இப்படிப் பணியமர்த்தப்படுபவர்களின் விவரங்களை அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் வீட்டின் உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் அந்தத் தகவல்களை எங்களுக்குக் கொடுப்பது கிடையாது. இப்படி ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்போதுதான், வெளிநாட்டினரை அவர்கள் வேலைக்குப் பணியமர்த்தியிருக்கும் விஷயமே எங்களுக்குத் தெரியவருகிறது. கொள்ளையர்களை நேபாளம் வரை சென்று பிடிப்பதும் சிரமமாக இருக்கிறது. இனியாவது, தங்கள் வீட்டில் வெளிமாநிலத்தவர்கள், நேபாளம் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை வேலைக்கு வைத்தால், அவர்கள் குறித்த முழு விவரத்தையும் அருகிலுள்ள காவல் நிலையங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

இவர்களின் கொடூரச் செயல்களால் பாதிக்கப்படுவது, உண்மையாகவே உழைத்துப் பிழைக்க நாடுவிட்டு நாடு வரும் நேபாளியர்கள்தான். எத்தனை பேர் தமிழ்நாட்டுக்குள் வருகிறார்கள், அவர்கள் எங்கேயெல்லாம் வேலை செய்கிறார்கள் என்பதெல்லாம் காவல்துறைக்கும் முழுமையாகத் தெரிவதில்லை. இதை ஒழுங்குபடுத்தி கண்காணிக்கவில்லையென்றால், குற்றச்செயல்கள் தொடர்வதைத் தடுக்க முடியாமல் போய்விடும். என்ன செய்யப்போகிறது காவல்துறை?