Published:Updated:

சீனாவின் ‘நில எல்லை சட்டம்’ - அதிகரிக்கும் பதற்றம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சீனாவின் ‘நில எல்லை சட்டம்’
சீனாவின் ‘நில எல்லை சட்டம்’

2020-ம் ஆண்டு, ஜூன் மாதம், கல்வான் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினருக்குமிடையே நிகழ்ந்த மோதல் சம்பவங்களுக்குப் பிறகு, இந்திய நிலப் பகுதியிலிருந்து சீனப் படைகள் வாபஸ் பெறப்பட்டன.

பிரீமியம் ஸ்டோரி

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பதற்றம் நீறுபூத்த நெருப்பாக இருந்துவரும் சூழலில், ‘நில எல்லைச் சட்டம்’ என்கிற சர்ச்சைக்குரிய புதிய சட்டம் ஒன்றை சீனா கொண்டுவந்திருக்கிறது. இது இரு நாடுகளுக்கு இடையில், பல்வேறு சிக்கல்களையும், பிரச்னைகளையும் உண்டாக்கும் என்று இந்தியா கவலையுடன் பார்க்கிறது!

டோக்லாம் பகுதியில் இந்தியா-சீனா படைகளுக்கிடையே மோதல்கள், சிக்கிம் வடக்குப் பகுதியிலுள்ள நாதுலாவில் இரு நாட்டுப் படைகளுக்குமிடையே கைகலப்பு, கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் எனச் சமீபகாலமாக இந்தியா-சீனா எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. இதனால், இரு நாடுகளுக்குமிடையே நாளுக்கு நாள் பகைமை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

2020-ம் ஆண்டு, ஜூன் மாதம், கல்வான் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினருக்குமிடையே நிகழ்ந்த மோதல் சம்பவங்களுக்குப் பிறகு, இந்திய நிலப் பகுதியிலிருந்து சீனப் படைகள் வாபஸ் பெறப்பட்டன. ஆனாலும், அதன் பிறகு ராணுவ அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில், மேலும் நிலைமையைச் சிக்கலாக்கும் வகையில், புதிதாக ஒரு சட்டத்தை சீனா கொண்டுவருகிறது.

சீனாவின் ‘நில எல்லை சட்டம்’ - அதிகரிக்கும் பதற்றம்

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூட்டான், கஜகிஸ்தான், கிர்கிஸ்தான், லாவோஸ், மங்கோலியா, மியான்மர், வட கொரியா, ரஷ்யா, தஜிகிஸ்தான், வியட்நாம் என 14 நாடுகளுடன் 22,457 கி.மீ எல்லையை சீனா பகிர்ந்துகொள்கிறது. இதில், இந்தியா, பூட்டான் ஆகிய இரு நாடுகளுடன் மட்டும் எல்லை சர்ச்சை நீடித்துவருகிறது. இந்தியாவுடனான 3,488 கி.மீ., பூட்டானுடனான 400 கி.மீ நீள எல்லைகள் இன்னும் வரையறுக்கப்படாதது, எல்லைப் பதற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருந்துவருகிறது. இந்த நிலையில், புதிய சட்டம் வேறு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

ஏழு அத்தியாயங்களில் 62 ஷரத்துகளைக்கொண்டிருக்கும் இந்தச் சட்டம், “சீனாவின் இறையாண்மையும், அதன் பிரதேச ஒருமைப்பாடும் புனிதமானவை, அத்துமீற முடியாதவை” என்று கூறுகிறது. `பிரதேச ஒருமைப்பாடு மற்றும் நில எல்லையை உறுதியுடன் பாதுகாக்கவும், இறையாண்மைமிக்க எல்லைகளை பாதிக்கும் செயல்களைத் தடுக்கவும் அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். சட்ட விரோதமாக எல்லையைக் கடப்பவர்கள் உடல்ரீதியாகத் தாக்குதலில் ஈடுபட்டாலோ, கைதுசெய்யப்படுவதைத் தடுத்தாலோ, சீன உடைமைகளுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலான வன்முறைச் செயல்களில் ஈடுபட்டாலோ, அவர்களுக்கு எதிராக ஆயுதங்களையும் கருவிகளையும் பயன்படுத்த, சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்படுகிறது’ என்று சீனாவின் புதிய சட்டம் கூறுகிறது. இந்தியாவுடனான எல்லை மோதலுக்கு மத்தியில் தேசிய பாதுகாப்பு தொடர்பான நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காகவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது என்கிற கருத்தை சீன அரசின் ஆதரவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அரிந்தம் பாக்‌ஷி
அரிந்தம் பாக்‌ஷி

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவை ஒட்டிய எல்லைப் பகுதியில் விமானதளங்கள், ஹெலிப்போர்ட்கள், ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள் எனப் புதிய கட்டமைப்புகளை சீனா அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், புதிய நகரங்களையும் கிராமங்களையும் உருவாக்கி வாழ்விடங்களை அதிகரித்தல், எல்லை வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்துதல், பாதுகாப்புக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், போர் ஒத்திகை உள்ளிட்ட ராணுவப் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை நில எல்லைச் சட்டத்தின் துணைகொண்டு சீனா தீவிரப்படுத்தவிருக்கிறது.

எல்லைப் பகுதிகளில் பொதுமக்களைக் குடியமர்த்துவது தொடர்பாகவும் இந்தச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி, சீன அரசுடன் முரண்பாடுகளைக்கொண்டுள்ள உய்குர் போன்ற இனத்தவர்களையும் ஓய்வுபெற்ற ராணுவத்தினரையும் அதிக அளவில் எல்லைப் பகுதிகளில் குடியேற்ற சீனா திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

சீனாவின் புதிய சட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. “இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதி வரையறுக்கப்படாத நிலையில், அதற்குரிய வெளிப்படையான பரஸ்பர ஒப்புதலுடன்கூடிய தீர்வைக் காண்பது என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் புதிய சட்டத்தின் அடிப்படையில் சீனா நடவடிக்கை மேற்கொள்வது, இந்தியா-சீனா எல்லைப் பகுதியின் தற்போதைய நிலையை தன் இஷ்டத்துக்கு மாற்றுவதாக அமையும். எனவே, புதிய சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பதை சீனா தவிர்க்க வேண்டும்” என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்‌ஷி கூறியிருக்கிறார்.

சீனாவின் ‘நில எல்லை சட்டம்’ - அதிகரிக்கும் பதற்றம்

சீன நாடாளுமன்றத்தில் அக்டோபர் 23-ம் தேதி நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், 2022-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கிறது. ஏற்கெனவே, இரு நாடுகளுக்கு இடையே சமீபத்தில் நடந்த ராணுவரீதியிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், புதிய சட்டத்தை சீனா கொண்டுவந்திருப்பதால், இந்தியா-சீனா எல்லையில் பதற்றம் அதிகரிக்க நிறைய வாய்ப்பு உள்ளது.

‘எல்லைக்கோடுகள் அமைதியின் கரங்களால் வரையப்பட வேண்டும்’ என்கிற சீன ஞானி கன்பூசியஸின் கருத்துகளை சீனா புரிந்துகொள்ளுமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு