Published:Updated:

வாணியம்பாடி அருகே 15-ம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!

பிரபாகரன் செ

வாணியம்பாடி அருகே கி.பி 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நடுகற்கள்
நடுகற்கள்

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வடசேரி கிராமத்தில் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்திர குளம் மற்றும் நடுகற்கள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் மோகன்காந்தி தலைமையில், காணிநிலம் மு.முனிசாமி, சித்த வைத்தியர் சீனிவாசன் மற்றும் ஆய்வு மாணவர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட ஆய்வுப் பணியில் சித்திரங்கள் நிரம்பிய குளம் ஒன்றும் இரண்டு உடன்கட்டை நடுகற்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நடுகற்கள்
நடுகற்கள்
Vikatan

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மோகன்காந்தி, “சதுரவடிவில், படித்துறைகள் நிரம்பிய சித்திரக்குளம் ஒன்று வடசேரியில் உள்ளது. குளத்தின் நடுவே கிணறு ஒன்றும் இருக்கிறது. தற்போது நீரின்றி வறண்டு, பாதுகாப்பின்றி காட்சித் தரும் குளம் கி.பி 15-ம் நூற்றாண்டு நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணிக்கிறோம்.

தமிழர்களின் சிற்பக் கலையை எடுத்துரைக்கும் விதத்தில் அரசர்களின் தோற்றம், ஆண் பெண் காதல், நீண்ட பாம்பின் வடிவம், ஆமை, மீன் உருவங்கள் என்று ஏராளமான சித்திரங்களைத் தாங்கியவாறு இந்தக் குளம் திகழ்கிறது. குளத்தின் மேற்பகுதியில் உள்ள கோயிலுக்கு அருகே நாயக்கர் காலத்தைச் சேர்ந்த இரண்டு உடன்கட்டை நடுகற்களும் உடைந்த நிலையில் ஒரு நடுகல்லும் காணப்படுகின்றன.

நடுகற்கள்
நடுகற்கள்

இரண்டு நடுகற்களும் அழகான பெரிய பலகைக் கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. வீரன் ஒருவன் வலது கையில் வாள் ஒன்றினை ஏந்திய நிலையிலும் இடது கையில் குறுவாள் ஒன்றைத் தாங்கியும் நிற்கிறான். அவன் அருகில் வீரன் இறந்ததற்காகத் தானும் உடன்கட்டை ஏறி உயிர் விட்டதற்கான அடையாளத்தோடு பெண் ஒருத்தி இடது கையில் தாமரை மொட்டு போன்ற குறியீட்டையும் வலது கையில் கள்குடம் ஒன்றைத் தாங்கியும் நிற்கிறாள்.

இரண்டாவது நடுகல்லும் இதே போன்ற உடன்கட்டை ஏறுதலைக் குறிக்கும் நடுகல்தான். இவ்விரு வீரர்களும் படைத் தலைவர்களாக இருந்திருக்க வேண்டும். இவ்வூரில் நடைபெற்ற போரின்போது வீரமரணம் அடைந்து, அவரின் மனைவியும் உயிர்விட்ட செய்தியை இந்த நடுகற்கள் விளக்குகின்றன" என்றார்.

நடுகற்கள்
நடுகற்கள்
Vikatan

இந்தச் சித்திரக் குளத்தையும் நடுகற்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.