அண்மையில் சந்தையில் அறிமுகம் ஆகியுள்ள சில திட்டங்கள்...
பிரின்சிபல் லார்ஜ்கேப் ஃபண்ட்!
பிரின்சிபல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ‘பிரின்சிபல் லார்ஜ்கேப் ஃபண்ட் (Principal Large Cap Fund) என்ற புதிய ஃபண்டை வெளியிடுகிறது. இது, ஓப்பன் எண்டடு வகையைச் சேர்ந்தது; குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தப் புதிய வெளியீட்டுக்கு அக்டோபர் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி, லார்ஜ்கேப் நிறுவனங்களின் பங்குகள் மற்றும் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும். நுழைவுக் கட்டணம், வெளியேறும் கட்டணம் ஆகியவை கிடையாது. இதில் ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான் மூலம் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்ட் அதிக ரிஸ்க் கொண்டது என்பதால், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்களும் இளம்வயதினரும் முதலீடு செய்யலாம்.
பண்டிகைக் கால சலுகை
பஞ்சாப் நேஷனல் பேங்க் (பி.என்.பி), தனது வாடிக்கையாளர் களுக்காகச் சில திருவிழா கால சலுகைகளை வழங்கியிருக்கிறது. ‘Festival Bonanza Offer’ என்கிற திட்டத்தின் மூலம் வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் சொத்துக் கடன்களுக்கான செயலாக்க கட்டணம் மற்றும் ஆவணக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்கிறது. இந்தச் சலுகை டிசம்பர் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என இந்த வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்குள் கடன் தேவைப்படுபவர்கள், இந்தச் சலுகை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். டிஜிட்டல் சேனல் மூலம், இந்தியாவிலுள்ள 10,897 கிளைகளிலும் இந்த வாய்ப்பைப் பெற முடியும். இந்த ஆஃபர் மூலம் வீட்டுக் கடன் பெறுபவர்கள் வாங்குகிற கடன் மதிப்பில் 0.35% அல்லது அதிகபட்சம் ரூ.15,000 வரை சலுகை பெறலாம். கார் கடனுக்கு 0.25% வரை சலுகை பெற முடியும். கொரோனா தொற்றினால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்த ஆஃபர் அறிமுகம் வரவேற்கத்தக்க விஷயம்.

ஃபிக்ஸட் ப்ளஸ் ஹெல்த்
டி.சி.பி பேங்க், டி.சி.பி ஹெல்த் ப்ளஸ் ஃபிக்ஸட் டெபாசிட் என்கிற சேமிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃபிக்ஸட் டெபாசிட்டில் குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் முதலீடு செய்யலாம். இதன் முதிர்வுக் காலம் 7 நாள்கள் முதல் 10 வருடங்கள் வரை. 18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள், இந்தச் சேமிப்புத் திட்டத்தில் பங்கேற்கலாம். இந்தச் சேமிப்புத் திட்டத்துடன், ஆன்லைன் மெடிக்கல் கன்சல்ட்டிங், ஆம்புலன்ஸ் சர்வீஸ் போன்ற மருத்துவச் செலவுகளுக்கான இன்ஷூரன்ஸ் ஆப்ஷனும் இருக்கிறது. இதற்கென்று தனியாக பிரீமியம் செலுத்தத் தேவையில்லை. டி.சி.பி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தச் சேவையை வழங்குகிறது. ஏற்கெனவே இருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு இத்த ஆப்ஷன் பொருந்தாது. புதிய கணக்குகளைத் தொடங்குபவர்களுக்கு இந்த மருத்துவச் சலுகைகள் கிடைக்கும்.
கொரோனா பாலிசி
பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம், ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. ரூ.50,000, ரூ.1 லட்சம், ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் என நான்கு வகையான கவரேஜ்களை இந்த இன்ஷூரன்ஸ் திட்டம் வழங்குகிறது. இதற்கான வருடாந்தர பிரீமியம் தொகை முறையே ரூ.952, ரூ.1,339, ரூ.1,402 மற்றும் ரூ.1,469.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர், ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம், யோகா, ஹோமோபதி ஆகிய மருத்துவத்தில் சிகிச்சை பெறலாம். எதில் சிகிச்சை பெற்றாலும் அதற்கு ஆகும் செலவுகளை க்ளெய்ம் செய்துகொள்ளலாம்!