
வழக்கம்போல கட்சிக்குள் பிளவை உண்டுபண்ண இப்படி அவதூறு பரப்புகிறார்கள்!
தனுஷ் தன் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் இருக்கும் மொட்டைமாடி க்ளிக் இன்ஸ்டாகிராமில் போட்ட சில மணித்துளிகளில் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் புகைப்படத்தை லைக் செய்துள்ளனர். “உங்களுடைய மூத்த மகன் வளர்ந்த பிறகு உங்கள் டீஷர்ட்டைப் போட்டுக்கொண்டு அவருடையது எனச் சண்டைபோடும்போது!” என்ற அவர் கேப்ஷனுக்கு கமென்ட்டுகளில் தெறிக்கவிட்டனர்.

21 வயதில் திருமணம் செய்தபோது ‘எல்லோரும் ஏன் இவ்ளோ சின்னவயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு கேட்குறீங்க... என் குழந்தைகளோடு என் இளமைநாள்களைக் கொண்டாட விரும்புகிறேன். அதனாலதான்!’ என்று அப்போது சொல்லியிருந்தார். செம ஷார்ப் தனுஷ்!
அப்ப புரியல... இப்ப புரியுது!
அன்பில் மகேஷ் முகம்தான் திருச்சியெங்கும் போஸ்டர்களாக சிரிக்கிறது. கே.என்.நேரு ஓரங்கட்டப்பட்டு அன்பில் மகேஷை வளர்த்தெடுப்பதில் உதயநிதி ஆர்வம் காட்டுகிறார் என உடன்பிறப்புகள் நம் காதைக் கடிக்க, அன்பில் மகேஷிடமே கேட்டோம்.

“மாநிலப் பதவியிலிருந்த காலத்திலிருந்தே நேரு அண்ணணின் தலைமையில்தான் நாங்கள் வேலை பார்த்துக்கொண்டு வருகிறோம். இப்போதுகூட தெற்கு மாவட்டத்திலிருக்கும் நிர்வாகிகள்கூட அவர் போட்ட ஆட்களாகத்தான் இருக்கிறார்கள். கட்சிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை. வழக்கம்போல கட்சிக்குள் பிளவை உண்டுபண்ண இப்படி அவதூறு பரப்புகிறார்கள்!” எனப் படபடவெனப் பொரிந்துதள்ளினார். உண்மையைச் சொன்னா சரி!
மஞ்சள் சட்டை காப்பாற்றும் என நினைக்கிறாரோ என்னவோ? அரசின் உத்தரவை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து காற்றில் பறக்கவிட்டு வருகிறார்.

ஏற்கெனவே ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் முகக்கவசம் சமூக இடைவெளி இல்லாமல் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்தவர், விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் மூளிப்பட்டி ஜமீனுக்கு சொந்தமான தவசிலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்திருக்கிறார்.
‘முகக்கவசமா... சமூக இடைவெளியா... அப்படின்னா என்ன?’ என்று கேட்கிறார் ரா.பா. அ.தி.மு.க பாதி பா.ஜ.க பாதி சேர்ந்து செய்த கலவை இவர்!

சென்னையைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் பொது முடக்கத்துக்கு முன் தன் மூன்று வயதுக் குழந்தையை ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலத்தில் உள்ள தன் பெற்றோரிடம் விட்டிருந்தார். கொரோனா பொது முடக்கத்தால் குழந்தையை விட்டு கடந்த ஆறு மாதமாகப் பிரிந்து இருந்தனர். பொதுப் போக்குவரத்து இல்லாமலிருந்ததால் குழந்தையைத் திரும்பவும் சென்னை அழைத்து வர இயலாமல் தவித்துக் கொண்டிருந்தார். ட்விட்டர் மூலம் நண்பர் ஒருவர் இதை மாவட்ட எஸ்.பி வருண்குமாருக்குத் தெரிவித்தவுடன், வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து குழந்தையைத் திரும்பவும் பெற்றோரிடம் ஒன்றிணைக்க உதவினார் எஸ்.பி.
காக்க காக்க!
“இந்தி தெரியாத மருத்துவர்கள் ஆன் லைன் பயிற்சி வகுப்பிலிருந்து வெளியேறலாம்!’- இப்படிச் சொல்லி சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார் ஆயுஷ் அமைச்சகச் செயலர் ராஜேஷ் கொடேச்சா!

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கு நடைபெற்ற விர்ச்சுவல் பயிற்சி வகுப்புகளில்தான் இப்படிச் சொல்லியுள்ளார். ஏற்கெனவே கனிமொழியை ‘‘இந்தி தெரிந்தால்தான் இந்தியர்” என்று விமானநிலைய அதிகாரி சொன்ன சர்ச்சை அடங்குவதற்குள் இன்னொரு சர்ச்சை. கேட்டால் அந்த ஆயுஷ் அதிகாரிக்கு சரியா ஆங்கிலம் தெரியாதாம். நீங்க முதல்ல மும்மொழிக்கொள்கையைப் படிங்கய்யா!