கட்டுரைகள்
Published:Updated:

நியூஸ் காக்டெயில்

நியூஸ் காக்டெயில்
பிரீமியம் ஸ்டோரி
News
நியூஸ் காக்டெயில்

அமைச்சர்கள் வருகிறார்கள் எனில் அந்த ஏரியாவே சுத்தம் செய்யப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஒரு அமைச்சரே இறங்கி சுத்தம் செய்வதைப் பார்த்திருக்கிறோமா?

* செல்லூர் ராஜு. அவர் நிற்பது, நடப்பது, பேசுவது என எல்லாமே பரபரப்பு செய்தியாகிவிடுகிறது. கடந்த மாதம் கொரோனாவாால் பாதிக்கப்பட்டு குணமாகியிருக்கிறார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர், முகக்கவசம் இல்லாமல் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது, ``கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். நான் வாழப் பழகிக்கொண்டேன்.

நியூஸ் காக்டெயில்

அதனால் முகக்கவசம் அணிவதில்லை” என அவர் சொல்ல, நாலா திசைகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. தற்போது “நான் அப்படிச் சொல்லல, வாழப் பழகிக்கொண்டேன்னு யதார்த்தமாகத்தான் சொன்னேன். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள்” என அவசர அவசரமாக மறுப்பு வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். சிட்னியில் மாஸ்க் போடுறாங்களா சார்?

நியூஸ் காக்டெயில்

* அமைச்சர்கள் வருகிறார்கள் எனில் அந்த ஏரியாவே சுத்தம் செய்யப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஒரு அமைச்சரே இறங்கி சுத்தம் செய்வதைப் பார்த்திருக்கிறோமா? புதுச்சேரியின் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு கொரோனா வார்டுகளை ஆய்வு செய்யப் போயிருக்கிறார். அங்கிருக்கும் நோயாளிகள், கழிவறைகள் சரியாகச் சுத்தம் செய்யப்படுவதில்லை எனப் புகார் அளித்திருக்கிறார்கள். கழிவறையைப் பார்த்தவர் கடுப்பாகி, தானே களத்தில் இறங்கிவிட்டார். முகக்கவசம், பாதுகாப்பு உடை சகிதம் அவரே தரையைத் துடைத்திருக்கிறார். பின்னால் நிற்கும் ஊழியர்களைப் பார்த்து, “செய்ய முடிகிற வேலைதான், இல்லையா?’’ என அவர் கோபமாகக் கேட்க, அந்த வீடியோ வழக்கம்போல வைரல் ஆகியிருக்கிறது. தூய்மை இந்தியா என்னாச்சு?

நியூஸ் காக்டெயில்

* பா.ஜ.க.வை ஒருபுறம் விமர்சித்தாலும் இன்னொருபுறம் காங்கிரஸிலும் சேம்சைடு கோல் போட்டுக்கொண்டிருக்கிறார் குஷ்பு. அயோத்தி ராமர் கோயிலுக்கு வாழ்த்து, புதிய கல்விக்கொள்கைக்கு வரவேற்பு என்று ஏற்கெனவே அதிரடிகளால் அதகளப்படுத்தினார். இப்போது ‘சத்தியமூர்த்தி பவனில் நடந்த வசந்தகுமார் படத்திறப்பு விழாவுக்கு அகில இந்திய செய்தித்தொடர்பாளரான என்னை அழைக்கவில்லை. கட்சியைப் பலப்படுத்த வேண்டுமே தவிர ஈகோவாலும் பாதுகாப்பின்மை உணர்வாலும் பலவீனப்படுத்தக்கூடாது’ என்று ட்விட்டரில் பொரிந்துதள்ளியுள்ளார். காங்கிரஸ்ல இது சகஜம்தானே!

நியூஸ் காக்டெயில்

* ‘வேலையை விட்டுவிட்டு விவசாயம்’, ‘தற்சார்பு வாழ்க்கை’ என்று முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை வந்தபோதே, ‘இவர் நிறம் காவி’ என்று சர்ச்சைகள் கிளம்பின. ‘ரஜினி அறிவிக்கப்போகும் முதல்வர் வேட்பாளரே இவர்தான்’ என்றும் பரபரப்பு கிளம்பின. ஆனால் இ-பாஸ் எடுத்து டெல்லிக்குப் போய் ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்துகொண்டார். கட்சியில் சேர்ந்த ஐந்தேநாளில் தமிழக பா.ஜ.க துணைத்தலைவராக நியமிக்கப்பட்டது அதிசயமோ அதிசயம்! ஐ.பி.எஸ் என்ற மரியாதையை ‘பாரதிராஜா கட்சியை வளர்ப்பேன்’ என்று பேசியும் பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர் என்பதை ஆங்கிலத்தில் EWS என்பதற்குப் பதில் EVS என்றும் பேசி காமெடியன் ஆனார். ‘எங்கே காமெடியில் தன்னை முந்திடுவாரோ?’ என்று பயப்பட்ட எல்.முருகனும் ‘தனித்து நின்றாலே பா.ஜ.க. 60 இடங்களில் வெல்லும்’ என்று அணுகுண்டு வீசினார். எலெக்‌ஷன் நெருங்க நெருங்க என்டர்டெயின்மென்ட்தான்!

நியூஸ் காக்டெயில்

* ராமநாதபுரம் அருகே வாலிநோக்கம் பகுதியில் அரியவகை நீலத் திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. 20 அடி நீளமும் 8 அடி அகலமும், 7 டன் எடையும் உடைய இந்தத் திமிங்கிலத்தை வனத்துறையினர் உடற்கூராய்வுக்குப் பின் புதைத்தனர். நெகிழி போன்ற குப்பைகளை உண்ணுவது, கடலில் கலக்கும் எண்ணெய் ஆகியவையே இவை மரணமடைவதற்குக் காரணம். இதேபோல கோவை ஆனைக்கட்டி பகுதியில் இறந்த நிலையில் பெண் யானை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே சுமார் 60 அடி ஆழம் உள்ள கிணற்றில், ஆண் புள்ளி மான் ஒன்று தவறி விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் 3 மணிநேரம் போராடி மானை மீட்டனர். பூமி மனிதர்களுக்கு மட்டுமேயானதல்ல!

நியூஸ் காக்டெயில்

* அ.தி.மு.க-வில் உட்கட்சி அரசியல் பிரச்னைகள் நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டிருக்கின்றன. இருக்கும் அமைச்சர்களே ஆளுக்கொரு திசையில் செயல்பட்டுக்கொண்டிருக்க, புதிதாக வாரிசுகளை வேறு சிலர் முன்னிறுத்துவதால் புகைச்சல் அதிகமாகியிருக்கிறது. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். இவர் மகன் ஜவாஹர்லால் நேரு. ஏற்கெனவே, அமைச்சரின்் துறையில் மகன் அதிகம் தலையிடுகிறார் என ஒரு பேச்சு உள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் அச்சிடப்படும் போஸ்டர்களில் அமைச்சரைவிட, அவர் மகனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், கட்சியிலும் அவர் வாரிசின் ஆதிக்கம் அதிகமாவதாகவும் மேலிடத்திற்குப் புகார் பறந்திருக்கிறது. ‘தேர்தல் சமயம் இதெல்லாம் வேண்டாம், உங்களை முன்னிறுத்திக் கட்சிப்பணி செய்யுங்கள்’ என மேலிடம் கறார் காட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. பெரியகுளத்துக்குப் போட்டியா?