சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

நியூஸ் காக்டெயில்

நியூஸ் காக்டெயில்
பிரீமியம் ஸ்டோரி
News
நியூஸ் காக்டெயில்

தேவையே கண்டுபிடிப்புகளின் தாய். புயல், மழை, வெள்ளம் என நீருக்குள் சிக்கி உயிரிழப்பவர்கள் அதிகமிருக்கும் நிலையில், அப்படி சிக்கியிருப்பவர்களைக் காப்பாற்ற மிதவை சைக்கிள் கண்டுபிடித்திருக்கிறார்கள்

* தமிழக அரசியலில் எதிரெதிர்க் கட்சியில் இருக்கும் இருவர் நட்பு பாராட்டுவதெல்லாம் 70'ஸ் கிட்ஸுக்கு மட்டுமே காணக் கிடைத்த காட்சி. அண்ணா உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் இருக்க அவருக்காக மருத்துவமனை வளாகத்தில் காமராஜர் அமர்ந்திருந்த அரசியல் நாகரிகம் எல்லாம் பழங்கதை.

நியூஸ் காக்டெயில்

இப்போது அப்படியான ஒரு தருணம் நிகழ்ந்திருக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ந் தேதி காலமானார். இதனையடுத்து அவரது சொந்த ஊரில் சில நாள்கள் தங்கியிருந்த முதல்வர் கடந்த வாரம் சென்னை திரும்பினார். தாயாரின் மறைவிற்கு பல முக்கியப் புள்ளிகள் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இந்நிலையில் தி.மு.க தலைவரான மு.க.ஸ்டாலின் முதல்வரை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பகிர்ந்து நன்றி தெரிவித்து நெகிழ்ந்திருக்கிறார் எடப்பாடி. அரசியல் நாகரிகம் வளரட்டும்!

நியூஸ் காக்டெயில்

* மாணவர்களுக்காகப் பல போட்டிகளை நாசா நடத்தும். அதிலொன்றுதான் ‘க்யூப் இன் ஸ்பேஸ்.’ 11 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கான இந்தப் போட்டியில் சிறிய அளவிலான சேட்டிலைட்கள் செய்வதுதான் டாஸ்க். அதில் தேர்வாகும் குட்டிச் செயற்கைக்கோள்களை நாசாவே விண்ணில் செலுத்தும். தமிழகத்தைச் சேர்ந்த ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு ஆண்டுதோறும் இதற்காக தமிழக மாணவர்களை வழிநடத்திவருகிறது. இந்த ஆண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அட்னன், கேசவன் மற்றும் அருண் மூவரும் உருவாக்கிய ‘இன்டியன்சாட்’ என்ற செயற்கைக்கோள் நாசாவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இன்போர்ஸ்டு கிராபைன் பாலிமர் என்ற பொருளால் செய்யப்பட்ட இந்தச் செயற்கைக்கோள் வெறும் 64 கிராம் எடை கொண்டது. சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் சக்தியாலே இது இயங்கும். நாசா நடத்தும் மாணவர்களுக்கான போட்டியில் தமிழகம் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது என்பது உண்மையில் மகிழ்ச்சியளிக்கும் செய்திதான். வாழ்த்துகள் பசங்களா!

நியூஸ் காக்டெயில்

* தேவையே கண்டுபிடிப்புகளின் தாய். புயல், மழை, வெள்ளம் என நீருக்குள் சிக்கி உயிரிழப்பவர்கள் அதிகமிருக்கும் நிலையில், அப்படி சிக்கியிருப்பவர்களைக் காப்பாற்ற மிதவை சைக்கிள் கண்டுபிடித்திருக்கிறார்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த நஸ்ருதீன் மற்றும் அசாருதீன் சகோதரர்கள். தண்ணீர் கேன்கள், இரும்புக் கம்பிகள், சைக்கிள் சக்கரங்கள், புரொப்பெல்லர் கருவி ஆகிய வற்றைக் கொண்டு ஒரு மிதவை வாகனத்தை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அதைக் கீழக்கரைக் கடலில் மிதக்கவிட்டு வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர். வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்!

நியூஸ் காக்டெயில்

* 10 மாதங்களுக்கு முன் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தினான் ஒரு சைக்கோ. அவன் திருடன்தான் என்றும் சொல்ல முடியாது. ஜன்னல் கதவு திறந்திருக்கும் வீடுகளாகப் பார்த்து, அங்கே போய் நின்று கொள்வது; உள்ளே என்ன நடக்கிறது என வேவு பார்ப்பதுதான் அவன் வேலை. அப்போது வெளியான சில சிசிடிவி காட்சிகள் பதற்றத்தை உண்டாக்கின. துடியலூர் காவல் நிலையத்தில் இதுபற்றிப் புகாரும் அளிக்கப்பட்டது. இரவு நேர ரோந்தைக் காவலர்கள் அதிகப்படுத்தியதும் அந்த ஜன்னல் சைக்கோ அமைதியாகிவிட்டான். இப்போது மீண்டும் வெளி வந்திருக்கிறான். இரவு 10.15 மணிக்கே, தன் இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, காம்பவுன்ட் சுவர் எகிறிக் குதித்து ஜன்னல் ஓரம் சென்று நிற்பது ஒரு சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. சத்தம் கேட்டு கொஞ்ச நேரத்தில் பொதுமக்கள் அவனைப் பிடிக்க முயல, சட்டென வண்டியை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டான். ‘வீட்டுக்கு வெளியேயும் என்ன நடக்கிறதென கொஞ்சம் கவனமாக இருங்க’ என போலீஸார் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். உஷார் மக்களே!

நியூஸ் காக்டெயில்

* வயதானால் மனிதர்களுக்கே மரியாதை இல்லை எனப் புகார்கள் கிளம்பிக்கொண்டிருக்க, 90 வயது மரத்திற்கு ராஜமரியாதை கொடுத்துக் கலக்கியிருக்கிறார்கள் திருப்பூர்த் தொகுதி மக்கள். திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் சமுதாயக்கூடம் கட்ட முடிவெடுத்தனர் அதிகாரிகள். அந்த இடத்தில் இருந்த மரத்தை அப்புறப்படுத்த அவர்கள் திட்டமிட, அப்பகுதியைச் சார்ந்த இயற்கை ஆர்வலர் இளங்கோ மாற்று யோசனையுடன் முன்வந்தார். தன் பராமரிப்பில் இருக்கும் பறவைகள் சரணாலயத்தில் அந்த மரத்தை மறுநடவு செய்ய அவர் விண்ணப்பிக்கவும் மகிழ்ச்சியாக சம்மதித்திருக்கிறார்கள் அதிகாரிகள். அவ்வளவுதான், தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்த அரச மரத்திற்கு ஆரத்தி எடுத்து, பூஜை செய்து, மலர் தூவி, கண்ணீரோடு அந்த மரத்தை வழியனுப்பி வைத்திருக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். மரநேயம்!

நியூஸ் காக்டெயில்

* உணவு, சீருடை என மாணவர்களின் கல்விக்கு எதுவும் தடையாக மாறக்கூடாது என அவற்றை இலவசமாக வழங்கும் மக்கள்நல வரலாறு தமிழகத்தில் உண்டு. ஆனால் ஐம்பது ரூபாய் புத்தகங்கள் வாங்கும் செலவுகூட படிக்கும் ஏழை மாணவர்களை சிரமப்படுத்தக் கூடாது என நினைத்த இடத்தில், குறைந்தது ஐயாயிரம் ரூபாய் மதிப்பில் போன் இருந்தால்தான் ஆன்லைனில் கல்வி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மனிதநேயத்தையும், மக்களின் உதவும் குணத்தையும் மூலதனமாக வைத்து இதற்கு ஒரு சிம்பிள் தீர்வைக் கண்டிருக்கிறார் குனிஷா அகர்வால் எனும் 12ஆம் வகுப்பு மாணவி. இதற்காக www.helpchennai.org என்று ஒரு இணையதளம் உருவாக்கியிருக்கிறார். பயன்படுத்திய லேப்டாப், போன் உள்ளிட்ட பொருள்களைப் பிறருக்குக் கொடுக்க விரும்புபவர்கள் இந்த இணையதளத்தில் தகவல்களைப் பரிமாறலாம். லேப்டாப் தேவைப்படுபவர்களும் இந்த இணையதளத்தை அணுகலாம். பயன்படுத்திய லேப்டாப்பிற்கு சர்விஸ் உதவி செய்யவும் பாலசுப்பிரமணியம் என்ற பொறியாளர் முன்வந்திருக்கிறார். இதன்மூலம், ஒரே மாதத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிசெய்திருக்கிறார் குனிஷா. கசடறக் கற்க கம்ப்யூட்டரில் கற்க!