Published:Updated:

பஸ்ஸுக்கு காத்திருந்து... காத்திருந்து..!- அவதிப்படும் மக்கள்; கண்டுகொள்ளாத போக்குவரத்து துறை

ப.கா.ரேவந்த் ஆண்டனி

எந்தப் பேருந்தும் இங்கு நிற்காமல் 50 மீட்டர் முன்பே நிறுத்தி அனைத்துப் பேருந்துகளும் பயணிகளை ஏற்றுகின்றன.

நெய்வேலி ஆர்ச் கேட் பேருந்து நிறுத்தம்
நெய்வேலி ஆர்ச் கேட் பேருந்து நிறுத்தம்

நெய்வேலி ஆர்ச் கேட் பேருந்து நிறுத்தம் எப்போதும் பிஸியாகவே காணப்படும். நெய்வேலி மற்றும் நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் சென்னை நோக்கிச் செல்ல இங்கு வந்துதான் பேருந்து ஏற வேண்டும். சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தப் பேருந்து நிறுத்தத்தில் எப்போதும் கூட்டம் அலை மோதும். அதுவும் விடுமுறை தினங்களிலும் பீக் டைமிலும் சொல்லவே தேவையில்லை.

பேருந்து நிறுத்தம்
பேருந்து நிறுத்தம்

சென்னை மார்க்கம் செல்ல, என்.எல்.சி இந்தியா நிறுவனம் இங்கு பேருந்து நிறுத்தம் அமைத்திருந்தாலும் எந்தப் பேருந்தும் இங்கு நிற்காமல் 50 மீட்டர் முன்பே நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றன. இதற்குக் காரணம் நெய்வேலி நுழைவு வாயிலில் ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட நிழற்குடைதான். பேருந்து நிறுத்தத்துக்கு சற்று முற்பட்ட தொலைவில் இந்தக் கூடாரம் அமைந்துள்ளதால் அனைத்துப் பேருந்துகளும் இங்கு நிறுத்தியே பயணிகளை ஏற்றுகின்றன.

இதனால் நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுவது மட்டுமின்றி, அங்கு நிற்கும் பேருந்துகளால் நெய்வேலி நகர்ப்புறங்களிலிருந்து வரும் வாகனங்களால் பெரும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள்
பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள்

நெய்வேலி அரசு மருத்துவமனையிலிருந்து வரும் ஆம்புலன்ஸுகளும் இந்த வழியாகதான் செல்ல வேண்டும் என்பதால், இது அவசரகால நேரத்திலும் மக்களுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், வியாபாரிகள் என பலத் தரப்பட்ட மக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

என்.எல்.சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இந்தப் பிரச்னைக்கு தீர்வைக் கண்டால் பொதுமக்கள் அவதிப்படுவதிலிருந்து தவிர்க்க முடியும். எனவே, சம்பந்தபட்ட நிர்வாகிகளிடம் இது குறித்து கேட்டபோது, ``பேருந்து நிறுத்தத்துக்கு முன்னதாக நிழற்குடை ஒன்று உள்ளது. மக்கள் அங்கேயே திரளாக நிற்பதால், பேருந்தை ஓட்டுநர்கள் அங்கேயே நிறுத்தி ஏற்றுகின்றனர். இதுதான் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்த முடியாமல் போவதற்கு காரணம்” என்று கூறினர்.

பஸ்ஸுக்கு காத்திருந்து... காத்திருந்து..!- அவதிப்படும் மக்கள்; கண்டுகொள்ளாத போக்குவரத்து துறை

மேலும், இதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், பேருந்தை சரியான இடத்தில் நிறுத்த ஓட்டுநர்களை அறிவுறுத்துவதுடன், விழிப்புணர்வு பலகை ஒன்றையும் அங்கு வைப்பதாக நம்மிடம் உறுதி அளித்தனர்.