Published:Updated:

ஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் தொடர்பு? - சென்னை, நாகையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி ரெய்டு

சென்னை மண்ணடி மற்றும் நாகை மாவட்டம் சிக்கலில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

நாகையில் என்.ஐ.ஏ ரெய்டு
நாகையில் என்.ஐ.ஏ ரெய்டு ( பிரசன்ன வெங்கடேஷ் )

இலங்கைக் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் இந்தியாவில் இருக்கலாம் என்ற தகவலால், அவர்கள் குறித்த விசாரணை நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கைக் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், உளவுத் துறையின் எச்சரிக்கையை அடுத்து தமிழகத்தில் சோதனை நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் சென்னை மண்ணடி, புரசைவாக்கம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல், மஞ்சக்கொல்லை ஆகிய பகுதிகளில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தினர்.

நாகையில் என்.ஐ.ஏ ரெய்டு
நாகையில் என்.ஐ.ஏ ரெய்டு
பிரசன்ன வெங்கடேஷ்

நாகையில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று வருகை தருவதையொட்டி நேற்றே நாகை மாவட்ட காவல்துறை அலர்ட் ஆனது. இரவு முழுதும் தூங்காமல் முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேசியப் புலனாய்வு முகமை ஏ.எஸ்.பி. சவுகத் அலி தலைமையிலான டீம் இன்று அதிகாலை நாகை அருகேயுள்ள மஞ்சக்கொல்லை அசேன் அலி வீட்டைச் சுற்றி வளைத்தனர். கல்வி நிலையம் நடத்தி வரும் அசேன் அலி வீட்டிலிருந்து லேப்- டாப், சில முக்கிய ஆவணைங்களையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.

அதேநேரத்தில் அசேன் அலியின் உறவினர்கள் வசிக்கும் சிக்கல் மற்றும் பொரவாச்சேரியில் உள்ள வீடுகளிலும் சோதனை நடத்தினர். அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதால் அசேன் அலியை எஸ்.பி. ஆபீஸில் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

நாகையில் என்.ஐ.ஏ ரெய்டு
நாகையில் என்.ஐ.ஏ ரெய்டு
பிரசன்ன வெங்கடேஷ்

இலங்கைக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் நாகையில் பதுங்கியிருக்கக் கூடும் என்றும், பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய 9 தீவிரவாதிகளின் பாஸ்போர்ட் முகவரிகள் நாகையை அடுத்துள்ள மஞ்சக்கொல்லை, பொரவாச்சேரி, சிக்கல் போன்ற கிராமங்களைச் சார்ந்துள்ளது என்றும், இவற்றை விசாரிக்கவே தேசிய முகமை அதிகாரிகள் வந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த அதிரடி சோதனைகளுக்கு உதவும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் செல்போன்களை தேசிய முகமை அதிகாரிகள் கைப்பற்றி வைத்துக் கொள்கிறார்கள் என்றும் எதற்காக ரெய்டு என்ற செய்தியையும் கசியவிடவில்லை என்றும், என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் புலம்புகின்றனர்.

அதேபோல், சென்னை மண்ணடியில் உள்ள வஹாத்தே இஸ்லாமி ஹிந்த் அலுவலகம் மற்றும் புரசைவாக்கத்தில் புகாரி என்பவரது அலுவலத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் காலை முதலே சோதனை மேற்கொண்டனர். மண்ணடியில் நடத்தப்பட்ட சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் என்.ஐ.ஏ சோதனை
சென்னையில் என்.ஐ.ஏ சோதனை
கே.ஜெரோம்

இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி தாஜூதீன் மற்றும் இஸ்மாயில் ஆகியோருக்கு என்.ஐ.ஏ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் இன்று மாலை ஆஜராகும்படி அவர்களுக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.