Published:Updated:

ஏரிக்குள் நீந்திய கரிய உருவங்கள்! - தேனியில் ஒரு திகில் அனுபவம்

ராத்திரி ரவுண்ட் அப்
பிரீமியம் ஸ்டோரி
News
ராத்திரி ரவுண்ட் அப்

ராத்திரி ரவுண்ட் அப்

இரவு 11:30 மணி. மின்னல், உறுமலுடன் லேசான சாரல் மழை. தேனி உழவர் சந்தை அருகே மீறுசமுத்திரக் கண்மாய்க் கரையில் நடந்தோம். கண்மாயில் மிதந்த அரை நிலவைத் தாலாட்டிக்கொண்டிருந்தது அலை. ரெயின் கோட்டையும் தாண்டி நாடி, நரம்புகளை ஊடுருவிச் சென்றது குளிர். கைகளைச் சூடாகத் தேய்த்தபடி, யதேச்சையாக ஏரிக்குள் கவனித்தோம். திடீர் மின்னல் வெளிச்சத்தில் ஏரியின் நடுப்பகுதியில் ஏதோ ஓர் அசைவு. மறுநொடி கும்மிருட்டு. உற்றுப் பார்த்தோம்... அரை நிலவின் குறை வெளிச்சம் போதவில்லை. நமது போட்டோகிராபர் டார்ச்சை எடுக்க... சைகையால் `வேண்டாம்’ என்று தடுத்துவிட்டு, அடுத்த மின்னலுக்காகக் காத்திருந்தோம். இடி இடித்த இரண்டொரு விநாடிகளில், பிரமாண்ட மரக்கிளைகளாக வானில் விரிந்து வெள்ளொளி பாய்ச்சியது பெரு மின்னல். ஏரிக்கு நடுவே பெரிய பெரிய கரிய உருவங்கள் நீந்திக்கொண்டிருந்தன. குசுகுசுவென்று மனிதக் குரல் வேறு. அதனால், எருமைகளாக இருக்கவும் வாய்ப்பில்லை. அந்தக் குளிரிலும் குப்பென்று வியர்த்து... தூக்கிவாரிப்போட்டது!

பகலில் பலமுறை அந்த ஏரியைச் சாதாரண மாகக் கடந்திருக்கிறோம். ஏன்... ஏரிக்கரையில் தண்ணீரில் இறங்கி விளையாடியிருக்கிறோம். அப்போதெல்லாம் பயமுறுத்தாத ஏரி... இந்த நடுநிசி 12 மணிக்கு பயங்கரமாக பயமுறுத்தியது. அந்த நேரம் பார்த்தா நாய் ஒன்று ஊளையிட வேண்டும்... ஏதோ ஒரு தைரியத்தில், அப்படியே ஏரிக்கரையில் குத்தவைத்து அமர்ந்து கவனித்தோம்.

ஏரிக்குள் நீந்திய கரிய உருவங்கள்! - தேனியில் ஒரு திகில் அனுபவம்

இருட்டு, கண்களுக்குப் பழகிவிட... அசைவுகள் மட்டும் தெரிந்தன. தண்ணீரின் சலசலப்பு நன்றாகவே கேட்டது. கேமராவைத் தயாராக வைத்துக்கொண்டு காத்திருந்தோம். சில நிமிடங்களில் சலசலப்பு சத்தம் அதிகரித்தது. அடுத்த மின்னலும் வந்தது. நீரின் சலசலப்பு கூடியிருக்க அந்த உருவங்கள் நம்மை நோக்கி வேகமாக நீந்திவருவது தெரிந்தது. அவை கரையை நெருங்கிவிட்டன... மீண்டுமோ ஊளைச் சத்தம். வேறு வழியில்லை, எழுந்து ஓடிவிடலாமா என்று யத்தனித்தபோதுதான் அது நிகழ்ந்தது.

அந்த நான்கு பேரும் நீரிலிருந்து வெளியேறி கரையில் நின்றார்கள். அவர்கள் இடுப்பில் கரிய நிறத்தில் லாரி டியூப்கள். ச்ச்சே... லாரி டியூப்தான் கரிய நிறத்தில் தெரிந்திருக்கிறது... மற்றபடி மனிதர்கள்தான் என்று ஆசுவாசமடைந்த அதேநேரம், ‘இந்தநேரத்தில், அதுவும் இருட்டில் இவர்களுக்கென்ன இங்கே ஏரிக்குள் வேலை... நமக்கே குளிர் இவ்வளவு நடுக்குகிறதே... இவர் களுக்கு?’ என்றெல்லாம் கேள்விகள் துளைத்தன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இடுப்பில் டியூப்களுடன் இணைத்துவைத்திருந்த சுருக்குவலைகளைக் கீழே போட்டார்கள். ஐந்தாறு வலைகள். ஒவ்வொன்றிலும் மீன்கள் துள்ளிக் கொண்டிருந்தன. நிம்மதிப் பெருமூச்சுவிட்டோம். போட்டோகிராபர் கேலிப் புன்னகையுடன் என்னைப் பார்க்க... ‘நீ மட்டும் என்னவாம்!’ என்கிறரீதியில் நானும் அவரைப் பார்க்க இருவரும் சத்தமாகச் சிரித்துவிட்டோம்.

ஏரிக்குள் நீந்திய கரிய உருவங்கள்! - தேனியில் ஒரு திகில் அனுபவம்

“எலேய்... என்னடா அங்க சத்தம்?” மிரட்டலாக வந்தது குரல். “அண்ணே பத்திரிகைக்காரங்க... சும்மா ராத்திரி ரவுண்ட்ஸ் வந்தோம்’’ என்றோம். “ஏம்ப்பா... ஊருக்குள்ள போலீஸ்காரங்கதான் ரவுண்ட்ஸ் வர்றாங்கன்னா, நீங்க வேறயா?” என்றபடி அருகில் வரவும்... சூழல் மெதுவாக சகஜமானது.

“எதுக்குங்க நடுராத்திரியில மீன் பிடிக்குறீங்க, பகல்ல பிடிக்கக் கூடாதா?” என்றோம். பெருமூச்சு விட்டவர்கள், “எல்லாம் எங்க கிரகம்... ஆரம்பத்துல அத்தனை கண்மாய்லயும் எங்க ஆளுகதான் மீன் பிடிப்பாங்க. முப்பாட்டன், தாத்தன் காலத்துல இருந்தே எங்களுக்குச் சோறு போடுறது இந்தக் கண்மாய்ங்கதான். ஆனா, ஏழெட்டு வருஷமா இதுலயும் அரசியல் புகுந்து, எங்களை ஓட ஓட விரட்டுது. ஆளுங்கட்சிக்காரன், எதிர்க்கட்சிக்காரன் எவனுக்குப் பண பலமும், அதிகார பலமும் இருக்கோ அவனுங்க ஏலம் எடுத்துடுறானுங்க. அதுவுமில்லாம... அம்புட்டுப் பணம் கட்டி ஏலம் எடுக்கவும் எங்களுக்குத் திராணியில்லை தம்பி...” என்றபடி அனைவரும் புதர் மறைவில் வைத்திருந்த துணியை எடுத்து, தலையையும் உடலையும் துவட்டிக்கொண்டு கைலியும் சட்டையும் அணிந்துகொண்டார்கள்.

அவர்களில் மூத்தவர் ஒருவர் தொடர்ந்தார். வயது 60-க்கும் மேலிருக்கும்... “நாங்களும் ஆரம்பத்துல ஏலம் எடுக்க முயற்சி பண்ணினோம். ஆனா, லஞ்சம் கொடுக்காம வேலைக்கு ஆகலை. அதனால, அதிகாரிங்களுக்கும் ஏலம் எடுத்தவனுங் களுக்கும் பயந்துக்கிட்டு... அவங்க நல்லவங்க மாதிரியும், நாங்க களவாணிங்க மாதிரியும் நடுராத்திரியில இப்பிடி வயித்துப் பொழப்புக்கு அல்லாட வேண்டியதாப்போச்சு. ஒருமுறை ஏலம் எடுக்குற தகராறுல யாரும் மீன் பிடிக்கக் கூடாதுனு கண்மாய்க் கரையைவே உடைச்சுவிட்டுட்டானுங்க தம்பி. நாங்க பிடிச்சிருக்குற மீனுங்க அத்தனையும் உழுவை, குறவை, கெளுத்தின்னு நாட்டு மீனுங்க. தேளி, அழுக்குத்தின்னி, ஜிலேபினு எங்க வலையில சிக்குன கம்பூசிய (அந்நிய) மீனுங்களையெல்லாம் தூக்கி வீசிட்டோம். அதெல்லாம் உடம்புக்கு நல்லதில்லை... நம்மகிட்ட மீனு வாங்குறவங்க உடம்பு கெட்டுப்போயிடக் கூடாதுல்ல கண்ணு.

ஒருகாலத்துல இதே கண்மாயில கூடை கூடையா அயிரை அள்ளியிருக்கேன். பனையேறி, கெளுத்தி கொட்டிக்கிடக்கும். அதெல்லாம் உடம்புக்கு அவ்வளவு நல்லது தம்பி. ஏலம் எடுத்தவங்க வியாபாரத்துக்காக கம்பூசிய மீனுங்களை கண்மாயிலவிட்டதால இன்னிக்கு அந்த இனமெல்லாம் அழிஞ்சுபோச்சு. நாட்டு மீன்களைப்போல எங்களோட இந்தப் பொழப்பும் இந்தத் தலைமுறையோட அழிஞ்சுபோயிடும் தம்பி...” என்றவர், “பார்த்து சூதானமா வீட்டுக்குப் போங்க” என்று சொல்லிவிட்டு, நடையைக் கட்டினார்.

நள்ளிரவு 1:30 மணி. பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்த டீக்கடையில் டீ சொன்னோம். சுடச்சுட டீயைக் கொடுத்தார் மாஸ்டர். “டீ சூப்பர்ண்ணே... நடுராத்திரியில இப்படி டீ கிடைக்குறதெல்லாம் வரம்” என்றேன் ஏதோ கவிதைபோல. நம்மை மேலும் கீழும் பார்த்தவர், “என்ன தம்பி உலகம் புரியாதவங்களா இருக்கீங்க. அங்க பாருங்க... நகராட்சி கக்கூஸுக்குப் பின்னால ஒரு கும்பலே நிக்குது... 24 ஹவர்ஸ் சரக்கு கிடைக்கும். அப்பிடியே பின்னாடி போனீங்கன்னா கஞ்சா கிடைக்கும். ஒரு யூ டர்ன் போட்டீங்கன்னா பொம்பளை புரோக்கருங்க அப்படியே அள்ளிக்கிடுவாங்க... டீயெல்லாம் சாதாரணம் தம்பி...” என்றபடி எஃப்.எம்-ஐ ஆன் செய்தார்.

“ஹஹஹஹஹஹஹா.... சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது... சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது!” என்று ஒலித்தது பாடல்!