Published:Updated:

கொரோனா கோரம்... குப்பை அள்ளும் தங்கம்! - ராத்திரி ரவுண்ட்-அப்

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

- நைட் ரைடர்

கொரோனா கோரம்... குப்பை அள்ளும் தங்கம்! - ராத்திரி ரவுண்ட்-அப்

- நைட் ரைடர்

Published:Updated:
தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

தென்மேற்குப் பருவமழை சற்றே தீவிரமடைந்திருந்த ஓர் இரவு அது. மாலை ஆரம்பித்த மழை, நள்ளிரவு ஆகியும் விடாமல் கோவை நகரைக் குளிர்வித்துக் கொண்டிருந்தது. ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டும், சாலைகளில் மனிதர்கள் நடமாட்டத்தை முற்றிலுமாகக் குறைத்திருந்தது மழை. காந்திபுரம், அவிநாசி சாலை, ஆர்.எஸ்.புரம், திருச்சி சாலை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளிலும்கூட ஒருசில வாகனங்கள் மட்டுமே அவ்வப்போது ஊர்ந்தன. கடந்துபோன போலீஸ் ஜீப்பில், வாக்கி டாக்கி பல உத்தரவுச் செய்திகளைக் `கரகர’த்தது. குளிரில் செக்யூரிட்டிகள் போர்வைக்குள்ளும், ஜெர்க்கினுக்குள்ளும் ஐக்கியமாகியிருந்தனர். தெருநாய்கள்கூட ஈரமில்லாத உலர்ந்த இடங்களைத் தேடித் தஞ்சமடைந்திருந்தன.

இந்த இரவைக் கடக்க, சற்று கதகதப்பும் தெம்பும் அவசியம் என்பதால் தேநீருக்கு ஆயத்தமானோம். நம் விடாமுயற்சிக்கு டவுன்ஹால் பகுதியில் பலன் கிடைத்தது. டி.வி.எஸ் வாகனத்தில் வந்த முத்து அண்ணன் அருமையான தேநீர் மூலம் அந்த இரவை மேலும் அழகாக்கினார். நேரம் நள்ளிரவு 12 மணியைத் தொட்டிருந்தது; மழையும் ஓய்ந்திருந்தது. ஆளரவமற்ற ரங்கே கவுடர் மார்க்கெட் பகுதியில், மாஸ்க் அணிந்தபடி குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தார் அந்த நபர். படு சின்சியராக வேலை செய்துகொண்டிருந்தவரை சிறிது நேரம் கவனித்துவிட்டு, பேச்சுக் கொடுத்தோம்.

பெயர் தங்கம்! கொரோனா என்ற இரக்கமற்ற நோய்க்கிருமி, நடுத்தெருவில் நிறுத்திய லட்சோப லட்சம் எளியவர்களில் தங்கமும் ஒருவர். மற்றவர்களைப்போல முடங்காமல், தெருவிலிருந்தே துளிர்விடத் தொடங்கியிருக்கிறார். அவரிடம் பேசினோம்...

கொரோனா கோரம்... குப்பை அள்ளும் தங்கம்! - ராத்திரி ரவுண்ட்-அப்

‘‘நம்ம பூர்வீகம் இதுதான். கெம்பட்டி காலனியில வீடு. சம்சாரம், ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. ஹோட்டல்கள்ல, டீக்கடையில கிளாஸ் கழுவுற வேலை பார்த்துட்டு இருந்தேன். ஒரு நாள் வேலை பார்த்தா, ரூ.200-250 கிடைக்கும். கொரோனா வந்துச்சு... இருந்த அந்த வேலையும் போயிடுச்சு. குடிசை வீட்லதான் இருக்கோம். ரேஷன் அரிசில பொங்கிக்குவோம். ஒரு பையன், ஒரு புள்ள. ரெண்டு பேரும் கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்கறாங்க. ஸ்கூல் இருக்கறப்ப அங்கயே சத்துணவு சாப்பிட்டுப்பாங்க. இப்ப அதுக்கும் வழியில்ல. விலைவாசியெல்லாம் எங்கேயோ போயிடுச்சு. புள்ளைங்களுக்கு ஏதாவது பண்ணணும்ல... அதான் இந்த வேலைல இறங்கிட்டேன்.

பொதுவா, நைட் ஒன்பது... பத்து மணிக்கு மேலதான் குப்பைய வெளிய போட்டுட்டு கடையை மூடுவாங்க. பத்து... பத்தரை வாக்குல நான் இந்த வண்டிய எடுத்துட்டு வந்து வேலையை ஆரம்பிப்பேன். மூணு மணி நேரத்துக்கு மார்க்கெட் ஃபுல்லா சுத்துவேன். சாக்கு, அட்டை, பிளாஸ்டிக் கவர், வாட்டர் கேன், வயர், டேப்னு பலவகை குப்பைங்க கெடைக்கும். குப்பைங்களை ஒவ்வொரு வகையாப் பிரிச்சு, காலைல பழைய மார்க்கெட்ல கொடுத்துடுவேன். ஒவ்வொரு நாள் கிடைக்கிற குப்பையைப் பொறுத்து 300-லருந்து 400 வரைக்கும்கூட கெடைக்கும். உண்மையச் சொல்லணும்னா, இப்பதான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். வேலைக்குப் போறப்ப பத்து நிமிஷம் லேட்டானாலும் கன்னா பின்னானு திட்டுவாங்க. என்ன சொன்னாலும் கைகட்டியே நிக்கணும். இப்போ யாருக்கும் கைகட்டி நிக்க வேண்டிய அவசியமில்லை. குப்பை அள்ளினாலும் நமக்கு நாமதான் ராஜா. இதுல ஊரைச் சுத்தப்படுத்தற ஒரு திருப்தியும் கிடைக்குது...

இந்த கொரோனாவைப் பார்த்தெல்லாம் நான் பயப்படலை. உடம்புல தெம்பும், மனசுல நம்பிக்கையும் இருக்கு. கவனமா இருந்தா பயப்பட ஒண்ணுமில்லை. எல்லாத்துக்கும்மேல இன்னிக்கு வேலைக்குப் போனாத்தான், நாளைக்கு வீட்ல அடுப்பு எரியும். பயம் பார்த்தா வயித்துப் பொழப்பு நடக்காது. சூடு, மழை, காத்து, அனல் எல்லாத்துலயும் நிக்கறதால, எங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். பேயே அடிச்சாலும் ஒண்ணும் ஆகாது. ஆனா என்ன... நைட்ல வேலை பார்க்கறதுல நிறைய பிரச்னைகளும் இருக்கு. திடீர்னு போலீஸ்காரங்க வண்டியைப் புடிச்சுத் தள்ளி பிரச்னை பண்ணுவாங்க. நைட் நேரத்துல பல சைக்கோ கேரக்டர்கள் வந்து பிரச்னை பண்ணும். குப்பை அள்ளுறதுக்குக்கூட எங்க ஆட்கள் மேல போலீஸ்ல புகார் கொடுக்குறவங்களும் இருக்காங்க” என்று தங்கம் பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கே வந்து குறுக்கிட்ட ஒருவர், ‘‘என்ன பத்திரிகை சார்... அண்ணனைப் பேட்டி எடுக்குறீங்களா? பேர் மாதிரி கோல்டான மனுசன் சார்’’ என்று அவருக்கு நற்சான்றிதழ் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.

கொரோனா கோரம்... குப்பை அள்ளும் தங்கம்! - ராத்திரி ரவுண்ட்-அப்

மீண்டும் தொடர்ந்த தங்கம், ‘‘இந்தக் குப்பைங்களோட, இவரை மாதிரி நல்ல மனுசங்களையும் நான் சம்பாதிச்சிருக்கேன். இல்லாட்டி இந்த வேலையும் பார்க்க முடியாது. இங்க எங்களோட கெட்டப்புல சில திருட்டு கோஷ்டிகளும் வருவாங்க. நைட் இறங்குற லோடுகளை சில நேரம் கடைக்கு வெளியவே வெச்சுருப்பாங்க. எங்களை மாதிரியே குப்பை அள்ளுற மாதிரி வந்து, அவங்க பொருள்களை எடுத்துட்டுப் போயிடுவாங்க. அதுல சில பொம்பளைங்களும் இருக்காங்க. கையில குழந்தைங்களை வெச்சுக்கிட்டு பரிதாபமா வந்து வேலையைக் காமிச்சுடுங்க. ஆனா, சம்பந்தப்பட்டவங்களுக்கு எங்க எல்லார் மேலயும்தான சந்தேகம் வரும்? இந்த மாதிரி இடத்துல நம்பிக்கையைச் சம்பாதிக்கறது ரொம்ப முக்கியம்’’ என்ற தங்கத்திடம் செல்போன்கூட இல்லை. ஆனாலும், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், போலீஸ், தடுப்பூசி, பெகாசஸ் ஸ்பைவேர் என நாட்டுநடப்புகள் அனைத்தையும் கூறி நம்மை அசரவைத்தார்.

‘‘அரசாங்கம் கொடுக்குற காசு, ரேஷன் பொருள்கள் எல்லாம் வாங்கிக்கறோம். அதேமாதிரி அவங்க சொல்ற ஊசியும் போடணும்ல... அதான் கொரோனா தடுப்பூசியும் போட்டுட்டேன். அரசாங்கம் சொல்ற மாதிரி எல்லாரும் ஊசி போட்டுக்கோங்க’’ என்று விழிப்புணர்வு வேண்டுகோளையும் வைத்துவிட்டு, மீண்டும் குப்பை அள்ளத் தொடங்கினார் தங்கம்.

தங்கங்களால் சுழல்கிறது; சுத்தமாகிறது இந்த பூமி!