Published:Updated:

ஈசிஆர் பயணம்... அத்தனை ஈஸியில்லை! - ராத்திரி ரவுண்ட்-அப்

ராத்திரி ரவுண்ட்-அப்
பிரீமியம் ஸ்டோரி
ராத்திரி ரவுண்ட்-அப்

- நைட் ரைடர்

ஈசிஆர் பயணம்... அத்தனை ஈஸியில்லை! - ராத்திரி ரவுண்ட்-அப்

- நைட் ரைடர்

Published:Updated:
ராத்திரி ரவுண்ட்-அப்
பிரீமியம் ஸ்டோரி
ராத்திரி ரவுண்ட்-அப்

சமீபத்தில் ஒருநாள் பின்னிரவுக்கு மேல் நடிகை யாஷிகா ஆனந்த்தின் கார் சென்னை ஈ.சி.ஆர் சாலையில் விபத்துக்குள்ளானது. நள்ளிரவைத் தாண்டி ஈ.சி.ஆரில் விபத்துகள் அதிகரித்திருக்கின்றன என்று வந்த தகவலை அடுத்து, ஈ.சி.ஆரில் ராத்திரி ரவுண்ட்-அப் செல்ல முடிவெடுத்தோம். கூடவே, ஈ.சி.ஆரின் இண்டு இடுக்கெல்லாம் புகுந்துவரும் நண்பர் ஒருவரையும் அழைத்துக்கொண்டோம்.

இரவு 10 மணி. அண்ணா சாலையிலிருந்து கிளம்பிய நமது கார் பாலவாக்கம் சிக்னலில் பச்சை விளக்குக்காகக் காத்திருந்த நேரத்தில் சிக்னலை அலட்சியப்படுத்தி, `விர்ர்ர்ர்’ரென்று பறந்தது பச்சை நிற லம்போகினி. இந்திப் பட நடிகர் தோற்றமுடைய நபர்தான் காரை ஓட்டிச் சென்றார். நம் நண்பர், “காருல போறது யாருன்னு தெரியுதா? பெரிய இடத்துப் புள்ளை” என்று பிரபல நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டுச் சொன்னார்.

பாலவாக்கம் தாண்டி நீலாங்கரையை நெருங்கிக்கொண்டிருந்தோம். நமக்கு முன்னால் இறுக்கியணைத்தபடி இளம் ஜோடி ஒன்று உயர்ரக பைக்கில் பறந்துகொண்டிருந்தது. நீலாங்கரையைத் தாண்டியதும் போலீஸாரின் பேரி கார்டு மறித்தது. இளம் ஜோடியின் பைக் பேப்பர்களைப் புரட்டிக்கொண்டிருந்தனர் போலீஸார். நாம் காரை நிறுத்தியதும், “எங்க போறீங்க? பேப்பர்ஸ் எடுங்க” என்றார் காவலர் ஒருவர். தூக்கக் கலக்கத்தில் சிவந்திருந்தன அவரது கண்கள். லைசென்ஸை மட்டும் சரிபார்த்தவர், “குடிக்கறதா இருந்தா அங்கேயே ரூம் போட்டு தங்கி, தெளிஞ்சதும் காலையில கிளம்பி வாங்க. எங்களைப் படுத்தி எடுக்காதீங்க” என்றார் எரிச்சலோடு. பாவம், அவரது வேலை அழுத்தம் அப்படி. ஈ.சி.ஆரில் ‘குடி’மகன்கள் கொஞ்ச நஞ்சமா சேட்டை செய்கிறார்கள்!

ஈசிஆர் பயணம்... அத்தனை ஈஸியில்லை! - ராத்திரி ரவுண்ட்-அப்

மாமல்லபுரம் சாலையில் பயணமானோம். ஆங்காங்கே பைக்குள் ஓரங்கட்டப்பட்டிருக்க... பீர் பாட்டிலும் கையுமாக இருந்தார்கள் இளைஞர்கள், யுவதிகள் சிலர். வி.ஜி.பி-யைத் தாண்டி கடற்கரைக்குச் செல்லும் கான்கிரீட் சாலையில் பளபளவென நின்றுகொண்டிருந்தது ஜெர்மன் நாட்டின் விலையுயர்ந்த கார். காருக்கு அருகே 50 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்களும், இரண்டு இளம் பெண்களும் கையில் பீர் டின்களுடன் சாலையோரம் நின்று அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். நாம் கீழே இறங்கியதுதான் தாமதம்... நமக்காகவே காத்திருந்ததுபோல சில நொடிகளில் பைக்கில் காவலர் ஒருவர் வந்தார். நம்மிடம், “மணி 11 ஆயிருச்சு... இங்கல்லாம் நிக்கக் கூடாது, ம்ம்... கிளம்புங்க... கிளம்புங்க” என்றார் விரைப்பாக. நாம் காரைக் கிளப்பிக்கொண்டே அந்த ஜெர்மன் கார் ஆட்களை நோட்டமிட்டோம். வழுக்கை ஆசாமியிடம் காவலர் என்ன பேசினார் என்று தெரியவில்லை. சத்தமில்லாமல் அந்த இடத்திலிருந்து கிளம்பியது, ஜெர்மன் கார் அல்ல... காவலரின் பைக்! “சட்டம் ஒழுங்கை நல்லா பாதுகாக்குறாங்கல்ல...” என்று சொல்லி, சத்தமாகச் சிரித்தார் நம்முடன் வந்திருந்த நண்பர்.

முட்டுக்காட்டைத் தாண்டி சென்று கொண்டிருந்த நம் காரை முந்திக்கொண்டு `விர்ர்... விர்ர்...’ என மூன்று கார்கள் பறந்தன. அத்தனையும் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள். நான்கு கி.மீ தாண்டியதும் அந்த மூன்று கார்களும் ஓரமாக நின்று கொண்டிருக்க... நாமும் காரை நிறுத்தினோம். அந்தக் கார்களில் வந்திருந்த இளைஞர்கள் ஆறு பேர் சத்தமாகப் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தனர். நம்மைப் பார்த்ததும் தயக்கத்துடன் “மஃப்டி போலீஸா?” என்றார் இளைஞர் ஒருவர். “இல்லைங்க ப்ரோ. கார் செமயா இருக்குல்ல, அதான் பார்த்தோம்” என்றோம்.

“இல்லை ப்ரோ... போலீஸ் எங்களை மாதிரி ஆளுங்களையும், இந்த காரையும் பார்த்தாலே ‘பணக்காரப் பசங்க.. குடிச்சுட்டு வண்டி ஓட்டுவானுங்க’னுதான் நினைக்குறாங்க. எங்க ஆசைக்கு 8 கோடி ரூபாய்க்கு இந்த காரை வாங்கிட்டோம். ஆனா, சிட்டி டிராஃபிக்ல இதை ஓட்டவே முடியாது. ஈ.சி.ஆர்ல நைட்ல டிராஃபிக் இருக்காது... அதனால மாசத்துக்கு ரெண்டு வீக் எண்ட்ல இப்படி காரை எடுத்துட்டு ஆசைக்கு ஓட்டுவோம். நாங்கள்லாம் ஃபுட்டீஸ் ப்ரோ. போய் ஆசையா பிடிச்சதைச் சாப்டுட்டு திரும்பி வந்துருவோம். சாங்ஸ், ஃபுட், டிரைவ் அவ்ளோதான். சரக்கெல்லாம் தொட்டதே இல்லை” என்று புலம்பினார் அந்த இளைஞர். “ரோட்ல ஓட்டினா தப்பில்லங்க. சிலர் பிளாட்பாரத்துல ஓட்டுறாங்கள்ல.. அதான் பிரச்னை” என்று சொல்லிவிட்டு சிரித்தபடி நம் காரைக் கிளப்பினோம்.

மாமல்லபுரத்துக்கு முன்பாக நட்சத்திர விடுதியின் வாசலில் செக்யூரிட்டியிடம் இரண்டு ஆண்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அருகிலிருந்த காரில் மூன்று பெண்கள் கண்கள் சொருக இருக்கையில் சாய்ந்திருந்தார்கள். இரவு அந்த விடுதியில் தங்க வேண்டும் என்று இரண்டு ஆண்களும் வாக்குவாதம் செய்ய, “கொரானா டைம்ல ஆன்லைன்ல புக் செஞ்சவங்களுக்கு மட்டும்தான் பர்மிஷன்” என்று சொன்ன செக்யூரிட்டி அவர்களை உள்ளே அனுமதிக்க வில்லை. நாம் நெருங்கிச் சென்று கவனித்தபோது தள்ளாடியபடியே, “சரக்கடிச்சிருக்கோம். தங்கிட்டுப் போலாம்னா விட மாட்டேங்கறாங்க” என்றார் ஒருவர். அவரின் நண்பரோ குழறிய குரலில், “டேய் மாப்ள, மணி 12 தாண்டிடுச்சு. ரெண்டு மணி நேரம் கார்ல தூங்குவோம். அப்புறம் போலீஸ் செக்கிங் முடிஞ்சுரும்... தெளிவா கெளம்பிப் போயிடலாம்” என்றார். அவர்கள் உடல்மொழியும் குழறல் குரலும் விடிந்தாலும் அவர்களுக்கு போதை தெளியாது என்று காட்டியது. நம் நண்பர், “வழக்கமாவே இப்படித்தான். ரெண்டு மணிக்கு மேல செக்கிங் இருக்காதுன்னு எல்லா காரும் அடிச்சு புடிச்சிக் கிட்டு வேகமா கெளம்பும். விடியக் காலையில ஆக்சிடென்ட் ஆகக் காரணமே அதான்” என்றார். ஒன்று மட்டும் புரிந்தது... ஈ.சி.ஆரில் இரவுப் பயணம் அத்தனை ஈஸியில்லை... வெகு ஜாக்கிரதையாகப் பயணிக்க வேண்டும்!

மணி ஒன்றை நெருங்கியிருந்தது... மெதுவாக யூ டர்ன் போட்டோம். எதிர்ச் சாலையோர பலகையில் ‘சாலைப் பாதுகாப்பு... சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு’ என்று ஒளிர்ந்தன வாசகங்கள். அனைவரும் உணரவேண்டிய வார்த்தைகள் இவை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism