Published:Updated:

நள்ளிரவு கனிமவளக் கொள்ளை! - ராத்திரி ரவுண்ட்-அப்

கனிமவளக் கொள்ளை
பிரீமியம் ஸ்டோரி
கனிமவளக் கொள்ளை

- நைட் ரைடர்

நள்ளிரவு கனிமவளக் கொள்ளை! - ராத்திரி ரவுண்ட்-அப்

- நைட் ரைடர்

Published:Updated:
கனிமவளக் கொள்ளை
பிரீமியம் ஸ்டோரி
கனிமவளக் கொள்ளை

தமிழக - கேரள எல்லையான களியக்காவிளையில், மலையாள வாசம் பலமாக வீசியது. கடைகளில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் விளம்பரங்கள் மின்னின. பனியா, மழையா என மயங்கும் அளவுக்கு ஸ்பிரே அடித்தது போன்ற சாரல் வீசிக்கொண்டிருந்தது. மணி இரவு பன்னிரண்டைத் தாண்டிய பிறகும், தமிழகத்தைத் தாண்டி கேரள எல்லைக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. எல்லையைக் கடக்கும் வாகனங்களை ரோட்டோரம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அவற்றில், பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளின் எண்ணிக்கைதான் அதிகம். செக்போஸ்ட்டின் எதிர்ப்பக்கம் கேரளாவிலிருந்து வரும் வாகனங்களை மறித்து, கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியை கவனித்துக்கொண்டிருந்தனர் சுகாதாரத்துறை ஊழியர்கள்.

நள்ளிரவு கனிமவளக் கொள்ளை! - ராத்திரி ரவுண்ட்-அப்

களியக்காவிளை செக்போஸ்ட்டில் ஒவ்வொரு வாகனமும் அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டுத்தான் எல்லை கடந்தன. பத்தடிக்கு மேல் உயரம்கொண்ட பாடிகளுடன் செக்போஸ்ட்டில் வரிசையாக வந்து நின்றன பெரிய டிப்பர் லாரிகள். லாரிகளின் பின்னால், ‘டிப்பர் லாரி உரிமையாளர்களுக்கு அறிவிப்பு’ என்ற தலைப்பில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. ‘டிப்பர் லாரி உரிமையாளர்கள் அனைவரும் தற்போது மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ள எடையளவு மட்டுமே கனிமவளங்களை டிப்பர் லாரிகளில் ஏற்ற வேண்டும். இதை மீறும் டிப்பர் லாரிகள் இடைமறிக்கப்பட்டு, அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். இவண், கன்னியாகுமரி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள்’ என்ற போஸ்டர் வாசகத்தைப் படித்துக்கொண்டிருந்தபோதே... ‘‘நீங்க பத்திரிகையா?’’ என்று பின்னாலிருந்து குரல் கேட்டது. “ஆமா” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்த்தபோது ‘காமன் மேன்’ என்று சொல்லத்தக்க ஒருவர் நின்றிருந்தார். நம்மை அவர் வெகுநேரமாகக் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார் என்பது பேச்சிலேயே தெரிந்தது.

‘‘தம்பி... எனக்கு இந்த ஊருதான். வேற எதையும் என்னைப் பத்திக் கேக்காதீங்க. ஆனா, நான் சொல்ற விஷயம் ரொம்ப முக்கியமானது...’’ என்றபடி தொடர்ந்தார்.

``ராப்பகலா இதுபோல பெரிய பாடி கட்டுன லாரிகள்ல பாறை, எம்சாண்ட், ஜல்லினு நம்ம மாநிலத்தோட கனிமவளங்களைக் கடத்திக்கிட்டுப் போறது பயங்கரமா நடக்குது. நைட்டு ரெண்டு மணிக்கு மேல ரயில்பெட்டி மாதிரி நீள வரிசையில லாரிங்க நிக்கும். முதல்ல போற லாரியில இருக்குறவரு இறங்கி, மொத்தம் எத்தனை லாரிகள்ங்கிற கணக்கைக் கொடுத்து அதுக்கான மாமூலை செட்டில் பண்ணிடுவாரு. அதுக்குப் பிறகு, லோடான எல்லா லாரிகளும் வரிசையா கேரளாவுக்குப் பறந்துடும். கொஞ்ச நாளுக்கு முன்னால, ஏதோ இயக்கத்துல உள்ளவங்க போராட்டம் நடத்துனதால பேருக்குக் கொஞ்சம் லாரிகளைப் பிடிச்சு ஃபைன் போட்டாங்க. அதுக்குப் பெறவு பேருக்கு இப்பிடி நோட்டீஸ் ஒட்டிக்கிட்டு, ஊரை ஏமாத்திக்கிட்டு கனிமவளத்தைக் கடத்துறாங்க’’ என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, நம்மை நோட்டமிட்டது காக்கிகளின் கண்கள். உடனே செக்போஸ்ட் அலுவலக அறையின் ஜன்னலை கர்ட்டன் மூடிக்கொண்டது.

கொஞ்சம் ஓய்வுக்காக அந்தப் பக்கமாகப் பாடல் கேட்டபடி அமர்ந்திருந்த லாரி டிரைவர் ஒருவர், நம்மை நோக்கி வந்தார். கையிலிருந்த போனில், ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே...’ என சுசீலா பாடிக்கொண்டிருந்தார். பாட்டை நிறுத்திவிட்டு நம்மிடம் பேசத் தொடங்கினார்.

நள்ளிரவு கனிமவளக் கொள்ளை! - ராத்திரி ரவுண்ட்-அப்

‘‘குழித்துறை தாமிரபரணி ஆத்துல, பத்து பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவ்வளவு மணல் இருந்துச்சு. எல்லாத்தையும் கேரளத்துக்குக் கடத்திட்டாங்க. இங்கேன்னு இல்லை... சொல்லப்போனா நம்ம ஊருல இருக்குற எந்த ஆறுகள்லயும் சுத்தமா மணலே இல்லை. ஆறுனு மட்டுமில்லை, மேற்குத் தொடர்ச்சி மலைகள்ல இருந்தும், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள்லருந்தும் கல்லு, பாறைப்பொடிகளைப் பெரிய பெரிய லாரிகள்ல ஏத்தி கேரளாவுக்குக் கொண்டு போறாங்க. கேரளாவுல இயற்கை வளங்களெல்லாம் பாதுகாப்பா இருக்கு. அங்கருந்து நாம ஒரு ஜல்லியக்கூட எடுத்துட்டு வர முடியாது. அந்த விஷயத்துல அந்த ஊரு கட்சிக்காரங்க ஒத்துமையா இருக்காங்க. ஆனா, நம்ம ஊருல கமிஷனுக்கு ஆசைப்பட்டு கட்சிக்காரங்க வாயைத் தொறக்குறதே இல்லை. அதனால, நம்ம மலைகளை ஒடைச்சு கேரளாவுக்குக் கொண்டுபோறாங்க. கேரளாவுல துறைமுகம் கட்ட, ரோடு போட, ஜல்லி... பாறப்பொடி வேணும்னு ஒரு நாளைக்கு அம்பது லாரிக்கு பர்மிஷன் வாங்குறாங்க. ஆனா, தினமும் ஆயிரத்துக்கு மேல லாரிகள்ல கேரளாவுக்கு கல்லு, ஜல்லி கொண்டு போறாங்க. அரசுப் பணிக்குனு கேரளாவுக்குக் கொண்டுபோற ஜல்லிகளை குடோன்கள்ல பதுக்கிவெச்சு, உள்ளூர்ல கொள்ளை லாபத்துக்கு விக்கிறாங்க’’ என மூச்சுவிடாமல் பேசியவர் நம்மை நெருங்கிவந்து, ‘‘இப்பிடி ராத்திரிகள்ல கனிமவளங்களைக் கடத்திட்டுப் போகுற நிறைய லாரிகளுக்கு நம்பர் பிளேட்டே கிடையாது தெரியுமா...’’ எனக் கிசுகிசுத்து நம்மை அதிரவைத்தார்.

இரவு ஒரு மணிக்கு மேல், களியக்காவிளை செக்போஸ்ட்டிலிருந்து மார்க்கெட் ரோடு செக்போஸ்ட்டை நோக்கி நடந்தோம். சாலைப் பணி நடப்பதால், அந்த ரோடு மூடப்பட்டிருந்தது. பைக் மட்டும்தான் போய்வந்தது. இந்த செக்போஸ்ட்டில்தான், எஸ்.எஸ்.ஐ வில்சன் பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், கடந்த வருடம் நடந்தது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, காவலர்கள் அமர்ந்து பணிசெய்யும் பழைய தகரக் கொட்டகை ஷெட் மாற்றப்பட்டு, சிறிய கான்கிரீட் அறை கட்டிக்கொடுக்கப் பட்டிருக்கிறது. அதற்குள் இரண்டு காவலர்கள் பணியில் இருந்தார்கள். ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை சம்பவத்துக்குப் பெறவு எப்பவும் ரெண்டு போலீஸ் டூட்டி போடுறாங்க. பயங்கரவாதிங்க சுட்டுட்டுப் போன பெறவு, செக்போஸ்ட்டுல டூட்டியில இருக்குறவங்களுக்குத் துப்பாக்கி கொடுத்துருந்தாங்க. என்ன காரணமோ, இப்ப துப்பாக்கியைத் திரும்ப வாங்கிட்டாங்க’’ என்றார்.

நூறடி இடைவெளியில் இருக்கிற ஒரு செக்போஸ்ட்டுக்கு, கனிமவளக் கடத்தல்காரர்களின் கவனிப்பு பலமாக இருக்கிறது. மற்றொரு செக்போஸ்ட்டில் ஆளரவமில்லாமல், பாதுகாப்புப் பணியிலிருக்கும் காவலர்கள் கையில் லத்திகூட இல்லை. ‘குற்றம்’ என்றால் என்ன என்று சிந்தித்தபடியே நாம் அங்கிருந்து கிளம்பினோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism