Published:Updated:

“பத்திரமா வீடு போய் சேரு பாப்பா!” - ராத்திரி ரவுண்ட்-அப் - புதுச்சேரி

புதுச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி

- நைட் ரைடர்

“பத்திரமா வீடு போய் சேரு பாப்பா!” - ராத்திரி ரவுண்ட்-அப் - புதுச்சேரி

- நைட் ரைடர்

Published:Updated:
புதுச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி

புதுச்சேரி அண்ணா சாலை. சனிக்கிழமை இரவு 11:30 மணி. டூ வீலர்களும் கார்களும் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தன. சற்று தொலைவிலிருந்து மெலிதாகக் காற்றில் கசிந்துவந்தது பாப் இசை. குடோன் ஒன்றின் வாசலில் லோடு வாகனத்திலிருந்து ‘சரக்கு’ பெட்டிகளைத் தொழிலாளர்கள் தூக்கி வீச... பாட்டில்களின் `சிலிங் சிலிங்’ சத்தத்துடன் லாகவமாக அதை கேட்ச் பிடித்து அடுக்கிக்கொண்டிருந்தார்கள்.

மெதுவாக டூ வீலரைச் செலுத்தினோம். ராஜா தியேட்டர் சந்திப்பைத் தாண்டியதும் டி.ஜே இசையும், ‘ஹே... ஹேய்... ஹூ ஹூ ஹூய்ய்ய்’ என உற்சாகக் கூச்சலும் இரவின் நிசப்தத்தைக் கிழித்தன. தள்ளாடியபடியே ஒரு ‘பப்’பிலிருந்து வெளியே வந்தது இளம் ஜோடி. வாகனத்தை பார்க் செய்த இடத்தை மறந்துவிட்டார்கள்போல... அங்குமிங்கும் சாலையை அளந்து கொண்டிருந்தார்கள். அந்த இளைஞரின் கால்கள் இன்னும் ஆட்டத்தை நிறுத்தவில்லை. ஒரு கையில் பீர் பாட்டில்... அவர் உதட்டில் புகைந்துகொண்டிருந்த சிகரெட்டை எடுத்து உறிஞ்சிய அந்தப் பெண், தனது ஹேண்ட் பேக்கிலிருந்த ரிமோட் கீயை எடுத்து அழுத்த... ‘கீக் கீக்’ என 10 மீட்டருக்கு அப்பாலிருந்து குரல் கொடுத்தது அந்த சொகுசு கார்.

 “பத்திரமா வீடு போய் சேரு பாப்பா!” - ராத்திரி ரவுண்ட்-அப் - புதுச்சேரி

அந்த ஜோடி விரைந்து செல்ல... திடீரென்று “யம்மா... யம்மா... தோ நில்லும்மா...” என்று குரல் கொடுத்தபடியே ஓடிவந்தார் நடுத்தர வயதுடைய பெண். நகராட்சிப் பெண் தூய்மைப் பணியாளர் அவர். அவரது ஒரு கையில் விளக்குமாறும், மறுகையில் சிறிய பர்ஸ் ஒன்றும் இருந்தன. ஓடிச் சென்று அந்த ஜோடியை மறித்தவர், “ஏம்மா, பையிலருந்து இது கீழ வுழுந்துடுச்சு... அதைக்கூட பார்க்காம போறீயே... என்னா பொண்ணும்மா நீ...” என்று மூச்சிரைத்தபடியே பர்ஸை நீட்டினார். “ஓ மை காட்!” என்றபடியே பர்ஸைத் திறந்த அந்த இளம்பெண் அதிலிருந்த ஒரு டாலர் செயினையும், கத்தையாக 2,000 ரூபாய்த் தாள்களையும் எடுத்து அந்த இளைஞரிடம் காட்ட... அதை உணரும் நிலையில் அவர் இல்லை. அந்த இளம்பெண், தூய்மைப் பணியாளரின் கன்னத்தை வருடியபடி சில நோட்டுகளைக் கொடுக்க முயல... “அதெல்லாம் ஒண்ணும் வேணாம்மா... நீ பத்திரமா வீடு போய்ச் சேரு பாப்பா...” என்று சொல்லிவிட்டு, மீண்டும் வந்து சாலையைப் பெருக்க ஆரம்பித்தார். போதையேற்றி முடித்த காலி மதுபுட்டிகள், திமிருக்கு உடைபட்ட பீர் பாட்டில்கள், அலட்சியமாக வீசியெறியப்பட்ட உணவு பார்சல் குப்பைகள், யாரோ எடுத்த வாந்தி... அத்தனையையும் வாரித்துடைத்து குப்பை வண்டியில் போட சுத்தமானது அந்த இடம்!

குபேர் பஜாரை நெருங்கினோம்... நான்கைந்து சாலையோர உணவகங்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தன. மசாலா வாசனையும் மூக்கிலேறிய காரநெடியும் வாய்க்குள் நதிமூலத்தை உற்பத்தி செய்தன. வண்டியை ஓரங்கட்டிவிட்டு, உணவகத்தை நெருங்கினோம். “அண்ணே, முட்டை தோசையும் லிவர் ஃப்ரையும் சொல்லி அரை மணி நேரமாச்சு” என்று சலித்துக்கொண்டார் ஒருவர். பைக்கில் அமர்ந்தபடியே இளைஞன் ஒருவன், “மாஸ்டர், மூளை இருக்கா... மூளை... மூளை!” என்று கத்த... கொத்து புரோட்டாவை ‘நங் நங்’ என்று கொத்திக்கொண்டிருந்த மாஸ்டர் கடுப்புடன், “முதல்ல உனக்கு மூளை இருக்காடா... எவ்ளோ கூட்டம் நிக்குது பாரு... வண்டியைவிட்டு இறங்கி வாடா!” என்று கத்தினார். ஓடி வந்த அந்த இளைஞன், “கோச்சுக்காதீங்க மாஸ்டர், மூளை ஃப்ரை இருக்கான்னு கேட்டேன்” என்றபடி தாஜா செய்ய ஆரம்பித்தான். டேபிள் ஒன்று காலியாக, இடம்பிடித்து அமர்ந்தோம்.

எதிரில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் நம்மிடம், “இங்க மாதிரி மூட்டை தோசையும் கறி கிரேவியும் எங்கேயும் கிடைக்காது ப்ரோ... அவ்வளவு டேஸ்ட். விலையும் கையைக் கடிக்காது” என்றபடி சிக்கன் லெக் பீஸை கடிக்க ஆரம்பித்தனர். காவலர்கள் இருவர் வண்டியிலிருந்து இறங்கி வந்தார்கள்... “சாப்டுட்டீங்கன்னா கிளம்புங்க... கூட்டம் கூடாதீங்க” என்றபடியே லிஸ்ட்டை மாஸ்டரிடம் வாசித்தார்கள். “ரெண்டு சிக்கன் ஃப்ரை, மூணு மூளை ஃப்ரை, அஞ்சு தலைக்கறி” என்று நீண்டது அது. பார்சலைப் பெற்றுக்கொண்டவர்கள், “எவ்வளவுப்பா?” என்றபடி பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு கிளம்பினார்கள். சாப்பிட்டு முடித்து பில் கொடுத்தபடியே பேச்சுக் கொடுத்தோம்... “பக்கத்துல இருக்குற ஸ்டேஷனுக்குத்தான் வாங்கிட்டுப் போறாங்க சார். கரெக்டா காசு கொடுத்துடுவாங்க... ஓசியில எல்லாம் வாங்க மாட்டாங்க... அதே மாதிரி நாங்களும் மாசமானா மாமூல் கரெக்டா கொடுத்துடுவோம்” என்றார் அவராகவே. நல்ல புரிந்துணர்வு ஒப்பந்தம்டா சாமி என்று நினைத்துக்கொண்டே நகர்ந்தோம்.

 “பத்திரமா வீடு போய் சேரு பாப்பா!” - ராத்திரி ரவுண்ட்-அப் - புதுச்சேரி

ரத்னா தியேட்டர் பக்கம் வண்டியை விட்டோம். அங்கிருந்த ஒரு ஹோட்டல் வாசலில் இளைஞர்கள் சூழ்ந்திருந்தனர். அவர்கள் கைகளில் டின் பீர்கள்... “இந்நேரத்துக்கு வேற எங்கயும் பீர் கிடைக்காது. ஒயின் ஷாப்புல 80 ரூபாய்க்கு விக்குற டின் பீர் இங்க 250 ரூபா” என்று ஒருவர் புலம்ப... இன்னொருவர், அருகிலிருக்கும் ஹோட்டலின் பெயரைச் சொல்லி, “அங்க நாலாவது மாடிக்குப் போங்க... இதே 250 ரூபாய்க்கு பாட்டில் பீரே கிடைக்கும்” என்று டிப்ஸ் கொடுத்்தார். நம்மை அடையாளம் கண்டுகொண்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், “புதுச்சேரி டவுன்ல மட்டும் சுமார் 10 ஹோட்டல்கள்ல பிளாக்குல சரக்கு விக்குறாங்க... விடிய விடிய சரக்கு கிடைக்கும்... போலீஸுக்கு லட்சக்கணக்குல மாமூல் போகுது” என்றார் போகிற போக்கில்!

நூறடி ரோடு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். அஜந்தா திரையரங்க சந்திப்பு அருகே அதே பெண் தூய்மைப் பணியாளர் குப்பைகளைப் பெருக்கிக்கொண்டிருந்தார்... சுத்தமாகிக்கொண்டிருந்தது நகரம்!