அலசல்
சமூகம்
Published:Updated:

ராத்திரி ரவுண்ட் அப்: என்ன கொடுமை சரவணன் இது!

ராத்திரி ரவுண்ட் அப்
பிரீமியம் ஸ்டோரி
News
ராத்திரி ரவுண்ட் அப்

- நைட் ரைடர்

வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே வள்ளுவர் சிலை. விளக்கொளியில் தங்கமாக ஜொலித்தார் திருவள்ளுவர். சிலை அருகே அமர்ந்திருந்தது விடலைக் கூட்டம் ஒன்று. ஐந்தாறு இளைஞர்கள். அதிகம்போனால் 17, 18 வயதிருக்கலாம். தரையில் சோழியை உருட்டிக்கொண்டிருந்தார்கள். சோழியை உருட்டுவதும், மொபைல்போனை எடுத்து, டயல் செய்வதுமாக இருந்தார்கள். ஏதோ உறுத்தவே... சற்றுத் தள்ளி நின்று காதுகளைக் கூர்தீட்டினோம்.

“மாப்ள... நாலு. சரி, நான் போனைப் போடுறேன். ‘டிங் டிங் டிங்’ என போனில் டயல் செய்யும் சத்தம் கேட்டது. போனை ஸ்பீக்கரில் போட்டார்கள். ‘மீரு பிலிசிஸ்துன்ன சந்தாதாரரு பிரஸ்துதாம் அந்து பாதுலோ லேகு...’ என்றது எதிர்முனை. மறுபடியும் சோழியை உருட்டினார்கள். “டேய், ஆறு போடுறா...” என்றான் ஒருவன். ‘நிங்ஙள் விளிக்குன்ன சப்ஸ்கிரைபர் நிலவில் வப்யமல்லா...’ என்றது அலைபேசி. தொடர்ந்து, ‘நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்...’, ‘ஆப்கே துவாரா கால்சியா ரஹான்...’ என்றெல்லாம் ஒலிக்க... சலிப்புடன் கெட்ட வார்த்தையைச் சொல்லி ரோட்டில் `புளிச்’சென்று குட்காவைத் துப்பினான் ஒருவன். திடீரென்று, “இந்தா தாயம்... ஒண்ணாம் நம்பரைப் போடு” என்றான் ஒருவன். சில நொடிகளில்... “ஹலோ... யாரு?” தூக்கக் கலக்கத்தில் கேட்டது ஒரு பெண் குரல். கூட்டம் உற்சாகமானது. குசுகுசுவென பேசிக்கொண்டார்கள். ஒருவன் போனை ஸ்பீக்கர் ஆப்ஷனிலிருந்து எடுத்துவிட்டு, ஓரமாக ஒதுங்கினான்.

ராத்திரி ரவுண்ட் அப்: என்ன கொடுமை சரவணன் இது!

நாம் திடீரென்று அவர்கள் முன்பாகச் சென்று, “என்னடா தம்பி விளையாட்டு இது?” என்று கேட்டோம். பதற்றத்துடன் நிமிர்ந்து பார்த்தவர்கள் நம்மை முறைக்க... லேசாக பூனைமுடி மீசை அரும்பிய ஒருவன் மட்டும்... “ஆன்ட்டிங்களை கரெக்ட் பண்ற கேம்ண்ணா. சோழியை உருட்டுவோம். என்ன நம்பரு வருதோ அதையே கடைசி நம்பரா வெச்சு குத்துமதிப்பா போனைப் போடுவோம். ஆம்பிளைங்க யாராச்சும் பேசினா கலாய்ச்சிட்டு கட் பண்ணிடுவோம். பொம்பளைங்க... அதுவும் குரலு இளசா இருந்தா மெதுவா பிட்டைப் போட்டு ரூட்டை போட்டுருவோமில்ல...” என்றான் சாதாரணமாக. அவனை எகத்தாளமாகப் பார்த்துக்கொண்டிருந்த இன்னொருவனோ, “ஆமாம், இவன் பெரிய மன்மதன், போன மாசம் அப்படித்தான் இவனோட சித்திக்கே போனைப் போட்டுட்டான்... வீட்டுல வெளக்கமாத்துல வெளுத்துட்டாங்க...” என்று சொல்லி பெரும் சிரிப்பு சிரிக்க... கெட்ட வார்த்தையில் திட்டி, அவனை ஓங்கி ஒரு உதைவிட்டான் பூனை மீசை இளைஞன். அந்த இடமே ‘கொல்’லென்ற சிரிப்புச் சத்தத்தால் நிறைந்தது. “காலக்கொடுமையடா சாமி” என்றபடி நகர்ந்தோம்.

பழைய பேருந்து நிலைய நடைமேடையில் நாடோடி இனப் பெண்கள் இருவர் தூக்குச்சட்டியில் சாதத்தைப் பிசைந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு சிறுமியின் ஆடை மேலேறிக்கிடக்க... டிப்டாப்பாக வந்த ஒருவன், அந்தச் சிறுமியை உற்றுப் பார்த்து இளித்தபடி ஏதோ கேட்டான். அவ்வளவுதான்... சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்கள், ‘ஓயேய்... ஓய்... செருப்பாலயே அடிப்பேன் சவக்கட்டை நாயி... கக்கூஸுல இருக்குது எடுத்து துன்னுடா. காசிருந்தா எது வேணும்னாலும் கேட்பியா, கம்முனாட்டி” என்று எழுந்து சென்று அடிக்காத குறையாகச் சத்தமிட... டிப்டாப் நபர் ஓடத் தொடங்கினார்! “காமக்கொடுமையடா சாமி!” என்று முணுமுணுத்தபடியே பைக்கை ஸ்டார்ட் செய்தோம்.

ராத்திரி ரவுண்ட் அப்: என்ன கொடுமை சரவணன் இது!

பைபாஸ் பக்கம் சென்றோம். ரவுண்டானா அருகில் 70 வயது மதிக்கத்தக்க பெரியவர் தள்ளாடியபடியே சாலையை அளந்தார். வேகமாக வந்த லாரி ஒன்று பிரேக் போட்டு நிறுத்தி, லேசாக பெண்டெடுத்து ஒதுங்கிச் சென்றது. அவர் அருகே சென்று கையைப் பிடித்து, “பெரியவரே இப்படி ஓரமா வாங்க” என்றோம். புருவத்தை தூக்கிப் பார்த்தவர்... ‘‘எனக்கு ரெண்டு பொண்டாட்டி, மூணு பொண்ணு, நாலு பையன், ஒம்போது பேரனுங்க. இப்பயும் உழைச்சுத்தான் டெய்லியும் நாலு குவார்ட்டர் குடிக்கிறேன். கீழே விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டாத பரம்பரை... சரி, அந்த முக்கு வரைக்கும் கொண்டுவிடேன். அங்க கட்டிங் கிடைக்கும், போட்டுக்கிறேன்’’ என்றவரிடம், “பத்திரமா வீடு போய்ச் சேருங்க பெரியவரே” என்றோம். “மணி என்னா தம்பி... என்ன ஒண்ணாயிடுச்சா... இந்நேரத்துக்கு கதவைத் திறக்க மாட்டாளுக தம்பி” என்றபடி சாலையோரம் அமர்ந்து, சிறிது நேரத்தில் மட்டையாகிவிட்டார்! “நேரக்கொடுமையடா சாமி!” என்றபடியே நகர்ந்தோம்!

மணியடித்துக்கொண்டு வந்தார் பொரி வியாபாரி. அந்த நேரத்திலும் ஆவி பொங்கும் அவித்த வேர்க்கடலை, கேரட், பீட்ரூட் துருவல் போட்டு, மசாலாப் பொடியைச் சுடச்சுட பொரியில் தூவி... பாத்திரத்தில் போட்டு ‘டன் டன் டன் டன்...’ என்று சீரான தாள நயத்துடன் கரண்டியால் நான்கு கிண்டு கிண்டி, பேப்பரைக் சுழற்றி, அதில் குவித்துக்கொடுத்தார். தேங்காய் எண்ணெய் மணம் கமழ்ந்தது. வாயில் போட்டு மென்றோம். “ஆகா... காலச்சுகமடா சாமி!” என்றபடியே கடந்தோம்!

சார்பனாமேடு பகுதிக்குச் சென்றோம். ஒன்றிரண்டு ஆட்டோக்கள் நின்றிருக்க... அவற்றைச் சுற்றி ஆட்கள் மொய்த்திருந்தார்கள். சுருள் சுருளாக வட்டமிட்டது புகை. கஞ்சா விற்பனை அமோகமாக நடந்துகொண்டிருந்தது. விரலால் வித்தையைக் காட்டி, சிகரெட்டைத் தூக்கிப்போட்டு ஸ்டைலாக வாயில் கவ்வினார் அறுபதை நெருங்கும் ‘இளைஞர்’ ஒருவர். டொக்கு விழுந்த கன்னங்களுடன் சிகரெட்டை மூர்க்கமாக இழுத்து வானத்தை நோக்கிப் புகையைவிட்டவர்... “தலைவா... நீ வருவீயா மாட்டீயா...” என்று கத்தினார். அகாலத்தைக் கிழித்துக்கொண்டு கர்ண கொடூரமாக ஒலித்தது குரல். நான்கைந்து நாய்கள் எழுந்து, பதறிச் சிதறி ஓடின. “என்ன கொடுமை சரவணன் இது!” என்றபடியே அங்கிருந்து ஜூட் விட்டோம்!