Published:Updated:

3 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் 15 குடும்பங்கள்

கேர்பன் படுகர் கிராமம்
பிரீமியம் ஸ்டோரி
கேர்பன் படுகர் கிராமம்

- இந்த நாட்டுலதான் வாழுறோமான்னு சந்தேகமா இருக்கு!

3 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் 15 குடும்பங்கள்

- இந்த நாட்டுலதான் வாழுறோமான்னு சந்தேகமா இருக்கு!

Published:Updated:
கேர்பன் படுகர் கிராமம்
பிரீமியம் ஸ்டோரி
கேர்பன் படுகர் கிராமம்

‘‘ஊர்க் கட்டுப்பாடுங்கிற பேர்ல, கடந்த மூணு வருஷமா 15 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவெச்சுருக்காங்க. வெளியே சொல்ல முடியாத அளவுக்கு நாங்க வேதனைகளை அனுபவிச்சுக்கிட்டு இருக்கோம். எங்களோட கஷ்டங்களை, நிலைமையை பொது உலகத்துக்குச் சொல்லணும். எங்களுக்கான உரிமைகளை மீட்டுக்கொடுக்க உதவணும்’’ - நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயிருக்கும் ஒரு படுகர் கிராமத்திலிருந்து, நம்மைத் தொடர்புகொண்ட ஒருவர் இப்படிக் குமுற... அந்தக் கிராமத்தை நோக்கி விரைந்தோம்!

கோத்தகிரிக்கு அருகிலிருக்கும் அழகிய குன்றின்மீது அமைந்திருக்கிறது கேர்பன் படுகர் கிராமம். நம் வருகைக்காகக் காத்திருந்த நபர், ‘விஜய் ஆனந்த்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். சுமார் 100 வீடுகளைக்கொண்ட அந்தக் குக்கிராமத்தினூடே அவருடன் நடக்க ஆரம்பித்தோம். எதிரில் வந்த கிராம மக்கள் யாரும் அவரிடம் எதுவும் பேசாமல், நம்மையும் ஒரு தினுசாகப் பார்த்துக்கொண்டே நகர்ந்தார்கள். ஊர் எல்லையில் தேயிலைத் தோட்டங்கள் தொடங்கும் இடத்திலிருந்த வீட்டை அடைந்தோம். நமது வருகைக்காகச் சில ஆண்களும் பெண்களும் காத்திருந்தார்கள்.

3 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் 15 குடும்பங்கள்

வீட்டுக்குள் சென்று ஒரு பை நிறைய பேப்பர்களை எடுத்துவந்த விஜய் ஆனந்த், “இதெல்லாம் நடவடிக்கை எடுக்கச் சொல்லி இதுவரைக்கும் நாங்க அதிகாரிகளுக்குக் கொடுத்த மனுக்களோட காப்பிகள்” என்றவர், தொடர்ந்து பேச ஆரம்பித்தார். ‘‘சார், நாங்க படுகர் இனத்தைச் சேர்ந்தவங்க. இங்கே 200 வருசத்துக்கு மேல பல தலைமுறையா வாழ்ந்துக்கிட்டிருக்கோம். நான் பி.எஸ்சி பயோடெக்னாலஜி படிச்சிருக்கேன். என்னோட மனைவி எம்‌.எஸ்சி., எம்‌.எட் படிச்சிருக்காங்க. குழந்தைகளோடும் சொந்தங்களோடும் நிம்மதியா வாழ்ந்துக்கிட்டிருந்தோம்.

எங்க படுகர் மக்கள் வாழும் கிராமங்களை 18-ஆகப் பிரிச்சு ‘சீமை’ன்ற பேர்ல அழைப்பாங்க. எங்க கேர்பன் கிராமம் ‘கைகாறு’ன்ற சீமைக்கு உட்பட்டது. பெத்தளா கிராமத்துல இருக்கும் ஹெத்தையம்மன்தான் எங்களோட குலதெய்வம். எங்க ஊரைச் சேர்ந்த நந்திங்கிறவரு, 2019-ம் வருஷத்துல அந்தக் கோயில் பூசாரியா இருந்தார். அவர், சீமை நிர்வாகிகளுக்கு ஆதரவாவும், ஊருக்கு எதிராவும் இருக்குறதா சொல்லி கேர்பன் ஊர்த் தலைவர்கள் சிலர் நந்தி பூசாரியைக் கோயில்லருந்து நீக்குனதோட, குடும்பத்தோட ஊரைவிட்டு ஒதுக்கிவெச்சும் உத்தரவு போட்டாங்க. அதை எதிர்த்து, நந்தி பூசாரிக்கு ஆதரவா நாங்க 15 குடும்பங்க ஒண்ணா சேர்ந்து கேள்வி கேட்டோம். ‘அவருக்கு ஆதரவா இருந்தது, ஊர்க் கட்டுப்பாட்டை மீறிய செயல்’னு சொல்லி, எங்களையும் ஊரைவிட்டு ஒதுக்கிவெச்சுட்டாங்க. இது நடந்தது 2019-ம் வருசம், ஆகஸ்ட் மாசம்.

3 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் 15 குடும்பங்கள்

எங்க 15 குடும்பங்கள்ல இருக்குற பெரியவங்க முதல் சின்னவங்க வரை, யார்கிட்டேயும் ஊர்மக்கள் யாருமே பேசக் கூடாது; எங்க தோட்டத்துக்கு வேலைக்குப் போகக் கூடாது. எங்க வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்யக் கூடாது. கல்யாணம், சாவு எதுலயும் கலந்துக்கக் கூடாது. எங்க குழந்தைங்ககூட மத்த குழந்தைங்க விளையாடக் கூடாதுனு பல சட்டவிரோதமான, கொடுமையான கட்டுப்பாடுகளை விதிச்சாங்க. இதை மீறின ஒரு சில குடும்பத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கிவெச்சுருக்காங்க. இதனால, கடந்த மூணு வருசமா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கோம். போலீஸ், ரெவின்யூ அதிகாரிகள், கலெக்டர்னு 50 மனுவுக்கு மேல கொடுத்திருக்கேன். எந்த நடவடிக்கையும் இல்லை. இதுக்கு என்னதான் தீர்வுன்னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருக்கோம்’’ என்றார் வேதனையுடன்.

நம்மிடம் பேசிய விஜய் ஆனந்த்தின் மனைவி பிரவீனா, ‘‘தெருவுல நிம்மதியா நடக்க முடியலை. குழாயில தண்ணி புடிக்க முடியலை. திருவிழா, சாவு, கல்யாணம் எங்கயும் போயி எங்க சடங்குகளைப் பண்ண முடியாது. ஊர் திருவிழாவப்ப எல்லார் வீட்டுக்கும் சாமி ஊர்வலம் வரும். ஆனா, எங்க வீட்டை மட்டும் ஒதுக்கிட்டுப் போயிடுவாங்க. மூணு வருஷமா இந்தக் கொடுமையை அனுபவிச்சுக்கிட்டிருக்கோம். எங்களுக்கும் முழு உரிமையுள்ள இந்த நாட்டுலதான் நாங்க வாழுறோமான்னு சந்தேகமா இருக்கு!’’ என்றார் கண்ணீரோடு.

விஜய் ஆனந்த்
விஜய் ஆனந்த்

பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர், ‘‘அக்கா உறவுமுறையுள்ள ஒருத்தர் இறந்துட்டார். இறுதிச்சடங்கு செய்ய சுடுகாட்டுலகூட என்னை அனுமதிக்கலை. உறவுக்காரப் பெண் ஒருத்தருக்கு சீர்வெச்சாங்க. நான் கலந்துகிட்டதால, விசேஷ வீட்டுல யாருமே சாப்பிடலை. சமைச்ச அண்டா சாப்பாட்டைக் குப்பையில கொட்டினாங்க. ‘எங்களை அனுமதிச்சது தப்பு’னு சொல்லி ஊர்ல அந்தக் குடும்பம் மன்னிப்பு கேட்டதுக்கு அப்புறம்தான், அவங்களை ஊரோட சேர்த்துக்கிட்டாங்க’’ என்று குமுறினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கேர்பன் ஊர்த் தலைவர் தர்மலிங்கத்திடம் பேசினோம். ‘‘அவங்களை யாரும் ஊரைவிட்டு ஒதுக்கிவெக்கலை. விஜய் ஆனந்த்தும், ஆறேழு குடும்பங்களைச் சேர்ந்தவங்களும் தங்கள்ல ஒருத்தருக்கு ஊர்த் தலைவர் பதவி வேணும்னு கேட்டாங்க. ‘மக்கள் ஆதரவு இருந்தா தலைவர் பதவியை ஏத்துங்கங்க’னு 15 நாள் கால அவகாசம் கொடுத்தோம். அவங்க தலைவராக யாருமே ஆதரவு தரலை. ஊருக்கு எதிரான செயல்கள்ல தொடர்ந்து ஈடுபட்டு வர்றாங்க. அவங்களுக்கு ஊர்ல அனைத்து உரிமைகளும் இருக்குது. மூணு வருஷமா கோயிலுக்கான வரித்தொகையைத் தரலை. அதனாலதான் சாமி ஊர்வலம் அவங்க வீட்டு வாசல்ல நிக்குறதில்லை. அவங்க விரும்பினா எப்போ வேணும்னாலும் ஊரோட வந்து சேர்ந்துக்கலாம். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல’’ என்றார் இறுக்கமாக.

பிரவீனா
பிரவீனா

மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ‘‘ஏற்கெனவே இது தொடர்பாக எங்களுக்குப் புகார்கள் வந்துள்ளன. காவல்துறை மற்றும் சப் கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தியிருக்கிறோம். ஊர்க் கோயில் விவகாரத்தில் இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்திருக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்கள்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுசென்றோம். ‘‘விசாரணையின் மூலம் உண்மையைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

ஒதுக்கிவைத்தல் பாவம், பெருங்குற்றம், மனிதத் தன்மையற்ற செயல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism